Site icon இன்மதி

முடி உதிர்தல் பற்றி கவலையா?

Read in : English

நிறைய பேருக்குத் தலை சீவும்போது தான் முடி உதிர்தல் எனும் ஒரு பிரச்சனை இருப்பதே தெரியவரும். ஒரு நாளில் ஒருவர் தலையில் இருந்து 50 முதல் 100 முடிகள் வரை உதிர்வது சாதாரண விஷயமாகக் கருதப்படுகிறது. ஆனால், திரும்பவும் அந்த இடத்தில் முடி வளராமல் போனால் அது பெரிய பிரச்சனையாக மாறிவிடுகிறது.

முடி உதிர்தல் என்பது ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும். பொதுவாக ஹார்மோன் மாற்றங்கள் இதற்குக் காரணம். பெண்களுக்கு கர்ப்பகாலத்திலும் பால் கொடுக்கும் நாட்களிலும் ஹார்மோன் மாற்றம் காரணமாக முடி உதிரும். பரம்பரையாகச் சிலருக்குக் குறிப்பிட்ட வயதில் முடி மெலிந்துபோவதோ அல்லது வழுக்கை விழுவதோ நிகழும்.

சில மருந்துகளை உட்கொள்வதும் கூட முடி உதிர்தல் நிகழக் காரணமாக விளங்கும். புற்றுநோய், இதய நோய், மன அழுத்தம், தோல் ஒவ்வாமை போன்றவற்றுக்காக எடுத்துக்கொள்ளும் மருந்துகள் முடி உதிர்தலை ஏற்படுத்தும்.
சில நேரங்களில் சம்பந்தப்பட்ட நபருக்கு இருக்கும் நோயை வெளிப்படுத்தும் அறிகுறியாகவும் முடி உதிர்தல் அமையும்.
உதாரணமாக தைராய்டு பிரச்சனை, ஒவ்வாமை ஏற்படுவதைக் குறிக்கும் வகையில் முடி உதிரும். தலையில் ஆங்காங்கே கொத்துகொத்தாக முடி உதிரும் அலோபேசியா (ALOPECIA) கூட இதில் அடங்கும்.

இவை தவிர நாம் உண்ணும் உணவில் இருக்கும் சத்துக் குறைபாடுகள், தவறுகள் காரணமாகவும் முடி உதிர்தல் நிகழும்.

புற்றுநோய், இதய நோய், மன அழுத்தம், தோல் ஒவ்வாமை போன்றவற்றுக்காக எடுத்துக்கொள்ளும் மருந்துகள் முடி உதிர்தலை ஏற்படுத்தும்; சில நேரங்களில் சம்பந்தப்பட்ட நபருக்கு இருக்கும் நோயை வெளிப்படுத்தும் அறிகுறியாகவும் முடி உதிர்தல் அமையும்

சத்துக்குறைவைத் தவிர்ப்போம்!
சத்துக்குறைவினால் முடி உதிர்தல் ஏற்படுவதைத் தவிர்க்க, குறிப்பிட்ட உணவுப்பொருளை எடுத்துக்கொள்வது அவசியம்.
நமது முடியானது கெராட்டின் (Keratin) எனும் புரதத்தால் உருவாகிறது. ஆதலால், புரதச் சத்து மிக்க உணவுகளை உண்டு கூந்தலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். முளைகட்டிய பட்டாணி, கொண்டகடலை, பச்சைப்பயிறு உள்ளிட்ட பயறு வகைகளையும், முளைகட்டிய தானியங்களையும் உட்கொள்வதால் புரதச் சத்தினைப் பெறலாம்.

இரண்டாவதாக இரும்புச் சத்து நம் உணவில் போதுமான அளவு இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால், இரும்புச்சத்து குறையும்போது முடி உதிர்வது இயல்பாக நடக்கும். அதனைச் சரி செய்ய, ஒரு மாதத்திற்கு முருங்கைக்கீரையை எடுத்துக்கொள்ளலாம். வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை சூப் ஆகவோ, கூட்டு அல்லது பொரியல் ஆகவோ செய்து சாப்பிடலாம்.

மூன்றாவதாக, எலும்பு பலவீனமாகுதல் போலவே முடி உதிர்வையும் வைட்டமின் டி உருவாக்கும் என்று சமீபத்திய ஆய்வுகள் சொல்கின்றன. அதனால், வைட்டமின் டி நிறைந்த உணவுகளைச் சேர்த்துக்கொள்ளுதல் அவசியம். வைட்டமின் டி7 என்று சொல்லப்படும் பயோடின் (Biotin) முடி உதிர்வைத் தவிர்க்க மிகவும் அவசியம். முட்டையின் வெள்ளைக்கருவோடு மஞ்சள்கருவையும் சேர்த்து எடுத்துக்கொள்வது பயோடினை பெருகச் செய்யும்.

மேலும் படிக்க: ஊட்டச்சத்து வேண்டுமா?: விதைகள் உண்போம்!

சில சத்துகள் மிகக்குறைவாக நம் உடலில் இருந்தாலும், அதில் குறைபாடு ஏற்படும்போது பெரிய விளைவுகளை உண்டாக்கும்; அவற்றை ‘Trace Elements’ என்று அழைப்பது வழக்கம். துத்தநாகம் (Zinc), சிலிகா (Silica) என்ற இரண்டு தாதுச்சத்துகளும் குறையும்போது முடி உதிர்தல் ஏற்படும்.

ஆயிஸ்டர் எனப்படும் சிப்பி, கோழி, ஆடு, மாட்டிறைச்சியில் துத்தநாகம் அதிகமிருக்கும். இதனை பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை எடுத்துக்கொண்டாலே போதுமானதாக இருக்கும். வெள்ளரிக்காய் போன்ற பச்சைக்காய்கறிகளின் தோல் பகுதியில் சிலிகா உள்ளது.

வைட்டமின் இ ஆனது கொட்டைகள், எண்ணெய்களில் அதிகமுள்ளது. அதை எடுத்துக்கொள்வதும் முடி பராமரிப்புக்கு உதவும். அது போலவே வைட்டமின் சி ஆனது இரும்புச்சத்தை உட்கிரகிக்கப் பயன்படுவது. அதனை எடுத்துக்கொள்வது முடி உதிர்வைத் தவிர்க்கப் பயன்படும்.

முடி உதிர்வைத் தவிர்க்க..
நமது உணவுப்பழக்கம் சமநிலையானதாக, ஆரோக்கியமானதாக, வண்ணமயமானதாக இருக்க வேண்டும். சரிவிகித உணவில்தான் சரியான கார்போஹைட்ரேட், தாதுக்கள், புரதச்சத்துக்கள், வைட்டமின்கள் இருக்கும். அவ்வாறு எடுத்துக்கொள்ளும்போது எந்தவிதக் குறைபாடும் நேராது.

உடல் எடைக்குத் தகுந்தவாறு, தினமும் 8 – 10 டம்ளர் தண்ணீர் அல்லது 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் எடுத்துக்கொள்வது முடி உதிர்வைத் தவிர்க்கும்.

மூன்றாவதாக, சாப்பாட்டுக்கு மத்தியில் ஆரோக்கியமான நொறுக்குத்தீனிகளை உட்கொள்வது மிகமுக்கியமானது. முளைகட்டிய பயறு வகைகள், உலர்பழங்கள், விதைகள் சாப்பிடுவது முடி உதிர்தலைத் தடுக்கும்.

நமது முடியானது கெராட்டின் (Keratin) எனும் புரதத்தால் உருவாகிறது; ஆதலால், புரதச் சத்து மிக்க உணவுகளை உண்டு கூந்தலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்

நான்கவதாக, தினமும் பத்து முதல் பதினைந்து நிமிடங்களாவது சூரிய ஒளி படுமாறு வெயிலில் நிற்க வேண்டும். வைட்டமின் டி உடலில் பெருகவும் ஆரோக்கியம் பெருகவும் இது வழி வகுக்கும்.

ஐந்தாவதாக, முடி பராமரிப்புக்கென்று தனியாக நேரம் ஒதுக்க வேண்டும். ஒரே வகை ஷாம்பூ, எண்ணெய் போன்றவற்றை எடுத்துக்கொள்ளுமாறு பார்த்டுக்கொள்ள வேண்டும்.

ஆறாவதாக, ஒவ்வொரு மனிதருக்கும் எட்டு மணி நேர தூக்கம் அவசியம். ஏனென்றால், தூக்கம் குறைந்தால் முடி உதிர்தல் நிகழும். நல்ல தூக்கம் நிச்சயமாக முடி உதிர்தலைத் தடுக்கும். ஹார்மோன்கள் சீராக இயங்கவும் உதவும்.

ஏழாவதாக, உடல் இயக்கம் சீர்மையுடன் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். நடைபயிற்சி, ஓட்டம், யோகா என்று ஏதேனும் ஒன்றை வாரம் ஐந்து முறையாவது செய்யும் வழக்கத்தைக் கொள்ள வேண்டும். இதனால் உடலில் இருக்கும் அழுத்தம் குறையும். மெட்டாபாலிசம் சீராகி உடலில் சத்துகள் உட்கிரகிக்கப்படுவது சீராக இருக்கும். அதனால் முடி உதிர்தல் தடுக்கப்படும்.

அடுத்து, மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது மிக முக்கியம். மன அழுத்தம் அதிகமாகும்போது முடி உதிர்வதோடு, இளம் வயதிலேயே நரைப்பதும் கூட நிகழும். மூச்சுப்பயிற்சி, பிடித்த விஷயத்தை மேற்கொள்ளுதல் போன்றவை மன அழுத்தத்தைக் கட்டுக்குள் கொண்டுவரும்.

மேலும் படிக்க: மீண்டும் சமையல் பயன்பாட்டுக்கு வருமா மருந்தாகும் பூக்கள்?

எப்போதும் சிரித்துக்கொண்டே மகிழ்ச்சியாக இருப்பதும் ஒருவகையில் மிகமுக்கியமானது. என்ன செய்தாலும், அந்த தருணத்தை முழுமையாக அனுபவிக்க வேண்டும். இதனை ‘Mindfullness’ என்று சொல்கின்றனர். வேறு ஒன்றுமில்லை, எதைச் செய்தாலும் அதனை முழு ஈடுபாட்டோடு செய்வதுதான். அது உலகம் முழுக்கப் பின்பற்றப்படும் ஒன்றாக மாறியுள்ளது. ஒரு உணவைச் சாப்பிடும்போது முழுக்க ரசித்துச் சாப்பிடுவது கூட அதிலொன்று.

மேலே சொன்னவற்றைப் பின்பற்றும்போது, ஒட்டுமொத்தமாக ஆரோக்கியமான வாழ்க்கைமுறைக்கு மாறுவது நிச்சயம்; அதனால் நோய் எதிர்ப்புத்திறன் அதிகமாவதோடு, ஆரோக்கியமான உடல்வாகையும் கூந்தலையும் தக்கவைத்துக் கொள்ள முடியும்.

YouTube player

Share the Article

Read in : English

Exit mobile version