Site icon இன்மதி

வாரிசு அரசியல்: வித்திட்டது கருணாநிதி தான்!

Read in : English

உதயநிதி அமைச்சராயிருப்பது குறித்துப் பொங்குவானேன்? எங்கில்லை வாரிசு அரசியல்?  அஇஅதிமுகவில் கூடத்தான். ஏன் மதிமுக, பாமக என ஏறத்தாழ அனைத்து கட்சிகளிலும் இதே நிலைதான். இதற்கெல்லாம் வழிவகுத்ததே பண்டித ஜவஹர்லால் நேருதானே என்று சிலர் வாதிடுகின்றனர்.

ஆனால் அது உண்மையா? இந்திராவைப் பிரதமராக்கி விடவேண்டுமென நேரு திட்டமிட்டாரா? உறுதியாகச் சொல்ல இயலவில்லை.

1959ல் இந்திரா பிரியதர்சினி காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அது முறையல்ல என்று கூறினார் நேரு, ஆனால் தடுக்கவில்லை. பின்னர் முறையாக கேரளாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட கம்யூனிச அரசைக் கவிழ்க்க கத்தோலிக்க திருச்சபை, நாயர் அமைப்புக்கள், பெரு நில உடைமையாளர்கள் அணி திரண்டபோது, காங்கிரசும் அதற்கு ஆதரவு தெரிவித்தது.

வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில், கேரளாவில் அவசர அவசரமாக நம்பூதிரிபாடு அரசு கலைக்கப்பட்டது. நேருவுக்குத் தெரியாமலா இதெல்லாம்? ஆனால் மகள் தன்னிச்சையாகச் செயல்பட்டார், தந்தைக்கு அதனால் கடுங்கோபம் என வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.

அது நிகழ்ந்து, ஓராண்டிலேயே இந்திரா பதவி விலகினார். அதன்பிறகு ஆட்சியிலோ கட்சியிலோ எப்பொறுப்பினையும் ஏற்கவில்லை. நேரு மரணத்திற்குப் பிறகு, லால் பகதூர் சாஸ்திரியின் வேண்டுகோளின் பேரிலேயே இந்திரா அமைச்சரானார், மாநிலங்களவை உறுப்பினர் ஆனார். சாஸ்திரிக்குப் பின் அவர் பிரதமரான கதை அனைவரும் அறிந்ததுதானே.

எங்கில்லை வாரிசு அரசியல்? ஏறத்தாழ அனைத்து கட்சிகளிலும் இதே நிலைதான்; இதற்கெல்லாம் வழிவகுத்ததே பண்டித ஜவஹர்லால் நேருதானே என்று சிலர் வாதிடுகின்றனர்

அதாவது, எக்கட்டத்திலும் தந்தை மகளுக்காக முன்முயற்சி ஏதும் மேற்கொள்ளவில்லை. மாறாக ஜெயபிரகாஷ் நாராயணனே தனக்குப் பின் பிரதமராக வேண்டும் என நேரு விரும்பினார், மீண்டும் மீண்டும் அவரை வற்புறுத்தினார், ஜெ.பிதான் மறுத்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது. இவற்றில் எவ்வளவு தூரம் உண்மை, உடான்ஸ் என்பதெல்லாம் ஆராயப்பட வேண்டியதே. ஆனாலும் நேருவின் பங்கு அவ்வளவு தெளிவாக இல்லை. ஆனால், தமிழ்நாட்டில் நம்மவர் எந்த அளவுக்குச் சென்றார் என்பதை இங்கே காண்போம்.

அண்ணாவிற்குப் பின் எம்ஜிஆர் உதவியோடுதான் நெடுஞ்செழியனை ஓரங்கட்டி முதல்வராகிறார் கருணாநிதி. 1971ல் இந்திராவுடன் கை கோர்த்து சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் மிகப்பெரும் வெற்றியைப் பெறுகிறார். இனி எல்லாம் நானே என்ற எண்ணத்தில் திளைக்கையில், எம்ஜிஆர் போர்க்குரல் எழுப்புகிறார்.

அந்த நேரமே கலைஞருக்குத் தன் அரசியல் எதிர்காலம் குறித்து கவலை எழுந்திருக்க வேண்டும். உடனே மு.க.முத்துவை நடிகராக்க முனைந்தார். விவரமறியாமல் முதலில் முத்துவின் முதல் திரைப்பட ஷூட்டிங் ஸ்பாட்டிற்குச் சென்று வாழ்த்து தெரிவித்தார் எம்ஜிஆர். ஏதோ அன்பளிப்பு கூடத் தந்ததாக நினைவு.

மேலும் படிக்க: திமுக முகமாக மாறுவாரா உதயநிதி?

ஆனால் கலைஞர் எப்படி யோசிக்கிறார் என்பதை உணர்ந்து ஒதுங்கிக்கொண்டார். எம்ஜிஆர் போலவே உடையணிந்து, அவரைப் போலவே கைகளைக் காற்றில் வீசி, அவர் பாணியிலேயே திரைக்கதை அமைத்து என்னென்னவோ வித்தைகள் செய்து பார்த்தனர். ஒன்றும் போணியாகவில்லை. நாலைந்து படங்களுக்குப் பிறகு எல்லாம் நின்று போனது. முத்து போதையில் வீழ்ந்தார். தகப்பனுக்கும் மகனுக்குமான உறவு முறிந்ததுதான் மிச்சம்.

முத்து அளவுக்குச் செல்லாவிட்டாலும், இன்னொரு மகன் அழகிரியாலும் சிக்கல்கள். அப்பின்னணியிலேயே அவர் மதுரைக்கு அனுப்பப்பட்டார். முரசொலியை நிர்வகிப்பதே அவருக்கிடப்பட்ட பணி. முரசொலியைக் கவனித்தாரோ என்னவோ அங்கே தனக்கொரு சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிக்கொண்டார். அவருக்கு நெருங்கிய வட்டாரத்தில் இருந்தவர்களின் பெயர்கள் செய்திகளில் வரத் தொடங்கின. இப்பின்னணியிலேயே ஸ்டாலினை தன் வாரிசாக்க முடிவு செய்திருக்க வேண்டும் கருணாநிதி.

எமர்ஜென்சியின்போது ஸ்டாலின் கைது செய்யப்பட்டிருந்தாலும், அதிகம் அரசியலில் அக்கறை காண்பிக்கவில்லை. சென்னை மேயர் ஆனார், சட்டமன்ற உறுப்பினருமானார். ஆனால் படாடோபம் ஏதுமின்றி அமைதியாகவே நடந்து கொண்டார்.

சட்டமன்றத்திலும் தனியாகத்தான் வருவார், போவார். அவரே நேரடியாகச் சென்று அன்றைய நிகழ்வு ஆவணங்களைப் பெற்றுக்கொண்டு, தனக்கொதுக்கப்பட்ட இருக்கையில் சென்றமர்வார். சிறிது நேரம் இருந்து விட்டு மறைந்துவிடுவார். வருவதும் தெரியாது, போவதும் தெரியாது. அந்தக் குணமே கலைஞரைக் கவர்ந்திருக்கக்கூடும்.

1990ல் திருச்சியில் நடந்த கட்சியின் மாநில மாநாட்டில் தனது உரையினைத் துவங்கும்போது, இன்றைய நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருக்கும் இளைஞர் அணியின் செயலாளர் தம்பி ஸ்டாலின் அவர்களே என விளித்தார் கருணாநிதி. 80களில் அவ்வணி கட்சியின் முன்வரிசையில் ஸ்டாலினை அமர்த்துவதற்கென்றே கொண்டுவரப்பட்டிருந்தது. அப்படியும் ஸ்டாலின் அடக்கஒடுக்கமாகவே நடந்துகொண்டார்.

சட்டமன்றத்திலும் ஸ்டாலின் தனியாகத்தான் வருவார், போவார். அந்தக் குணமே கலைஞரைக் கவர்ந்திருக்கக்கூடும்

மேற்குறிப்பிட்ட திருச்சி மாநாட்டில் இன்னொரு சுவாரசிய சம்பவம் என்னவெனில், வைகோவின் எழுச்சிமிகு உரை முடிந்தவுடனேயே வந்திருந்தோர் பலர் வெளியேறத் தொடங்கினர். இரவு நீண்ட நேரமாகியிருந்தது; கருணாநிதிக்காக அவர்கள் காத்திருக்க முடியாமல் நகர்ந்தனர். ஆனால் தலைவரைக் கூட மதியாமல் செல்கிறார்கள், வைகோவுக்கு அவ்வளவு செல்வாக்கு எனப் புரிந்து கொள்ளப்பட்டது.

புயல் மெல்ல மெல்ல ஒதுக்கப்பட்டார். பல்வேறு வழிகளில் அலட்சியப்படுத்தப்பட்டார். பலரும் எதிர்பார்த்ததைப் போன்று வி.பி.சிங் அமைச்சரவையில் வைகோவுக்கு இடமில்லை, மாறன் தான் அமைச்சரானார். பின்னர் விடுதலைப்புலிகளுடன் சதி செய்து கலைஞரைக் கொலை செய்யத் திட்டமிடுகிறார் என அபத்தமான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு கட்சியை விட்டே வெளியேற்றப்பட்டார் வைகோ.

அதாவது தனக்குப் பிறகு தனது மகன் ஸ்டாலின் தலைவராவதற்கு எவர் குறுக்கே நின்றாலும் அவர்களின் ஆளுமையினைச் சிதைப்பதில் கருணாநிதி தீவிரமாக இருந்தார்.

மேலும் படிக்க: திமுகவில் உதயநிதியை முந்தும் கனிமொழி

ஆனால் குடும்பத்திற்குள்ளேயே குழப்பம் என்றால் என்ன செய்வது? அழகிரி மதுரைக்குச் சென்றுவிட்டாலும் தலைநகர நிகழ்வுகளைக் கூர்ந்து கவனித்து வந்தார். ஸ்டாலினுக்குக் கிடைத்து வந்த முக்கியத்துவத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் பகிரங்கமாகத் தன் எதிர்ப்பைக் காட்டவும் நீண்டகாலம் அவர் தயங்கினார்.

ஸ்டாலின் ஆர்ப்பாட்டமில்லாமல் தன் அதிகாரத்தை வலுப்படுத்தி வந்தார். 2001ஆம் ஆண்டு பல்வேறு சாதி அமைப்புக்களை இணைத்து தேர்தல்களைச் சந்திக்கத் தயாரானார். கருணாநிதியின் ‘மனசாட்சி’ முரசொலி மாறனுக்கு அதில் உடன்பாடில்லை. ஆனால் ஸ்டாலினின் முடிவே கட்சியின் முடிவாகவும் ஆனது. தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பகிரங்கமாகவே ஸ்டாலின் அணுகுமுறையினைக் கண்டித்து வெளியேறினார் மாறன்.

ஸ்டாலினின் வியூகம் தோல்வியடைந்தும் திமுகவில் அவரது செல்வாக்கு, அதிகாரம் சற்றும் குறையவில்லை. அவரே தனது வாரிசு என்பதில் கருணாநிதி உறுதியாக இருந்தது போலத்தான் தோன்றியது, அதற்கடுத்த சட்டமன்றத் தேர்தல்களில் பெரும் வெற்றியில்லை என்றாலும், காங்கிரசின் ஆதரவுடன் திமுக ஆட்சியமைக்க முடிந்தது. உள்ளாட்சித் துறை அமைச்சரானார் ஸ்டாலின்.

தம்பி அமைச்சர் சரி, அண்ணன்? 2006 – 2011 கட்டத்தில்தான் அழகிரியின் செயல்பாடுகள் உக்கிரமாயின. அவருக்கு நெருக்கமானவர்கள் எதையும் செய்ய முடியும், எவரும் தட்டிக்கேட்க முடியாது என்ற நிலை உருவாயிற்று.  திமுகவில் ஸ்டாலினுக்கே செல்வாக்கு அதிகம் எனக் கருத்துக் கணிப்பு வெளியிட்ட தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்டது. அந்த சம்பவத்தில் மூச்சு திணறி மூன்று ஊழியர்கள் இறந்தனர். அவ்விவகாரத்தில் அழகிரி மீது கட்சிரீதியான நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.

கருணாநிதி முகத்தைத் திருப்பிக்கொண்டார் அவ்வளவுதான். அந்நிலையிலும் தந்தையின் நல்லெண்ணத்தைப் பெற அழகிரிக்கு திருமங்கலம் இடைத்தேர்தல் உதவியது. பணத்தாலேயே ‘அடிப்பதற்கு’ இன்னொரு சொல் திருமங்கலம் என்றானது. வெற்றி பெற்ற பின் அழகிரியைத் தென்மண்டலச் செயலாளர் ஆக்கினார் கருணாநிதி. அழகிரிக்காகவே உருவாக்கப்பட்ட பதவி அதுதான்.

ஆனால், அதற்குமேல் அண்ணன் செல்ல முடியவில்லை, தம்பியின் வளர்ச்சியைத் தடுக்க முடியவில்லை. ஒருநாள் ஸ்டாலினே தன் வாரிசு என்பார்; பின்பு நான் அப்படிச் சொல்லவில்லை என்பார் திமுக தலைவர். அந்த அளவிற்குத் தான் அழகிரியால் அழுத்தம் கொடுக்க முடிந்தது. எனக்குப் பிறகு அழகிரி தான் என்று மட்டும் அவரைச் சொல்ல வைக்க முடியவில்லை.

திருமங்கலம் இடைத்தேர்தல் நடைபெற்ற அடுத்த சில மாதங்களிலேயே ஸ்டாலின் துணை முதல்வரானார். 2016 தேர்தல் பிரச்சாரத்திலும் அவருக்கே முன்னுரிமை. கட்சி தோல்வியுற்றது; ஆனாலும் ஸ்டாலினே சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரானார். கருணாநிதி மறைவுக்குப் பிறகு கட்சித் தலைவராகவும் ஆனார். ஏறத்தாழ அனைத்து மாவட்டச் செயலாளர்களும் அவர் பக்கமே நின்றனர். இன்னொரு வாரிசு கனிமொழி மோதலைத் தவிர்த்து ஸ்டாலின் தலைமையை ஏற்றார்.

நான்காவது முறை சட்டமன்ற உறுப்பினரான பிறகே, ஸ்டாலினால் அமைச்சராக முடிந்தது; ஆனால் உதயநிதியோ முதல் முறை தேர்ந்தெடுக்கப்பட்ட உடனேயே அமைச்சராக முடிகிறது

தமிழகத்தின் வலிமை வாய்ந்த தலைவராகி, கடந்த ஆண்டு முதல்வராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஸ்டாலின்.
இப்பயணத்தில் நாம் கவனிக்க வேண்டியது, ஸ்டாலின் நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருந்தது அப்பதவியினை எட்ட. நான்காவது முறை சட்டமன்ற உறுப்பினரான பிறகே, அவரால் அமைச்சராக முடிந்தது.

ஆனால் உதயநிதியோ முதல் முறை தேர்ந்தெடுக்கப்பட்ட உடனேயே அமைச்சராக முடிகிறது. கட்சிக்குள் அவரை எதிர்க்க எவருமில்லை. ஸ்டாலினுக்கு அடுத்த இடம் அவருக்குத் தான். அவரது மகனையும் நாங்கள் முதல்வராக்குவோம் என சூளுரைக்கின்றனர் மூத்த தலைவர்கள். எக்கட்டத்திலும் கனிமொழி அவருக்கெதிராக அணி திரட்டும் வாய்ப்பில்லை.

தந்தையிடமிருந்து சரியான பாடம் கற்றிருப்பார் உதயநிதி, அவரை ஆதரிப்பவர்களே மாவட்ச்ட செயலாளர்களாக முடியும் என்ற நிலை இன்றே உருவாகிவிட்டது. ஒட்டுமொத்தமாக திமுக ஸ்டாலின் குடும்பத்தின் கட்டுப்பாட்டில்.

சோவின் ‘முகம்மது பின் துக்ளக்’ நாடகத்தில் சட்டமன்ற உறுப்பினர்களைக் குறுநில மன்னர்களெனச் சித்தரித்திருப்பார். அதில் ஒரு திருத்தம் – திமுகவைப் பொறுத்தவரை மாவட்ட செயலாளர்களே குறுநில மன்னர்கள்.

அன்பில் தர்மலிங்கம் ஒருமுறை ஒரு வழக்கு தொடர்பாக மாஜிஸ்ட்ரேட் முன் ஆஜராக வேண்டியிருந்தது. தன்னை திருச்சி மாவட்ட திமுக செயலாளர் என அறிமுகப்படுத்திக் கொண்டார். “மாவட்டச் செயலாளர் என்றால்?” என மாஜிஸ்ட்ரேட் கேட்க, ”ம்… அது கலெக்டர் போல… எங்கள் கட்சிக்கு இந்தப்பகுதியில் நான் தான் கலெக்டர்…” என அன்பில் பதிலளித்ததாகக் கூறுவர்.

கருணாநிதி காலத்தில் மாவட்டச் செயலாளர்களுக்கும் தலைமைக்கும் ஓர் எழுதப்படாத ஒப்பந்தம் உருவானது – ”நான் சொல்வதைக் கேட்டு நீங்கள் நடந்து கொண்டால் உங்கள் சாம்ராஜ்யத்தில் நான் தலையிட மாட்டேன்.” அந்நிலை இன்றளவும் தொடர்கிறது. அதன் இன்னொரு பரிமாணமே ஸ்டாலின் குடும்ப ஆட்சி.

இன்று தேவகவுடா, முலாயம் சிங் யாதவ், லல்லு பிரசாத் யாதவ், பால் தாக்கரே, அமித் ஷா என எங்கு திரும்பினாலும் வாரிசுகள் கொடிகட்டிப் பறக்கின்றனர். வாரிசு அரசியல் எங்கும் நிறைந்திருக்கிறது.ஏறத்தாழ அனைவரும் கலைஞர் வழியில்தான் கட்சியில் தம் கட்டுக்குள் வைத்திருக்கின்றனர். அந்த வகையில், இந்தியாவைப் பொறுத்தவரை கருணாநிதிதான் வாரிசு அரசியலுக்கு முன்னோடி எனில் அது மிகையாகாது!

Share the Article

Read in : English

Exit mobile version