Site icon இன்மதி

பறிபோகும் ’இரட்டை இலை’: பணிவாரா எடப்பாடி?

Read in : English

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக பொதுக்குழுவிலும் சட்டமன்ற அதிமுக உறுப்பினர்களிடமும் கிட்டத்தட்ட ஒட்டுமொத்த ஆதரவு இருந்தாலும், ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து பணியாற்றும்படி பாஜக கடும் அழுத்தம் தந்து வருவதைத் தமிழ்நாடு அரசியல் கள நிலவரம் வெளிக்காட்டுகிறது.

அதேநேரத்தில், பாஜக தலைமையின் கோபத்தைப் பற்றிக் கவலைப்படாமல் கட்சியின் மந்திரச் சின்னமான ‘இரட்டை இலை’யை இழக்கும் நிலை வந்தாலும் அதிமுகவின் ஒற்றைத்தலைவராக தன்னை நிலைநிறுத்திக்கொள்வதில் பழனிசாமி உறுதியாக நிற்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மராட்டிய மாநிலத்தில் சிவசேனை கட்சி பிளவுபட்ட நிலையில் அதன் சின்னமான ‘வில்-அம்பு’ இந்தியத் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டது. அதிமுகவில் ஏற்பட்டுள்ள சிக்கலைப் பொறுத்தவரை, மொத்தமுள்ள 2,661 பொதுக்குழு உறுப்பினர்களில் 2,550 உறுப்பினர்களின் ஆதரவு தனக்கு இருப்பதாக பழனிசாமி அளித்துள்ள மனு மீது இதுவரை எந்த முடிவையும் இந்தியத் தேர்தல் ஆணையம் எடுக்கவில்லை.

அதே தேர்தல் ஆணையத்திடம் பன்னீர்செல்வம் கொடுத்த மனுவில் தனக்கு பொதுக்குழுவில் இருக்கும் ஆதரவுபற்றி எவ்விதத் தகவலையும் குறிப்பிடாதது அவருக்கு பொதுக்குழுவில் ஆதரவு இல்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

மீண்டும் பழனிசாமியும் பன்னீர்செல்வமும் கைகோர்த்தபோது இரட்டை இலைக்கு உயிர்கொடுத்தது தேர்தல் ஆணையம்; அப்போது அவைத்தலைவர் மதுசூதனன், பொருளாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் அடங்கிய அணிக்கே ’இரட்டை இலை’ என்று தெளிவாகக் குறிப்பிட்டது

அண்மையில் சிவசேனை கட்சிப் பிளவு பற்றிப் பேசிய பழனிசாமி, பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவு பெற்ற ஏக்நாத் ஷிண்டேவை சட்டமன்ற கட்சித்தலைவராக சபாநாயகர் ஏற்றதையும் அதன்பின்னர் முதல்வராக ஷிண்டே பதவி ஏற்றதையும் சுட்டிகாட்டியிருந்தார். ஆனால், அந்தக் கட்சியின் சின்னமான ‘வில்-அம்பு’ முடக்கப்பட்டதைப் பற்றி ஏதும் பேசவில்லை. அதிமுகவிலும் அதே நிலை ஏற்படும் வாய்ப்பு இல்லாமல் போகவில்லை.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு முன்னர், பன்னீர்செல்வம் பத்து சட்டமன்ற உறுப்பினர்களுடன் அதிமுகவைவிட்டு வெளியேறியபோது ’இரட்டை இலை’ சின்னம் முடக்கப்பட்டது. அப்போது எடப்பாடி பழனிசாமிக்கு 123 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவும் பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவும் இருந்தது.

மேலும் படிக்க: ஈபிஎஸ் அடுத்த மூவ்: ஓபிஎஸ் வசம் உள்ள எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி விரைவில் பறிப்பு?

மீண்டும் பழனிசாமியும் பன்னீர்செல்வமும் கைகோர்த்தபோது இரட்டை இலைக்கு உயிர்கொடுத்தது தேர்தல் ஆணையம்; அப்போது அவைத்தலைவர் மதுசூதனன், பொருளாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் அடங்கிய அணிக்கே ’இரட்டை இலை’ என்று தெளிவாகக் குறிப்பிட்டது.

தற்போது மதுசூதனன் உயிரோடு இல்லை. கட்சியின் முன்னாள் பொருளாளர் என்ற முறையிலோ தற்போதைய ஒருங்கிணைப்பாளர் என்ற முறையிலோ சின்னத்தை பன்னீர்செல்வம் பெறவோ முடக்கவோ வாய்ப்புகள் வலுவாக இருக்கின்றன. பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுத்தது செல்லுமா இல்லையா என்பது தற்போது உச்சநீதிமன்ற விசாரணையில் உள்ளது.

உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரை இரட்டை இலை அதிமுக வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்படவில்லை. கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளரும் சேர்ந்து கையெழுத்திட்டால்தான் சின்னம் ஒதுக்கப்படும் என்ற நிலை இருக்கிறது.

பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்படும்படி பாஜக தலைமை எடப்பாடிக்கு அறிவுரை கூறியிருப்பதாக செய்திகள் வெளியாகும் நிலையில் டெல்லிக்குச் சென்ற பழனிசாமி ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்தார். அச்சந்திப்புக்குப் பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய எடப்பாடி அரசியல் குறித்து எதுவும் பேசப்படவில்லை என்றும் காவிரி-கோதாவரி நதிகள் இணைப்பு குறித்து உள்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்ததாகவும் கூறினார்.

ஆனால், நதிகள் இணைப்பு பற்றி உள்துறை அமைச்சருடன் பேசியவர் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சருடன் இது பற்றிப் பேசாதது ஏன் என்று தெரியவில்லை.

சென்னை திரும்பிய பழனிசாமியிடம் அதிமுகவை ஒருங்கிணைக்க பாஜக முயற்சி செய்கிறதா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டபோது “ஒரு கட்சி விவகாரத்தில் இன்னொரு கட்சி தலையிடக்கூடாது. அந்தந்த கட்சி விவகாரத்தை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்” என்று பதில் தந்தார். அதாவது, பாஜக தலையிடவில்லை என்று அவர் கூறவில்லை.

அதே நேரத்தில் பாஜக தலையிடுவதை விரும்பவில்லை என்பதையும் அவரது பதில் பூடகமாக வெளிப்படுத்தியது. பாஜக இல்லாமல் தனியாக நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கத் தயாராகிறாரா பழனிசாமி என்ற கேள்வியும் எழுந்தது, அடுத்த நாளே அதற்குப் பதிலும் வந்தது.

பழனிசாமியிடம் அதிமுகவை ஒருங்கிணைக்க பாஜக முயற்சி செய்கிறதா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டபோது “ஒரு கட்சி விவகாரத்தில் இன்னொரு கட்சி தலையிடக்கூடாது. அந்தந்த கட்சி விவகாரத்தை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்” என்று பதில் தந்தார்

அது குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு, 2014-ல் அதிமுக தனித்துப் போட்டியிட்டு மொத்தமுள்ள 39 இடங்களில் 37 இடங்களில் வெற்றி பெற்றதை நினைவுபடுத்தினார். அடுத்த தேர்தலில் தேசியக் கட்சிகளும் திமுகவும் தனித்து நிற்கத் தயாரா என்ற கேள்வியையும் எழுப்பினார். அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிட்டாலும் தமிழ்நாடு, புதுச்சேரியில் மொத்தமிருக்கும் 40 தொகுதிகளையும் அள்ளுவோம் என்று ராஜு பேசியது பாஜகவுக்கு அதிமுக கொடுக்கும் எச்சரிக்கையாகவே பார்க்கப்பட்டது. இதில் தேசியக்கட்சி என்பது பாஜகவையே குறிக்கும் என்று பேசப்பட்டது.

இதையடுத்து, அதிமுக ஆட்சியின்போது சாலை ஒப்பந்தங்களைப் பெற்ற ஒப்பந்ததாரர் பாண்டித்துரை மீது வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது. எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது நெடுஞ்சாலைத்துறைக்கும் அவரே பொறுப்பு வகித்தார். அதற்குப் பிறகு நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது குறித்து அதிமுகவினர் யாரும் பேசவில்லை. ஆனால், பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்பட முடியாது என்பதைப் பலமுறை சொன்னார் பழனிசாமி. சட்டமன்றத்திலும் பன்னீர்செல்வத்தின் அருகில் அவர் அமரவில்லை.

மேலும் படிக்க: அதிமுக ஒற்றைத் தலைமை: நம்பர் ஒன் வாய்ப்பைப் பிடிக்க முடியாத இன்னொரு நெடுஞ்செழியனா, ஓ. பன்னீர்செல்வம்?

பன்னீர்செல்வத்துக்குப் பதிலாக முன்னாள் அமைச்சர் உதயகுமாரை துணைத்தலைவராக்கும்படி கோரிக்கை வைத்தபோது சட்டமன்றத்தில் கூச்சல் குழப்பம் ஏற்படுத்தியதாகக் கூறி அவையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

பாஜக கூட்டணி பற்றி எடப்பாடி பழனிசாமி இப்போதைக்கு எதுவும் முடிவு செய்யவில்லை. பாஜகவின் அழுத்தத்துக்குப் பணிந்து பன்னீர்செல்வத்தை சேர்த்துக்கொள்ள அவர் தயாராக இல்லை என்பதே தற்போதைய நிலை. அதிமுகவின் ஒற்றைத்தலைமையாகத் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள இந்திய தேர்தல் ஆணையத்திலும் தமிழ்நாடு சட்டமன்றத்திலும் பழனிசாமி போராடி வருகிறார். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நவம்பர் மாதம் விசாரணைக்கு வருகிறது. இதைவிட முக்கியமான விஷயம், அவர் பாஜகவை சரிக்கட்ட வேண்டும்.

‘இரட்டை இலை’ முடக்கப்படும் சூழல், அமைச்சர்களுக்கு நெருக்கமானவர்களிடம் வருமான வரி சோதனைகள், பாஜக தலைவர்களின் கோபத்தை எதிர்கொள்ளும் நிலை இதையெல்லாம் தாண்டி அதிமுக தலைவர்களும் முன்னாள் அமைச்சர்களும் எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் உறுதியாக இருப்பது ஒரு அரசியல் அதிசயமாகவே பார்க்கப்படுகிறது. தனது ஆதரவாளர்களை பழனிசாமி தக்கவைப்பாரா அல்லது மிகவும் பாதுகாப்பான இடமாகக் கருதப்படும் பன்னீர்செல்வம் அணிக்கு அவர்களில் சிலர் அணி மாறுவார்களா என்பதைப் பொறுத்து பழனிசாமியின் எதிர்காலம் மாறலாம்.

ஒற்றைத்தலைமை கொண்ட அதிமுகவைவிட பல தலைவர்களும் குழுக்களும் உள்ள அதிமுகவுடன் கூட்டணி உடன்பாட்டை மேற்கொளவது பாஜகவுக்கு வசதியாக இருக்கும். தற்போது பன்னீர்செல்வத்துடன் இணையவேண்டும் என்று பாஜக சொல்வதை எதிர்க்கும் பழனிசாமி, அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் பற்றி மறந்தும் பேசுவதில்லை.

அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்கு மேல் இருக்கிறது. அதுவரை அது பற்றிப் பேச வேண்டிய தேவை பழனிசாமிக்கு இல்லை. தேசியக்கட்சியான பாஜகவுக்குத்தான் நாடாளுமன்றத் தேர்தல் மிகவும் முக்கியமானது. அதில் தோற்றாலும் அதிமுகவுக்குப் பெரிய பாதிப்புகள் இருக்காது. அடுத்துவரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு வேண்டிய தேர்தல் அணுகுமுறையே அதிமுகவுக்கு முக்கியமானது. ஆதலால், அதை நோக்கியே பழனிசாமி பயணிப்பார் என்று கருதப்படுகிறது.

Share the Article

Read in : English

Exit mobile version