Read in : English
சமையலில் தனியாகவும் பிற காய்களுடன் சேர்ந்தும் உணவில் சுவையை உருவாக்கவல்லது கத்தரிக்காய். சைவத்தில் தனித்துவமாகவும் அசைவத்தில் இணைந்தும் உணவுச்சுவையில் சிறப்பிடம் பெறுகிறது. அவியலில் ஆதிக்கம் செலுத்துவதோடு, பிரியாணி உடன் தொடுகறியாகவும் வந்து சுவை ஊட்டுகிறது.
கிராமங்களிலும் கோயில்களிலும் பாரம்பரிய வழிபாட்டு நிகழ்வுகளில் கத்தரிக்காய் சார்ந்த உணவுக்கு முக்கிய இடம் உண்டு. அவியல், மசியல், வறுவல், பொரியல், வதக்கல் என எல்லா வகை செய்முறைக்கும் கத்தரிக்காய் ஏற்றது.
இந்தியாவில் நுாற்றுக்கணக்கான பாரம்பரிய கத்தரி ரகங்கள் உள்ளன. பருவத்துக்கு ஏற்ப, சூழலுக்கு ஏற்ப வட்டார அளவில் அவை சாகுபடி செய்யப்படுகின்றன. உருண்டை, உருளை, நீளம், கூம்பு, தட்டை என வடிவங்களாலும், பல்வேறு அளவுகளாலும் கவர்ச்சி ஊட்டுகின்றன. மிகச்சிறியதாக இருந்தாலும், ‘கண்டங்கத்தரி’க்கு தனி மவுசு உண்டு.
‘வழுதனம் கத்தரி’ இரண்டு செ.மீ. நீளம் மட்டுமே கொண்டது. அரை செ.மீ. விட்டத்தில் உருண்டையான ‘முள்ளுக்கத்தரி’க்கு மருத்துவ பண்பு உண்டு. பச்சை, வெள்ளை, கறுப்பு, ஊதா, இளஞ்சிவப்பு என தனித்த வண்ணங்களுடனும் வண்ணங்கள் கலந்த கோடுகளுடனும் கத்தரிக்காய்கள் மிளிர்கின்றன.
அவியல், மசியல், வறுவல், பொரியல், வதக்கல் என எல்லா வகை செய்முறைக்கும் கத்தரிக்காய் ஏற்றது
மண்ணின் தன்மைக்கு ஏற்ப, அவற்றின் சுவை வேறுபடுகிறது. மைசூர் அருகே உடுப்பி பகுதி கிராமங்களில் விளையும் வெள்ளைக் கத்தரிக்காய் ஒன்று ஒரு கிலோ வரை எடையுள்ளது. இதை ‘மரக்கத்தரி’ என்கின்றனர். இதை திண்டுக்கல் வட்டார விவசாயிகளிடம் அறிமுகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகம்.
திருச்சி மாவட்டம் முசிறியைச் சேர்ந்த விவசாயி யோகநாதன், 35க்கும் மேற்பட்ட பாரம்பரிய கத்தரி ரகங்களைக் கண்டறிந்துள்ளார். தமிழகத்தில் உள்ள விவசாயிகளிடம் இருந்து அவற்றைப் பெற்று விதைப் பெருக்கம் செய்து பரப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் படிக்க: உடலுக்கு ஆரோக்கியம் தரும் பழங்கள்: எப்படிச் சாப்பிட வேண்டும்?
மரபணு மாற்றப்பட்ட முளைப்புத்திறன் அற்ற கத்தரியை முறியடிக்கும் வகையில், பாரம்பரிய ரகங்களை மீட்கும் வகையில் யோகநாதனின் பணி அமைந்துள்ளது. அவர் போலத் தமிழகத்தில் பல பகுதிகளிலும், பாரம்பரிய காய்கறி விதைகளை மீட்டு விதைகளை பெருக்கி வருகின்றனர் ஆர்வலர்கள்.
விதையை மீட்டு மறு உற்பத்தியாக்கம் செய்வதில் உடுமலை பகுதியைச் சேர்ந்த பரமேஸ்வரன் என்பவரின் முயற்சி பாராட்டும்விதமாக அமைந்துள்ளது.
பாரம்பரிய விதைகளைத் தமிழகம் எங்கும் பரப்பிவரும் முசிறி யோகநாதன் கூறுகையில், ‘பாரம்பரிய ரகங்கள், பூச்சிகளின் தாக்குதலைத் தாங்கி வளர்பவை. இயற்கை முறையிலான சாகுபடிக்கு ஏற்றவை. பருவச்சூழலுக்கு ஏற்ப தகவமைந்து வளரும் தன்மை கொண்டவை. பாரம்பரிய ரகங்களின் ருசியை அறிந்தவர்கள், மரபணு மாற்றப்பட்ட கத்தரிகாயை விரும்ப மாட்டார்கள்.
இந்த ரக கத்தரி விதைகளுக்கு இப்போது கடும் வரவேற்பு உள்ளது. மாடித்தோட்டம் அமைப்போரும் இது போன்ற விதை ரகங்களையே விரும்புகின்றனர்’ என்றார்.
முசிறியைச் சேர்ந்த விவசாயி யோகநாதன் 35க்கும் மேற்பட்ட பாரம்பரிய கத்தரி ரகங்களைக் கண்டறிந்து, அவற்றை விதைப் பெருக்கம் செய்து பரப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்
சமீபத்தில் மைசூருவில் நடந்த இயற்கை விசாயிகள் கருத்தரங்கில், 30க்கும் மேற்பட்ட பாரம்பரிய கத்தரி ரக விதைகளைப் பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் காட்சிக்கு வைத்திருந்தனர். ஒடிசா மாநில பழங்குடி விவசாயிகள், காடுகளில் செழித்து நிற்கும் பல கத்தரி ரகங்களைச் சேகரித்து காட்சிக்கு வைத்திருந்தனர்.
பாரம்பரிய ரகங்களில் ‘சம்பங்கத்தரி’ என்ற ரகம், கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை தாலுகாவில் பழையாற்றை ஒட்டிய பகுதிகளில் விளைகிறது. தேரூரை அடுத்த ஆண்டார்குளம் கிராம விவசாயி ராமசாமி, சம்பங்கத்தரி சாகுபடியை நீண்டகாலமாகச் செய்து வருகிறார்.
மேலும் படிக்க: நயன்தாரா திருமண விருந்தில் பலாப்பழ பிரியாணி: நமது உடலுக்கு நல்லதா?
“சம்பங்கரை கத்தரி என்ற கத்தரி ரகம் தனித்தன்மை உடையது. இந்த செடியை நட்ட 40 நாட்களில் இருந்து காய்க்கத் துவங்கும். ஆறு மாதம் வரை காய்த்துக் கொண்டே இருக்கும். வாரம் ஒரு முறை, ஒரு செடியில் ஐந்து முதல் எட்டு காய்கள் வரை அறுவடை செய்யலாம். சாதாரணமாக, ஒரு பருவத்தில் 45 முதல் 80 காய்கள் கிடைக்கும்.
காய்கள் 300 முதல் 750 கிராம் வரை எடையைக் கொண்டிருக்கும். சம்பங்கரை கத்தரிக்காய் சுவை நிறைந்துள்ளதால் சந்தையில் இதற்கு விலையும் அதிகம். நான் 35 ஆண்டுகளாக இந்த ரகத்தைப் பயிரிட்டு வருகிறேன். இது போன்ற ரகங்களைப் பயிரிடுவதன் மூலம் மட்டுமே, மரபணு மாற்றப்பட்ட விதைகள் பரவலை முறியடிக்க முடியும்.
இது போன்ற ரகங்களைப் பயிரிடும் விவசாயிகளை அரசு உற்சாகப்படுத்தி உதவிகள் செய்ய வேண்டும்,’ என்றார் ராமசாமி.
கன்னியாகுமரி மற்றும் தென் திருவிதாங்கூர் பகுதிகளில் பலவித காய்களைக் கொண்டு ‘அவியல்’ என்ற உணவு தயாரிக்கப்படுகிறது. இந்த உணவில் நாட்டு காய்கள் என்ற பாரம்பரிய காய்களுக்கே முன்னுரிமை தரப்படுகிறது.
நாட்டுக்காய்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் அவியல் பிரத்யேகச் சுவையும் மணமும் நிறைந்தது என சமையல் கலைஞர்கள் சான்றிதழ் தருகின்றனர்.
Read in : English