Site icon இன்மதி

நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு பிறகு பாஜகவின் ஆதரவு கட்சி என்பதை நிலைநிறுத்தியுள்ளதா அதிமுக?

Read in : English

மத்திய அரசின் மீது நேற்று, அதாவது ஜூலை 20, 2018ஆம் தேதி கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் அதிமுகவுக்கு ஒரு மோசமான சூழ்நிலையை உருவாக்கியது என்றுதன் கூற வேண்டும். காரணம், அதிமுக அரசு யூஜிசி, சித்த மருத்துவத்துக்கும் நீட், காவிரி போன்ற பல விஷயங்களில் மத்திய அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து அதிமுக கண்மூடித்தனமாக மத்திய அரசை ஆதரிக்கவில்லை என்ற பிம்பத்தை உருவாக்க நினைத்தது. அதனால் நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் என்ன மாதிரியான முடிவை எடுப்பது என்று தடுமாறிக்கொண்டிருந்த வேளையில், பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷா நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவிக்கக் கூடாது என்னும் நெருக்கடியை அதிமுகவுக்கு உருவாக்கினார்.

சமீபகாலமாக அதிமுக, தன்னை பாஜகவின் ஆதரவாளராகக் காட்டிக்கொள்ள விரும்பவில்லை. அதன் மூலம் தங்கள் மீதான பிம்பம் பாதிக்கப்படும் என்று அச்சப்படுகிறார்கள். பல்வேறு சந்தர்பங்களில் அதிமுக அமைச்சர்கள் பாஜகவுக்கு எதிராக பேசி, ‘நாங்கள் பாஜகவை விட்டு விலகி இருக்கிறோம்’ என நிரூபிக்க விரும்புகிறார்கள். அதனால் சில நாட்களுக்கு முன்பு, நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு பாஜகவுக்கு ஆதரவு தரக் கூடாது என்ற நிலைப்பாட்டில் அதிமுக இருந்தது. அச்சமயத்தில் அமித்ஷா, துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பாஜகவுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என கோரினார். ஓபிஎஸ்ஸால் அவரது கோரிக்கைக்கு எதிராக பேசமுடியவில்லை. அதன்பிறகு முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமியிடம் ஓபிஎஸ் விவாதித்து, பாஜகவை ஆதரிப்பது என முடிவு செய்தார்கள்.

பாராளுமன்ற துணை சபாநாயகர் எம்.தம்பிதுரை நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காமல் தவிர்க்கலாம்;அதன்மூலம் அதிமுக பாஜக ஆதரவு அரசு என்ற பிம்பத்தை தகர்க்கலாம் என்று நினைத்தார். பல சந்தர்ப்பங்களில் எம்.தம்பிதுரை மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இணக்கமான சூழ்நிலை உள்ளது என்று கூறியது மாநில வளர்ச்சிக்கு பயன்படும் என்ற நோக்கத்தில் கூறியுள்ளார் என்கின்றனர் அவரை அறிந்தவர்கள். அவர், தமிழகத்தை பாதிக்கும் பல விஷயங்களை மத்திய அரசு முடிவு செய்தபோது அதற்கு எதிராக தங்கள் கட்சி நிலைப்பாட்டையும் கூறியுள்ளார்.  அதுவும் மாநில நலனுக்காகவே என்றும் கூறியுள்ளார்.

ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் எடுத்த இந்த முடிவால் தம்பிதுரை மனவருத்தத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. காரணம் என்டிஏ அரசுக்கு ஆதரவாக வாக்களித்தன் மூலம் அரசுக்கு பாஜகவுக்கு அதிமுக துணை நிற்கிறது என்ற நிலை உருவாகும். அது அதிமுக மேல் அதிருப்தியை கூட்டும் என நினைக்கிறார் தம்பிதுரை.  என்டிஏ அரசு மத்தியில் அமைந்த பிறகு, அதிமுக அந்த அரசுக்கு ஆதரவான அரசாக தன்னை  எங்கும் காட்டிக்கொண்டது இல்லை. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியின்போதும் மத்திய அரசோடு இணாக்கம் இருந்தாலும் அவர்களுக்கு ஆதாரவானது அதிமுக என்ற பிம்பம் உருவாவதை தவிர்த்தார்.

சில நாட்களுக்கு முன்பு தமிழகம் வந்த அமித்ஷா ஊழலில் முன்னணியில் தமிழகம் இருக்கிறது என்று கூறி றாதிமுகவுடன் ஒரு மோதல் போக்கை உருவாக்கினார். அது அதிமுக தலைவர்கள் மத்தியில் மிகவும்  கசப்பான எண்ணத்தை உருவாக்கியது.  ஆனால் இதையெல்லாம் மீறி தற்போது அதிமுக, மத்தியில் நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு ஆதரவாக செயல்பட்டது கசப்பான மருந்தை கட்டாயப்படுத்தி விழுங்க வைத்ததற்கு நிகரானதுதான்.

Share the Article

Read in : English

Exit mobile version