Site icon இன்மதி

சவுக்கு சங்கர் வளர்ச்சியா, வீழ்ச்சியா?

தமிழகத்தின் குறிப்பிடத் தகுந்த இணைய தள ஆளுமை சவுக்கு சங்கர் இப்போது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்டிருக்கிறார். தடுப்புச் சட்டம் பாயும் முன்னரேயே வேறு சட்டப்பிரிவுகளில் கைதாகியிருந்த அவர் சிறையில். கடுமையாகத் தாக்கப்பட்டதாக அவரது வழக்கறிஞர் கூறுகிறார்.

குண்டர்கள் சட்டம் அவர் மீது பாயும் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் அஞ்சி, உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தனர். ஊகத்தின் அடிப்படையில் விசாரிக்கவியலாது என நீதி மன்றம் கைவிரித்து விட்டது. ஆனால் அது ஊகமல்ல என்பது தெளிவாகிவிட்டது. ஓராண்டுக்கு அவர் விடுதலை இல்லை. ஸ்டாலின் அரசு அவர் மீது வன்மத்துடன் நடந்து கொள்கிறது என்பதே என் புரிதல்.

குண்டர் சட்டத்திற்கு முன் அவர் மீதான வழக்குக்களின் நிலை:

நான் அவருக்கு சில காலம் நெருக்கமாயிருந்திருக்கிறேன். இந்நிலையில் எவ்வளவு தூரம் நேர்மையாக, பாரபட்சமின்றி அவரைப் பற்றி எழுதமுடியும் என்பது ஒரு நியாயமான சந்தேகமே. ஆனால் நான் பொதுவாக இயன்றவரை காழ்ப்புணர்வு ஏதுமில்லாமல், தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை ஒதுக்கிவைத்துவிட்டு எழுதி வந்திருப்பதாகவே நினைக்கிறேன் அதே பாணியில் இப்போதும்.

திமுக வன்மத்துடன் நடந்துகொள்கிறது. அபத்தமான வழக்குக்களைத் தொடுக்கிறது. ஆயினுங்கூட சங்கருக்காக ஆதரவு தெரிவிக்க மனித உரிமை அமைப்புக்கள் எதுவும் முன்வரவில்லை. இணைய தள ஆர்வலர்கள் மௌனமாகக் கடந்து செல்கின்றனர். நான் உட்பட, அவரை சற்று நெருக்கமாக அறிந்த எவரும் அதிகமாக பதட்டப்படவில்லை என்பதும் கசப்பானதொரு உண்மை,

சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்டிருக்கிறார் என்று நம்மில் பலர் நினைக்கிறோம். தொடக்கத்தில் அறச்சீற்ற ஆர்வலராய், ஆள்வோரின் அவலங்களை அம்பலப்படுத்துவது என்ற உயரிய நோக்கில் மட்டுமே அவர் செயல்பட்டு வந்தார் என்பதே என் புரிதல். அவர் தனது இணைய தளத்தில் மதச் சார்பின்மைக்காகவும், பொதுவாழ்வில் நேர்மைக்காகவும் சமரசமின்றி குரல் கொடுத்து வந்தார்.

திமுக வன்மத்துடன் நடந்துகொள்கிறது. அபத்தமான வழக்குக்களைத் தொடுக்கிறது. ஆயினுங்கூட சங்கருக்காக ஆதரவு தெரிவிக்க மனித உரிமை அமைப்புக்கள் எதுவும் முன்வரவில்லை. இணைய தள ஆர்வலர்கள் மௌனமாகக் கடந்து செல்கின்றனர்

அவர் தலித் என்றாலும் அவ்வாறு அடையாளம் காட்டிக்கொண்டதில்லை, எனது முகவரி என் பிறப்பல்ல, என் செயல்பாடே என்பார். நான் உச்சி குளிர்ந்துபோவேன். திருமாவளவன் உள்ளிட்ட பல தலித் தலைவர்களையும் அமைப்புக்களையும் கடுமையாக விமர்சித்து நானே அவரது தளத்தில் எழுதியிருக்கிறேன்.

கமலின் விஸ்வரூபம் பிரச்சினையின்போது இஸ்லாமிய அடிப்படைவாதிகளையும் வன்மையாகக் கண்டித்தார்.

மேலும் படிக்க: பாஜகவிடம் திமுக சரணடைகிறதா? சவுக்கு சங்கர்

காரவன் இதழின் அன்றைய ஆசிரியர் வினோத் ஜோஸ் மோடி பற்றி எழுதிய விரிவான கட்டுரையை நான் மொழி பெயர்க்க, சிவலிங்கத்தின் மீது செந்தேள் என்று தலைப்பிட்டு ஒரு சிறு நூலாகவே 2014 தேர்தல் நேரத்தில் வெளியிட்டார். அத்தகைய நிலைப்பாட்டிலிருந்து இன்னமும் அவர் மாறியிருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

பிரபாகரன் விசிறியாகத்தான் ஒரு கட்டம்வரை இருந்தார் சவுக்கு சங்கர். தமிழ்த் தேசியம் மீது மாளாக் காதலிருந்தது. நானோ விடுதலைப் புலிகளை கட்டோடு வெறுத்தவன். இலங்கைத் தமிழரின் பேரழிவிற்கு அவர்களே முக்கிய காரணம் என நினைப்பவன்.

அது தெரிந்தும் என்னுடன் நெருங்கிய தொடர்பிலிருந்தார். அவரது தளத்தில் எழுதக் கேட்டுக்கொண்டார் அல்லது அனுமதித்தார்.

அவரது எழுத்து வன்மையும் என்னை ஈர்த்தது. கூர்த்த மதி படைத்தவர். எளிதில் அரசியல் போக்குக்களை அவர் கணிக்க முடிந்தது.

தொலைபேசி ஒட்டுக் கேட்பு வழக்கில் சிக்கி பல்வேறு இன்னல்களை அனுபவித்தவர் சங்கர். தனது அனுபவங்களை ஒரு நூலாகவே தொகுத்து வெளியிட்டிருக்கிறார். அது பெரும்பாலும் உண்மை என்றே கருதுகிறேன். அரசு அவரை மோசமாகப் பழிவாங்கியது சித்திரவதைக்கும் உள்ளானார்.

கருணாநிதி அரசால் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார், அவரால் அரசியல் ஆதாயம் அடைந்த ஜெயலலிதாவும் அவரை மீண்டும் பணியில் அமர்த்த முன் வரவில்லை. வாழ்க்கை அப்போது சங்கடமாகத்தான் இருந்தது. சொந்த வாழ்விலும் ஏகப்பட்ட நெருக்கடி. பல்லைக் கடித்துக்கொண்டுதான் காலத்தை ஓட்டிக்கொண்டிருந்தார்.

பணிநீக்கம் செய்யப்படுவோருக்கு அவர்களது ஊதியத்தில் குறிப்பிட்ட தொகை தொடர்ந்து வழங்கப்பட்டு வரும். அவரது தங்கை உட்பட நெருக்கமான சிலரின் உதவியுடன் தான் ஜீவனம்.

எந்நிலையிலும் அவர் எவருக்கும் பணிந்து போகவில்லை. அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

பிறகு என்னாயிற்று? எங்கே வழி தவறினார்? என்னால் ஊகிக்க இயலவில்லை. ஆனால் தவறிவிட்டார், தொடர்ந்து தவறான பாதையில்தான் பயணிக்கிறார் என்றுதான் கருதுகிறேன்.

இடைக்காலப் பணி நீக்க ஊதியம், சிலரின் உதவி இப்படியிருந்தவர் இன்று ஒரு நிறுவனத்திற்கே உரிமையாளராகிவிட்டார். பலரைப் பணியில் அமர்த்தியிருக்கிறார்.

அவரது நிருபர் ஒருவர் ஒரு வழக்கில் கைதானபோது, இப்படி எல்லாம் செய்யக்கூடியவர் அல்ல கார்த்திக், வெறும் பிசாத்து அஞ்சு லட்ச ரூபாய் பிரச்சினை. இதை நான் திரட்டித் தரமுடியும், தருவேன் என அவருக்குத் தெரியாதா என எழுதுகிறார் சங்கர்.

எப்படி இதெல்லாம் சாத்தியம்? யூ டியூப் வருவாயிலிருந்து மட்டுமா? யாராவது ஒரு தனி நபரோ அல்லது குழுமம் ஏதாவதோ சவுக்கு மீடியா இயங்க உதவி செய்யக்கூடும். அப்படி உதவி பெறுவதில் தவறேதும் இல்லை. இணைய தள அமைப்புக்கள் பல அப்படித்தான் செயல்படுகின்றன.

இடைக்காலப் பணி நீக்க ஊதியம், சிலரின் உதவி இப்படியிருந்தவர் இன்று ஒரு நிறுவனத்திற்கே உரிமையாளராகிவிட்டார். பலரைப் பணியில் அமர்த்தியிருக்கிறார்.

ஆனால் இவருக்குப் பின்னால் யார்? புலம் பெயர்ந்த ஈழத்தமிழர் அமைப்புக்கள் ஏதேனுமா? அல்லது பாரதீய ஜனதாவிற்கு நெருக்கமானவர்களா?

அவரது தளத்தில் பாஜகவை ஆதரித்து எதுவும் எழுதாவிட்டாலும் அவர் குறிவைப்பது தொடர்ந்து திமுகவைத்தான்.

கடந்த காலங்களில் அவர் அம்பலப்படுத்திய ஊழல்கள், அதிகார துஷ்பிரயோக நிகழ்வுகள் பல உண்மையாகவே அமைந்தன. அவரது ஆதாரங்கள் நம்பும்படியாகவும் இருந்தன. சம்பந்தப்பட்டவர்கள் ஆடிப்போனார்கள்.

ஆனாலும் அதே நேரம் சில நேரங்களில் முகநூல் மொழியில் சலம்பியிருக்கிறார். வெற்று ஆர்ப்பாட்டம், அலப்பறை. அள்ளி விடுவோம் எடுபடுவதுவரை இலாபம் என்ற பாணியிலும் அவரது பிளாக் அமைந்திருந்தது.

இப்போது நான் அவரிடமிருந்து முற்றிலிரும் ஒதுங்கியிருக்கிறேன், ஒதுக்கப்பட்டிருக்கிறேன், அது மட்டுமல்ல பல்வேறு காரணங்களினால் சிவில் சமூகத்திற்கும் எனக்குமான தொடர்பும் அறுந்துவிட்டது, இணையதளம் வழியேயும், ஒரு சில நண்பர்களுடனான உரையாடல்கள் வழியேயும் செய்திகளைத் தெரிந்துகொள்வது, என்று மட்டுமே ஆகிவிட்டது என் வாழ்க்கை. அந்த அளவில் அவரது எழுத்தின் இன்றைய நம்பகத்தன்மை என்ன என்று உறுதியாகச் சொல்லும் அருகதை எனக்கில்லை.

அவர் இன்றைய திமுக அரசையும், திமுகவையும் அதற்கு நெருக்கமானவர்களையும் விளாசித் தள்ளுவதும் நியாயம்தான். அதே நேரம் இதனால் பயன்பெறக்கூடியது இங்கே காலூன்றத் துடிக்கும் பாஜக என்பதையும் மறக்கலாகாது. அந்த அளவில் அவர்களில் எவரேனும் ஒருவர் கூட சவுக்கு மீடியாவிற்கு உதவலாம். அது உண்மையெனில் ஜீரணிக்கவியலவில்லை.

ஏதோ ஒரு வீடியோவில் செல் ஃபோனில் பேசிவிட்டு அருகிலிருப்பவரிடம் ஒப்படைக்கிறார், பின்னர் தொடர்கிறார். இப்படி அரசியல்வாதிகள் போல அல்லக்கைகள் உடன் எப்படி?

அது மட்டுமல்ல கட்சி ஆரம்பிக்க இருப்பதாக வெளிப்படையாகவே கூறுகிறார். இதெல்லாம் எப்படி சாத்தியம்?

சீமான் வழி செல்ல முயல்கிறாரா?

பெரும் இலட்சியவாதியாக உருவாகிக்கொண்டிருந்தவர் பின்னொரு கட்டத்தில் தான் ஏதோ மிகப் பெரும் தலைவர் போன்று காட்டிக்கொள்ளத் தொடங்கியது, ஆள், அம்பாரி, சேனை என வலம் வருவது, பின்னர் கட்சி ஆரம்பிக்கவிருப்பதாகவும் தெரிவிப்பது, என்றெல்லாம் ஆனபின், எவ்வளவு பேரால் அவரை மனதார ஏற்றுக்கொள்ள முடியும்?

மோடி ஆட்சியில் அச்சு மற்றும் தொலைக் காட்சி ஊடகங்கள் பெருமளவு மக்கள் மத்தியில் மதிப்பிழந்துவிட்டன, நம்பிக்கை குலைந்துவிட்டது. உண்மையான செய்திகளுக்கு யூ டியூபை நாடும் நிலை உருவாகிவிட்டது.

இத் தருணத்தில் சங்கரும் வட இந்திய ரவிஷ் குமார் போன்று கொண்டாடப்படும் நிலைக்கு உயர்ந்திருக்க வேண்டும். ஆனால் உள்நோக்கத்துடன், யாருடைய தூண்டுதலிலோ செயல்படுகிறார், தன்னை மென்மேலும் பிரபலப்படுத்திக்கொள்ளவே முயல்கிறார் என்ற வகையிலான பிம்பம் உருவாயிருப்பது வருத்தத்திற்குரியது, வேதனைப்படவைக்கிறது.

ஆயினுங்கூட இன்னொன்றை நாம் இங்கே நோக்கலாம். ஜெயலலிதா பாணியில், கஞ்சா வைத்திருந்ததாக சங்கர் மீது அடாத வழக்கொன்றைத் தொடுத்த மாநில அரசு, இப்போது குண்டர் சட்டத்தையும் ஏவியிருக்கிறது.  இதுவரை அவர் குறித்த சந்தேகங்களால் அமைதி காத்த மனித உரிமை அல்லது ஊடக அமைப்புக்கள் தங்கள் கண்டனங்களைத் தெரிவிக்க முன் வரக்கூடும். அப்படி எதிர்ப்பு வலுத்து சங்கர் விடுதலை செய்யப்பட்டால், அவரும் சற்று நிதானித்து, தன் பாதை குறித்து மீள் ஆய்வு செய்யலாம்.

Share the Article
Exit mobile version