Site icon இன்மதி

ராமேஸ்வரம் மீனவரகள் மீது கடுமையான இலங்கை சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யபட்டது; இந்திய தூதரகத்தின் கோரிக்கை நிராகரிப்பு

Read in : English

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரின் வழக்கு இன்று ஊர்க்காவல்துறை நீதிபதி முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜீட்சன் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்துள்ளார். அதே நேரம், இதுவரை 16 மீனவர்கள் ஒரே வாரத்தில்  இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் மீது இலங்கை அரசு  சமீபத்தில் கொண்டு வந்த புதிய வெளிநாட்டு மீன்பிடி படகுகள் தொடர்பான  சட்டப்படி நடவடிக்கை  எடுக்கக் கூடாது எனக் கேட்டு இந்திய தூதரகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அந்த சட்டம் மீன்வளத்துறையின் கீழ் வருவதால் இந்திய தூதரகத்தின் மனுவை ஏற்க முடியாது எனக் கூறி நீதிபதி தள்ளுபடி செய்து  உத்தரவிட்டார்.

இதனிடையே இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட  ராமேஸ்வரம் மீனவர்கள் அனைவரையும் விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை வேண்டும் எனவும், இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட 187 படகுகளுக்கும் இழப்பீடு தரக்கேட்டும் ராமேஸ்வரம்  மீனவர்கள்  காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து, ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர் சங்கத் தலைவர் எம்ரிட் கூறுகையில், “ எங்கள் பிரதிநிதிகள் நேற்று முதல்வரை சந்தித்து தக்க மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினோம். கூடவே, இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகள்  பலவும்  இனி மேல் விடுக்கப்பட்டாலும் பயனில்லை என்பதால் அவற்றிற்கு இழப்பீடு வழங்க கோரியுள்ளோம் “ எனக்கூறினார். இலங்கை அரசு புதிய சட்டத்தின் படி கைது செய்யப்பட்ட மீனவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருப்பது குறித்து அவர் கூறுகையில், “இந்திய வெளியுறவுத் துறை சார்பில் இலங்கை அரசிடம் பேசியிருப்பதாக கூறியிருக்கிறார்கள். ஏற்கனவே, மீன்பிடி தடைக்காலம் 60 நாள்கள் முடிந்து வெறும் 5 நாட்களே மீன் பிடிக்க சென்றுள்ளோம். இந்த நிலையில் எங்கள் வாழ்வாதாரங்களை அழிக்கப் பார்க்கின்றனர் என்கிறார். மேலும் அவர் வரும் சனிக்கிழமை முதல் மீனவர்கள் கடலுக்கு செல்லும் வாய்ப்புகள் உள்ளதாகக் கூறினார்.

மீனவர்களின் படகுகளுக்கான இழப்பீடுகள் குறித்து பேசிய நிரபராதிகளான மீனவர்கள் விடுதலைக்கான கூட்டமைப்பின் நிறுவனர் யு. அருளானந்தம் கூறுகையில், “ கடந்த 2015 பிப்ரவரி முதல் இந்த மாதம் 7 ஆம் தேதி வரை மொத்தம் 187 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஒரு படகை ஒரு வாரம் இயக்காமல் இருந்தாலே அது பயனற்று போய்விடும். இனிமேல் இப்படகுகளுக்கு இழப்பீடு வழங்குவது தான் தீர்வு. சுனாமி 2004 இல் வந்த போது ஏற்பட்ட இழப்புகளுக்கு ஒரு படகிற்கு ரூ.20 லட்சம் கொடுத்தார்கள். தற்போதுள்ள, நிலையில் ரூ.50 லட்சமேனும் இழப்பீடு வழங்க வேண்டும். என்றார்.

Share the Article

Read in : English

Exit mobile version