Site icon இன்மதி

பெரும்பாக்கத்தை விரும்பாத பட்டினப்பாக்கம் மீனவர்கள்: உள்ளூரிலேயே வீடுகட்டித் தர வேண்டுகோள்

பட்டினப்பாக்கத்தில் கடல் அரிப்பின் விளைவு

Read in : English

சென்னை மாநகரின் பட்டினப்பாக்கத்தை பொறுத்தவரை  மீனவர்கள் தங்கள் தூக்கத்தை தொலைத்துவிட்டனர் என்றே கூற வேண்டும். கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பு வரை சுமார் 500 மீட்டருக்கு அப்பால் இருந்த கடல். தற்போது சுமார் 60 க்கும் மேற்பட்ட வீடுகளை கபளீகரம் செய்துள்ளது.

பட்டினப்பாக்கம், முள்ளிக்குப்பத்தை சேர்ந்த ஜெயாவின் வீடு 150 சதுர அடியிருக்கும். அதில் தான் அவரும், அவரது பிள்ளைகள் மூன்று பேரும் வசித்து வருகின்றனர். “கடல் உள்ளே வருவதை தடுக்க மணல் மூடைகளை அடுக்கினோம். ஆனாலும், பயனில்லை.” எனக் கூறும் ஜெயா, தற்போது சில உடைமைகளை வீட்டின் வெளியே கொஞ்சம் பாதுகாப்பான தூரத்திலும் சில உடைமைகளை தனது உறவினர் ஒருவரின் வீட்டிலும் கொண்டு போய் வைத்துள்ளதாகக் கூறுகிறார்.  “கடந்த மூன்றாண்டுகளாகவே, இந்த பிரச்சினை எங்களுக்கு இருக்கிறது. ஆனால், அதிகாரிகளிடம் முறையிட்டால் பட்டா நிலத்திலா இருக்கிறீர்கள் எனக் கேட்கிறார்கள்” என ஆதங்கத்துடன் கூறுகிறார் இளவரசு.

கடலால் இழுத்து செல்லப்பட்ட வீடுகளை பார்வையிட மீன் வளத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் சீனிவாசபுரத்திற்கு சென்றுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த அமைச்சர் பெரும்பாக்கத்தில் குடியேற்றத்திற்கான மாற்று இடமாக தயார் செய்து தருவதாகக் கூறியுள்ளார். இதனையே சட்டமன்றத்திலும் அவர் தெரிவித்திருந்தார். ஆனால், ஆறோ, கடலோ இல்லாத பெரும்பாக்கத்தில் எங்களுக்கு வீடுகள் ஒதுக்குவதால் என்ன பயன் ? எனக் கேட்கும் மீனவர்கள், தங்கள் வாழ்வாதாரமே கடலை வைத்து தானே எனக் கூறுகின்றனர். “ நாங்கள், இங்கேயே வாழ விரும்புகிறோம். அருகிலேயே பழண்டியம்மன் கோயில் நிலத்திலிருந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த இடம் காலியிடமாகவே உள்ளது. அங்கு, தங்களுக்கு ஒரே அடுக்கு வீடுகள் கட்டித் தந்து, அதில் மீனவ மக்களாகிய எங்களையே குடியேற்ற வேண்டும்” எனக் கூறும் ஜி. ஏழுமலை, எதிரே இருந்த இரண்டு அடுக்குமாடி குடியிருப்பைக் காட்டி, “காமராஜர் காலத்தில் அதைக் கட்டினார்கள். அன்றைக்கு, நானும் எனது பெற்றோரும் மட்டுமே இருந்தோம். ஆனால், இன்றைக்கு, நான் எனது பிள்ளைகள் எனது பேரப் பிள்ளைகள் என குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை கூடியுள்ளது. அப்படியிருக்க, அந்த வீடுகள் காலப் போக்கில் எங்களுக்கு போதமானதாக இல்லை” எனக் கூறுகிறார்.

ஒரு அடுக்கு கட்டிடம் என்றால், தங்கள் பிள்ளைகள் வளரும் போது அதற்கு மேல் வீடுகளைக் கட்டி தனியாக வாழ்ந்துவிட முடியும் எனக் கூறுகின்றனர் இந்த மீனவர்கள்.

இதனிடையே, நேற்றையதினம் இப்பகுதியை பார்வையிட்ட அமைச்சர் ஜெயக்குமார், கடலரிப்பைத் தடுக்க,  கற்களை போடுவதற்கும் ஏற்பாடு செய்வதாக  மீனவர்களுக்கு உறுதியளித்துள்ளதுடன், சட்டமன்றத்தில் கடலரிப்பால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க 13 மாவட்டங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் ஒதுக்கப்படும் என்றும், முகத்துவாரங்களை ஆழப்படுத்த கருத்துக்கள் கேட்டு பெறப்படும் எனவும் கூறியுள்ளார்.

Share the Article

Read in : English

Exit mobile version