Site icon இன்மதி

தீட்சிதர்கள் விவகாரம்: சென்னையிலும் குழந்தைத் திருமணங்கள் பொதுவாகி வருகிறதா?

Read in : English

சிதம்பரம் தில்லை நடராஜர் கோயிலைச் சுற்றி எழுந்துள்ள குழந்தைத் திருமணங்கள் விவகாரம் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குறிப்பாக, கொரோனா ஊரடங்கு காலத்தில் தமிழகம் முழுவதும் 3,000-க்கும் மேற்பட்ட குழந்தைத் திருமணங்கள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. சட்டம் எதிர்கொள்ளும் சமூக அச்சுறுத்தல்களில் ஒன்றான குழந்தைத் திருமணம் பல தாக்கங்களையும் பரிமாணங்களையும் கொண்டுள்ளது.

இந்தப் பின்னணியில், தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் கண்காணிப்பகத்தின் முன்னாள் மாநில அமைப்பாளர் ஆண்ட்ரூ சேசுராஜ் இன்மதிக்கு அளித்த பேட்டியில், வாழ்வாதாரக் கண்ணோட்டங்களைத் தாண்டி சாதீயக் கண்ணோட்டமும் இந்தச் சர்ச்சையில் உள்ளது என்றார்.  இந்த சமூக-சட்டப் பிரச்சினையை ஆழமாக ஆராய்ந்த அவர், குழந்தைகள் உரிமைகள் குறித்த ஐ.நா உடன்படிக்கையை (1992-ல்) அங்கீகரித்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

ஆனால் மின்னணு தொழில்நுட்பம் மிகவும் முன்னேறியதாகக் கருதப்படும் ஒரு யுகத்தில் இன்னும் குழந்தைத் திருமணங்கள் இந்தியாவில் நடக்கிறது என்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது; அதுவும் சமூகநீதி மாண்புகளை உயர்த்திப் பிடித்திருக்கும் ’பெரியார்’ மண்ணான தமிழகத்தில் இந்தக் குற்றம் நடப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்றார்.

குழந்தைத் திருமணங்களின் எண்ணிக்கை 3,000-க்கு மேலானது என்று அதிகாரப்பூர்வமாகக் கருதப்பட்டாலும், பதிவு செய்யப்படாத பல குழந்தைத் திருமணங்கள் அதிகமாக இருக்க வேண்டும் என்று கூறிய அவர், அவற்றில் பெரும்பாலானவை மலைப்பகுதிகள் மற்றும் உட்புறக் கிராமங்களில் நடைபெறுவதே காரணம் என்றார். ஆனால் சென்னையில்கூட இந்தப் பிற்போக்குத்தனமான நடைமுறை இருக்கிறது என்று தெரிவித்தார் அவர்.

ஆண்ட்ரூ சேசுராஜ் கூறுகையில், ஊரடங்கு காலத்தில் மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த போது, பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடையாத குடும்பங்கள் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் குறித்து கவலை கொண்டிருந்தன. அவர்களில் பெரும்பாலோர் ஊரடங்குக் காலத்தில் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பினர். ஏற்கனவே கொரோனா தொற்றால் வாழ்வாதாரம் இழந்து தவித்த பெற்றோர்களுக்கு, வேறு சில சாதியைச் சார்ந்தவர்களை தங்கள் பெண்கள் வாழ்க்கைத் துணையாகத் தேர்வு செய்து கொள்வார்களோ என்ற அச்சம் இருந்தது.

மேலும், அவர்கள் பொருளாதாரச் சுமைகளாக இருக்கும் தங்கள் மைனர் வயது பெண்களை ஊரடங்குக் காலத்தில் அதிக செலவு செய்யாமல் திருமணம் செய்து அனுப்பி விட்டனர். எல்லாவற்றிற்கும் மேலாக சாதீயம் நமது சமூகத்தின் பொதுப் புத்தியில் அழிக்க முடியாத அளவுக்கு ஆழங்காற்பட்டு விட்டது. என்னதான் பிரச்சாரங்களும், சட்டங்களும் சாதிக்கு எதிராக இருந்த போதிலும்!

மின்னணு தொழில்நுட்பம் மிகவும் முன்னேறியதாகக் கருதப்படும் ஒரு யுகத்தில் இன்னும் குழந்தைத் திருமணங்கள், அதுவும் ’பெரியார்’ மண்ணான தமிழகத்தில் குற்றம் நடப்பது மிகமிக துரதிர்ஷ்டவசமானது. குழந்தைத் திருமணங்களின் எண்ணிக்கை 3,000-க்கு மேலானது என்று அதிகாரப்பூர்வமாகக் கருதப்பட்டாலும், பதிவு செய்யப்படாத பல குழந்தைத் திருமணங்கள் அதிகமாக இருக்க வேண்டும்

குழந்தைத் திருமணங்களைத் தடுக்க முடியாத அளவுக்கு அரசு திறமையற்றதா என்று கேள்விக்கு “பெருந்தொற்று என்பது நாம் சற்றும் எதிர்பார்க்காத ஒன்று,” என்று சேசுராஜ் சொன்னார். எனினும் அரசு படுவேகமாகச் செயல்பட்டு குழந்தை திருமணங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்ததை மறுக்க முடியாது.

குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் இந்த அச்சுறுத்தலைத் தடுப்பது மற்றும் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பது குறித்து மிகவும் தெளிவாகவே உள்ளது. குழந்தைத் திருமணத்தை நடத்துவது, அரங்கேற்றுவது, ஊக்குவிப்பது ஆகிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் இரண்டாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும். மணமகன் மற்றும் மணமகனின் பெற்றோர் மட்டுமல்லாமல், விழாவை நடத்திய புரோகிதர் மற்றும் திருமண மண்டபத்தின் உரிமையாளர் உட்பட விழாவிற்கான அனைத்து உபகரணங்களை வழங்கியவர்களுக்கும் தண்டனை உண்டு.

மேலும் படிக்க: குழந்தைத் திருமண விவகாரம்: தீட்சிதர்கள் அரசியல் செய்கிறார்களா?

குழந்தைத் திருமணம் வெற்றிகரமாக நடத்தப்பட்டாலும் சட்டப்படி அது செல்லாது என அறிவிக்கப்படும். சம்பந்தப்பட்ட பெண் கருவுற்றால், திருமணம் ரத்து செய்யப்பட்டாலும், கணவர் அல்லது அவரும் மைனராக இருந்தால், அவரது பெற்றோர்கள் அந்தப் பெண்ணுக்கு பணஉதவி செய்தாக வேண்டும். அதுதான் சட்டம் என்றார். மேலும் போக்சா சட்டமும் இதில் கொண்டுவரப்படும்.

இதுவரை குழந்தைத் திருமண வழக்கில் யாராவது தண்டிக்கப்பட்டிருக்கிறார்களா என்று கேட்டதற்கு, ”ஒருவருமில்லை” என்று பதிலளித்தார் அவர். 100 குழந்தைத் திருமணங்களில், இரண்டு வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்படுகின்றன. சட்டப்படி அனைவரும் தண்டிக்கப்பட்டால், பாதிக்கப்பட்ட சிறுமியின் கதி குறித்தும், அவரது கல்வி மற்றும் வாழ்வாதாரம் குறித்தும் பிரச்சினைகள் ஏற்படும். அதுதான் இந்தப் பிரச்சினையின் சமூகப் பரிமாணம்.

சட்டம் கடுமையாக இருக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. என்றாலும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கும் அதே வேளையில், பாதிக்கப்பட்டவர்களின் துயரங்களைச் சட்டத்தால் கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது. இதனால்தான் குழந்தைத் திருமண வழக்குகளில் யாரும் தண்டனை பெறவில்லை என்றார்.

சமூக நலத்துறை அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும் குழந்தைத் திருமணத்தை தடுத்து நிறுத்தினாலும், பெற்றோர்கள் மற்றும் விழா ஏற்பாட்டாளர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதில்லை. குழந்தைத் திருமணங்கள் நடத்த மாட்டோம் என்று மட்டும் அவர்களிடமிருந்து எழுத்துப்பூர்வமாக உறுதிமொழி பெற்றுவிட்டுத் திரும்பிவிடுகிறார்கள். உத்தியோகபூர்வமான மற்றும் சட்ட ரீதியான பொறுப்பு அங்கு முடிவடைகிறது.

எழுத்துப்பூர்வ உத்தரவாதம் என்ன ஆகும்? கொஞ்ச நாள் கழித்து எங்காவது குழந்தைத் திருமணத்தை நடத்த மாட்டார்களா? இந்த கேள்விகளுக்கு பதில் இல்லை.

குழந்தைத் திருமணத்தை முடிவுக்குக் கொண்டு வரும் பணியில் கடைப்பிடிக்க வேண்டிய நிலையான செயல்பாட்டு நடைமுறையைத் (எஸ்ஓபி) தயாரிக்கும் அரசுக் குழுவில் தானும் ஒரு உறுப்பினராக இருப்பதாக சேசுராஜ் கூறினார். அது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளுடனும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்றார்.

100 குழந்தைத் திருமணங்களில், இரண்டு வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்படுகின்றன. சட்டப்படி அனைவரும் தண்டிக்கப்பட்டால், பாதிக்கப்பட்ட சிறுமியின் கதி குறித்து பிரச்சினைகள் ஏற்படும். அதுதான் இந்தப் பிரச்சினையின் சமூகப் பரிமாணம்

சட்டத்தால் பிரச்சினையை முழுமையாக தீர்க்க முடியாது என்றாலும், என்ன செய்ய வேண்டும்? குறிப்பாக பள்ளி செல்லும் மாணவிகளிடம் விழிப்புணர்வுப் பிரசாரம் பெரிய அளவில் நடத்தப்பட வேண்டும். அதை அரசு தொடங்குமா?

இதற்குப் பதிலளித்த சேசுராஜ், இந்த விஷயத்தில் அரசு சுறுசுறுப்பாக செயல்படுவதாகவும், முடிந்த அளவுக்கு அனைத்தையும் செய்வதாகவும் ஒப்புக்கொண்டார். அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் வருகையை கண்காணிக்க பள்ளி மேலாண்மைக் குழுக்கள் உள்ளன. ஒரு மாணவி நீண்டநாள் பள்ளிக்கு வராமல் இருந்தால், சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் தலைமையிலான குழு விசாரித்து சிறுமி நீண்ட காலமாகப் பள்ளிக்கு வராததற்கான காரணங்களைக் கண்டறிய முயற்சிக்கும்.

மாணவி தரப்பில் ஏதேனும் பிரச்னை தெரிந்தால், மாவட்ட கல்வி அலுவலருக்குத் தகவல் தெரிவிக்கப்படும். குழந்தை திருமண விவகாரத்தில், மாவட்ட அளவிலான பொறுப்பு அதிகாரி தலையிட்டு நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளது.

மேலும் படிக்க: குழந்தைத் திருமணங்கள்: தீட்சிதர்கள் குறிவைக்கப்படுகிறார்களா?

தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளி மாணவர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க அதிக சுதந்திரத்தை அனுபவித்து வருகின்றனர். அவர்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் போது அவர்கள் என்னென்ன செய்ய வேண்டும், யாரை அணுக வேண்டும் என்பது எல்லாம் அவர்களுக்குப் போதிக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களில், குழந்தை திருமண வழக்குகள் அதிகமாக உள்ளன. அது ஏன்?

இந்த மாவட்டங்களுக்கு அருகில் பெங்களூரு உள்ளது. எனவே, இந்த மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் வசிக்கும் பல குடும்பங்களின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மூத்த பெண் குழந்தையின் பராமரிப்பில் விட்டுவிட்டு வேலை நிமித்தமாக அந்தப் பெருநகரத்தில் இருக்கின்றனர். ஒரு கட்டத்தில் பொருளாதார சுமையைக் குறைக்க பெண் குழந்தைகளுக்குத் திருமணம் செய்து வைப்பதே நல்லது என்று நினைக்கிறார்கள். அப்படிச் செய்வது சட்டப்படி குற்றம் என்ற போதிலும் அதை அவர்கள் கவலையில்லாமல் செய்து விடுகிறார்கள் என்றார் சேசுராஜ்.

சிதம்பரம் கோயிலில் தீட்சிதர் குடும்பங்களில் குழந்தைத் திருமணங்கள் நடைபெறுவது குறித்து கேட்டபோது, அந்த பிராமணர்கள் தங்கள் பரம்பரை சடங்குகள் மற்றும் நம்பிக்கைகளில் ஊறிப்போனவர்கள். சமீபத்தில் சில வீடியோக்கள் மூலம் அவர்கள் நடத்திய குழந்தைத் திருமணங்கள் அம்பலமானது. சம்பந்தப்பட்ட பெண் குழந்தையின் முகம் வீடியோவில் காட்டப்படவில்லை என்றாலும், பாதிக்கப்பட்டவர்களின் முகங்களை ஊடகங்களில் காட்டக்கூடாது என்ற சட்டத்தை இந்த வெளிப்பாடு மீறியுள்ளது.

2018-ல் நடந்த கொடூரமான ஆசிஃபா அலி வழக்கில் பாதிக்கப்பட்டவரின் புகைப்படங்களை காட்சிப்படுத்தியதற்காக சில ஊடக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதை நினைவு கூர்ந்தார் சேசுராஜ்.

YouTube player

Share the Article

Read in : English

Exit mobile version