Read in : English
தமிழ்நாட்டில் சத்துணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு காலை சத்துணவுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ள இந்த நேரத்தில், அண்டை மாநிலமான கேரளம் , அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதில் தடுமாறிக் கொண்டிருக்கிறது.
கேரளத்தில் மாணவர்களுக்கு மதிய உணவு சத்துணவு வழங்கும் பொறுப்பில் இருக்கும் பெரும்பாலான பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், கடந்த நான்கு மாதங்களாக, சொந்த நிதியில் இருந்து, இத்திட்டத்திற்குச் செலவு செய்வதால் கடனில் மூழ்கியுள்ளனர்.
மதிய உணவுத் திட்டம் சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்திலே ஆரம்பமாகிவிட்டது. தமிழ்நாட்டில் நீதிக்கட்சி ஆட்சியின் போது 1920-இல் சென்னை மாநகராட்சியின் ஒரு சில பள்ளிகளில் அதிக குழந்தைகளைச் சேர்ப்பதற்காக இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. மாநிலம் முழுவதும் ஆரம்பப் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் முன்னாள் முதல்வர் காமராஜ் ஆட்சியின் போது 1956-இல் கொண்டுவரப்பட்டது. பின்னர் 1982-இல் எம்ஜிஆர் ஆட்சியில் இந்தச் சத்துணவுத் திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட்டது.
தமிழ்நாட்டைப் போலவே கேரள மாநிலமும் 1984இல் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியது, இது படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு அதிக பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டது.
ஆனால், கேரளத்தில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக மதிய உணவுத் திட்டத்தில்சீர்குலைவுக்கான அறிகுறிகள் வாட்டி வதைத்து வருகின்றன. இத்திட்டத்திற்குத் தேவையான நிதியை வழங்குவதில் ஏற்பட்ட தாமதம், அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களையும் கடுமையாகப் பாதித்துள்ளது.
மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவது தங்களின் விலைமதிப்பற்ற நேரத்தை பறிப்பதால், மதிய உணவு வழங்கும் பொறுப்பில் இருந்து விலக்கு அளிக்க உத்தரவிடக் கோரி, கேரள அரசு தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கம் கடந்த ஜனவரி மாதம் கேரள உயர் நீதிமன்றத்தை அணுகியது. இது குறித்து மாநில அரசு தனது வாதங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
மேலும் படிக்க: தமிழ்நாட்டில் கற்றல்திறன் குறைந்துவிட்டதா?
சுமார் ஆறு மாதங்கள் கழித்து, தனது பதில் மனுவில், பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தொகை (ரூ.130 கோடி) விரைவில் வழங்கப்படும் என்று கேரள மாநில அரசு கூறியது.
மேலும் திருவனந்தபுரத்தில் காரக்குளத்தில் உள்ள அரசு உதவி பெறும் வித்யாதிராஜா எல்பி பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜே.பி.அனிஷ் தனது சிரமங்கள் குறித்து கல்வி அமைச்சருக்கு அனுப்பிய கடிதம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து இந்த விவகாரம் மேலும் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது.
பள்ளியில் மதிய உணவுக்குத் தேவையான காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் கடைகளுக்குக் கொடுக்க வேண்டிய நிலுவைகளுக்காக, கூட்டுறவு வங்கியில் ரூ.2 லட்சம் கடன் வாங்கியுள்ளார் அனிஷ். மேலும் மதிய உணவுத் திட்டத்திற்காகத் தன்னால் மேலும் நிதியை திரட்ட முடியாததால் தனது பள்ளியில் மதிய உணவை நிறுத்தத் திட்டமிட்டுள்ளதாக அவர் தனது கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
இருப்பினும், சத்துணவு வழங்குவது ஒரு குழு நடவடிக்கையாக இருப்பதால், பள்ளிகளின் மூத்த ஆசிரியர்கள் அனைவரும் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதால், ஆசிரியர் சங்கங்களிடையே இந்த நெருக்கடி ஒரு பரந்த சகோதரத்துவத்தை ஏற்படுத்தியுள்ளது.
வரும் நாட்களில் திருவனந்தபுரத்தில் உள்ள மாநில தலைமைச் செயலகம் முன்பு மாநில அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்த ஆசிரியர் அமைப்புகள் தயாராகி வருகின்றன.
காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்படும் அமைப்பான கேரள ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் சங்கம் , மார்க்சிஸ்ட் கட்சியுடன் இணைந்து செயல்படும் அமைப்பான
கேரள பள்ளி ஆசிரியர்கள் சங்கம், யுடிஎஃப் சார்பு அமைப்பான ஒன்றுபட்ட ஆசிரியர்கள் மற்றும் ஊழியர் கூட்டமைப்பு மற்றும் அனைத்து கேரள பள்ளி ஆசிரியர் சங்கம் ஆகியவை போராட்டத்தில் கைகோர்க்க இருக்கின்றன.
மதிய உணவுக்கான மூன்று மாத நிலுவைத் தொகையைப் போர்க்கால அடிப்படையில் பள்ளிகளுக்கு வழங்க வேண்டும்; இடுபொருட்களுக்கான மாறிவரும் விலைவாசிக்கேற்ப இத்திட்டத்திற்காக நிர்ணயிக்கப்பட்ட 8 ஆண்டு கால கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும்; பால் (300 மில்லி), முட்டை (1) உள்ளிட்ட மாநில அரசின் சத்துணவுத் திட்டத்திற்கு ஒரு வாரத்தில் கூடுதல் நிதியை உறுதி செய்ய வேண்டும் போன்றவை இந்த அமைப்புகளின் முக்கியக் கோரிக்கைகளாகும்.
மதிய உணவு வழங்கும் பொறுப்பில் இருந்து விலக்கு அளிக்க உத்தரவிடக் கோரி, கேரள அரசு தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கம் கடந்த ஜனவரி மாதம் கேரள உயர் நீதிமன்றத்தை அணுகியது
மேலும், 2016ஆம் ஆண்டு இருந்த இடுபொருட்களின் விலைகள் தற்போதைய விலைகளை விட குறைவாக இருந்தபோது நிர்ணயிக்கப்பட்ட விலைகளின் அடிப்படையிலே இன்னும் மாநில அரசு ஒவ்வொரு உணவின் விலையையும் கணக்கிட்டு வருகிறது. மாநிலத்தில் 8ஆம் வகுப்பு வரை 30 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது. 15 மாணவர்கள் உள்ள பள்ளிகளுக்கு நாள் ஒன்றுக்கு ஒவ்வொரு குழந்தைக்கும் 8 ரூபாய் வீதமும், 500 மாணவர்கள் வரை உள்ள பள்ளியில் ஒவ்வொரு கூடுதல் குழந்தைக்கும் 7 ரூபாய் வீதமும், 500 மாணவர்களுக்கு மேல் உள்ள பள்ளியில் ஒவ்வொரு கூடுதல் குழந்தைக்கும் 6 ரூபாய் வீதமும் அரசு வழங்குகிறது.
2016-ல் நிர்ணயிக்கப்பட்ட இந்தக் கட்டணத்தை 4 ரூபாய் உயர்த்த வேண்டும் என நிதித்துறையிடம் கல்வித்துறை கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த விலைவாசி அடிப்படையிலே இன்னும் அரசு விலைகளை நிர்ணயம் செய்வதால், பள்ளிகளுக்கு வழங்கப்படும் அனைத்து மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகளின் விலைகளை இன்றைய சந்தை நிலவரப்படி மாநில அரசு நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் ஆசிரியர் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
மேலும், சமையல் எரிவாயுவின் செலவு, போக்குவரத்து செலவு ஆகிய செலவுகளுக்கான நிதியும் தர வேண்டும்; சத்துணவுத் திட்டத்திற்கு என்று பிரத்யேக நிதி என்று எதுவும் இல்லை என்பதால், கூடுதல் தொகையை கல்வித்துறை வழங்க வேண்டும் என்றும், பள்ளிகள் கோரிக்கை விடுத்துள்ளன. அதனால் இப்போது தர்மசங்கடத்தில் இருக்கிறது கல்வித்துறை.
இத்திட்டத்தின்படி, ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு மாணவருக்கும் 300 மில்லி பால் (ரூ.16.80) மற்றும் ஒரு முட்டை (ரூ.6) வழங்கப்படுகிறது. முட்டைக்கும், பாலுக்கும் மட்டுமே வாரம் ஒரு குழந்தைக்கு ரூ. 22.80 ஆகிறது. ஆனால் ஐந்து நாள் உணவு உட்பட இவை அனைத்திற்கும் ஒரு குழந்தைக்கு ரூ. 40 மட்டுமே அரசு ஒதுக்குகிறது. இந்த 40 ரூபாயில் முட்டைக்கும், பாலுக்கும் போக மிச்சமிருக்கும் ரூ.17.20-ல் ஐந்துநாள் உணவு ஒரு குழந்தைக்கு வழங்க முடியுமா என்று ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.
ஒன்றிய அரசும், மாநில அரசும் இணைந்துச் செயற்படுத்தும் இத்திட்டத்தின் செலவினப் பகிர்வு விகிதம் 60:40 ஆகும். இந்தத் திட்டத்தில் பயன்பெறும் மாணவர்களின் எண்ணிக்கை விவரங்களை மாநில அரசு வழங்கத் தவறியதால், ஒன்றிய அரசின் பங்கான 60 சதவீத நிதி இன்னும் நிலுவையிலே இருக்கிறது. மாநில அரசின் இந்த மெத்தனப் போக்கு ஆசிரியர் அமைப்புகளை மேலும் கோபமடையச் செய்துள்ளது.
சத்துணவுத் திட்டத்தை நிறுத்துவோம் என்று ஆசிரியர்கள் எச்சரித்த பிறகுதான், ஒன்றிய அரசு கேட்ட விவரங்களைத் தர மாநில அரசு அவசர அவசரமாக முயற்சி செய்ய ஆரம்பித்திருக்கிறது.
Read in : English