Site icon இன்மதி

வாணி ஜெயராம் – காலம் தந்த சுக ராகம்!

Read in : English

திரையிசையின் மாபெரும் ரசிகர்கள் கூட, எழுபதுகளைத் தங்கள் ரசிப்புத்தன்மையின் களப்பிரர் காலமாக கருதுவார்கள். காரணம், அப்போது தமிழ்நாட்டில் இந்திப் படங்களும் பாடல்களும் பெரிதாகக் கொண்டாடப்பட்டன. பொன் என்று மதிக்கத்தக்க பொக்கிஷம் போன்ற பல பாடல்கள், காலத்தே சிலாகிக்கப்படவில்லை.

அதையும் மீறித்தான் எண்பதுகளில் இந்தியாவையே கட்டிப்போட்ட பின்னணிப் பாடகர்களும் பாடகிகளும் அறிமுகமானார்கள். அவர்களில் ஒருவர் தான் வாணி ஜெயராம். இன்னதென்று விவரிக்க முடியாத அளவுக்கு, பல்வேறு உணர்வுகளைத் தன் குரலில் பிரதிபலித்தவர்.

இசை மீதான காதல்!
வேலூரில் துரைசாமி – பத்மாவதி தம்பதியரின் மகளாகப் பிறந்தவர் கலைவாணி. ஆம், அதுதான் அவரது இயற்பெயர். ஐந்து சகோதரிகளோடும் மூன்று சகோதரர்களோடும் வளர்ந்தார் வாணி. சிறு வயதிலேயே அவருக்கு இசையில் ஆர்வம் இருந்தது. கர்நாடக சங்கீதத்தை முறையாகக் கற்றபோதும், இந்திப் பட பாடல்கள் மீது அலாதியான பிரியம் இருந்தது.
கல்லூரிப் படிப்பு, வங்கி வேலை, திருமணம், கணவருடன் மும்பையில் குடித்தனம் என்று வாழ்வின் வெவ்வேறு கட்டங்களை எதிர்கொண்டபிறகும், இசை மீதான காதல் மட்டும் குறையவே இல்லை. அதுவே இந்துஸ்தானி இசையைக் கற்குமாறு ஜெயராம் வாணியை வற்புறுத்துவதற்கும் அதுவே காரணமாக அமைந்தது.

1969ஆம் ஆண்டு வசந்த் தேசாய் இசையில் ஒரு மராத்தி ஆல்பம் ஒன்றில் முதன்முதலாகப் பாடினார் வாணி ஜெயராம். இரண்டு ஆண்டுகள் கழித்து, அவரது இசையில், ரிஷிகேஷ் முகர்ஜி இயக்கிய ‘குடி’ எனும் படத்தின் வழியே பின்னணி பாடகியாக அறிமுகமானார். அதன் தொடர்ச்சியாக, தெலுங்கில் கோலோச்சிய இசையமைப்பாளர்கள் பணியாற்றிய இந்திப்படங்களில் இணையும் வாய்ப்பினைப் பெற்றார்.

1973ஆம் ஆண்டு முதல் தெலுங்கு, தமிழ், மலையாளப் படங்களில் பாடத் தொடங்கினார் வாணி ஜெயராம். 1972 முதல் 1977 வரை இந்திப் படங்களில் தொடர்ச்சியாகப் பாடி வந்தவர், அதன்பிறகு தென்னிந்தியப் படங்களில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

எந்த வயதில் இருக்கும் பெண்ணுக்கும் வாணி ஜெயராம் குரல் பொருந்திப் போகும்; குழந்தை முதல் கிழவி வரை வெவ்வேறு பாத்திரங்களுக்கு அவர் பாடியுள்ளார்

பாத்திரமாக ஒலிக்கும் குரல்!
பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, எஸ்.ஜானகி போன்றோர் தொடர்ந்து பாடிவந்த காலத்தில்தான் வாணி ஜெயராம் பாட வந்தார். ஆனால், அவர்களுக்குப் பதிலாக இவரைப் பாட வைக்க முடியும் என்ற நம்பிக்கையைத் தந்தார். காரணம், எந்த பாத்திரத்திற்கும் பொருந்திப்போகும் அவரது குரலின் குழைவு. காட்சியோடு சேர்த்து அவரது குரலைக் கேட்டால், அந்த பாத்திரம் மட்டுமே கண்ணுக்குத் தெரியும். திரையில் தெரியும் உணர்வு அவரது குரலிலும் நிறைந்திருக்கும். பின்னணி பாடும் எல்லோரும் செய்யும் வித்தை தான் இது. ஆனால், தான் பாடிய எல்லா பாடல்களிலும் அதனைப் பின்பற்றியவர் வாணி ஜெயராம்.

எந்த வயதில் இருக்கும் பெண்ணுக்கும் வாணி ஜெயராம் குரல் பொருந்திப் போகும். குழந்தை முதல் கிழவி வரை வெவ்வேறு பாத்திரங்களுக்குப் பாடியவர் அவர்.
உள்மன ஏக்கங்களை வெளிப்படையாகப் பேசத் தயங்கும் பெண்ணாகவும் அவர் குரல் ஒலிக்கும். நாணம் எனக்கு எதற்கு என்றிருக்கும் பெண்ணாகவும் அவர் குரல் ஒலிக்கும். இவர் இப்படித்தான் பாடுவார் என்ற வரையறைக்குள் வாணியை ஒருபோதும் அடக்க முடிவதில்லை.

மேலும் படிக்க: நினைத்து நினைத்து உருக வைத்த பின்னணி பாடகர் கேகே!

சுக ராகங்கள்!
பெரும்பாலான திரையிசைக் கலைஞர்களைப் போல, எடுத்தவுடனேயே இமயம் வரை வரவேற்பு என்பது வாணி ஜெயராமுக்கும் கிட்டவில்லை. எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசையில் அவர் பாடிய ‘தாயும் சேயும்’ படம் வெளியாகவே இல்லை. ஆனால், ’வீட்டுக்கு வந்த மருமகள்’ படத்தில் இடம்பெற்ற ‘ஓரிடம் உன்னிடம்’ பாடலும், ‘சொல்லத்தான் துடிக்கிறேன்’ படத்தில் வந்த ‘மலர் போல் சிரிப்பது பதினாறு’ பாடலும் ஒரு இளம் தாரகையின் வரவை உணர்த்தியது.

தீர்க்க சுமங்கலியில் இடம்பெற்ற ‘மல்லிகை என் மன்னன் மயங்கும்’ பாடல் ஒருசேர ஆண்களையும் பெண்களையும் மயக்கியது. அது ஒரு நடுத்தரக் குடும்பத்துப் பெண் பாடும் கணவர் புராணம். ‘திக்கற்ற பார்வதி’யில் இடம்பிடித்த ‘ஆகாயம் மழை பொழிஞ்சா’ பாடல் ஒரு ஏழைப் பெண்ணின் மகப்பேறு அனுபவத்தைச் சொல்லும்.

அடுத்து வந்த ‘எங்கம்மா சபதம்’ படத்தில் இடம்பெற்ற ‘அன்பு மேகமே’ பாடல், இளமனதின் காதல் தகிப்பைக் காட்டியிருக்கும். வெவ்வேறு தளங்களில் நிற்கும் இந்த மூன்று பெண்களும் வாணியின் குரலுக்குத்தான் வாயசைத்தார்கள்; அது பொருத்தமாகவும் இருந்தது.

‘தத்திச் செல்லும் முத்துக்கண்ணன் சிரிப்பு’ பாடலைக் கேட்டால், தன் மழலையிடம் பெருமிதம் காணும் தாயின் மனம் தெரிய வரும். ‘எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது’ பாடலும் கூட கிட்டத்தட்ட அதே ரகம் தான். முதலாவதில் கண்ணன் என்றால், இரண்டாவதில் ராதையின் புகழ் பாடுவதுதான் வித்தியாசம்.

கே.பாலச்சந்தரின் ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் இரண்டு பாடல்கள் பாடினார் வாணி. இரண்டிலுமே ஒரு பாடகி மேடையில் பாடும் காட்சியமைப்பு. அப்படிப் பாடிய ‘ஏழு ஸ்வரங்களுக்குள்’, ‘கேள்வியின் நாயகனே’ பாடல்கள் அப்படத்தின் கதையமைப்பையும் பாத்திரங்களின் மனவோட்டத்தையும் மிகச்சரியாகப் பிரதிபலித்தன.

1975இல் வெளியான அப்படம் தேசிய விருதினை வாணியின் கைகளில் தவழச் செய்தது. அந்த விருதுக்கு முன்பும் சரி, பின்பும் சரி, ஆலாபனைகள் நிறைந்த செவ்வியல் தன்மை கொண்ட பாடல்களே வாணியைத் தேடி வந்தன.

கே.பாலச்சந்தரின் ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் ஒரு பாடகி மேடையில் பாடும் காட்சியமைப்பு; அப்படிப் பாடிய ‘ஏழு ஸ்வரங்களுக்குள்’, ‘கேள்வியின் நாயகனே’ பாடல்கள் கதையமைப்பையும் பாத்திரங்களின் மனவோட்டத்தையும் மிகச்சரியாகப் பிரதிபலித்தன

துவழலும்.. துள்ளலும்..!
திரையில் ஒரு பெண் துவண்டுபோனால், அரங்கமே அதிர்ச்சியில் மூழ்கும். துள்ளலாட்டம் போட்டாலோ, வீடு சென்ற பிறகும் குதூகலம் நம் கூடவே வரும். இரண்டையும் என்னால் தர முடியும் என்று நிரூபித்தவர் வாணி ஜெயராம். ’ஊருக்கு உழைப்பவன்’ படத்தில் ‘இதுதான் முதல் ராத்திரி’ என்று எம்ஜிஆரும் வாணிஸ்ரீயும் வெட்கத்தில் திளைக்க யேசுதாஸும் வாணி ஜெயராமும்தான் உதவியிருப்பார்கள். ’இளமை ஊஞ்சலாடுகிறது’ படத்தில் அதே வாணி எஸ்.பி.பி. உடன் இணைந்து ‘நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் கண்ணா’ என்று பதில் சொல்லியிருப்பார். ‘முள்ளும் மலரும்’ படத்தில் ‘நித்தம் நித்தம் நெல்லுச்சோறு’ பாடலில் தன் உணவு ரசனையின் வழியே காதலை வெளிப்படுத்தியிருப்பார்.

ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதம் என்று சொல்வது மிகச்சாதாரணமாகப் படலாம். ஆனால், அதுவே உண்மை. வாணி ஜெயராம் பக்திப் பாடல் பாடினால் நமக்கே அருள் கிடைத்த உணர்வு தோன்றும். காதலைப் பாடினால் உள்ளுக்குள் ஹார்மோன் மாற்றம் நிகழும். காமத்தைப் பாடினால் கேட்கவே வேண்டாம்.

ஒரு பெண்ணின் ஆழ்மன ஆசைகளை, சொல்ல முடியாத ஏக்கங்களை, துவள வைத்த வருத்தங்களை எளிதாக வெளிப்படுத்த வாணி ஜெயராமினால் முடியும். ’என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்’ பாடலுக்குப் பதிலாக வெறுமனே காட்சிகளை அடுக்குவது அத்தனை எளிதல்ல. ’பாலைவனச் சோலை’யில் வரும் ‘மேகமே.. மேகமே..’ பாடலின் மகத்துவம் படம் முடிந்தபிறகுதான் தெரிய வரும்.

மேலும் படிக்க: ‘வளையோசை கலகலவென’ திரையுலகில் மனதை மயக்கும் இசைக்குயில் லதா மங்கேஷ்கர்!

அதே நேரத்தில் ‘நானே நானா யாரோதானா’, ‘அதோ வாராண்டி வாராண்டி வில்லேந்தி ஒருத்தன்’, ’எண்ணி இருந்ததும் ஈடேற’, ’தேவாம்ருதம் ஜீவாம்ருதம்’, ’வா வா பக்கம் வா’, ’ஹேய் ஐ லவ் யூ’, ’கவிதை கேளுங்கள்’ என்று பல பாடல்களின் வழியே இளமையின் துள்ளலைத் தந்தவர் வாணி ஜெயராம்.

ஒவ்வொரு முறை கேட்கும்போது அந்த அனுபவமே மீண்டும் மீண்டும் கிடைக்கிறது என்பதுதான் வாணி ஜெயராம் போன்ற ஜாம்பவான்களின் சிறப்பம்சம். கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், சங்கர் கணேஷ், விஜய பாஸ்கர், இளையராஜா தொடங்கி தமிழில் பல இசையமைப்பாளர்களோடு பணியாற்றியவர் வாணி ஜெயராம். 1975 முதல் 1990 வரை தீவிரமாக இயங்கியவர், மெல்ல திரையிசையில் இருந்து ஒதுங்கத் தொடங்கினார். அப்போது சித்ரா, எஸ்.பி.சைலஜா, சொர்ணலதா என்று அடுத்த தலைமுறையின் ஆட்டம் ஆரம்பித்திருந்தது.

1994இல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘எது சுகம் சுகம் அது’ பாடலைப் பாடியிருந்தார் வாணி ஜெயராம். காலத்தால் பின்தங்கினாலும், அது சுக ராகமாய் ஆனது. அதன்பிறகு, திரையிசையில் அவ்வப்போது வாணி ஜெயராமின் குரல் ஒலித்தாலும், ஆன்மிக இசை ஆல்பங்களில் பாடுவதை மட்டும் தொடர்ந்து வந்தார். தன்னைத் தேடி வந்த வாய்ப்புகளுக்கு மட்டும் தலை வணங்கினார்.

ஒரு பெண்ணின் ஆழ்மன ஆசைகளை, சொல்ல முடியாத ஏக்கங்களை, துவள வைத்த வருத்தங்களை எளிதாக வெளிப்படுத்த வாணி ஜெயராமினால் முடியும்

1971இல் தொடங்கி 2019 வரை திரையிசையில் இயங்கிய வாணி ஜெயராம், கடந்த பிப்ரவரி 4ஆம் தேதியன்று மரணமடைந்த நிலையில் அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்டார். அதற்கு ஒரு வாரத்திற்கு முன்புதான், அவருக்கு ‘பத்ம பூஷன்’ விருதை அறிவித்தது மத்திய அரசு. பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருக்கும் வாணி ஜெயராம், திரையிசையில் மட்டும் சுமார் 4,000 பாடல்கள் பாடியதாகச் சொல்லப்படுகிறது. அவற்றில் சரிபாதி தமிழ் படங்களில் இடம்பெற்றவை என்று தாராளமாகச் சொல்ல முடியும்.

அழியாக் கலையின் அடையாளமாக விளங்குபவர்களுக்கு மரணம் ஒருபோதும் இல்லை. இனி, இந்த உலகில் வாணி ஜெயராம் குரல் ஒலிக்கும்போதெல்லாம், ரசிக மனங்களில் அவர் நிச்சயம் உயிர்த்தெழுவார். காலத்தால் அழியாத கலைஞர்களின் சிறப்பு அதுதானே!

Share the Article

Read in : English

Exit mobile version