Site icon இன்மதி

அன்று தோற்ற ஆளவந்தான், இன்று..?

Read in : English

தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினி வந்தால், உலகநாயகன் கமல் வர மாட்டாரா, என்ன?

2002ல் தோற்றுப்போன தனது ‘பாபா’ திரைப்படத்தைப் புதிய வடிவமாக்கி 2022ல் தந்தார் ரஜினி. அதைப் போல 2001ல் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளைப் பொய்யாக்கித் தோற்றுப்போன கமலின் ‘ஆளவந்தான்’ திரைப்படத்தை 2023ல் மின்னணு வடிவத்தில் மறுவெளியீடு செய்யவிருக்கிறார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு. நம்பிக்கையோடு சொல்கிறார், ‘ஆளவந்தான் வருவான்; வெல்லுவான்; புகழை அள்ளுவான்’ என்று.

21 ஆண்டுகளுக்கு முன்பு அவர்தான் ஆளவந்தானால் தனக்குக் கோடிக்கணக்கில் நட்டம் ஏற்பட்டது என்றும், தன்னிடம் சொல்லப்பட்ட கதை ஒன்று; எடுக்கப்பட்டது வேறு; முடிவானது மற்றொன்று என்றும் புலம்பினார்.

ஆளவந்தானின் இந்திப் பதிப்பும் தோல்வியில் துவண்டு போனது. மேல்தட்டு மக்களுக்கும் அந்தப் படம் பிடிக்கவில்லை; அடித்தட்டு மக்களுக்கும் பிடிக்கவில்லை என்று சொன்ன இந்திய திரைப்பட விமர்சகர் தரண் ஆதர்ஷின் கருத்து தான் ஒட்டுமொத்த பாலிவுட்டின் கருத்தாகவும் இருந்தது.

1980களில் ரஜினியின் மாவீரனுக்கும், கமலின் விக்ரமிற்கும் நேர்ந்த கதிதான் பாபாவிற்கும் ஆளவந்தானுக்கும் ஏற்பட்டது; முன்னது ஆன்மீக அதீதம்; பின்னது தொழில்நுட்ப அதீதம்

நம்பமுடியாத அதீதமான மீமெய்யியல் தன்மை இருந்ததால் பாபா தோற்றுப்போனது; ஆளவந்தானை அதீதமான தொழில்நுட்பமும், ஜப்பானின் புனைவுத்தன்மையான அனிமேஷன் திரைப்படக்கலை நுட்பமும், மாய யதார்த்தவாதமும் ஆக்கிரமித்ததால் அது தோற்றுப்போனது. 1980களில் ரஜினியின் மாவீரனுக்கும், கமலின் விக்ரமிற்கும் நேர்ந்த கதிதான் பாபாவிற்கும் ஆளவந்தானுக்கும் ஏற்பட்டது.

விக்ரம் எதிர்காலப் படம்; மாவீரன் இறந்தகாலப் படம். அதைப் போல பாபாவும் ஆளவந்தானும் நிஜத்திற்கு அப்பாற்பட்டவை; முன்னது ஆன்மீக அதீதம்; பின்னது தொழில்நுட்ப அதீதம்.

மேலும் படிக்க: பாபா: புதிய வரலாறு படைக்குமா?

சில ஆண்டுகள் கழித்து ஆளவந்தானின் தொழில்நுட்ப அழகியலும் கமல் நடிப்பின் ஆழமும் மறுஆய்வில் சிலாகிக்கப்பட்டன. அதன் ‘ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்’ படத்திற்குத் தேசிய விருதைப் பெற்றுத் தந்தது. ஃபாண்டஸ்டிக் திருவிழாவில் இடம்பெற்று அமெரிக்க மக்களின் பாராட்டுதல்களையும் பெற்றது.

ஆளவந்தானின் இந்திப் பதிப்பான ‘அபே’ என்னும் மனப்பிறழ்வான தொடர் கொலைகாரனைப் பற்றிய திகில் படம் தன்னைப் பாதித்ததால், 2003ல் ‘கில் பில் தொகுப்பு 1’ என்ற படத்தைத் தன்னால் கொண்டுவர முடிந்தது என்று பிரபலமான ஹாலிவுட் இயக்குநர் க்வெண்டின் டாரண்டினோ சொன்னதாக பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் பதிவு செய்திருக்கிறார்.

ஆளவந்தானில் இரட்டைக் குழந்தைகளில் ஒருவராக நந்து பாத்திரத்தில் நடித்திருக்கும் கமல் தன் காதலியாக நடித்த மனிஷா கொய்ராலாவைக் கொல்கின்ற காட்சியில் ஜப்பானின் ‘மாங்கா’ என்ற அனிமேஷன் உத்தி பயன்படுத்தப்பட்டிருந்தது. சிற்றன்னையின் கொடுமைக்கு ஆளான நந்து சிறு வயதில் அவளைக் கொன்றுவிட்டு மனப்பிறழ்வோடு தீயாய்த் திரிகிறான்.

ஒரு தடவை ஓட்டல் அறையில் தன்னுடன் இருந்த காதலி கையில் பெல்ட்டை ஏந்தி தமாஷாக தன்னை அடிக்க வரும்போது டிவியில் அதுமாதிரியான காட்சி ஓடிக்கொண்டிருப்பதைப் பார்க்கிறான் நந்து. அவளது உருவம் செத்துப்போன சிற்றன்னையாக உருமாறுவதைப் பார்த்து மாயத்தை நிஜமென்று நம்பி அவளைக் கத்தியால் குத்திக் கொல்கிறான்.

ஆளவந்தானின் இந்திப் பதிப்பான அபே தந்த மன எழுச்சியால்  2003ல் ‘கில் பில் தொகுப்பு 1’ படத்தை கொண்டுவந்ததாக பிரபல ஹாலிவுட் இயக்குநர் க்வெண்டின் டாரண்டினோ சொன்னார் என இயக்குநர் அனுராக் காஷ்யப் பதிவு செய்திருக்கிறார்

அந்த அனிமேஷன் காட்சி மாய யதார்த்தவாத உத்தியால் செழுமையாக்கப் பட்டிருக்கும். ஆளவந்தானுக்கு இரண்டு வருடம் பின்பு வந்த ‘கில் பில்’ படத்திலும் அது போன்ற ’அனிமே’ காட்சியில் ’ஓ ரன் இஷி’ என்னும் சிறுமி (நடிகை லூசி லியூ) தன் பெற்றோர்களைக் கொன்ற வில்லனைக் கொல்வாள். அந்தக் காட்சிக்கு உந்துசக்தி கமலின் ‘அபே’தான் என்று ஹாலிவுட் இயக்குநரே சொல்லியிருக்கிறார். கமல் உலக சினிமாவின் போக்குகளையும் புதுமையான உத்திகளையும் எல்லோரையும் விட படுவேகமாகத் தமிழில் கொண்டுவருபவர் என்ற பேரையும் புகழையும் சம்பாதித்தவர்.

அதை ஆளவந்தானிலும் அவர் நிரூபித்தார் என்றாலும் காலந்தாண்டி யோசிக்கும் அவரது வேகத்திற்கு ஈடுகொடுக்கத் தமிழ்த் திரைப்பட உலகம் சற்று திணறித்தான் போகிறது.

மேலும் படிக்க: கமல்ஹாசன் நடிப்பைக் கைவிட மாட்டார்?

1980களின் தொடக்கத்தில் மணியனின் ‘இதயம் பேசுகிறது’ இதழில் தான் தொடராக எழுதிய ‘தாயம்’ கதைக்குத் திரைக்கதையும் அமைத்து, அதை கே.பாலச்சந்தர் தான் இயக்க வேண்டும் என்று பிரியப்பட்டார் கமல். என்ன காரணமோ தெரியவில்லை, கே.பி. இயக்கவில்லை. (ஒருவேளை மக்களுக்குப் படம் புரியாது என்று கேபி நினைத்தாரோ என்னமோ).

சுரேஷ் கிருஷ்ணாவின் இயக்கத்தில் மிகப்பிரமாதமாக படம் உருவாக்கப்பட்டிருப்பதாக விளம்பரங்கள் எகிறி எதிர்பார்ப்புகளைச் சகட்டுமேனிக்கு உயர்த்திவிட்டன. மனோதத்துவ த்ரில்லர் வகையைச் சார்ந்த படம் என்ற படிமம் முன்னமே உருவானதால் கமல் ரசிகர்கள் ஆகப்பெரும் விருந்தை எதிர்பார்த்து 2001ஆம் ஆண்டு தீபாவளி அன்று அரங்குகளில் நிரம்பி வழிந்தார்கள்.

முதன்முதலாக அதிகமான அளவுக்குப் பிரிண்ட் போடப்பட்டது இந்தப் படத்துக்குத்தான். உலகம் முழுவதும் சுமார் 650 அரங்குகளில் படம் வெளியானது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளிவந்தது. ஆசியாவிலேயே முதன்முதலாக கிராபிக்ஸ் மோஷன் கேமரா இந்தப் படத்தில்தான் பயன்படுத்தப்பட்டது.

1980களில் கொடிகட்டிப் பறந்த நாயகன், இந்தியன் போன்று 2001ல் தங்களைக் கவர வந்திருக்கிறான் ‘ஆளவந்தான்’ என்று நினைத்துப் படம் பார்த்த ரசிகர்கள் இடைவேளைக்குப் பின்பு தொய்வாகிப் போன திரைக்கதையால் சோர்வடைந்தனர். உலக சினிமாவின் உத்தியாகி விட்டிருந்த ‘மாங்கா’, ‘அனிமே’ என்ற புதுமைகளை, ஆளவந்தானில் கமல் பயன்படுத்திய புதுபாணியை அவர்களால் புரிந்துகொள்ளவும் முடியவில்லை; அதில் லயிக்கவும் முடியவில்லை.

மனிஷா கொய்ராலாவைக் கமல் கொலை செய்வதை நேரடியாக தமிழ் சினிமாவுக்குப் பரிச்சயமான முறையில் வழமையாகக் காட்டாமல், அனிமேஷனிலும் மாய யதார்த்தத்திலும் காட்டிய அழகியல் நயம் 2001ஆம் ஆண்டு மக்களுக்குப் புரியவில்லை. ”என்ன, கமல் கார்ட்டூன் காட்டுகிறார்” என்று கொச்சைப்படுத்தி விமர்சனம் செய்தவர்களும் உண்டு.

இரண்டு கமலும் ஒன்றல்ல என்பதைக் காட்சிப்படுத்துவது போல ஒருவர் சற்று ஒல்லியாகவும், மற்றொருவர் சற்று பருத்தும் வருகின்ற காட்சிகள் எம்ஜிஆர், சிவாஜி காலத்து இரட்டை வேட இலக்கணத்தை உடைத்தெறிந்தன; அவர்களைத் தாண்டி கமல் புதுமையின் உச்சம் தொட்டார்

வழக்கமாக கதாநாயகர்கள் இரட்டை வேஷம் போடும் போது (திரையில்தான்!) மானரிசத்தில், ஆடைகளில், தோற்றத்தில் லேசாக வித்தியாசம் காண்பிப்பார்கள். ஆனால் ஒரு கமல் சாதாரணமான இராணுவ அதிகாரியாக நவீனமாக உடையுடுத்தி வருகிறார்; அதற்கு நேர்மாறாக பாம்புப் படிமத்தைப் பச்சைக் குத்திய மார்போடும், மொட்டைத் தலையோடும் சற்று பருத்த உடலோடும் மனப்பிறழ்வான கமல் ஆக்ரோஷமாக, ஆழியலையாக, ஊழித்தீயாக வருகிறார்.

இரண்டு கமலும் ஒன்றல்ல என்பதைக் காட்சிப்படுத்துவது போல ஒருவர் சற்று ஒல்லியாகவும், மற்றொருவர் சற்று பருத்தும் வருகின்ற காட்சிகள் எம்ஜிஆர், சிவாஜி காலத்து இரட்டை வேட இலக்கணத்தை உடைத்தெறிந்தன. என்னதான் வித்தியாசம் காட்டினாலும் இரண்டு சிவாஜியும் இரண்டு எம்ஜிஆரும் உடல் எடையில் ஒரே சீராகத்தான் இருந்தார்கள். அவர்களைப் பார்க்கும்போதே அந்த ஒற்றுமை தெரிந்துவிடும். அவர்களைத் தாண்டி கமல் புதுமையின் உச்சம் தொட்டார்.

நுண்மையான தொழில்நுட்பங்கள், நடிப்புக் கலையின் அழகியல் ஆழங்கள், கதை சொல்லும் முறையில் ’நான்–லீனியர்’ போன்ற அம்சங்கள் ஆகியவற்றை சென்ற தலைமுறைகளை விட நன்றாகவே புரிந்துகொள்ளக் கூடிய நிலையில் சமூக ஊடகங்களோடும் உள்ளங்கையிலே அடங்கிப் போன உலக சினிமாவோடும் பயணித்துக் கொண்டிருக்கிறது இன்றைய தலைமுறை.

2001ல் தோற்றுப்போன ஆளவந்தான் இந்த 2023ல் மின்னணு காலத்திற்கேற்ப மின்னியபடி வரவிருக்கிறார்.

ஆளவந்தான் இன்றைய தலைமுறை இதயங்களை ஆள்வானா? இதற்குப் பின்நவீனத்துவவாதிதான் பதில் சொல்ல வேண்டும். அந்தப் பின்நவீனத்துவவாதிக்கு ஒரு பெயருண்டு. அது காலம்!

Share the Article

Read in : English

Exit mobile version