Site icon இன்மதி

சூரியவொளி மின்சாரம் மின்கட்டணங்களைக் குறைக்கும் என்கிறார் ‘சோலார்’ சுரேஷ்

Read in : English

சூரியவொளி மின்சாரத்தின் தேவை முன்னெப்போதையும் விட தமிழகத்தில் மின்கட்டணங்கள் ஏறிவிட்ட இந்தக் காலத்திலும் இனி ஏறப்போகும் வருங்காலத்திலும் அதிகரித்திருக்கிறது; அதிகரிக்கும். .

தற்போது டான்ஜெட்கோ வீட்டுப் பயன்பாட்டு மின்சாரக் கட்டணங்களை 400 அலகுகள் வரை அலகு ஒன்றுக்கு ரூ.4.50 ஆகவும் (முன்பு ரூ.3, 500 அலகுகள் வரை), 401-லிருந்து 500 அலகுகள் வரை ரூ.6.50 ஆகவும், 501-லிருந்து 600 அலகுகள் வரை ரூ.8-ஆகவும் உயர்த்தியிருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் நுகர்வோர் விலைக் குறியீட்டுடன் தொடர்புப் படுத்தி மின்கட்டணங்கள் ஏறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தச் சூழ்நிலையில் சூரியவொளி மின்சாரம் என்னும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முக்கியத்துவம் பெறுகிறது. கூரைமீது சூரியவொளி மின்தகடுகளைப் பதிக்கும் ஆர்வம் இப்போது நிறைய பேருக்குத் தொற்றியிருக்கிறது. பெரிய நிறுவனங்கள் மட்டுமல்ல தனிநபர்கள் கூட சூரியவொளி மின்சாரத்தைத் தயாரிக்க முடியும். அப்படி தயாரிக்கும் மின்சாரத்தின் மிகையை டான் ஜெட்கோவுக்கு விற்று பணமும் சம்பாதிக்க முடியும் (அதில் சில பிரச்சினைகளும் இருக்கின்றன). மேலும் சுற்றுப்புறச்சூழல் பாதுக்காப்புக்கும்,, மாசுப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் சூரிவொளி மின்சாரம் பயனுள்ளதாக இருக்கும்.

ஐஐடி-யில் பயின்ற பொறியியலாளார் சுரேஷ்; பசுமை ஆர்வலரும் கூட. பல நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவங்களும், சூரியமின்சாரத் தயாரிப்புக் கட்டமைப்பை பலபேர் வீடுகளில் நிறுவுவதற்கு உதவி செய்த அனுபங்களும் கொண்டவர்

ஆனால் இந்த விசயத்தில் மானியம், முதலீட்டு இலாபம் கிட்டும் காலம் போன்றவற்றை பற்றிய சிக்கல்கள் இருக்கின்றன. உதாரணமாக, 1,000 கிலோவாட் சூரிய மின்சாரம் தயாரிப்பதற்கு ரூ.60,000 முதலீடு செய்தால், இலாபம் என்ன கிடைக்கும்? இதுசம்பந்தமாக மின்வாரிய அலுவலகத்தை அணுகினால் அங்கிருப்பவர்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. அவர்கள் சூரியமின்சாரத் தயாரிப்பு முனைப்பை அதைரியப்படுத்துவது போலத் தெரிகிறது.

’சோலார்’ சுரேஷ் – சூரியமின்சார நிபுணர்

இந்தமாதிரியான சிக்கல்களும் பிரச்சினைகளும் நிறையவே இருக்கின்றன. அதனால் சூரியமின்சாரத்தைத் தயாரிக்க விழைவோர்களுக்கு எப்படி ஆரம்பிப்பது, எங்கே ஆரம்பிப்பது என்பது பிடிபடவில்லை.

இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் ’சோலார்’ சுரேஷ் என்னும் சூரியமின்சார நிபுணர் பதிலளித்திருக்கிறார். ஐஐடி-யில் பயின்ற பொறியியலாளார் அவர்; பசுமை ஆர்வலரும் கூட. பல நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவங்களும், சூரியமின்சாரத் தயாரிப்புக் கட்டமைப்பை பல வீடுகளில் நிறுவுவதற்கு உதவி செய்த அனுபங்களும் கொண்டவர். பொது வெளியில் சூரியமின்சாரம் பற்றியும், சுற்றுப்புறச்சூழல் பிரச்சினைகள் பற்றியும் பலதடவை அவர் உரையாற்றியிருக்கிறார். சமீபத்தில் இன்மதியோடு அவர் தனது கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்.

மேலும் படிக்க: மின்கட்டணம் உயர்வு: சூரிய ஆற்றல் மின்சாரமே இப்போதைய தேவை!

சூரியமின்சாரத் தயாரிப்புக்கான மானியம் பற்றி பேசிய அவர் அபார்ட்மெண்டுகளுக்கு அது இல்லை என்கிறார். மானியம் இல்லாவிட்டாலும் சூரியமின்சாரத் தயாரிப்பு இலாபகரமானதுதான் என்று அவர் ஆணித்தரமாக நம்புகிறார். பின்வரும் நன்மைகளை அவர் பட்டியலிடுகிறார்.

முதலாவது, ஏறிக்கொண்டே பொகும் மின்கட்டணங்களைக் குறைவாக்கி பணத்தை மிச்சப்படுத்த சூரியமின்சாரம் உதவும்.

இரண்டாவது, சூரியமின்சார தகடுகளை நேராக மெயினில் இணைத்துவிடலாம். மின்கம்பிகள் தேவையில்லை.

மூன்றாவது, சூரியமின்சாரக் கட்டமைப்பை அடிக்கடி பேணிக்காக்கும் அவசியம் இல்லை. வீட்டை நித்தம் துடைப்பத்தால் பெருக்குவது போல பராமரிப்புப் பணிகள் தேவையில்லை.

நான்காவது, சூரியமின்சாரம் வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லது. நிலக்கரி, புதைபொருள் படிம எரிசக்திகளான பெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்கு மாற்றாக சூரியமின்சாரம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியாகத் திகழ்வதால் நாட்டின் அந்நிய செலவாணி மிச்சமாகிறது.

முதலீடு செய்தால் எத்தனைக் காலத்திற்குள் இலாபம் கிடைக்கும் என்ற பிரச்சினையே இல்லை என்கிறார் சுரேஷ். “டிவி, கார், ஃபிரிட்ஜ், ஃபோன், ஏசி ஆகியவற்றை வாங்கும் போது இதைப் பற்றிப் பேசுவீர்களா?” என்று கேட்கிறார். அப்படியும் கணக்கு ஒன்று வேண்டுமென்றால், சூரியமின்சாரக் கட்டமைப்புக்கான முதலீட்டை மூன்று ஆண்டுக்குள் எடுத்துவிடலாம் என்கிறார் சுரேஷ்.

சூரியமின்சாரக் கட்டமைப்பில் இரண்டு வகை உண்டு என்று சொல்கிறார் அவர். பாட்டரி (மின்கலம்) கொண்டது ஒன்று; பாட்டரி இல்லாமல் மற்றொன்று. முன்னதுக்குப் பேர் ஆஃப்-கிரிட்; பின்னதுக்குப் பேர் ஆன்கிரிட்

பகுதி 1:

YouTube player

பகுதி 2:

YouTube player

சூரியமின்சாரக் கட்டமைப்பில் இரண்டு வகை உண்டு என்று சொல்கிறார் அவர். பாட்டரி (மின்கலம்) கொண்டது ஒன்று; பாட்டரி இல்லாமல் மற்றொன்று. முன்னதுக்குப் பேர் ஆஃப்-கிரிட்; பின்னதுக்குப் பேர் ஆன்கிரிட். சூரியவெளிச்சம் இருக்கும் வரையில்தான் ஆன்கிரிட் சூரியமின்சாரக் கட்டமைப்பு செயல்படும்;. சூரிய அஸ்தமனமான பின்பு மாலையில் ’கிரிட்’ மின்சாரம் பயன்படுத்தப்படும். அது ஒரு தானியங்கி. ஸ்விட்ச் எல்லாம் போட வேண்டாம்.

சூரியமின்சாரக் கட்டமைப்பு உருவாக்க அதிக செலவாகாது. பாட்டரி இல்லாத அமைப்பிற்கு ரூ.60,000 செலவாகும். ஓர் அபார்மெண்ட்டிற்கு 40 அலகுகள் சூரியமின்சாரம் தேவைப்பட்டால், சூரியமின்சாரக் கட்டமைப்பு மொத்தம் 10 கிலோவாட் மின்சாரம் தயாரிக்க வேண்டும். (ஒரு கிலோவாட்டில் நான்கு அலகு மின்சாரம் கிடைக்கும்). அதைக் கட்டமைக்க ரூ.5 இலட்சம் செலவாகும். காலம் செல்லச் செல்ல இந்த முதலையும் எடுத்துவிடலாம். மின்வாரியத்திற்குக் கட்டும் மின்கட்டணங்களூம் குறைந்துகொண்டே வரும்.

பாட்டரி இல்லாத சூரியவொளி மின்சாரக் கட்டமைப்பின் நன்மை என்னவென்றால், தனிநபர்கள் தயாரிக்கும் மின்சாரத்தின் மிகையை டான்ஜெட்கோவுக்கு விற்று பணம் சம்பாதிக்க முடியும். ஆனால் அரசாங்கம் உருவாக்கிய கட்டமைப்பில் சூரியவொளி மின்சாரம் தயாரிக்கப்படுவதால் அதற்கான கட்டணங்களும் விற்கப்படும் மின்விலையில் கழிக்கப்படும். அதற்கு ‘நெட் மீட்டரிங்’ பயன்படுத்த வேண்டும். அப்படி பயன்படுத்த வேண்டாம் என்கிறார் சுரேஷ். சூரியவொளி மின்சாரம் நீண்டநாள் இலாபம் தரக்கூடியது என்பதால் மிகை மின்சாரம் விற்றுப் பணம்பார்க்க வேண்டிய அவசியமில்லை என்று அவர் வலியுறுத்துகிறார். ஆனால் வணிகரீதியிலான பொது ஏரியா என்பதால் அபார்ட்மெண்டுகளுக்கு இது பொருந்தாது என்கிறார் சுரேஷ்.

மேலும் படிக்க: மின் தடை காரணமாகப் பழுதாகும் சாதனங்களுக்கு இழப்பீடு தராதா மின்சார வாரியம்?

சூரியவொளி மின்சாரத்தின் தனிச்சிறப்பை விளக்கும்வகையில் தன் சொந்த அனுபவத்தைப் பேசுகிறார் சுரேஷ். சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் புயல்மழை அடித்தபோது தொடர்ந்து ஐந்து நாட்களாக மின்தடை ஏற்பட்டது. அப்போது இருளில் மூழ்கியிருந்த ஏரியாவில் தனது வீட்டில் மட்டும் மின்சாரம் இருந்ததால் பலர் ஆச்சரியப்பட்டனர்; சிலர் பொறாமைப் பட்டனர் என்று சொல்கிறார் சுரேஷ். இரண்டு முன்னாள் மின்வாரியத் தலைவர்களும், மற்றும் அதிகாரப்பதவியில் இருந்த சில ஐஏஎஸ் அதிகாரிகளும் தன்னைத் தேடி வந்தார்கள் என்றும் அவர்கள் சூரியவொளி மின்சாரத் தயாரிப்புப் பற்றிய விவரங்களைத் தன்னிடமிருந்து கேட்டறிந்தார்கள் என்றும் சுரேஷ் கூறுகிறார். ஆனால் இதை அதிகாரப் பூர்வமாகப் பிரபலப்படுத்த நினைத்த அவர்களால் செயல்பட முடியவில்லை. காரணம், அதற்குள் அவர்கள் பணியிட மாறுதல் செய்யப்பட்டார்கள்.

சூரியவொளி மின்சாரக் கட்டமைப்பு உபகரணங்களை சில சில்லறை வியாபாரிகளிடம்தான் வாங்க வேண்டியிருக்கிறது. தரமான வியாபாரிகள் என்று யார் இருக்கிறார்கள் என்ற கேள்விக்கு, “நீங்களே உங்கள் ஏரியாவில் இருப்பவர்களை அணுகுங்கள். அவர்கள் இதுவரை எத்தனை சூரியவொளி மின்சாரக் கட்டமைப்பைக் கட்டிக் கொடுத்திருக்கிறார்கள் என்பதை விசாரியுங்கள். பின் நல்ல வியாபாரியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்,” என்கிறார் அவர். ஒருபள்ளியில் சூரியவொளி மின்சாரக் கட்டமைப்பை உருவாக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட ‘வெண்டார்’ ஒருவர் அரைகுறையாக வேலை செய்துவிட்டு மாயமாய்க் காணாமல் போனார் என்றும், பின்னர் தான்சென்று அதைச் சரிசெய்து கொடுத்தகாகச் சொல்கிறார் சுரேஷ்.

சூரியவொளி மின்சாரக் கட்டமைப்பு உங்களது மின்கட்டணங்களைக் குறைத்துவிடும் என்று சொல்லும் சுரேஷ் அதற்கொரு உதாரணம் தருகிறார். மணப்பாக்கத்தில் இருக்கும் ஓர் அபார்ட்மெண்ட் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2 இலட்சம் மின்கட்டணம் கட்டிவந்தது. சூரியவொளி மின்சாரக் கட்டமைப்பு அங்கே உருவான பின்பு மின்கட்டணம் பாதியாகக் குறைந்து போனது என்கிறார் சுரேஷ்.

சூரியவொளி மின்சாரக் கட்டமைப்பிற்குச் செய்யும் முதலீட்டை சில ஆண்டுகளிலே மீட்டெடுத்துவிடலாம் என்றும், அதன் பின்னர் மின்கட்டணம் மிகக் கணிசமாகவே குறைந்துவிடும் என்று சொல்லும் சுரேஷ் இந்த விசயத்திற்கான ஆலோசனைகளை இலவசமாகவே தரத்தயார் என்றும் கூறுகிறார். இனி வருங்காலத்தில் சூரியவொளி மின்சாரம் ஆதிக்கம் செலுத்தும் என்று சொல்லும் போது ‘சோலார்’ சுரேஷின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் வெளிச்சம் தெறித்தது.

(சூரிய மின்னாற்றல் குறித்து அறிந்துகொள்ள ஆர்வம்கொண்டோர் இந்த எண்ணில் சுரேஷைத் தொடர்புகொள்ளலாம் 9381205869)

Share the Article

Read in : English

Exit mobile version