Site icon இன்மதி

பகாசூரன் மீதான ஊடகத் தாக்குதல் சரியா?

Read in : English

சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கும் பகாசூரன் திரைப்படத்திற்கு ஆதரவான – எதிரான விவாதங்கள் சமூகவலைதளத்தில் இன்னும் சூடு குறையாமல் தொடர்கின்றன. எதிர்ப் பிரச்சாரமே அதிகம் என்று சொல்லும் அளவுக்குப் படத்தின் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.

‘பெண்ணடிமைத்தனத்தை வலியுறுத்துகிறது; பெண்களைப் படிக்க வேண்டாம் என்கிறது. அவர்களுக்கு செல்போன் தரக்கூடாது என்கிறது’ என்றெல்லாம் பதிவிட்டு வருகிறார்கள்.

சமூகவலைதளங்களில் மட்டுமல்ல, ஊடகங்களில் பணி புரிபவர்களும் இப்படியான கருத்துக்களை வெளிப்படுத்துகிறார்கள். இப்படம் தொடர்பான விவாதம் ஒன்றில் கலந்துகொண்டபோது, நெறியாளரே இப்படியான வாதத்தை முன்வைத்தார். அது சரியல்ல என்பதே எனது வாதம்.

இயக்குநர் மோகன் ஜியின் முந்தைய படங்களில் சாதி சார்ந்த பார்வை இருந்தது. வேறு எவரும் கேட்காத கேள்வி ஒன்றை திரௌபதி படம் வெளியானபோது அவரிடம் முன்வைத்தேன்.

‘குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்களை, இன்னொரு சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்கள் காதலிப்பதாகச் சொல்லி ஏமாற்றுகிறார்கள் என்பதை நாடகக் காதல் என்று மருத்துவர் ராமதாஸ் உள்ளிட்டோர் சொல்லி வருகிறார்கள். திரௌபதி படத்தில் தேவையற்ற முறையில் நாடகக் காதல், நாடகத் திருமணம் இரண்டையும் ஒரு புள்ளியில் இணைத்து மக்களைக் குழப்பிவிட்டீர்களே” என்ற கேள்வியை எழுப்பினேன். இந்த பார்வையை – கேள்வியை வேறு எவரும் முன்வைக்கவில்லை.

‘உள்ளூரிலேயே அந்த படிப்பு இருக்கும்போது, இங்கேயே படிக்கலாமே’ என பெற்றோருக்கும் குடும்பத்தினருக்கும் தோன்றுவது இயல்பு; மகள் என்றில்லை, மகனுக்கும் இப்படித்தான் சொல்வார்கள்

தனது பெயருக்கு பின்னால் சத்திரியன் என போட்டுக்கொள்ளும் மோகன் ஜியிடம், “சத்திரியர் என்பவர் நெருப்பில் இருந்து வெளிப்பட்டதாக ஒரு புராணக் கதை உண்டு. நெருப்பில் இருந்து மனிதன் தோன்ற முடியும் என நம்புகிறீர்களா” என்கிற கேள்வியையும் நேரடியாக முன்வைத்தேன். ஆக, மோகன் ஜியின் முந்தைய படங்களில விமர்சிக்க வேண்டிய கருத்துகள் இருந்தன.

தற்போது வெளியாகி இருக்கும் பகாசூரன் படம் குறித்து வேறு சில விமர்சனங்கள் இருந்தாலும், ‘ பெண்ணடித்தனத்தை உயர்த்திப் பிடிக்கிறது’ என்பன போன்ற கருத்துக்கள் இல்லை. மனைவி மறைந்துவிட்ட நிலையில், கல்லூரி முடித்தபிறகு தனது ஒரே மகளுக்குத் திருமணம் செய்து வைக்க நினைக்கிறார் அப்பா.

மேலும் படிக்க: வாத்தி – ஆசிரியர் அவதாரத்தில் தனுஷ்!

அந்த மாணவியோ உயர் கல்வி படிக்க விரும்புகிறாள். மகளின் விருப்பத்தை அப்பா ஏற்றுக் கொள்கிறார்.

அந்த மாணவி வெளியூர் கல்லூரியில் படிக்க விரும்ப, ‘உள்ளூரிலேயே படிக்க வாய்ப்பு இருக்கிறதே. இங்கேயே படிக்கலாமே’ என்கிறார். இதைத்தான், ‘பெண்கள் வெளியில் செல்லக்கூடாது என படம் வலியுறுத்துகிறது’ என்கிறார்கள் எதிர்ப்பாளர்கள்.

‘உள்ளூரிலேயே அந்த படிப்பு இருக்கும்போது, இங்கேயே படிக்கலாமே’ என பெற்றோருக்கும் குடும்பத்தினருக்கும் தோன்றுவது இயல்புதான். மகள் என்றில்லை.. மகனுக்கும் இப்படித்தான் சொல்வார்கள். இது எப்படிப் படிப்பை கெடுப்பதாகும்?

தவிர மகளின் விருப்பப்படி வெளியூரில் படிக்க வைக்கிறார் தந்தை. அது மட்டுமல்ல; தன்னுடன் படிக்கும் மாணவன் ஒருவன் தன்னைக் காதலிப்பதாகச் சொல்கிறாள் அப்பெண். அந்த மாணவரும் இவரது வீட்டுக்கு வருகிறார். மாணவியின் தந்தையும் தாத்தாவும் அதை ஏற்கிறார்கள்.  ‘கல்லூரி முடிந்ததும் திருமணத்தை நடத்தி விடலாம்’ என்று மனப்பூர்வமாகச் சொல்கிறார்கள். இது எப்படி பெண்ணடிமைத்தனம் ஆகும்?

பதின்ம வயதில் தான் பெற்றோரின் அரவணைப்பும் கண்காணிப்பும் கூடுதலாகத் தேவைப்படும்; இது எப்படித் தவறாகும்

படத்தில் வரும் இன்னொரு கதையில், ஒரு இளம்பெண் தற்கொலை செய்து கொள்கிறார். அந்த பகுதியில் வரும் இரு வசனங்களைச் சர்ச்சையாக்கி வருகிறார்கள் எதிர்ப்பாளர்கள். அந்த பெண்ணின் தந்தை தனது மனைவியிடம், ‘வீட்டிலதானே இருக்கே. மகளைக் கவனிக்க மாட்டியா’ என்கிறார். அதனைச் சுட்டிக்காட்டி, ‘ஏன், மகளைக் கவனிப்பதில் தந்தைக்குப் பங்கில்லையா’ என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

ஒரு எளிய குடும்பம். நாள் முழுதும் வேலை செய்தால்தான் கூலி வாங்கிப் பிழைக்க முடியும் என்று உழைக்கும் கணவன், குடும்பத்தைக் கவனித்துக் கொள்ளும் மனைவியிடம் இப்படி ஆதங்கத்துடன் கேட்பது நடக்கத்தானே செய்கிறது?

இரண்டாவதாக, தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் தாயார், ‘எப்போ பார்த்தாலும் கதவை மூடிக்கிட்டு செல்போன் பார்த்தா.. இன்னைக்கு இப்டி பண்ணிக்கிட்டா’ என அரற்றுவதையும் எதிர்க்கின்றனர்.

மேலும் படிக்க: ஃபார்ஸி: கள்ளநோட்டு கதையில் விஜய் சேதுபதி!

‘ஏன்.. கதவை மூடிக்கொண்டு செல்போன் பார்க்கக் கூடாதா. பெண்களை பெற்றோர் அடிமைப்படுத்த வேண்டுமா’ என்று கேள்வி எழுப்புகிறார்கள். ‘செல்போனை பெண்களுக்குத் தராதீர்கள் என்கிறார்கள்’ என சிலர் கொதிக்கிறார்கள். படத்தில் அப்படிப்பட்ட காட்சியோ, வசனமோ இல்லவே இல்லை.

‘பிள்ளைகள் செல்போன் பார்க்கும்போது கண்காணியுங்கள்..காரணம், அதில் வழிதவறச் செய்யும் செயலிகள் உள்ளன’ என்று வசனம் உள்ளது. இதற்கும், ‘பிள்ளைகள் என்ன அடிமைகளா, பெற்றோர் கண்காணிப்பதற்கு’ என்கிறார்கள். இந்த கேள்வியை நான் பங்குகொண்ட ஒரு விவாதத்தில் நெறியாளரே கேட்டார்.
அழுவதா, சிரிப்பதா என தெரியவில்லை.

பதின்ம வயதில் உடலிலும் மனதிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும்; இக்காலகட்டத்தில் குழப்பமான மனநிலை ஏற்படும். பலர் வழி தவறுவதும் இந்த காலகட்டத்தில்தான். அந்த நேரத்தில்தான் பெற்றோரின் அரவணைப்பும் கண்காணிப்பும் கூடுதலாகத் தேவைப்படும். இது எப்படித் தவறாகும்?

‘பாலியல் விவகாரத்தில் பெண்கள் இருவர் தற்கொலை செய்துகொள்வதாக, பெண்களைப் பலவீனமாகக் காண்பிக்கிறார்களே. அவர்கள் எதிர்த்துப் போராடுவதாகக் காண்பிக்கக் கூடாதா’ என்று ஒரு கேள்வியை முன்வைக்கிறார்கள்.

தினசரிகளைப் படித்தால், பார்த்தால் ஒரு விசயத்தைப் புரிந்துகொள்ள முடியும். தன்னை ஆடையில்லாமல் படம் எடுத்து மிரட்டுகிறார்கள் என்று எழுதி வைத்துவிட்டுத் தற்கொலை செய்துகொள்ளும் பெண்கள் குறித்த செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. இதை அடிப்படியாக வைத்து இரு கதாபாத்திரங்களைப் படைத்திருக்கிறார் இயக்குநர். இதில் என்ன தவறு?

இதே போல பாதிக்கப்பட்ட பெண், எதிர்த்துப் போராடுவதாகவும் படம் எடுக்கலாம். கற்பனை என்றாலும், அதுவும் அவசியமான படமாகவே இருக்கும். அதற்காக, சமுதாயத்தில் நடக்கும் விசயத்தை எடுக்கக் கூடாது என்பது என்ன நியாயம்?

பகாசூரன் படத்தில் மன்சூர் அலிகான் ஆடும் பாடல் காட்சி தேவையற்றது என்பது என் கருத்து. அதே நேரம் படத்தின் கரு – கருத்து அவசியமானதே. பராசக்தி படத்தில் வரும் வசனம் போலச் சொல்ல வேண்டும் என்றால், ‘செல்போன் கூடாது என்று சொல்லவில்லை. செல்போன் என்பது ஆபாச வக்கிர ஆப்களின் கூடாரமாகி விடக்கூடாது’ என்றுதான் சொல்கிறது பகாசுரன்.

இயக்குநர் மோகன் ஜி மீதான வன்மத்தில் இப்படியான கருத்துக்களை உதிர்க்கிறார்களோ என்றுதான் நினைக்க வேண்டி இருக்கிறது.

ருத்ரதாண்டவம் படத்தில், ‘அம்பேத்கர் படம் போட்ட டிசர்ட் அணிந்த இளைஞன் கஞ்சா விற்பது போல ஒரு காட்சி உள்ளது’ என்ற தகவல் சமூகவலைதளங்களில் பரப்பப்பட்டு விவாதமாகியது. ஆனால், படத்தில் அப்படி ஓர் காட்சியே இல்லை. அந்த படத்தில் விமர்சிக்க வேண்டிய வேறு காட்சிகள் இருந்தன; அவற்றை நான் விமர்சித்திருக்கிறேன்.

ஆகவே, இல்லாத காட்சிகளை இருப்பதாகச் சொல்லி பரப்புரை செய்வது சரியல்ல..சமூகவலைதளங்களானாலும், ஊடகங்களானாலும் அது நேர்மையான செயல் அல்ல!

Share the Article

Read in : English

Exit mobile version