Site icon இன்மதி

தமிழகத்தில் நீர் பறவைகள் கணக்கெடுப்பு!

Read in : English

தமிழ்நாட்டில் பறவைகள் கணக்கெடுப்பு பணி ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை முடிந்தபின் நடைபெற்று வருகிறது. குறிப்பாக பொங்கலை ஒட்டி இந்த பணி நடக்கும்.

இந்த ஆண்டும் பறவை ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், மாணவர்கள் துணையுடன் வனத்துறை அலுவலர்கள் முனைப்புடன் இந்த பணியை நிறைவேற்றி வந்தனர். பறவைகளைக் கணக்கெடுப்பது பற்றிய சுருக்கமான பயிற்சியும், புள்ளி விபரத்தை இணையத்தில் பதிவேற்றுவதற்கான வழிமுறையும் குழுக்கள் மூலம் பரிமாறப்பட்டு வந்தது.

வீட்டில் இருந்தே இந்த கணக்கெடுப்பில் பங்கேற்கலாம். அதாவது காலை மாலையில், வீட்டின் மாடியில் நின்று கடந்த செல்லும் பறவைகளை அடையாளம் கண்டு குறித்துக் கொள்வது. அப்படிச் சேகரித்த புள்ளி விபரத்தை இன வாரியாக இணையத்தில் குறிப்பிட்ட தளத்தில் பதிவு செய்வது என்ற முறை வழக்கத்தில் இருந்தது.

இப்படிப் பறவைகளைக் கணக்கெடுக்கும் பணியில் ஆண்டுக்கு ஆண்டு தன்னார்வலர்கள் அதிக அளவில் பங்கேற்றனர். பங்கேற்கும் விகிதம் ஆண்டுதோறும் அதிகரித்தது. இந்த அதிகரிப்பு, பறவைகள் மீது அக்கறையுள்ளவர்கள் தமிழகத்தில் அதிகரித்து வருவதையே காட்டியது. இதன் விளைவு, இந்த ஆண்டில் பறவை கணக்கெடுப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டு பறவைகள் கணக்கெடுப்பு நீர் பறவை இனங்கள் மற்றும் நிலப்பறவை இனங்கள் என இரண்டு கட்டங்களாக நடத்த உத்தேசிக்கப்பட்டது. நீர் பறவைகள் கணக்கெடுப்பை ஜனவரி 28, 29ம் தேதிகளிலும், நிலப்பறவை இனங்கள் பற்றிய கணக்கெடுப்பை மார்ச் 4, 5ம் தேதிகளிலும் நடத்த உத்தேசிக்கப்பட்டது.

வீட்டின் மாடியில் நின்று கடந்த செல்லும் பறவைகளை அடையாளம் கண்டு குறித்துக் கொள்வது, புள்ளி விபரத்தை இன வாரியாக இணையத்தில் பதிவு செய்வது என்ற முறை வழக்கத்தில் இருந்தது

பறவைகள் கணக்கெடுப்பிற்காக தொடர் கண்காணிப்புப் பணியை மேற்கொள்ள வேண்டியிருந்ததால், நீர் பறவைகள் கணக்கெடுப்பிற்காக 20 இடங்களிலும், நிலப்பறவைகள் கணக்கெடுப்பிற்காக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 20 இடங்களில் முகாம் அமைத்துப் பணிகள் மேற்கொள்ள திட்டமிட்டது வனத்துறை. இதில் பறவை ஆர்வலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், வனத்துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் பறவை ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அந்தந்த மாவட்ட வனத்துறையுடன் தொடர்புகொண்டு பதிவு செய்துள்ளனர். வனத்துறை நிர்வாகம் எதிர்பார்த்ததை விட அதிக அளவில் தன்னார்வலர்கள் பதிவு செய்தது, பறவைகள் பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வைக் காட்டுவதாக வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க: வலசை வரும் பறவைகள் வசிப்பிடங்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தும் தாமிரபரணி கணக்கெடுப்பு!

முதற்கட்டமாக நடந்த நீர் பறவைகள் கணக்கெடுப்பு சதுப்பு நிலங்கள், நீர் நிலைகள் என 644 இடங்களில் நடந்தது. இதில்,4.66 லட்சம் பறவைகள் முகாமிட்டுள்ளதாகப் பதிவாகியுள்ளது. இந்த புள்ளி விபரத்தை வனத்துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் 644 இடங்களில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், 410 இனங்களில் 4.66 லட்சம் பறவைகள் இருப்பது தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து, நிலத்தில் வாழும் பறவைகள் பற்றிய கணக்கெடுப்பு மார்ச் மாதம் நடக்க உள்ளது. இதில் பங்கேற்கவும் தன்னார்வலர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பறவைகள் கணக்கெடுப்பில் பங்கேற்க விரும்புவோர் அந்தந்த மாவட்ட வன அலுவலர்களைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பறவைகள் கணக்கெடுப்பு பணியில் பறவை ஆர்வலர்கள் அதிகரித்து வருவது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share the Article

Read in : English

Exit mobile version