Read in : English

தமிழ்நாடு தொல்லியல் துறையில் 27 ஆண்டுகளாகப் பணி செய்து 2005ல் தன்னார்வ ஓய்வு பெற்றவர் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் எஸ்.ராமச்சந்திரன். தமிழ் இலக்கியத்தில் இளங்கலைப் பட்டமும், முதுகலைப் பட்டமும், கல்வெட்டு மற்றும் தொல்லாய்வுத் துறையில் முதுகலைப் பட்டயமும் பெற்றவர்.

கல்வெட்டு ஆராய்ச்சி மற்றும் தமிழ் சரித்திரம் ஆகிய தலைப்புகளில் புத்தகங்களும் கட்டுரைகளும் எழுதிக் கொண்டிருக்கிறார். sishi.org என்ற அவரது இணையதளத்தில் கட்டுரைகளும் பதிவுகளும் காணொலிகளும் நிரம்பிக் கிடக்கின்றன. தோள்சீலைப் போராட்டம், தரங்கம்பாடி செப்பேடுகள் போன்ற அவரது ஆராய்ச்சிக் கட்டுரைகள் மிகக் குறிப்பிடத்தக்கவை.

தரங்கம்பாடிக் கடலில் மீனவர்கள் உதவியுடன் அவர் கண்டுபிடித்த ஒரு நங்கூரம் கடல்சார் தொல்லியல் ஆய்வுக்குப் பெரிதும் உதவியது.

தமிழ்க் கவிஞர் கண்ணதாசனின் படைப்புகளில் இலக்கிய வளம், இலக்கிய தாக்கங்கள் பற்றி கவிராஜன் உட்பட மூன்று புத்தகங்கள் எழுதியிருக்கிறார். தற்போது திருச்சியிலிருந்து வெளிவரும் கதம்பம் என்ற இருமாத இலக்கிய ஏட்டில் காப்பியத் தொல்குடியும் தொல்காப்பியமும் என்ற தலைப்பில் தொடர்கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கிறார் ராமச்சந்திரன்.

தொல்காப்பியம் வெறும் தமிழ் இலக்கண நூல் மட்டுமல்ல; அது தமிழ் மொழியின் மீதான ஒர் தருக்க அணுகுமுறை என்கிறார் அவர். எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் போன்றவை வெறும் இலக்கணச் சொல்லாடல்கள் அல்ல; அவை தமிழுக்கே உரிய தர்க்கரீதியிலான அணுகுமுறைகள்.

ஜனநாயக விழுமியங்கள் ராஜராஜ சோழன் காலத்தில் பெரிதாகக் கொண்டாடப்பட்டதாகச் சொல்ல முடியாது

கல்வெட்டு ஆராய்ச்சி சார்ந்த தனது கருத்துக்களையும் அனுபவங்களையும் இன்மதியிடம் ராமச்சந்திரன் பகிர்ந்துகொண்டார்.

தற்போது அதிக ஊடகக் கவனம் பெற்றிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தையும், புதினத்தையும் முன்வைத்து நேர்காணல் ஆரம்பமானது.

மேலும் படிக்க: தமிழ் கல்வெட்டு மைப்படிகள் மைசூரிலிருந்து சென்னைக்கு மாற்றம் ஏன்? உண்மையான அக்கறையா? அரசியலா?

ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலம் பொற்காலமா என்பது கேள்வி. ‘பொதுவாக சரித்திரத்தில் எந்த ஆட்சியையும் பொற்கால ஆட்சி என்று சொல்ல முடியாது’ எனத் தொடங்கினார் ராமச்சந்திரன். “பொற்காலம் என்பது வெறும் பார்வை மட்டுமே. ஆளுக்கு ஆள் அது மாறுபடும். இந்தக் காலத்தைப் பொற்காலம் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். ஏனென்றால் கடந்த காலங்களை விட மக்களாட்சித் தத்துவம் ஆழங்காற்பட்டிருக்கும் இந்தக் காலத்தில் கருத்துச் சுதந்திரம் உச்சத்தில் வைத்துக் கொண்டாடப்படுகிறது. இந்த ஜனநாயக விழுமியங்கள் ராஜராஜ சோழன் காலத்தில் பெரிதாகக் கொண்டாடப்பட்டதாகச் சொல்ல முடியாது.

என்றாலும், ஆட்சிக் கட்டமைப்பு, இராணுவக் கட்டமைப்பு, கலைகள், இலக்கியம், கட்டிடக்கலை ஆகிய விசயங்களில் ராஜராஜ சோழன் ஆட்சி சிறந்தது என்று சொல்ல முடியும். அதனால்தான் மற்ற அரசர்களைக் காட்டிலும் ராஜராஜ சோழன் அதிக முக்கியத்துவமும் அதிக சரித்திரக் கவனமும் பெற்றிருக்கிறார்.

கல்வெட்டு ஆராய்ச்சியாளர் எஸ்.ராமச்சந்திரன்

அவர் காலத்து கல்வெட்டுகளில் இருந்து நம்மால் நிறைய சரித்திர விசயங்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது. கல்வெட்டு என்பது ஓர் இலக்கியப் படைப்பு அல்ல; அது ஒரு வரலாற்று ஆவணம். கோயிலையும் மதத்தையும் சார்ந்த ஒரு சமூகத்தின் பிரதிபலிப்பு அது. கோயில்கள் வெறும் வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்ல; அவை வரலாறு, கலைகள், சமூகப் பழக்கவழக்கங்கள், பண்டிகைகள், பொருளாதாரம், அரசியல் ஆகியவற்றின் பொக்கிஷ அறைகளும் கூட” என்று தெரிவித்தார் ராமச்சந்திரன்.

ராஜராஜ சோழன் ஒரு இந்துவா என்ற சர்ச்சையைப் பற்றிப் பேசும்போது ‘ராஜராஜ சோழன் ஒரு சைவ பக்தன்’ என்று ராமச்சந்திரன் மிகத் தெளிவாகச் சொன்னார். “சிவபாத சேகரன் என்பது அவருக்கிருந்த பட்டங்களில் ஒன்று. சைவத் திருமுறைகள் அவர் காலத்தில்தான் தொகுக்கப்பட்டன. சைவப் புலவர்களையும் பண்டிதர்களையும் ஆதரித்த அரசன் அவன்.

சோழர் காலத்தில் சுகாதார, ஆரோக்கியக் கட்டமைப்பு பலமாக இருந்ததைச் சுந்தர சோழர் காலத்து பாபநாசம் கல்வெட்டும், காஞ்சிபுரத்தருகே ராஜேந்திர சோழர் காலத்து திருமுக்கூடல் கல்வேட்டும் பறைசாற்றுகின்றன

ஐந்து அல்லது ஆறாம் நூற்றாண்டில் தமிழகத்தின் தொடங்கிய பக்தி இயக்கம் ராஜராஜ சோழன் ஆட்சியில் உச்சம் தொட்டது. கோயில்களில் சதாசர்வ காலமும் நியமங்களும், நிவந்தங்களும், திருவிழாக்களும், சடங்குகளும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

கோயில் சடங்குகள் மூன்று விதமாகப் பிரிக்கப்பட்டிருந்தன: 1.நித்தியம் 2.நைமித்தியம் 3.காமியம்.

நித்தியம் என்பது தினந்தினம் வழமையாக நிகழும் சடங்குகளை, பூஜைகளைக் குறிக்கிறது.

நைமித்தியம் என்பது அரசன் பிறந்த திருநட்சத்திரம் வரும் நாட்களில் நடக்கும் விசேஷ பூஜைகள், சிறப்புச் சடங்குகள் ஆகியவற்றைக் குறிக்கிறது. உதாரணமாக, ராஜராஜ சோழன் பிறந்த சதயம் நட்சத்திரம் வரும் நாட்களில் அவனுக்குச் சிறப்பு பூஜைகளும், திருவிழாக்களும், கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. அவையாவும் கல்வெட்டுக்களில் பதிக்கப்பட்டுள்ளன.

காமியம் என்பது இன்றைக்கு நாம் சொல்கிறோமே நேர்த்திக் கடன் என்று; அதுதான். மக்களின் பிரார்த்தனைகளைத் தெய்வம் நிறைவேற்றி விட்டது என்பதற்காக அவர்கள் செலுத்தும் நன்றிக்கடன் பூஜைகள், சடங்குகள் ஆகியற்றைக் குறிப்பிடுவது காமியம்.

கோயில் சமூகமாக இருந்த ராஜராஜ சோழனின் ராஜ்யம் அந்தக் காலத்தில் வழமையான சமூக கட்டமைப்பைக் கொண்டிருந்தது. அவனது ஆட்சியிலிருந்த வரிவருவாய்க் கட்டமைப்பு துல்லியமாகவும் பலமாகவும் இருந்தது.

மேலும் படிக்க: இந்தியாவின் முதல் கல்வெட்டு ஆராய்ச்சியாளரான பள்ளி ஆசிரியர்!

வருவாய் அதிகாரிகளின் அதிகாரமட்டங்கள் சரியாகவே வரையறுக்கப் பட்டிருந்தன. மண்டலம், நாடு (இன்றைய மாவட்டம்) மற்றும் வளநாடு (இன்றைய தாலுக்கா) என்று வரிவருவாய்க் கோட்டங்கள் இருந்தன. நிலங்கள் மிகத்துல்லியமாகப் பல்வேறு அளவீடுகள் மூலம் அளந்து வைக்கப்பட்டிருந்தன. ‘அங்குஸ்த பிரம்மாணம்’ என்ற அங்குல அளவீடு மூலம் பின்னங்கள் வரை நில அளவுகள் வரையறுக்கப்பட்டன” என்றார் ராமச்சந்திரன்.

ராஜராஜ சோழன் காலத்து ‘ஆதுரசாலை’ பற்றிக் கேட்டபோது, ஆதுரசாலை என்றால் மருத்துவமனை என்று பொருள் தந்தார் ராமச்சந்திரன்.

“சோழர் காலத்தில் ஆட்சி நிர்வாகத்தின் மற்ற கட்டமைப்புகள் போலவே, சுகாதார, ஆரோக்கியக் கட்டமைப்பு பலமாக இருந்ததைச் சுந்தர சோழர் காலத்து பாபநாசம் கல்வெட்டும், காஞ்சிபுரத்தருகே ராஜேந்திர சோழர் காலத்து திருமுக்கூடல் கல்வேட்டும் பறைசாற்றுகின்றன.

ஆயுர்வேதத்தின் ஆணிவேர் பிரதியான அஷ்ட ஹிருதயம் சொல்லும் விதிகள் படி நோய்களுக்குச் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன என்றும், ‘அரிஷ்டம்’ போன்ற கசாய வகை மருந்துகள் பயன்படுத்தப்பட்டன என்றும் சோழர் காலத்து மருத்துவ முறைகள் பற்றி பல்வேறு செய்திகள் நமக்குக் கல்வெட்டுகள் மூலம் தெரிய வருகின்றன” என்றார் ராமச்சந்திரன்.

சோழர்கள் காலத்தில் வட இந்தியாவிலிருந்து, குறிப்பாக உத்தரப்பிரதேசத்திலிருந்து பிராமணர்கள் கொண்டுவரப்பட்டதால் சாதீய அமைப்பும் சமஸ்கிருத ஆதிக்கமும் தமிழகத்தில் உருவாகின என்ற கருத்தைப் பற்றி பேசும்போது, ‘பிராமணர்கள் மட்டுமல்ல மற்ற இனத்தார்களும் சோழர் காலத்தில் இங்கே வந்து கலந்து விட்டனர்’ என்று கூறினார் ராமச்சந்திரன்.

“கிரேக்க, ரோமானியக் கைவினைஞர்களும் கூட இங்கே வந்தார்கள். பல்வேறு தொழில் கைவினைஞர்களும் சட்டம், நிர்வாகம், கலைகள் போன்ற துறைகள் சார்ந்த விற்பன்னர்களும் பல பகுதிகளிலிருந்து சோழ நாட்டிற்கு வந்தார்கள்.

நிலவுடமைச் சமுதாயத்தில் புலையர்கள் என்ற பிரிவினர் இருந்தார்கள். ஆனால் அதற்குப் பிராமணர்கள் காரணம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார் ராமச்சந்திரன். ராஜராஜ சோழன் காலத்து அனைத்து கல்வெட்டுக்கள் பற்றிய தகவல்கள் ஏன் இன்னும் வெளியாகவில்லை என்ற கேள்விக்கு விடை சொன்ன ராமச்சந்திரன் கல்வெட்டுக்கள் பல இன்னும் வெளிவரவில்லை என்பது மேலோட்டமான சிந்தனை என்று தெரிவித்தார்.

“1880ல் இந்தியத் தொல்லியல் துறையில் கல்வெட்டுப் பிரிவு தொடங்கப்பட்டது. அப்போது அதன் தலைமை அலுவலகம் ஊட்டியில் இருந்தது. பின்னர் குளிர்சாதன வசதி ஏற்பட்டவுடன், அது மைசூருக்கு இடம் மாற்றப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் இந்தியத் தொல்லியல் துறை தனது குழுக்களைப் பல்வேறு இடங்களுக்கு அனுப்பிக் கல்வெட்டுக்களின் மசிப்படிகளை (எஸ்டாம்பேஜ்) எடுத்து அவற்றின் செய்திகளைச் சுருக்கமாக அறிக்கைகளில் தரச் சொல்கிறது. 500 வரிகள் கொண்ட கல்வெட்டுக்களின் உள்ளடக்கத்தை ஐந்து வரிகளில் சுருக்கி ஆண்டுதோறும் தரும் அறிக்கைகள் ‘வருடாந்திர கல்வெட்டு அறிக்கைகள்’ என்றழைக்கப்படுகின்றன.

ஆதித்த கரிகாலன் இறந்ததாகச் சொல்லப்படும் சுமார் 969ஆம் ஆண்டிலிருந்து 18 ஆண்டுகள் கழித்து, ராஜராஜ சோழன் ஆட்சியில்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது

குறிப்பிட்ட ஒரு கல்வெட்டு அது சார்ந்த காலகட்டத்தின் சரித்திரத்தைச் சொல்லும். ஆயினும் ஒரு சில கல்வெட்டுக்கள் அதிக வரலாற்று முக்கியத்துவம் பெறுவதால் அப்படிப்பட்ட சிறப்புக் கல்வெட்டுக்கள் தொகுக்கப்பட்டு ‘எபிகிராஃபியா இண்டிகா’ தொகுதிகளாக வெளியிடப்படுகின்றன.

அப்படிப்பட்ட ஒரு கல்வெட்டுதான் இன்று அடிக்கடி விவாதிக்கப்படும் உடையார்குடி கல்வெட்டு. கல்கியின் புதினமான பொன்னியின் செல்வனில் மிகப்பெரும் மர்மமாக விடப்பட்டிருக்கும் ராஜராஜ சோழனின் மூத்த சகோதரன் ஆதித்த கரிகாலனின் கொலையில் சம்பந்தபட்டவர்களின் பெயர்கள் இடம்பெற்ற ஒரே கல்வெட்டு உடையார்க்குடி கல்வெட்டு. 987ஆம் ஆண்டு வாக்கில் பொறிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இந்தக் கல்வெட்டில் நேரடியாகக் கொலையாளிகளின் பெயர்கள் சொல்லப்படவில்லை.

ஆனால் ரவிதாசன், சோமன் போன்றவர்கள் கொலையில் சம்பந்தப்பட்டவர்களின் உறவுகள் என்றும் அவர்களின் நிலங்களைப் பறிமுதல் செய்து கோயிலுக்கு நிவந்தமாகக் கொடுக்க வேண்டும் என்ற ராஜராஜ சோழன் இட்ட திருமுகம் (ஆணை) அந்தக் கல்வெட்டில் சொல்லப்பட்டிருக்கிறது.

ஆனால் ஆதித்த கரிகாலன் இறந்ததாகச் சொல்லப்படும் சுமார் 969ஆம் ஆண்டிலிருந்து 18 ஆண்டுகள் கழித்து, அதுவும் அவரது தம்பி ராஜராஜ சோழன் ஆட்சியில்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கால இடைவெளியை ஆதாரமாகக் கொண்டுதான் யார் கொலை செய்திருப்பார் என்ற தனது யூகத்தைத் தெரிவிக்கிறார் சரித்திர ஆய்வாளர் நீலகண்ட சாஸ்திரி. இது சம்பந்தமான அவரது கட்டுரை எபிகிராஃபியா இண்டிகாவில் வெளிவந்திருக்கிறது.

கல்வெட்டுகள் என்று பார்த்தால் தென்னிந்தியாவில்தான் அவை அதிகம். ஆதலால் இந்தியத் தொல்லியல் ஆய்வுக் கழகம் தென்னிந்திய கல்வெட்டுக்கள் என்று 40 தொகுதிகள் வெளியிட்டிருக்கிறது. 1920ஆம் ஆண்டு வரையில் கல்வெட்டுகள் வாசிக்கப்பட்டு வெளியிடப்பட்டன. அதற்குப் பின்பும் சில கல்வெட்டுகள் வெளிவந்திருக்கின்றன. ஆனால் சரியான நெறிமுறைகளும் வழிகாட்டுதல்களும் பின்பற்றப்படவில்லை. ஆதலால் பல்வேறு குழப்பங்களும் சிக்கல்களும் ஏற்பட்டன” என்றார் ராமச்சந்திரன்.

தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படம் சோழர் காலத்து வரலாறு மீதும், கல்கியின் புதினத்தின் மீதும் மக்களுக்கு ஒரு பேரார்வத்தைக் கிளப்பியிருக்கிறது. அதைப் பற்றிய கேள்விக்கு ராமச்சந்திரன், ‘இந்த விசயத்தில் மக்களுக்கு ஒரு ரொமாண்டிக்கான ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது’ என்றார். “ஆனால் வரலாற்றில் ரொமாண்டிசிஸத்திற்கு இடமில்லை. அது கறாராக ஆராயப்பட்ட சம்பவங்களின் தொகுப்பு. புதினத்திற்காகவும் திரைப்படத்திற்காகவும் கூட்டியோ குறைத்தோ வரலாறு திரிக்கப்படலாம். அது புனைவியல் சுதந்திரம்.

தஞ்சாவூர் தமிழகத்தின் சிறப்புகளில் ஒன்று; அதில் சந்தேகமில்லை. சோழர்களின் ஆட்சி தமிழகத்திற்குத் தந்த அருங்கொடைகளில் அதுவும் ஒன்று. எப்பேர்ப்பட்ட கட்டிடக்கலைத் தொழில்நுட்ப வல்லுநர்கள் அந்தக் காலத்தில் இருந்திருப்பார்கள் என்பது நமக்குப் பிரமிப்பான விசயம்தான். அந்தப் பெருமிதத்தை புதினமும் திரைப்படமும் ஊட்டியது தவறில்லை.

ஆனால் சோழர் காலத்தில் உள்நாட்டிலும் தென்கிழக்கு ஆசியாவிலும் மேற்கொண்ட படையெடுப்புகளும், கப்பற்படைப் போர்களும் சோழர்களின் ஆகப்பெரும் பலத்தை விதந்தோதினாலும், அவை எவ்வளவு பெரிய அழிவுகளை உண்டாக்கியிருந்தன என்பதையும் சரித்திரம் பதிவு செய்திருக்கிறது. அந்த அழிவுகளின் தாக்கம் பின்வந்த நூற்றாண்டுகளிலும் உணரப்பட்டது என்பதும் உண்மை.

இன்றைய அரசியல், சமூக விழுமியங்களின் அளவுகோல் படி சோழ சாம்ராஜ்யத்தில் நிலவிய அரசியல், சமூகக் கட்டமைப்புகள் பிற்போக்காகத் தெரியலாம். கோயில் சார்ந்த கலாச்சார சமூகம் என்பது பல நூற்றாண்டுகளாக இருந்ததுதான். அதுதான் சோழ ஆட்சியிலும் நிலவியது” என்று கூறினார் ராமச்சந்திரன்.

21ஆம் நூற்றாண்டு வேலைவாய்ப்புச் சந்தையில் கல்வெட்டுப் படிப்பிற்கான இடம் என்ன என்ற கேள்விக்கு, அரசுக்கு வருவாய் ஈட்டித்தரும் சுற்றுலாத் துறைக்குச் சரித்திரமும் கல்வெட்டுக் கல்வியும் கற்றவர்கள் தேவை. ஆதலால் கல்வெட்டு ஆராய்ச்சி நிறைய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என நம்புவதாகத் தெரிவித்தார்.

பெண் கல்வெட்டு ஆராய்ச்சியாளர்களுக்கான இடம் பற்றிய கேள்விக்கு சரியான பதில் சொல்வதற்குத் தன்னால் முடியுமா என்று பதிலளித்த ராமச்சந்திரன், கல்வெட்டுத் துறையில் வசந்தி போன்ற பெண் அதிகாரிகள் இருந்ததாகச் சுட்டிக் காட்டினார். எல்லாத் துறைகளில் முன்னேற்றம் கண்டது போல இந்தத் துறையிலும் மகளிர் மேம்பட்டு வருவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

“கங்கைகொண்ட சோழபுரத்தில் ஒரு கல்வெட்டு ஆய்வுக்காகச் சென்ற பெண் அதிகாரி ஒருவர் உள்ளூர் ஆட்களுடன் மோத வேண்டிய சூழல் ஏற்பட்டது. பணி சம்பந்தமான சவால்களும் பிரச்சினைகளும் எல்லாத் துறைகளிலும் இருபாலார்க்கும் உண்டு. அவற்றை எல்லாம் மீறித்தான் ஜெயிக்க வேண்டும்” என்று சொன்னார்.

‘இன்னும் பலர் கல்வெட்டு ஆராய்ச்சித் துறைக்குள் வந்தால்தான் தமிழகத்து வரலாற்றை மேலும் சரியாக, தெளிவாக எழுத முடியும்’ என்று சொல்லும் ராமச்சந்திரன் ‘கல்வெட்டு ஆராய்ச்சிக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது’ என்று முடித்தார்.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival