Site icon இன்மதி

சாலைப் பணிகள்: மக்கள் பிரச்சனைகள் என்று தீரும்

Read in : English

சென்னையில் பல்வேறு இடங்களில் சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் அந்தந்தப் பகுதிகளில் உள்ள பொது மக்கள் பெரும் சிரமங்களுக்கு ஆளாகி வருகிறார்கள். சென்னை மெட்ரோ ரயிலின் 118-கிமீ-தூர இரண்டாம் கட்டப் பணிகளுக்கு வசதியாக, போரூரை இணைக்கும் மாநில நெடுஞ்சாலையான ஆற்காடு சாலையின் பரபரப்பான போக்குவரத்து மே 6 முதல் கோடம்பாக்கம் மற்றும் கே.கே.நகர் உள்ளிட்ட மக்கள் அடர்த்தியான குடியிருப்புப் பகுதிகள் வழியாக திருப்பிவிடப்பட்டுள்ளது.

ஒரு பெரும் மக்கள் போக்குவரத்து உட்கட்டமைப்பை நிர்மாணிக்கும் பொருட்டு இரண்டு, மூன்று ஆண்டுகளாக ஏற்பட்டிருக்கும் இந்தப் பெரும் தொல்லைக்கு எல்லோரும் பழகிக் கொண்டுவிட்டார்கள். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சொல்வது போல, நாளை என்பது சிறந்ததாக இருக்க வேண்டும் என்பதற்காக இன்று ஏற்படும் சிரமம் இது.

தி.நகர், மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை ஆகிய ஏரியாக்களின் சில பகுதிகளிலும் இந்தக் கதைதான். இருப்பினும் அங்கு போக்குவரத்து, நெடுஞ்சாலை அளவில் இல்லை. மேலும் சிஎம்ஆர்எல், நெடுஞ்சாலைத் துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி (ஜிசிசி) ஆகியவை மெட்ரோ ரயில், மேம்பாலங்கள் மற்றும் பிற திட்டங்களை நடைமுறைப்படுத்துவதால், வரும் வாரங்களில் இந்த பட்டியலில் மேலும் பல பகுதிகள் சேரும். மேற்கு மாம்பலம் போன்ற பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைப்பதால் போக்குவரத்து நெரிசல் இன்னும் தீர்ந்துபாடில்லை. வடிகால் பணியால் பாதிக்கப்பட்டவைகளில் சில முதிர்ந்த, கம்பீரமான மரங்களும் அடங்கும்.

ஆனால், எந்த முகமைகளும் தங்கள் பணியில் முழுதாய் ஈடுபட்டது போலத் தெரியவில்லை. ஆனால் மெட்ரோ ரயில் முதல் கட்டத்தின் போது அண்ணா சாலை மற்றும் ஈவெரா சாலை (பூந்தமல்லி நெடுஞ்சாலை) ஆகியவற்றில் இடையூறுகள் ஏற்பட்டபோது தடைசெய்யப்பட்ட பகுதியில் நடைபாதைகளைத் தடுத்து வாகனங்களுக்கான பாதைகளை ஒதுக்கியது சிஎம்ஆர்எல். அநேகமாக அந்தச் சாலைகளை விஐபிக்கள் அடிக்கடி பயன்படுத்துவதால் அங்கே மட்டும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருக்கலாம்.

கோடம்பாக்கம்- விஸ்வநாதபுரம் பிரதான சாலை மற்றும் ரங்கராஜபுரம் பிரதான சாலை ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகள் கடந்த 10 ஆண்டுகளாக கடுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இன்று நூற்றுக்கணக்கான பேருந்துகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் திருப்பிவிடப்பட்டு அந்தச் சாலைகளில் ஓடினாலும், கடந்த தசாப்தத்தில் அனைத்து மாநகரப் போக்குவரத்து சேவைகளும் விலக்கப்பட்டதால் அந்தச் சாலைகள் பேருந்து வழித்தடப் பாதைகள் என்ற அந்தஸ்தை இழந்து விட்டன.

கோடம்பாக்கம்- விஸ்வநாதபுரம் பிரதான சாலை மற்றும் ரங்கராஜபுரம் பிரதான சாலை முதியவர்கள், குழந்தைகள், ஊனமுற்றோர் ஆகியோர் செல்ல முடியாத பகுதிகளாக அந்தச் சாலைகள் உள்ளன

சாலைகளில் உள்ள கடைகள் நடைபாதைகளை அழித்து அங்கே பொருட்களை குவித்து வியாபாரம் செய்வதால், பாதசாரிகள் வாகனங்கள் செல்லும் பாதைகளின் ஓரமாகப் பயந்து பயந்து நடந்து செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். முதியவர்கள், குழந்தைகள், ஊனமுற்றோர் ஆகியோர் செல்ல முடியாத பகுதிகளாக அந்தச் சாலைகள் உள்ளன.

மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டத்தின்போது சிஎம்ஆர்எல் அதன் வேலைப் பகுதிகளில் பாதசாரிகள் பயன்படுத்தக்கூடிய நடைபாதைகளைப் பிரித்து ஒதுக்கவில்லை. திருப்பிவிடப்பட்ட போக்குவரத்தைத் தாங்கும் சாலைகளின் நிலையையும் அது கவனத்தில் கொள்ளவில்லை. இரண்டாம் கட்டப் பணியின் ஆரம்ப கட்டத்தில் வடபழனி ஆற்காடு சாலையின் படங்கள் ட்விட்டரில் (@walkingindia) வெளியாகி பாதுகாப்பான பாதைகள் இல்லாமல் பாதசாரிகள் விளிம்புகளில் தள்ளப்படுவதைக் காட்டியபோது, சிஎம்ஆர்எல் தடுப்புக் கட்டைகளுடன் தற்காலிக நடைபாதையை உருவாக்கியது.

மேலும் படிக்க: புறநகர்ப் பகுதிகள்: மெட்ரோவால் புதுவாழ்வு?

ஆனால் அந்த ஏற்பாடுகள் விரைவிலேயே மறைந்துவிட்டன.

புதிதாக திருப்பிவிடப்பட்ட போக்குவரத்தை உள்வாங்கும் பகுதிகளில் உள்ள அனைத்து நடைபாதைகளையும் மீட்டெடுக்கும் பணியை சென்னை மாநகராட்சி செய்திருக்க வேண்டும், ஆனால் அது நடக்கவில்லை. உண்மையில், மேலே குறிப்பிட்ட சாலைகளின் சில பகுதிகளில் போக்குவரத்து திருப்பிவிடப்படும் ஏற்பாடு தொடங்குவதற்கு முன்பே நடைவெளியே இல்லை. அப்போதிருந்தே நிலைமை மேலும் கடினமாகி விட்டது.

பயன்படுத்தக்கூடிய பாதசாரிகளுக்கான உள்கட்டமைப்பு போன்ற சாதாரண பழைய பிரச்சினைகளைத் தீர்த்து வைக்காதபோது, சென்னையின் போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்பான கும்டா, தனது புதிய மென்பொருள்-மாடலிங் அணுகுமுறை மூலம், இந்த அடிப்படை போக்குவரத்துப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்க முடியுமா? (போக்குவரத்து முறைகளை வடிவமைக்கவும் மெட்ரோ ரயில் கட்டுமான பகுதிகளுக்கான போக்குவரத்து ஓட்டத்திற்கான தீர்வுகளை பரிந்துரைக்கவும் இரண்டு மென்பொருள் தொகுப்புகளை கும்டா வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது).

தமிழ்நாடு தெருவோர வியாபாரிகள் (வாழ்வாதாரப் பாதுகாப்பு மற்றும் தெருவோர விற்பனை ஒழுங்குமுறை) விதிகள் 2015–ன் கீழ் உரிமங்களை வழங்கவும், இத்துறையை ஒழுங்குபடுத்தவும், புறநகர் ரயில் நிலையங்கள் மற்றும் தற்போதுள்ள மெட்ரோ நிலையங்களுடன் உள்ளூர் இணைப்பை உடனடியாக மேம்படுத்தவும், பயணிகள் தனிப்பட்ட வாகனங்களைப் பயன்படுத்துவதை விட அவர்களைப் பொதுப்போக்குவரத்து மூலம் அதிக பயணங்களை மேற்கொள்ள வைக்கும் ஒரு மாற்றத்தை அடையவும், கும்டா சென்னை மாநகராட்சிக்கு அழுத்தம் கொடுக்குமா?

மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்படும் வரை சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் மூலம் அரசுப் பேருந்துகளை கொள்முதல் செய்யும் நடைமுறையை சென்னை உயர் நீதிமன்றத்தை ஒத்திவைக்க வைத்து நீண்டகால நிலுவையில் இருந்த வழக்கை இப்போதுதான் முடித்திருக்கின்றன அரசுப் போக்குவரத்துத் துறையும், பெருநகர சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகமும்.

இணக்கமான அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட்டிருந்தால் இந்நேரம் சென்னையில் பேருந்து இணைப்பை அதிகரிக்கப்பட்டிருக்கும் .கடைசி மைல் போக்குவரத்து இணைப்பில் இருக்கும் சில சிரமங்கள் நீக்கப்பட்டிருக்கும்.

சென்னையில் மினி பஸ்களை அறிமுகப்படுத்துவதில் காலதாமதம் செய்த அதிமுகவைப் போல் அல்லாமல், பேருந்து சேவை விரிவாக்கத்தில் வலுவான நிலைப்பாட்டை கொண்டுள்ள, திமுக அரசின் கண்காணிப்பில்தான் இத்தனை தோல்விகளும் நிகழ்ந்திருக்கின்றன.

உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், வரும் மாதங்களில், சென்னை மாநகரின் உற்பத்தித்திறனை இந்தத் தோல்விகள் பாதிக்கும் அபாயம் உள்ளது. மாணவர்கள் விடுமுறையில் இருக்கும் இந்தக் கோடை காலத்தில் சென்னை மாநகராட்சி நடைபாதைகளை சீரமைத்து, தடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றலாம். விடுமுறைக் காலம் விரைவில் முடிவடையவிருக்கின்றது.

இதில் வேடிக்கை என்னவென்றால், பள்ளி மண்டல பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்பதுதான் முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் கும்டா கூட்டத்தில் வழங்கிய அறிவுரை. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகள், தமிழகத்தில் பல கடுமையான விபத்துகள் கல்வி நிலையங்களுக்கு அருகிலேயே நிகழ்கின்றன என்று சுட்டிக் காட்டுகின்றன.

கும்டாவின் தலைவர் என்ற முறையில், முந்தைய காலகட்டத்தில் ”நடைபாதைகள் நடப்பதற்கே” என்ற கோஷத்தை முன்வைத்த முதலமைச்சர், கட்டுமானத்தில் உள்ள மெட்ரோ ரயில் பிரிவுகளிலும், மற்றும் போக்குவரத்து திருப்பிவிடப்பட்டுள்ள ஆழ்வார்பேட்டை மற்றும் ரங்கராஜபுரம் போன்ற பகுதிகளைச் சுற்றியுள்ள சாலைகளிலும் நிலவும் நிலைமை குறித்து உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும். இது சிஎம்ஆர்எல் மற்றும் சென்னை மாநகராட்சியின் செயல்பாடுகளில் சுறுசுறுப்பை புகுத்தி அலட்சியத்தை குறைக்கும்.

சாலைக் கட்டுமானப் பணிகளினால் ஏற்படும் சிரமங்கள் தவிர்க்க முடியாததாக இருக்கலாம், ஆனால் பாதுகாப்பு மற்றும் உற்பத்தித்திறனுக்கான தற்காலிக நடவடிக்கைகள் மூலம் அந்தச் சிரமங்களைக் குறைக்க முடியும்

போக்குவரத்து மற்றும் மேம்பாட்டுக் கொள்கை நிறுவனத்தின் தெற்காசிய இயக்குநர் அஸ்வதி திலீப், மெட்ரோ ரயில் திட்டப் பகுதிகளிலும் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பாதசாரி உள்கட்டமைப்பின் முக்கியத்துவம் குறித்து கேட்டபோது இவ்வாறு கூறினார்: சென்னை தன் மெட்ரோ ரயில் நெட்வொர்க்கை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்துவதால், ஒவ்வொரு நிலையத்தின் 500 மீட்டர் சுற்றளவிலிருந்து பாதசாரி அணுகும் வசதியைக் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

அகலமான, தொடர்ச்சியான நடைபாதைகள் மற்றும் பாதசாரிகளுக்கான புகலிடங்களுடன் கூடிய பாதுகாப்பான சந்திப்புகள், அனைத்து மெட்ரோ நிலையக் காரிடர்களிலும் பேருந்து வழித்தட சாலைகளிலும் அமைக்க வேண்டும்.

மற்ற தெருக்களில் போக்குவரத்தை அமைதிப்படுத்தும் கூறுகள், ஒழுங்கமைக்கப்பட்ட வாகன நிறுத்தம் (ஏதேனும் இருந்தால்), தொடர்ச்சியான அணிவரிசை மற்றும் போதுமான வெளிச்சம் ஆகியவை இருக்க வேண்டும்.

மேலும் படிக்க: சென்னை விரிவாக்கம்: சிஎம்டிஏ எதிர்கொள்ளும் சவால்கள்!

சென்னையின் பெரும்பகுதியை மிகப்பெரிய கட்டுமானத் தளமாக மாற்றிய உள்கட்டமைப்பு பணிகள் பெரும்பாலான இடங்களில் இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போரூர்-பூந்தமல்லி, ஓஎம்ஆர் மற்றும் மாதவரம் போன்ற சில புறநகர்களும் வரைபடத்தில் உள்ளன.

சாலைக் கட்டுமானப் பணிகளினால் ஏற்படும் சிரமங்கள் தவிர்க்க முடியாததாக இருக்கலாம், ஆனால் பாதுகாப்பு மற்றும் உற்பத்தித்திறனுக்கான தற்காலிக நடவடிக்கைகள் மூலம் அந்தச் சிரமங்களைக் குறைக்க முடியும். மக்களுக்குப் பாதுகாப்பு வேண்டும். பொருளாதார மேம்பாட்டுக்குச் செயல் திறனும் வேண்டும்.

Share the Article

Read in : English

Exit mobile version