Site icon இன்மதி

இலங்கை பொருளாதாரம்: எப்போது சரியாகும்?

Read in : English

இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் தெய்வநாயகம் தேவானந்த். வளர்ச்சி சார்ந்த பணிகளில் தீவிர ஈடுபாடு கொண்டவர். யாழ்ப்பாணம் ஊடக வளங்கள் மையத்தின் தலைவராகப் பணியாற்றியவர். இலங்கை அரசு சார்பற்ற தொண்டு நிறுவனக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளராக உள்ளார். இலங்கையில் உள்நாட்டுப்போரின் போது உளவியல்ரீதியாகப் பாதிக்கப்பட்ட சிறுவர் சிறுமியரை மீட்கும் நடவடிக்கையை நாடகம் மூலம் நிகழ்த்தியவர். இலங்கை பொருளாதாரம், அங்குள்ள சூழல் குறித்து இன்மதி.காம் இதழுக்காகப் பிரத்யேகமான தகவல்களை பகிர்ந்துகொண்டார். அதில் இலங்கையில் மக்கள் எதிர்கொண்ட பாதிப்புகள் குறித்த சித்திரம் நமக்கு காணக் கிடைக்கும்.

இலங்கையின் பொருளாதாரச் சரிவு!
இந்த பொருளாதாரச் சீர்குலைவு மாபெரும் பேரழிவு. சாதாரண மக்கள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு பொருட்களின் விலை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. குழந்தைகளுக்கான பால் மாவு முதல் மீன் உள்ளிட்ட புரதங்களைக் கொண்ட இறைச்சி வரை அனைத்தும் விலை அதிகமாக உள்ளது. இதனால் புரதம் எடுத்துக்கொள்ளும் விகிதம் குறைந்து மனிதர்களின் போஷாக்கு குறைகிறது. சாதாரண மக்களின் வருமானம் அதிகமாகாமல் பொருட்களின் விலை மட்டும் அதிகமாகியுள்ளதால், அங்கு வாழ முடியாத நிலை உருவாகியுள்ளது.

1978ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி பொறுப்பேற்றபோது நவபொருளாதார காலனியாக மாறியது இலங்கை. இந்த கொள்கையால் ஐ.எம்.எஃப் இலங்கையில் கால் பதித்தது; பலகட்டமாக இலங்கைக்கு உதவியது. தனியார்மயப்படுத்துதல் உள்ளிட்ட பல விடயங்களைச் சொன்னது.

ஐ.எம்.எஃப் வந்திருந்தால் இலங்கையின் வாழ்க்கைத் தரமும் ஊட்டச்சத்து விகிதமும் முன்னேறியிருக்கும் என்பதே பலரது கருத்து. ஆனால், நவபொருளாதாரக் கொள்கை வந்தபின்னர் இலங்கையின் போஷாக்கு விகிதம் குறைந்ததாகச் சொல்கின்றன புள்ளிவிவரங்கள்.

இலங்கை பொருளாதாரம் சீராக இனப்பிரச்சனை, மனித உரிமை, கருத்து சுதந்திரம் போன்ற விடயங்களில் தீர்வையும், உறுதிப்படுத்துதல் எனும் விடயத்தில் திருப்திப்படுத்துதலையும் வேண்டுகிறது ஐ.எம்.எஃப்

உள்நாட்டில் உற்பத்தி?
இலங்கையில் நடந்த மிக ஆபத்தான விடயம் உள்நாட்டு உற்பத்தி கைவிடப்பட்டது. தானியங்களோ, மரக்கறிகளோ உற்பத்தி செய்தால், திறந்த பொருளாதாரத்தின் வழியே பாகிஸ்தான், சீனா போன்ற வெளிநாட்டில் இருந்து அதே பொருட்களை உள்ளூர் பொருட்களைவிட மிகக்குறைந்த விலையில் இறக்குமதி செய்ய முடியும். விலை குறைவு எனும்போது, மக்களும் அதனை வாங்குகின்றனர். எந்த ஒரு பொருளையும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யலாம் என்றாகிவிட்டது. அதனால் தானாகவே உற்பத்தியைக் குறைத்தாக வேண்டிய நிலைமை வருகிறது.

பொருளாதாரப் பிரச்சனை வந்தபிறகு, அரசு உத்தியோகத்தர்கள் எல்லோரும் வெள்ளிக்கிழமைகளில் உற்பத்தியில் ஈடுபட வேண்டுமென்று அறிவித்தது அரசு. அவர்களுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டது. அவர்களனைவரும் வீட்டுத் தோட்டத்தில் உற்பத்தி செய்யுங்கள் என்கிறது அரசாங்கம்; அதற்கு நிறைய காலம் வேண்டும்.

தற்போதுள்ள நிலைமையில், முழுமையாக மீள் கட்டமைப்பு செய்தால் மட்டுமே பழைய நிலையை அடைய முடியும். ஆனால், எந்த மாற்றங்களும் இல்லை. வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க அரசே நியமனங்கள் செய்வதால் நிர்வாகச் செலவு அதிகரித்திருக்கிறது, இப்போதும் கூட, நாட்டின் பாதுகாப்புக்கு அதிகமாக ஒதுக்கப்படுகிறது.

இந்த வருட பட்ஜெட்டில் பாதுகாப்புக்கான செலவின விகிதம் 35%. உலகின் வளர்ந்த நாடுகளில் கூட இது 7 – 9% வரையே உள்ளது.

மேலும் படிக்க: இலங்கை நெருக்கடி: பஞ்ச அபாயம், நம்பிக்கை அளிக்காத ரணில் அமைச்சரவை

ஏன் மாற்றமில்லை?
பொருளாதாரத்தில் சிறைப்பட்ட இலங்கையை மீட்டெடுக்க ஐ.எம்.எஃப் உதவுவதாக வாக்களித்திருக்கிறது. சில நிபந்தனைகளையும் விதித்திருக்கிறது. அவற்றை இலங்கை அரசு பின்பற்றவில்லை என்றும் சொல்லப்படுகிறது. அரசியல் நிர்வாகமும் அடியோடு மாறியிருக்கிறது.

இலங்கை பொருளாதாரம் சீராக இனப்பிரச்சனை, மனித உரிமை, கருத்து சுதந்திரம் போன்ற விடயங்களில் தீர்வையும், உறுதிப்படுத்துதல் எனும் விடயத்தில் திருப்திப்படுத்துதலையும் வேண்டுகிறது ஐ.எம்.எஃப். இலங்கையில் நிகழ்ந்த பொருளாதாரச் சிறைப்படுதலுக்கு ஊழலும் ஒரு காரணம் என்கின்றனர் வல்லுநர்கள். அதனால், மீண்டும் ஒருமுறை ஊழல் நடைபெறாது எனும் உறுதிப்பாட்டையும் இன்றைய அரசிடம் எதிர்பார்க்கிறது.

புலம்பெயர்ந்த தமிழர்கள் பொருளாதாரரீதியாகச் சிறப்பான நிலைமையில் இருப்பதால், இலங்கையில் முதலீடு செய்யும் சூழல் உள்ளது. அதே அளவுக்கு இலங்கையில் அரசியல் நிலைப்பாடும் ஸ்திரமாக இருக்க வேண்டும். மக்களால் விரட்டப்பட்ட இப்போதைய ஆட்சியிலேயே தமிழர்களுக்கு, சிறுபான்மையினருக்கு எதிரான நிலைப்பாடு காணப்பட்டது. எதிர்காலத்திலும் அது இருந்தால் அவர்களது முதலீடு ஆபத்தான விடயமாக இருக்கும்.

அதேநேரத்தில், இந்த அரசியல் தீர்வுகள் வடக்கு – கிழக்கு விடயங்களில் நிரந்தரமான சரியான அமைதியை யோசிக்கிறதா என்றும் காத்திருக்கின்றனர். அதனால் அந்தப் பணம் உள்ளே வருவது தடைபட்டிருக்கிறது.

முழுமையாக மீள் கட்டமைப்பு செய்தால் மட்டுமே பழைய நிலையை அடைய முடியும். ஆனால், எந்த மாற்றங்களும் இல்லை

இந்தியாவின் உறவு!
நட்பு நாடு என்ற முறையில், பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களை வாங்க டொலர் இல்லை என்ற நிலையில் இந்தியா உதவி செய்திருக்கிறது. கொள்கை அளவில் மீளச் செலுத்துவதற்கான காலம் தள்ளிச் செல்ல வாய்ப்பிருக்கிறது. சீனாவைப் பொறுத்தவரை, வங்கி மூலமாகவே இலங்கைக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது; அதனால் கடனை மீளச் செலுத்த முடியாத நாடு என்று பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இந்தியா ஆபத்துதவியாகப் பார்க்கப்படுகிறது.

வடக்கு கிழக்கை மனதில் கொண்டு இந்தியா உதவிகளை வழங்க வேண்டுமென்று இங்குள்ளவர்கள் நினைக்கின்றனர். அந்த அளவுக்கு இலங்கையில் அரசியல் சூழ்நிலை உள்ளது. ஆனால், இந்திய அரசுக்கான இலங்கை அரசாங்கத்தின் பதிலிருப்பு மிகவும் அலட்சியப்போக்காக இருப்பதாகவே சொல்லுவேன்.

மேலும் படிக்க: நெருக்கடியில் இலங்கை, ஐஎம்எஃப்-இன் உதவி, சீனாவின் சினம்

தோல்வியடைந்த திரட்சி!
சமீபத்திய மக்கள் திரட்சி எழுச்சியாக அல்லாமல் தோல்வி அடைந்துள்ளது. இந்த எழுச்சியில் வடக்கு, கிழக்கு மக்கள் பங்கேற்கவில்லை என்று சொல்லப்பட்டது. அதற்குக் காரணம், இதனால் என்ன பயன் ஏற்படும் என்பதுதான். இரண்டாவது, அணி திரட்டுகிறபோது அதில் ஈடுபடுபவர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாக வேண்டியிருக்கும். அதனால், நாங்கள் விலகித்தான் இருந்தோம்.

தெற்குப் பகுதியில் சிங்கள மக்கள் திடீரென்று பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டபோது எழுச்சியில் இறங்கினார்கள். அதில் தெளிவின்மையே இருந்தது. ஜனாதிபதி, பிரதமர் மாளிகைகளைக் கைப்பற்றியபோதும் மாற்றத்திற்கான ஏற்பாடுகள் நடக்கவில்லை.

அரசியல் மாற்றம், பொருளாதார மாற்றமே போராட்டத்திற்கான நோக்கம் என்றால் அது நடக்கவில்லை. எதிரி யாரென்றே தெரியாத சூழலே தோல்விக்கான காரணம்.

அமெரிக்க அரசின் சார்பில் வழங்கப்படும் பணம் எல்லாம் கொழும்பிலே தான் இருக்கிறது; கொழும்பிலே நிர்வாகச் செலவுகளுக்கு பணத்தை அள்ளிச் செலவிட்டு விட்டு, வடக்கிலே கிள்ளித்தான் தெளிப்பார்கள்

எதிர்காலம் என்ன?
தமிழர் பகுதிகளில் நிரந்தரத் தீர்வென்ற ஒன்று இல்லாததால், அரசு சார்பான மனநிலை பெருகாது. வரும் சித்திரைக்குள் தமிழர் பகுதிகளில் நிரந்தரத் தீர்வு கிடைக்குமென்று ரனில் விக்கிரமசிங்கே சொல்லியிருந்தாலும், இதுவரை இலங்கை அரசாங்கம் சொன்னவற்றை நிறைவேற்றாத காரணத்தால் அதன்மீது தமிழர்களுக்குச் சந்தேகம் இருக்கிறது.

அமெரிக்க அரசின் சார்பில் வழங்கப்படும் நிதி வடக்கு கிழக்கு பெயர்களைச் சொல்லி வழங்கப்பட்டாலும், வருகிற பணம் எல்லாம் கொழும்பிலே தான் இருக்கிறது. கொழும்பிலே நிர்வாகச் செலவுகளுக்கு பணத்தை அள்ளிச் செலவிட்டு விட்டு, வடக்கிலே கிள்ளித்தான் தெளிப்பார்கள்.

ஒரு அமைச்சர் வந்தால் பின்னால் பத்து கார்கள் வருவதும், உணவுக்குச் செலவிடுவதுமாக இருந்த நிர்வாகத்தில் இன்றுவரை மாற்றம் ஏதுமில்லை. அதே அமைச்சர், அதே செயல்பாடு என்றிருக்கும்போது அவர்கள் பொருளாதாரத்தை மீட்டெடுப்பார்கள் என நம்புவது சிரமம்தான்.

இலங்கையின் தற்போதைய நிலை தான் என்ன? SriLanka economic crisis

 

இந்த பொருளாதாரச் சிரமம் 5 வருடம், பத்து வருடம் தொடரும் என்கின்றனர் வல்லுநர்கள். 350க்கும் மேலே உள்ள இலங்கை ரூபாய்க்கான டொலர் மதிப்பு மேலும் உயரும். மிதப்பு நிலையில் விடாமல் ரூபாய் மதிப்பைத் திட்டமிட்டு கட்டுப்படுத்தி வைத்திருப்பதால் போலியான நிரந்தரத்தன்மையைக் காட்டுகிறது; மத்திய வங்கியின் செயற்பாடு அரசியல்மயப்பட்டிருப்பதால் நம்பிக்கையற்ற சூழல் எல்லாவற்றிலும் காணப்படுகிறது.

Share the Article

Read in : English

Exit mobile version