Site icon இன்மதி

வசூலில் குவிக்குமா மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் 2?

Read in : English

பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியுள்ள மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் 2, முதல் பாகத்தைப் போல இரண்டாம் பாகமும் வசூலில் குவிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரு திரைப்படத்தின் இயக்குநர், தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர் நடிகைகள், கதையின் மையக்கரு, அது பேசும் அரசியல் என்று பல விஷயங்கள் ஒன்றிணைந்து ரசிகர்கள் தியேட்டர்களுக்கு படையெடுக்க வழியமைத்துத் தரும்.

மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன் முதல் பாகம்’ வெளியானபோது, கல்கி எழுதிய ஒரு வரலாற்றுப் புனைவை எப்படிக் காட்சியாக்கம் செய்திருப்பார் என்ற எதிர்பார்ப்பு மட்டுமே ரசிகர்களின் திரட்சிக்குக் காரணமாக அமைந்தது. அதன்பிறகு, அந்த நூலைப் படிக்காதவர்களும் கூட ஓர் அரச கதையைத் திரையில் பார்க்கும் சுவாரஸ்யத்தினை அனுபவிக்க விரும்பினர்.

அதனாலேயே, தமிழில் அதிக வசூலைப் பெற்ற திரைப்படங்களில் ஒன்றாகவும் மாறியது. தற்போது அதன் இரண்டாம் பாகம் வெளியாகியிருக்கிறது; சோழப் பேரரசை ஆண்டு வரும் சுந்தர சோழர் உடல்நலமில்லாமல் பழையாறையில் ஓய்வெடுக்கிறார். அந்த நேரத்தில், கடம்பூர் சிற்றரசில் மதுராந்தக சோழரை அடுத்த வாரிசாக ஆக்கும் முயற்சிகள் நடக்கின்றன.

அதனைப் பயன்படுத்திக்கொள்ளும் விதமாக, இலங்கையில் இருக்கும் அருள்மொழிவர்மனைக் கொல்லத் திட்டமிடுகின்றனர் பாண்டிய ஆபத்துதவிகள். அப்படி ஏதும் நடவாமல் இருக்க, தன் தோழன் வந்தியத்தேவனை தஞ்சைக்கு அனுப்பி வைக்கிறார் ஆதித்த கரிகாலன். தொடர்ச்சியான சில நிகழ்வுகளுக்குப் பிறகு, இலங்கையில் இருக்கும் அருள்மொழிவர்மன் தஞ்சை திரும்புவதற்கு யோசிக்கிறார்; அந்த நேரத்தில், அவரைத் தாக்க முயற்சிக்கின்றனர் பாண்டிய ஆபத்துதவிகள். அப்போது கடலில் ஏற்படும் புயலில் கப்பல் கவிழ்கிறது. அருள்மொழி வர்மனும் வந்தியத்தேவனும் கடலுக்குள் மூழ்கியதாக கொக்கரிக்கின்றனர் ஆபத்துதவிகள்.

அடுத்து என்ன நடக்கும்? இளவரசர் அருள்மொழிவர்மன் சாகவில்லை என்று தானே கதை தொடரும். கல்கியின் புனைவையே ஆதாரமாக வைத்து, அதையே திரையில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் மணிரத்னம்.

ஆதித்த கரிகாலன் கொலையானார் என்பது சரித்திரம் நமக்குத் தரும் செய்தி. அதையே கல்கி தன் புனைவிலும் பயன்படுத்தியிருப்பார். இந்த படத்தில் அதனைத் தெளிவுறச் சொல்ல முயன்றிருகின்றனர்

ஊமையரசி என்று சொல்லப்படும் ஒரு பேச்சுத்திறனற்ற முதிய பெண்மணி, அருள்மொழிவர்மனைக் காப்பாற்றுகிறார்; அவர் தோற்றத்தில் நந்தினி போலவே இருக்கிறார். அதன்பிறகு, வந்தியத்தேவனும் பூங்குழலியும் அருள்மொழியைப் படகில் அழைத்து வருகின்றனர். அவர் பேச முடியாத நிலையில் உடல்நலமற்று இருக்கிறார். வரும் வழியில், நாகையில் உள்ள புத்த மடாலயத்தில் சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.

அப்போது, தன்னைப் பின்தொடரும் ஆபத்துதவிகளின் கையில் சிக்கிக் கொள்கிறார் வந்தியத்தேவன். அதன் தொடர்ச்சியாக, சுந்தர சோழர், அருள்மொழிவர்மன், ஆதித்த கரிகாலன் மூவரையும் ஒரே நேரத்தில் கொல்ல நந்தினி திட்டமிட்டிருப்பது தெரிய வருகிறது.

மேலும் படிக்க: பொன்னியின் செல்வன் 2: ஆதித்த கரிகாலனின் உண்மை கொலையாளியை அம்பலப்படுத்துமா?

அந்த இடத்தில் இருந்து தப்பிக்க வந்தியத்தேவன் என்ன வழியைக் கையாண்டார்? மூவரும் காப்பாற்றப்பட அவர் மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன? ஊமைராணியின் தோற்றம் நந்தினியை ஒத்திருப்பது ஏன் என்பது போன்ற கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது பொன்னியின் செல்வன் 2

பால்ய காலத்தில் காவேரியிலும், இளமைப்பருவத்தில் வங்கக் கடலிலும் மூழ்கவிருந்த அருள்மொழிவர்மன், ஊமையரசியின் அன்பினால் உயிர் பிழைத்து கடல் கடந்த பேரரசை உருவாக்கினார் என்ற சித்திரத்தை இரு பாகங்களின் முடிவுகளில் காட்சிப்படுத்தியிருக்கிறார் மணிரத்னம். அது போன்ற அம்சங்களே பொன்னியின் செல்வன் புனைவைத் திரையில் பார்ப்பதை ஆனந்தமாக்குகிறது.

ஆதித்த கரிகாலன் கொலையானார் என்பது சரித்திரம் நமக்குத் தரும் செய்தி. அதையே கல்கி தன் புனைவிலும் பயன்படுத்தியிருப்பார். இந்த படத்தில் அதனைத் தெளிவுறச் சொல்ல முயன்றிருகின்றனர். அதனைத் தாண்டிச் செல்லவோ, தவிர்க்கவோ விரும்பவில்லை என்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

அந்தக் காட்சியே, ‘பொன்னியின் செல்வன் 2வின் உயிர்ப்புமிக்க பகுதி. அதனை உயர்த்திக் காட்டும் வகையிலேயே, இளம் பிராயத்து நந்தினி – ஆதித்த கரிகாலனின் காதலைச் சொல்வதில் இருந்து தொடங்குகிறது திரைக்கதை. அதற்காகவே மணிரத்னம், குமரவேல், ஜெயமோகன் குழுவினரைப் பாராட்ட வேண்டும். எந்த திசை நோக்கி திரைக்கதை செல்கிறது என்பதை அதுவே திறம்பட சொல்லிவிடுகிறது.

அதேபோல, நீண்ட நாட்கள் கழித்து நந்தினியும் ஆதித்த கரிகாலனும் தனிமையில் சந்திக்கும் காட்சியில் புகுந்து விளையாடியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரவி வர்மன். குந்தவையும் வந்தியத்தேவனும் காதலைப் பரிமாறிக்கொள்ளும் காட்சியும் அதே வகையறா தான். ஆனால், அந்த காட்சிகளில் மௌனத்திற்கு தரப்பட்ட இடம் வேறு காட்சிகளில் அறவே இல்லை.

காட்சியாக்கத்தில் அழகியலை வாரியிறைத்தால் பார்க்க நன்றாக இருக்கும். ஆனால் திரையில் படம் ஓடும் நேரம் அதிகமாகிவிடும். படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் அதில் கண்ணும் கருத்துமாக இருந்திருக்கிறார். அதனால், காட்சிகளின் தொடக்கமும் முடிவும் ரொம்பவே கூர்மையாக இருக்கிறது; கூடவே, பாடல்கள் ஓடும் நேரமும் குறைக்கப்பட்டிருக்கிறது.

ரஹ்மானின் இசையில் ‘அகநக’ பாடல் திரையில் ஒலிக்கையில் கைத்தட்டல்கள் அரங்கை நிறைக்கின்றன. ஆனால், எல்லா பாடல்களும் ஓன்றரை நிமிடங்களுக்குள் முடிந்து விடுகின்றன. அதனால் ரசிகர்கள் சோர்வுற்றிராதபடி பின்னணி இசையால் பரபரப்பு கூட்டியிருக்கிறார் ரஹ்மான். தனித்துக் கேட்கையில், அவை ஒரு வரலாற்று புனைவுக்காக கோர்க்கப்பட்டது என்பதை உணர்வது கடினம்.

நடிப்புக் கலைஞர்களைப் பொருத்தவரை விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா ஐவரும் ரசிகர்களின் மனதில் பிரதான இடங்களைப் பிடிக்கின்றனர். அதே வரிசையிலேயே, படத்தின் டைட்டிலும் அமைந்திருப்பது ஆச்சர்யம். மணிரத்னம் ஒரு இயக்குநராக அவர்களது பாத்திரங்களுக்கான முக்கியத்துவத்தைக் கனகச்சிதமாகத் திட்டமிட்டிருக்கிறார் என்பதையே அச்செயல்பாடு காட்டுகிறது.

நிறைவேறாத காதலின் காரணமாக ஒரு வீரன் போர்க்களமே கதியாகக் கிடக்கிறான் எனும் பாத்திரச் சித்தரிப்புக்கு நேர்மையாக இருந்திருக்கிறார் விக்ரம். ஐஸ்வர்யா ராயை நீண்டநாட்கள் கழித்து சந்திக்கும் காட்சியிலும், பின்னர் அவருடன் தனிமையில் உரையாடும்போதும் நம்மை ஆச்சர்யத்தில் மூழ்கடிக்கிறார்.

ஐஸ்வர்யா ராய்க்கும் அதற்கிணையாகப் பல்வேறு உணர்வுகளை வெளிக்காட்டும் வாய்ப்புகள் தரப்பட்டிருக்கின்றன. அவரும் நன்றாகவே அதனைக் கையாண்டிருக்கிறார். ஆனால், அவரது தோற்ற முதிர்ச்சியை ஒப்பனையால் சிறிது கூட தடுக்க முடியவில்லை.

முதல் பாகத்தைவிட, இதில் ஜெயம் ரவி ‘ஸ்கோர்’ செய்யும் வாய்ப்புகள் அதிகம். அதுவே, கார்த்தியின் இருப்பைக் குறைத்து விடுகிறது. அதையும் மீறி, இருவரும் ஒரே பிரேமில் சேர்ந்து நிற்பது கைத்தட்டல்களைப் பெறுகிறது. சோபிதா துலிபாலா, ஐஸ்வர்யா லெட்சுமி இருவரும் துணை நடிகைகளைப் போல் பயன்படுத்தப்பட்ட நிலையில், சீனியர் என்ற முறையில் த்ரிஷாவுக்கு சிறப்பிடம் கிடைத்திருக்கிறது.  ஆனால் பிரபு, சரத்குமார், பார்த்திபன், ஜெயசித்ரா உள்ளிட்டோருக்கு அந்த வாய்ப்பு கூட கிடைக்கவில்லை. ஜெயராமும் ரஹ்மானும் ஐந்தாறு காட்சிகளில் தோன்றி, தங்கள் இருப்பைப் பதிவு செய்திருக்கின்றனர்.

மணிரத்னம் ரசிகர்களைப் பொருத்தவரை, பொன்னியின் செல்வன் 2 ஒரு அழகான திரை நாடகம். அவ்வளவே! கல்கியின் எழுத்தைப் படிக்கையில் தனக்குள் எழுந்த பிரமிப்பைத் திரைக்குக் கடத்தினால் எப்படியிருக்கும் என்று யோசித்திருக்கிறார் மணிரத்னம்

இவர்கள் அனைவரையும் தாண்டி சிறு வயது நந்தினி – ஆதித்தனாக நடித்த சாரா – சந்தோஷ் ஸ்ரீராம் ஜோடி சம்பந்தப்பட்ட காட்சிகள் ரசிகர்களை சட்டென்று ஈர்க்கும்.

கல்கி எழுதிய ’பொன்னியின் செல்வன்’ புனைவில் நந்தினி யார் என்ற உண்மையைத் தெளிவுபடுத்தியிருக்க மாட்டார். படிக்கும் வாசகர்கள் அவர் வீரபாண்டியனின் மனைவியா, மகளா என்று குழம்ப வேண்டியிருக்கும். ஆதித்த கரிகாலனின் மறைவுக்குப் பிறகு அவர் என்னவானார் என்பது ஒரு கிளைக்கதையாக விரியும்.

கதை நிகழும் காலத்தில் முடிசூட்டிக் கொள்ளாத அருள்மொழி வர்மன் ஏன் 14 ஆண்டுகள் கழித்து அரசர் ஆனார் என்பதற்கு வேறொரு கதையைச் சொல்லியிருப்பார். மிக முக்கியமாக, ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார் என்பது உட்படப் பல கேள்விகளுக்குப் பதில் தராமல் தவிர்த்திருப்பார்.

வேறு சில படைப்பாளிகள் ஆதித்த கரிகாலனின் கொலைக்கு அருள்மொழி வர்மனே காரணம் என்றும் காரணம் புனைந்திருக்கின்றனர். வரலாற்றில் விடுபட்ட தகவல்களில் ஒன்றாகவே அதுவும் இருந்து வருகிறது. பார்த்திபேந்திர பல்லவன் சம்பந்தப்பட்ட காட்சிகள் அந்த சார்பை கைக்கொண்டிருக்கின்றன.

ஆனாலும், படம் பார்க்க வரும் ரசிகர்களை ‘சுற்றலில்’ விட்டுவிடக் கூடாது என்பதில் தெளிவுற யோசித்திருக்கிறார் மணிரத்னம். மேற்சொன்ன கேள்விகளுக்குத் தனது குழுவினரோடு இணைந்து தீர்ப்பு எழுதியிருக்கிறார். கல்கியின் புனைவைப் படித்திராதவர்களுக்கு, அது நேர்த்தியான கதை சொல்லலாகத் தெரியும்; படித்தவர்களுக்கு, அம்முடிவுகள் ஆச்சர்யம் தரும்.

அதேநேரத்தில், பத்தாம் நூற்றாண்டைப் பிரதிபலிக்கும் கலைகள், வாழ்க்கை முறை எதுவும் இப்படத்தில் இல்லை. ஜனநாயக சமூகத்திலேயே தலைவர்களின் செயல்பாடு கேள்விக்குறியாக இருக்கும் சூழலில், அரசாட்சியில் கொடுங்கோன்மை எப்படியிருந்திருக்கும் என்ற விமர்சனம் இதில் கிடையாது. அந்த வகையில், கல்கியின் நாவலைப் பெரும்பாலும் பின்பற்றி மிகச்சில இடங்களில் மட்டும் தனக்கான சுதந்திரத்தை கைக்கொண்டிருக்கிறார் மணிரத்னம்.

மணிரத்னம் ரசிகர்களைப் பொருத்தவரை, பொன்னியின் செல்வன் 2 ஓர் அழகான திரை நாடகம். அவ்வளவே! கல்கியின் எழுத்தைப் படிக்கையில் தனக்குள் எழுந்த பிரமிப்பைத் திரைக்குக் கடத்தினால் எப்படியிருக்கும் என்று யோசித்திருக்கிறார் மணிரத்னம்; அதில் எத்தனை சதவிகிதம் வெற்றி பெற்றிருக்கிறார் என்பது அவருக்கு மட்டுமே தெரியும்!

Share the Article

Read in : English

Exit mobile version