Read in : English
சின்னச்சின்ன வாய்ப்புகளைப் பயன்படுத்தி திரைப்படங்களில் தலைகாட்டி வந்த யோகிபாபு, மிகக்குறுகிய காலத்தில் தமிழ்த் திரையுலகில் முக்கிய நகைச்சுவை நடிகராக உருவாகியுள்ளார். கலைவாணர் என்.எஸ்.கேவுக்கு முன் தொடங்கி இன்று வரை, எத்தனையோ நகைச்சுவைக் கலைஞர்களைக் கண்டு வருகிறது தமிழ் திரையுலகம்.
கொஞ்சம் கூட பிரதியெடுக்க முடியாத அளவுக்குத் தனித்துவம் மிக்கவர்கள் பலரும் அவ்வரிசையில் இடம்பெறுவார்கள். அவர்களில் சிலர் மட்டுமே திரையில் தோன்றினாலே கைத்தட்டல்களை அள்ளுவார்கள்.அப்படியொரு இடத்தைப் பெற்றிருப்பவர் யோகிபாபு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் பார்த்தவுடன் சிரித்துவிடும் தோற்றம் கொண்ட இவர், ஒருகாலத்தில் கூட்டத்தில் ஒருவராகவும், ஹீரோவிடம் உதை வாங்கும் அடியாளாகவும் நடித்தார்.
இருபதுகளில் இருக்கும்போது, திரைத்துறைக்குள் காலடி எடுத்துவைத்தார் யோகிபாபு. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘லொள்ளுசபா’வில் உதவி இயக்குநராகவும் எழுத்தாளராகவும் பணியாற்றியிருக்கிறார். அதைத் தாண்டி, அவரைக் குறித்த தகவல்கள் ஏதும் பொதுவெளியில் இல்லை. காரணம், தன்னைக் குறித்த முழுமையான தகவல்களைப் பேட்டிகளில் அவர் பகிர்ந்துகொண்டதே இல்லை.
அந்தளவுக்கு வேலைப்பளுவுடன் திரிகிறார் என்பது ஒருபக்கம் இருந்தாலும், அதைப் பகிர்வதனால் என்னவாகிவிடப் போகிறது என்ற எண்ணம்தான் அதன் பின்னிருக்கிறதோ என யோசிக்க வேண்டியிருக்கிறது. திரைப்பட விழா மேடைகளிலும், படப்பிடிப்புத்தளங்களிலும், ஏன் திரையிலும் அவர் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும்விதம் அதுவே அவரது குணாதிசயங்கள் என்று சிலவற்றை நம் கண் முன்னே காட்டுகிறது.
அதனால், யோகிபாபுவுக்குக் கிரிக்கெட்டில் ஆர்வம் அதிகம்; இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் அவரது நெருங்கிய நண்பர்; தந்தை ராணுவத்தில் பணியாற்றியதால், யோகிபாபுவுக்கும் அவரைப் போல ராணுவ வீரர் ஆக வேண்டுமென்ற ஆசை இருந்தது; 2020இல் அவருக்குத் திருமணமானது; ஒரு ஆண் குழந்தை உண்டு; தொலைக்காட்சியில், திரைப்படங்களில் பணியாற்றுவதற்கு முன்னர் உடலுழைப்பை வெளிப்படுத்தும் கடினமான வேலைகளைச் செய்திருக்கிறார்; இவர் ஒரு முருக பக்தர்; இப்படிச் சின்னச்சின்ன தகவல்கள் உருவாக்கும் சித்திரமே ’யோகிபாபு யார்’ என்பதைச் சொல்கிறது.
சின்னச் சின்ன வாய்ப்புகள் கிடைக்கும்போதெல்லாம் திரையில் தலைகாட்டினார்; அப்படிப்பட்டவர் அமீர் தயாரித்த ‘யோகி’யில் முகம் காட்டும் வாய்ப்பைப் பெற்றார். பாபு என்ற அவரது இயற்பெயருடன் ‘யோகி’ அப்படித்தான் ஒட்டிக்கொண்டது
‘ஆமா, இவர் பெரிய அம்பானி’ என்று கவுண்டமணி எக்காளம் செய்யும்போது நம்மிடம் சிரிப்பு பொங்கும்; அவருக்கு முன்னே சுருளிராஜன் தொடங்கி விவேக், சந்தானம், சதீஷ் என்று பலரும் பின்பற்றிய ‘நையாண்டி’ பாணியைத்தான் யோகிபாபுவும் கைக்கொண்டிருக்கிறார். அதனால், உடல் கேலி செய்கிறார் என்ற குற்றச்சாட்டுக்கும் ஆளாகியிருக்கிறார். ஆனால், அப்படிப்பட்ட ‘கவுண்டர்கள்’ கதையுடன், காட்சியுடன், கதாபாத்திரங்களுடன் பொருந்தியிருந்தால் தியேட்டரே ஆரவாரப்படுகிறது என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.
மாவீரன் படத்தில் இடம்பெற்றுள்ள ’நீ துக்கம் விசாரிக்க வந்திட்டியா; இன்னும் ரெண்டும் நாள்ல உனக்கே துக்கச் செய்தி சொல்ல வேண்டியிருக்கும்’ என்று ஒரு முதியவரைப் பார்த்துப் பேசும் வசனம் அதற்கான உதாரணம். சில நேரங்களில் தன்னையே கேலி செய்துகொள்ளும் ‘சாப்ளின்’ பாணியும் அவரிடம் இருந்து வெளிப்பட்டிருக்கிறது.
அதுவும் கூட ‘நான் உனக்கு என்ன பாவம் செஞ்சேன்’ என்ற பாவனையிலேயே பெரும்பாலும் இருக்கும். முதலாவது அவர் நடித்த கமர்ஷியல் படங்களில் நிறைந்திருக்கும் என்று சொன்னால், இரண்டாவது வகை நகைச்சுவை கோமாளி, மண்டேலா போன்ற வெகு சில படங்களில் தென்படும். கிட்டத்தட்ட திரைப்படங்கள் சம்பந்தப்பட்ட மேடைகளிலும் கூட, யோகிபாபு இப்படித்தான் பேசி வருகிறார்; படங்களில் பேசும் தொனியிலேயே இருந்தால்தான் ரசிகர்கள் சிரிப்பார்கள் என்று கூட அவர் நினைத்திருக்கலாம். படப்பிடிப்புத்தளங்களிலும், சாதாரண வாழ்க்கையிலும் அவரிடம் இருந்து வேறு மாதிரியான குணாதிசயங்கள் வெளிப்படலாம்.
ஒரு மனிதராக, சுயத்தை வெளிப்படுத்திக்கொண்டு வாழ்வதுதான் எளிமையாக வாழ்வை மேற்கொள்ள உதவும். அந்த எல்லைக்கோட்டை மிகத்தீவிரமாகக் கடைபிடிப்பதால், யோகிபாபுவின் தனிப்பட்ட முகத்தைக் காணவே முடிவதில்லை. இந்த விஷயத்தில், அவர் கவுண்டமணியை முன்மாதிரியாகக் கொண்டிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். ’என் படத்தைப் பார்க்குறப்போ உனக்கு என்ன தோணுதோ, அதுதான் என் முகம்’ எனும் தொனியிலான எண்ணத்தின் வெளிப்பாடு இது.
சொல்லப்போனால், ’என்னைப் பார்க்க வேண்டுமென்றால் தியேட்டர்களுக்கு வாருங்கள்’ என்ற நிலைப்பாடு கூட அவரிடம் இருக்கலாம். இவையெல்லாம் சேர்ந்து, யோகிபாபு ஏற்ற பாத்திரங்களின் இயல்புகளே அவரது குணாதிசயங்கள் என்று கருதும் நிலைக்கு நம்மைத் தள்ளுகிறது. சமூகவலைதளங்களில் தொடர்ந்து பேசப்பட்டால் மட்டுமே புகழ் வெளிச்சத்தைத் தக்கவைத்துக்கொள்ள முடியும் எனும் நிலை உண்டாகியிருப்பது, ‘தானுண்டு தன் வேலையுண்டு’ என்றிருக்கும் கலைஞர்களுக்கு நிச்சயம் ஒரு சாபம் தான். பல நடிகர் நடிகைகளைப் போல, அதற்காக ஒரு தனிக்குழுவை யோகிபாபு நியமித்திருக்கலாம் அல்லது அவரது தீவிர ரசிகர்கள் அந்த வேலையில் முழுமூச்சாக செயல்பட்டு வரலாம்.
அவற்றைவிட, ஒரு சாதாரண ரசிகர் யோகிபாபுவைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் நிறையவே உண்டு. அவற்றைக் கண்டுணர்வதே, அவருடனான உரையாடலாக மாறும். ஏனென்றால், அவரது வளர்ச்சி ராஜயோகத்தினால் வாய்த்ததல்ல; தொடர்ச்சியான உழைப்பினால் வந்தது. எதையாவது செய்து மக்களைச் சென்றடைந்தால் போதும் என்றிருந்தவர் யோகிபாபு.
அப்படித்தான் சின்னச் சின்ன வாய்ப்புகள் கிடைக்கும்போதெல்லாம் திரையில் தலைகாட்டினார்; அப்படிப்பட்டவர் அமீர் தயாரித்த ‘யோகி’யில் முகம் காட்டும் வாய்ப்பைப் பெற்றார். பாபு என்ற அவரது இயற்பெயருடன் ‘யோகி’ அப்படித்தான் ஒட்டிக்கொண்டது. சுந்தர்.சியின் ‘கலகலப்பு’ படம் வெளியானபோது, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதன் தொடர்ச்சியாக சென்னை எக்ஸ்பிரஸ், வீரம், யாமிருக்க பயமே, காக்கிசட்டை படங்களில் சிற்சில காட்சிகளில் நடித்தார்.
அந்த வரிசையில், சிவகார்த்திகேயன் உடன் ‘மான் கராத்தே’வில் இணைந்தபோது ரசிகர்களிடம் சிரிப்பு கூடியது. ‘காக்காமுட்டை’ படத்தில் ரமேஷ் திலக் உடன் தோன்றிய யோகிபாபு, ‘எனக்கே விபூதி அடிக்கப் பார்த்தேள்ல’ என்றபோது தியேட்டரே அதிர்ந்தது. அப்போது ஒலிக்கத் தொடங்கிய சிரிப்புச் சத்தம் ரெமோ, மெர்சல், கலகலப்பு 2, குலேபகாவலி, கோலமாவு கோகிலா, சர்கார் படங்களில் பன்மடங்காகப் பெருகியது.
அவரது வளர்ச்சி ராஜயோகத்தினால் வாய்த்ததல்ல; தொடர்ச்சியான உழைப்பினால் வந்தது…மிகக்குறுகிய காலத்தில் பெற்ற மாபெரும் வளர்ச்சியைத் தக்க வைக்கும் அவரது போராட்டம் மிகப்பெரியது. சிறிதாகத் தடுக்கினாலே, அது பெரிதாகக் கவனிக்கப்படும். அப்படியொரு சூழலில், தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத சக்தியாக யோகிபாபு மாறியிருப்பதை ரசிகர்கள் உற்றுக் கவனித்தாக வேண்டும்
இன்று, திரையில் யோகிபாபு தோன்றினாலே மக்கள் சிரித்து மகிழ்கின்றனர். அவர் பேசும் ஒவ்வொரு வசனத்திற்கும் கைத்தட்டல் சத்தம் பரிசாகக் கிடைக்கிறது. இதனைப் பெறுவதென்பது நிச்சயம் ஒரு வரம் தான்.
சிரிக்க வைப்பவருக்கு அழ வைக்கவும் தெரியும். தங்கவேலு, நாகேஷ் காலம் தொட்டு தமிழ் திரையில் நகைச்சுவை நடிகர்கள் பலர், தங்களால் எப்படியும் நடிக்க முடியும் என்று நிரூபித்திருக்கின்றனர். அவர்களைப் போலவே குணசித்திர வேடங்களில் நடிக்கும் வாய்ப்பினை பரியேறும் பெருமாள், கோமாளி, கர்ணன், ஆண்டவன் கட்டளை போன்ற படங்களில் பெற்றார் யோகிபாபு. தாராளபிரபு, கூர்க்கா போன்ற படங்களில் நாயகனாகத் தோன்றினார். அதன் அடுத்தட்டமாக அமைந்த ’மண்டேலா’ அவரது நடிப்பு சிகரம் தொட்டது.
இடைப்பட்ட காலத்தில் இடைவிடாது பல படங்களில் நடித்தார் யோகிபாபு. ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களும் அந்த வரிசையில் இருந்தன. அவர் நடித்து வெளிவராமல் இருந்த சில படங்கள், அவரது முகத்தைத் தாங்கி தியேட்டர்களில் வெளியாகின. அவற்றில் அவரது பங்கு மிகவும் குறைவு என்பது தியேட்டரில் படம் பார்த்தபிறகே தெரிய வந்தது. அதனை வெளிப்படையாகப் பேசி, சில சர்ச்சைகளில் சிக்கினார் யோகிபாபு.
தன்னுடன் நடிக்கும் நட்சத்திர நடிகர்களை விமர்சித்து வசனம் பேசுவதை எல்லோராலும் செய்ய முடியாது. அந்த தயக்கத்தை உடைத்து, ‘தர்பார்’ படத்தில் ரஜினியையே கிண்டலடித்திருப்பார் யோகிபாபு. தொழில் வேறு, தனிப்பட்ட மரியாதை வேறு என்ற புரிதல் இருந்தால் மட்டுமே அதனைக் கைக்கொள்ள முடியும். அனைத்துக்கும் மேலாக, மிகக்குறுகிய காலத்தில் பெற்ற மாபெரும் வளர்ச்சியைத் தக்க வைக்கும் அவரது போராட்டம் மிகப்பெரியது. சிறிதாகத் தடுக்கினாலே, அது பெரிதாகக் கவனிக்கப்படும். அப்படியொரு சூழலில், தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத சக்தியாக யோகிபாபு மாறியிருப்பதை ரசிகர்கள் உற்றுக் கவனித்தாக வேண்டும்.
இப்போதிருக்கும் இடத்தைத் தக்கவைக்க அவர் என்னென்ன முயற்சிகளைச் செய்கிறார், எப்படியெல்லாம் கடினமாக உழைக்கிறார் என்பதைக் கவனிப்பது நமக்கும் சில பாடங்களைக் கற்றுக் கொடுக்கும். அப்படியொரு நிலைக்கு உயர்ந்திருக்கும் யோகிபாபு, தன் திரைப்பயணத்தில் இன்னும் பல சிகரங்களைத் தொட வேண்டும்.
அந்த எண்ணத்தோடு, இந்த பிறந்தநாளில் (ஜூலை 22) யோகிபாபுவை வாழ்த்துகிறது இன்மதி..!
Read in : English