Site icon இன்மதி

ஒரே நேரத்தில் தேர்தல் செலவு மற்றும் கருப்புப்பணத்தை குறைக்குமா?

புகைப்படத்தில் புதுச்சேரியின் சட்டமன்றக் கூட்டத்தின் காட்சி. ஒரே நேரத்தில் தேர்தல் செயல்படத்துவதில் பல சிக்கல்கள் உள்ளன

ஒரே நேரத்தில் வாக்கெடுப்பு நடத்தினால், செலவு குறையும் என்ற கருத்தை அதன் ஆதரவாளர்கள் முன்நிறுத்துகின்றனர். ஆனால் உண்மையில் அதில் சேமிப்பு என்பது அதிகமல்ல. நிதி ஆயோக் அறிக்கையின்படி, 2009ம் ஆண்டு மக்களவை தேர்தல் நடத்த ரூ.1,115 கோடி செலவானது. இதுவே 2014ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் செலவு ரூ.3 ஆயிரத்து 870 கோடி என மும்மடங்கானது. இந்த நிலையில் ஒரே நேரத்தில் நாடாளுமன்ற மக்களவை மற்றும் சட்டமன்றத்திற்கு தேர்தல் நடத்த ரூ.4 ஆயிரத்து 500 கோடி செலவாகும் என தேர்தல் ஆணையம் மதிப்பிட்டு உள்ளது.

இதுஒருபுறம் இருக்க, நாடு முழுவதும் ஒரே வாக்கெடுப்பு நடத்த, ரூ.9 ஆயிரத்து 300 கோடிக்கு கூடுதலாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாங்க வேண்டும் என்று நிதி ஆயோக் தனது அறிக்கையில் கூறி உள்ளது. மாநில சட்டமன்றங்களுக்கு தேர்தல் நடத்தும் செலவினம், அத்தகைய தேர்தல்கள் சுதந்திரமாக நடைபெறும் போது, அந்தந்த மாநில அரசுகளுக்கு உரியதாகும்.

நாடாளுமன்ற தேர்தலில் ஒரு வேட்பாளர் அதிகப்பட்சமாக ரூ.70 லட்சம் வரை தேர்தல் செலவு செய்ய தேர்தல் ஆணையம் அனுமதித்து உள்ளது. நாட்டின் மிகப்பெரிய மாநிலங்களான உத்தரப்பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் இது பொருந்தும். இதுவே சட்டமன்ற தேர்தலில் உச்சப்பட்சமாக ரூ.28 லட்சம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இதுபோன்ற எந்த நிர்ணயங்களும் அரசியல் கட்சிகளுக்கு விதிக்கப்படவில்லை. 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது, வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் ரூ.30 ஆயிரம் கோடி வரை செலவு செய்ததாக அதிகாரப்பூர்வமற்ற மதிப்பீடுகள் கூறுகின்றன. 2015ம் ஆண்டு பீகார் சட்டமன்ற தேர்தலின் போது, ரூ.300 கோடியும், 2017 குஜராத் தேர்தலில் ரூ.240 கோடியும் செலவிடப்பட்டதாக செய்தி நாளிதழ்கள் மூலம் அறியமுடிகிறது.

பொதுவாக நாடாளுமன்ற மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்களுக்கு வெவ்வேறான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (வாக்குப்பதிவு மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரங்கள்) பயன்படுத்த நேரிடும். அப்போது போக்குவரத்து செலவோடு, இயந்திர சேமிப்பு தேவையையும் அதிகரிக்கும்.

இந்திய தேர்தல் ஆணையம் கூடுதலாக 8 லட்சத்து 60 ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 8 லட்சம் கட்டுப்பாட்டு இயந்திரங்கள் வாங்கும்பட்சத்தில், செலவு கூடுதலாக ரூ.9 ஆயிரத்து 300 கோடியாகும். இந்த நிலையில், கூடுதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாங்க, அரசாங்கம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று நிதி ஆயோக் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற நிதிக்குழு இந்த ஒப்புகை வாக்குச் சீட்டுடன் கூடிய வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொள்முதல் செய்ய, ரூ.9 ஆயிரத்து 300 கோடி செலவாகும் என்பதை முன்வைக்கிறது. உண்மையில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால், வேட்பாளர்களின் செலவுகள் குறையாது. நாடாளுமன்ற மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்கள் முறையே, ரூ.70 லட்சம் மற்றும் ரூ.28 லட்சம் அதிகப்பட்சமாக செலவு செய்யலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் ஆவண செய்துள்ளது. ஆனால் உண்மையில் அவர்கள் அதிகமாக செலவு செய்கின்றனர்.

ஆக, எந்த வழியில் பார்த்தாலும் ஒரே நேரத்தில் தேர்தல் என்பது குறைந்த செலவிற்கு வழிவகுக்காது. இதற்கு ஒரே வழி, தேர்தல் நிதியை மாநில அரசே வழங்குவது. இதனால் அரசின் செலவினம் கூடும் என்று ஒருவேளை விமர்சனம் செய்யப்படலாம்.

ஆனால் நீண்ட காலத்துக்கு பார்த்தோமேயென்றால், இதனால் தேர்தலின் போது கருப்பு பணம் நடமாடுவது வெகுவாக குறையும். ஒரு தேர்தலின் போது வேட்பாளரோ அல்லது அரசியல் கட்சியோ அதிக செலவு செய்ய பிரதான காரணம் ஊழல். இதனால்தான் அவர்கள் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கின்றனர். இதுவே இவர்கள் அதீத செலவு செய்ய மிகப்பெரிய ஆதாரமாக விளங்குகிறது.

தற்போது நாட்டின் தேவை என்னவெனில் பாரம்பரிய பேரணிகளை தடை செய்வதாகும். இதற்கு மாற்றாக அரசாங்கமே ஒவ்வொரு வேட்பாளர்/ அரசியல் கட்சிகள் கூட்டம் நடத்த மண்டபங்களை வழங்க வேண்டும். நோட்டீஸ் மற்றும் பதாகைகளுக்கு தடை விதிக்க வேண்டும்.

பிரசாரங்களை குறிப்பிட்ட நேரத்துக்கு கட்டுப்படுத்த வேண்டும். வீடு வீடாக வழங்கப்படும் தேர்தல் வாக்குறுதி அறிக்கைகளை இலவசமாக அச்சடித்து அரசாங்கமே வழங்க வேண்டும். இது கருப்பு பண நடமாட்டத்தை குறைக்கும். இந்த தேர்தல் சீர்திருத்த அறிக்கைகளை மத்திய அதிகார மையத்தில் தூசு படிந்துள்ளன.

சமுதாயத்தை பாதிக்கும் உண்மையான பிரச்சினைகளில் எந்த குறிப்பிடத்தக்க மாற்றத்தையும் ஏற்படுத்தாத ஒரு வாக்கெடுப்பை நடத்துவதற்கு பதிலாக, இந்த குறிப்பிடத்தக்க பரிந்துரைகளை எடுத்துக் கொண்டால் மத்திய அரசு நன்றாக செயல்பட முடியும்.

Share the Article
Exit mobile version