Read in : English
வாழ்வில் கனவு என்பது ஒரு புதிர். உளவியல் அறிஞர்களும் மனநல மருத்துவர்களும் இதை ஆராய்ந்து வருகின்றனர். மனப்பிறழ்வு, தற்கொலை, முன்னேற்றம் போன்றவற்றுக்கு அடிப்படையானவற்றில் ஒன்று மனதின் புதிர் விளையாட்டு. இது பற்றி ஆராய்ந்து வருகிறார் உளவியல் வல்லுனர் எஸ்.சுவாமிநாதன். இவர், பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
‘ஒவ்வொரு மனிதருக்கும் வரும் கனவின் பலன் அவரது வாழ்க்கை சம்பந்தப்பட்டதாவே இருக்கும். ஒருவரின் கனவு விளக்கத்துக்கான திறவுகோல் அவரிடம் மட்டுமே உள்ளது. உள்மனதில் ஏற்படும் ஆர்வம், கொந்தளிப்பு எல்லாம் கனவு மூலமே வெளிப்படுகிறது. அதைப் புரிந்து மனதைச் சரி செய்தால் வாழ்க்கைப் பாதை சீராகும்’ என்கிறார் சுவாமிநாதன்.
சுவாமிநாதனுடன் நடத்திய உரையாடலில் இருந்து…
கேள்வி: கனவுகளுக்குப் பொதுவான விளக்கம் சொல்ல முடியுமா?
சுவாமிநாதன்: கனவுகளுக்குப் பொதுவான விளக்கம் சொல்ல முடியாது. ஒருவருக்கு ஏற்படும் கனவு என்பது, அவரது நிஜ வாழ்வின் பின்னணியைக் கொண்டே அமைந்திருக்கும். உப்பு வணிகர் ஒருவர் மழை பெய்வதாகக் கனவு கண்டால், அவருக்கு வர இருக்கும் இழப்பை உணர்த்துவதாக அது இருக்கும். அவரது முயற்சிக்குத் தடை ஏற்பட்டுள்ளதைக் குறிக்கும்.
மாறாக, உழவர் ஒருவர் மழையைக் கனவு கண்டால், அவரது வாழ்வில் நற்பலன் விளைவிப்பதைக் காட்டும்.
கேள்வி: இதை மேலும் விளக்க முடியுமா?
சுவாமிநாதன்: பள்ளிப் படிப்பின்போது, விடுமுறையில் பாட்டி வீட்டுக்குச் செல்வேன். பெரும்பாலும் காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் முடிந்த முன்பே அது நடக்கும். எனவே வீட்டுப்பாடம் எழுதுவது, பாடப்புத்தகங்கள் படிப்பது என எந்த மனஇறுக்கமும் அழுத்தமும் இருக்காது.
ஒருவருக்கு ஏற்படும் கனவு என்பது, அவரது நிஜ வாழ்வின் பின்னணியைக் கொண்டே அமைந்திருக்கும்
பாட்டியின் அரவணைப்பு என்பதால் மிகவும் சுதந்திரமாக உணர்வேன். பிடித்த உணவுகளைச் சமைத்து தருவார். அது சொர்க்கமாக இருக்கும். அந்த நாட்களில்தான், கிராமத்தில் திருவிழாக்கள் நடக்கும். அதற்காக யானை கொண்டு வரப்பட்டிருக்கும்; கிராமத்திலே தங்க வைக்கப்பட்டிருக்கும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்களுடன் முன்நிபந்தனையின்றி விளையாடுவேன்.
யானை கட்டப்பட்டிருக்கும் இடத்திலே நங்கூரமிட்டிருப்போம். பாகன்களை காக்கா பிடித்து வைத்துக் கொள்வோம். அவர்களிடம் யானைகள் பற்றிய அரிய செய்திகளை, கதைகளாகக் கேட்டு அறிவோம். யானைகளின் பொதுவான குணங்கள், பாகன்களுடன் பழகுதல், யானைகளால் வரும் இன்னல்கள் எனப் பல செய்திகளை அறிவோம். அது மகிழ்ச்சியான தருணமாக இருக்கும்.
நான் படித்த பள்ளி அருகே பெருங்காடு இருந்தது. காட்டின் அருகே இருந்த கிராமங்களில் இருந்து பலர் என்னுடன் படித்தனர். அவர்களுக்குக் காட்டிலே விளைநிலங்கள் இருந்தன. அவற்றில் வாழை, தென்னை, மரவள்ளிக்கிழங்கு பயிர்கள் சாகுபடி செய்வது வழக்கம். காடுகளில் வாழும் யானைகள் கூட்டமாகவோ, தனியாகவோ அந்த தோட்டங்களில் புகுந்து அழித்துவிடும். யானை கூட்டத்துக்குப் பலியானோரும் உண்டு.
பாட்டி வீட்டுக்குப் போகும்போது நான் யானைகளை ஆவலுடன் பார்த்து மகிழ்ந்து வந்ததை, அந்த கிராமங்களில் இருந்து வரும் மாணவர்கள் வினோதமாகப் பார்ப்பார்கள்.
மேலும் படிக்க: சூரிய ஒளி அள்ளித்தரும் வைட்டமின்-டி
நான் படித்த பள்ளி அருகே ஒரு காவல் நிலையம் இருந்தது. அங்கு ஒருநாள் பாரம் ஏற்றிய லாரி நின்று கொண்டிருந்தது. லாரியின் முன்னும் பின்னும் மூங்கில்கள் நீட்டியபடி இருந்தன. ஓட்டுனர் குனிந்துதான், இருக்கைக்குச் செல்ல வேண்டியிருந்தது. அதை விந்தையாக பார்த்தேன். அது குறித்து கிராமத்திலிருந்து வந்த மாணவர்களிடம் விசாரித்தேன்.
அது போல் லாரியில் கட்டினால் தான், யானைகளிடமிருந்து ஓட்டுனர்களுக்குப் பாதுகாப்பு கிடைக்கும் என்றனர். லாரியில் பழுது ஏற்பட்டால், உயிருக்கு உத்தரவாதமில்லாத நிலைதான் ஏற்படும் என்றனர்.
அது மட்டுமின்றி, யானைகள் பற்றி அச்சமூட்டும் கதைகளைச் சொன்னார்கள் என் பள்ளி தோழர்கள்.
ஆண் யானைகள் பருவம் அடையும்போது மதங்கொண்டால் அவற்றிடம் இருந்து தப்பும் வழிமுறைகள் பற்றிய சாகசக் கதைகளைச் சொன்னார்கள். நான் யானையைக் கனவில் காண்பதற்கும், என் பள்ளி நண்பர்கள் அதைக் கனவில் காண்பதற்கும் வித்தியாசம் இருப்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
கேள்வி: இதற்கும் கனவுகளைப் பகுத்தாய்வதற்கும் என்ன தொடர்பு?
சுவாமிநாதன்: கனவில் தோன்றும் ஒவ்வொரு காட்சிக்கும் பொருளுக்கும், நம் பின்னணி, நமக்கிருக்கும் தொடர்பு பற்றி அடிப்படையிலே விளக்கம் தேட வேண்டும். இந்த தத்துவத்தைப் பின்பற்றினால் ஒரு உண்மை புலப்படும். நாம் காணும் கனவுகளுக்கு நம்மால் மட்டுமே விளக்கம் தேட முடியும்.
நான் யானையைக் கனவில் காண்பதற்கும், என் பள்ளி நண்பர்கள் அதைக் கனவில் காண்பதற்கும் வித்தியாசம் இருந்தது
கேள்வி: அப்படியானால் உளவியல் வல்லுனர், மனநல மருத்துவரின் பணிகள்தான் என்ன?
சுவாமிநாதன்: கனவைப் பகுத்தாய்வு செய்யும் உளவியல் வல்லுனர், நாம் கனவில் கண்ட காட்சிகள், மனிதர்கள், பொருட்கள் நிஜ வாழ்வில் நம்மிடம் என்ன தாக்கத்தை அல்லது பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தன என்றே அறிய முயல்கிறார். அந்த அடிப்படை தத்துவத்தின் அடிப்படையில் நாமே பொருள் தேட வழி வகுக்கிறார்.
உலகில் பல துறைகளில் சங்கேத மொழியைப் பயன்படுத்துவோர் உள்ளனர். கிராமங்களில் கறுப்பு, வெள்ளை என சங்கேத மொழியில் குறிப்பிட்டுப் பேசுவர். உண்மையில் கறுப்பு என்பது கள்ளையும், வெள்ளை என்பது சாராயத்தையும் குறிக்கும். மாடு வியாபாரத்திலும் விலை விதிப்பதில் இது போல் சங்கேதம் உண்டு. அது போன்ற சங்கேதச் சொற்கள் கனவில் வந்தால், அதன் உட்பொருளை அதைப் பயன்படுத்துவோர் மட்டுமே அறிய முடியும்.
மேலும் படிக்க: கூண்டில் கிளி; தண்டனை உறுதி
கேள்வி: கனவுகளை ஏன் பகுப்பாய்வு செய்ய வேண்டும்?
சுவாமிநாதன்: உள்ளக்கிடக்கையை அறிந்து கொண்டால், உடலும் உள்ளமும் இயைந்து செயல்பட வழி கிடைக்கும். அமைதியான உள்ளம் நிறைவான வாழ்வைத் தரும். வாழ்வில் எடுக்கும் முடிவுகளும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அமையாது. வாழ்க்கையின் குறிக்கோள் என்ன… நம் மனநிலைக்கு குறிப்பிட்ட வேலை ஒத்து வருமா போன்ற கேள்விகளுக்கு விடை அறிந்து செயல்பட முடியும்.
உறுதியான உடல்வாகு கொண்டவர்களே காவல்துறை போன்ற பணிகளுக்கு உகந்தவர்கள். அவர்களின் உள்ளமும் அப்படி இருக்கும் என எதிர்பார்க்கிறோம். ஆனால், அவர்களிலும் பலர் தற்கொலை செய்துகொள்கின்றனர். உடல், உள்ள நலனில் விழிப்புணர்வு பெற்ற மருத்துவர்களும் கூட தற்கொலை செய்து கொள்கின்றனர். அதற்குக் காரணம் என்ன… உடல்நலத்துக்கு அவர்கள் கொடுத்த அக்கறையை, உளநலத்துக்குக் கொடுக்கவில்லை என்பதேயாகும்.
கனவுகளைப் பகுப்பாய்வு செய்வது உள்ளத்தின் நிலையை அறிந்து கொள்வதற்குத் தெளிவான ஒரு வழிமுறை.
Read in : English