Site icon இன்மதி

ஜெட்பாட்சர் சென்னைக்குச் சரிப்பட்டு வருமா?

Read in : English

அடிக்கடி தோண்டப்பட்டு குண்டும்குழியுமாய் விடப்படும் சாலைகளை உடனடியாக ரிப்பேர் செய்ய முடியுமா? முடியும், குடிமை முகமைகள் நினைத்தால். சென்னையின் மரணக்குழிகளான சாலைகளை 15 நிமிடத்திற்குள் ரிப்பேர் செய்யும் ‘ஜெட்பாட்சர்’ தொழில்நுட்பம் வந்துவிட்டது. பரிசோதனை முயற்சியாக, ஜெட்பாட்சர் இயந்திரத்தைச் சாலைகளின் பழுது நீக்க களம் இறக்கியிருக்கிறது பெருநகர சென்னை மாநகராட்சி. அதன் விளைவுகள் திருப்தியாக இருந்தால், மேற்கொண்டு மாநகராட்சி முயற்சிகளைத் தீவிரமாக்கும். தற்போது வேப்பேரி ஜெர்மையா சாலையில் ஜெட்பாட்சர் பரிசோதனை நடக்கிறது.

ஜெட்பாட்சர் இயந்திரத்தின் சிறப்பு என்ன? டிரக்கின் மேல் ஏற்றப்பட்ட, எல்லாம் நிரம்பிய பெட்டகம் அது. அதில் காற்றுக்குழாய், ஒட்டுமொத்த திரவப்பூச்சு கருவி, தார் போன்ற பொருள் கலந்த பெட்டி எல்லாமும் தயார் நிலையில் இருக்கும்.

முதலில் காற்றுக் குழாய் சாலைக் குழிகளிலிருந்து நீரையும் துகள்களையும் ஊதி ஊதி வெளியேற்றும். பின்பு குழிகளின் மேற்தளத்தில் திரவப்பூச்சு பூசப்படும். அடுத்து ரிப்பேருக்கான திரவக்கலவை குழிகளுக்குள் கொட்டப்படும். உலர்கலவையால் சாலைப்பகுதி சமதளமாக்கப்படும். கலவை முழுவதுமாய் கலந்துவிட்டதா என்பதையும், அது சரளைக்கற்களோடு கலக்கவில்லை என்பதையும் ஒப்பந்தக்காரர்தான் உறுதி செய்துகொள்ள வேண்டும்.

2017ல் தீவிரவாதச் செயல்களால் ஏற்பட்ட மரணங்களை விட மிக அதிகமான அளவுக்கு, அதாவது 3,597 பேர் சாலை விபத்துகளில் இறந்திருக்கிறார்கள்

கைகளால் சாலைகளைப் பழுது பார்க்கத் தேவையான பொருட்கள்தான் ஜெட்பாட்சரிலும் இருக்கின்றன. ஆனால் சாலைகளில் குண்டு குழிகள் அதிகம். ஊழியர்களோ குறைவு. அந்தச் சின்னப் பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடிய மனப்பான்மையும் நிர்வாகத்தில் இல்லை. ஆனால் அந்தக் குழிகள் என்ற சின்னப் பிரச்சினைகள்தான் பல உயிர்களைக் காவு வாங்கியிருக்கின்றன.

இந்தப் பிரச்சினையை நீதிமன்றங்கள் கவனத்தில் எடுத்துக் கொண்டன. குண்டும் குழியுமான சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிர் துறந்த ஓர் இளைஞனின் குடும்பத்தாரிடம் கேரளா உயர்நீதிமன்றம் மன்னிப்பே கேட்டிருக்கிறது. மும்பை உயர்நீதிமன்றம் இந்தாண்டு மோசமான சாலைப் பிரச்சினையைக் கையில் எடுத்திருக்கிறது.

மேலும் படிக்க: குண்டும் குழியுமாக உள்ள சென்னை சாலைகள் எப்போது சரி செய்யப்படும்?

2017ல் தீவிரவாதச் செயல்களால் ஏற்பட்ட மரணங்களை விட மிக அதிகமான அளவுக்கு, அதாவது 3,597 பேர் சாலை விபத்துகளில் இறந்திருக்கிறார்கள் என்று ஒன்றிய அரசு திரட்டிய தரவை மாநிலங்கள் ஏன் மறுதலிக்கின்றன என்று நீதிபதிகள் மதன் பி.லோக்கூர், தீபக் குப்தா அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு கேள்வி கேட்டிருக்கிறது.

உள்ளாட்சி அமைப்புகளுக்குக் கடுமையான தண்டனை கொடுப்பதும் சாலை விபத்துகளில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு அசாதாரணமான நட்டஈடு கொடுப்பதும் தொடரக்கூடாது என்றால், இந்தியாவின் பெருநகரங்களில் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட சாலைகளில் ஜெட்பாட்சர் போன்ற இயந்திரங்களைப் பயன்படுத்த வேண்டும்.

எங்கும் சாலைக்குழிகள்
காப்புரிமை பெறப்பட்டிருக்கும் ஜெட்பாட்சர் இயந்திரத்தின் தயாரிப்பாளர் இங்கிலாந்தில் ரக்பியில் இயங்கிக் கொண்டிருக்கிறார். பிரிட்டன், மத்திய மற்றும் தென்அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளில் எல்லாம் 680 ஜெட்பாட்சர் மாடல்கள் வெற்றிகரமாகப் பயன்படுத்தப் படுகின்றன என்று அந்த நிறுவனம் சொல்கிறது.

இந்தியாவில் கோவா, மும்பை, சண்டிகர் போன்ற மாநகரங்கள் ஜெட்பாட்சரைப் பயன்படுத்த விரும்புகின்றன. ஆனால் எல்லோருக்கும் இந்த இயந்திரத்தில் நம்பிக்கை ஏற்படவில்லை.

சென்னையில் அதிகம் செலவு செய்து சாலைகளை முற்றிலுமாக மாற்றியமைக்கும் வழக்கம் கடந்த பத்தாண்டுகளாக இருக்கிறது; இதனால் சம்பந்தப்பட்ட ஒப்பந்தக்கார்களுக்கு அதிக லாபம் கிடைப்பது ஒரு காரணம்

எல்லா நேரத்திற்குமான சாலைப்பழுது இயந்திரமாக இதைப் பயன்படுத்துவதை விட பருவமழைக் காலங்களில் குறைந்த அளவு வாகனங்கள் ஓடும் சாலைகளில் இதைப் பயன்படுத்தலாம். இந்த இயந்திரம் அதிகப் பொருட்களைப் பயன்படுத்துவதாக ஆஸ்திரேலியாவின் நியூ செளத் வேல்ஸ் பிராந்தியத்தில் உள்ள போர்ட் ஸ்டீபன் கவுன்சில் அறிக்கை சொல்கிறது.

ஆனால் சென்னையைப் பொறுத்தவரை அடிப்படையான கேள்வி ஒன்று உண்டு. அவசரமான சூழல்களில் மட்டும் ஜெட்பாட்சரைப் பயன்படுத்திவிட்டு, தினமும் வார்டுகளில் சாலைகளைச் சரிசெய்ய தானியங்கி எந்திரங்களைப் பாதியளவு உபயோகித்து தொழிலாளிகள் கைகளால் சுத்தம் செய்யும் ஓர் அமைப்பை சென்னையில் கைக்கொள்ளலாமா? ஏனென்றால், உள்ளூர் சாலைப்பழுது வேலைகள் அதிகச் செலவு வைப்பதில்லை. பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் நிறைய பேருக்கு வேலையும் கொடுக்கலாம்.

மேலும் படிக்க: சென்னை: போக்குவரத்து கட்டமைப்பில் மாற்றம்

பிரச்சினை என்னவென்றால், சென்னையில் அதிகம் செலவு செய்து சாலைகளை முற்றிலுமாக மாற்றியமைக்கும் வழக்கம் கடந்த பத்தாண்டுகளாக இருக்கிறது. சம்பந்தப்பட்ட ஒப்பந்தக்கார்களுக்கு அதிக லாபம் தரக்கூடிய ஒப்பந்தங்கள் கிடைக்கின்றன என்பது ஒரு காரணம். ஒப்பந்தம் பெற்றவர் சாலையின் மேல்மட்டத்து பகுதிகளை நீக்கிவிட்டு மெல்லிசான மேற்தளத்தை அமைத்து தருகிறார். அது ஒருவருடம் கூட தாக்குப் பிடிக்காது. ஆனால் அவர் மட்டும் லாபம் பார்த்து விடுவார்.

தோண்டப்பட்ட சாலைகளைச் சென்னை மாநகராட்சி கண்டுகொள்வதில்லை. தோண்டிய பகுதிகளைப் பழுது பார்த்து சரி செய்வதற்குப் பல்வேறு முகமைகளும் தனியார் அமைப்புகளும் கட்டணங்கள் செலுத்துகின்றன. ஆனால் அந்தப் பணம் அந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்தப் படுவதில்லை. சாலைக்குழிகளைப் பற்றி யாராவது மாநகராட்சி செயலியில் புகார் பதிவு செய்தால். சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அதிகாரிகளிடமிருந்தும் சில சமயங்களில் கவுன்சிலர்களிடமிருந்தும் ”ஏன் புகார் செய்தாய்” என்று கேட்டு தொலைபேசி அழைப்புகள் வருகின்றன.

சில இந்திய இணையதளங்களில் ஜெட்பாட்சர் எந்திரங்கள் பற்றிய விளம்பரங்கள் வருகின்றன. அவை பிரிட்டன் மாடலா என்று தெரியவில்லை. உதாரணமாக ஜெட்பாட்சர் 1000 மாடலின் விலை ரூ.1.8 மில்லியன் (ரூ.18 இலட்சம்) என்று ஒரு விளம்பரம் சொல்கிறது.

இந்தியாவில் கோவா, மும்பை, சண்டிகர் போன்ற மாநகரங்கள் ஜெட்பாட்சர் எந்திரத்தைப் பயன்படுத்த விரும்புகின்றன

எம்.ஜி.ராமச்சந்திரன் முதல்வராக இருந்தபோது இதைப்போல ஒரு சாலைத் தொழில்நுட்பம் 1980களின் மத்தியில் பயன்படுத்தப்பட்டது. அது ஜெர்மனி நாட்டுத் தொழில்நுட்பம். மெரினா சாலை, வாலாஜா சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை ஆகிய சாலைகளில் பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் அந்த ஜெர்மனி நாட்டு இயந்திரங்கள் சென்னையின் தரத்திற்கு மிகவும் அதிகான ஆற்றல் கொண்டவை என்பதால் அவை திரும்பிப் போய்விட்டன. மீண்டும் வரவில்லை.

இன்று சென்னை பெருநகரம் மிகமிக விரிவடைந்துவிட்டது. ஒருகாலத்தில் புறநகர்ப் பகுதிகளாக விளங்கிய ஆவடி, தாம்பரம் ஆகியவை மாநகராட்சிகளாகவும், பல புறநகர் உள்ளாட்சி அமைப்புகள் நகராட்சிகளாகவும் உயர்ந்து சென்னை மாநகரத்தில் சங்கமமாகிவிட்டன. ஆதலால் ஆகப்பெரிய மாநகரமான சென்னை சாலை விசயத்தில் இன்னும் அதிதிறனோடு செயற்பட வேண்டியது அவசியம். ஜெட்பாட்சர் போன்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டால் சாலைப் பிரச்சினைக்கு அதுவோர் உடனடித் தீர்வாகலாம்.

கர்நாடக உயர்நீதிமன்றம் அடிக்கடி தலையிட்டும் தீர்க்க முடியாத சாலைப் பிரச்சினைகள் கொண்ட மாநகரம் பெங்களூரு. வாகனங்களின் அதிர்ச்சி தாங்கும் உதிரிப் பாகங்களுக்கு நித்தம் சோதனைக்களமாக விளங்கும் சாலைகள் கொண்ட பெங்களூரு மாநகரத்தை விட சென்னை மாநகரம் சிறந்து விளங்கும் என்பதில் சந்தேகமில்லை.

Share the Article

Read in : English

Exit mobile version