Site icon இன்மதி

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தடை ஏன்?

அண்மையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைத் தடைசெய்யப்பட்டது. அதைக் குறித்து மிகப் பரவலாக அறியப்பட்ட ஆளுமையான பேராசிரியர் ராமு மணிவண்ணனிடம் இன்மதி இணைய இதழுக்காகப் பேசினோம்.

பேராசிரியர் ராமு மணிவண்ணன் தில்லி பல்கலைக் கழகத்திலும் சென்னைப் பல்கலைக் கழகத்திலும் அரசியல் அறிவியல் துறையில் பணியாற்றியவர். இந்துஸ்தான் டைம்ஸ் இதழில் ஆட்சி நிர்வாகம் அரசியல் தொடர்பாகப் பத்தி எழுதிவருகிறார். கல்வி, மனித உரிமை, அரசியல், அமைதி மற்றும் போராட்டம் போன்ற பல்வேறு விஷயங்களைத் தொடர்ந்து கவனம்செலுத்தி அவை குறித்த ஆக்கப்பூர்வமான விவாதங்களை உருவாக்கிவருகிறார்.

பாப்புலர் ஆஃப் இந்தியா எப்படித் தோன்றியது, சமூக, அரசியல் தளத்தில் இதன் செயல்பாடுகள் என்ன? சமூகத்தில் இந்த இயக்கம் பற்றிய சரியான புரிதல் இல்லாதது போல் தென்படுகிறது என்ற கேள்வியை முதலில் எழுப்பினோம்.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு இஸ்லாமிய அரசியல் மிகப் பெரிய மாற்றமடைந்தது. வெறுமனே சமூகம் குறித்த விழிப்புணர்வு மட்டும் போதாது, உரிமைகளைப் பேசும் அமைப்புகளும் தேவை என்ற நிலை உருவானது. அப்போதுதான் பிஎஃப்ஐ போன்ற அமைப்புகள் உருவாயின

இந்தியா விடுதலையை ஒட்டி இந்தியா மதரீதியாகப் பிரிக்கப்பட்டுவிட்டது. அது அரசியல் சமூகத்தைப் பேரளவில் பாதித்தது. ஆகவே, மதரீதியில் பெரும்பான்மைச் சமூகம், சிறுபான்மைச் சமூகம் என இரு பெரும் பிரிவுகள் இந்தியாவில் ஏற்பட்டுவிட்டன. இது ஒரு வகையில் வாக்கு வங்கி அரசியலால் ஏற்பட்ட பிரிவு என்று சொல்லலாம் என்றார். இது இந்திய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும், இஸ்லாமியருடைய சமூக, பொருளாதார, கல்வி விஷயங்களை யாருமே பெரிய அளவில் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

மேலும் படிக்க: பிரபாகரனைக் கடவுள் என்கிறார் மேதகு இயக்குநர்

இத்தகைய சூழலில் இஸ்லாமிய சமூகம் ஒரு சமரசம் செய்ய வேண்டுமா, போரிட வேண்டுமா என்ற நிலையை நோக்கித் தள்ளப்பட்டது. அதிலும் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு இஸ்லாமிய அரசியல் மிகப் பெரிய மாற்றமடைந்தது. வெறுமனே சமூகம் குறித்த விழிப்புணர்வு மட்டும் போதாது, உரிமைகளைப் பேசும் அமைப்புகளும் தேவை என்ற நிலை உருவானது. அப்போதுதான் பிஎஃப்ஐ போன்ற அமைப்புகள் உருவாயின என்கிறார் ராமு மணிவண்ணன்.

இஸ்லாமியர் கல்வியில் பின் தங்கியிருப்பதாகப் பல ஆய்வுகள் தெரிவித்தன. ஆகவே, இஸ்லாமியர் சமூகத்தில் கல்வியை மேம்படுத்தும் எண்ணத்தில் பிஎஃப்ஐ அமைப்பு இஸ்லாமியர் கல்வியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைத் தந்துள்ளது என்கிறார் அவர். சமூகத்தில் செயல்பட்ட அந்த அமைப்பு மெதுவாக அரசியலை நோக்கியும் நகர்ந்தது.

இப்போது பிஎஃப்ஐ அமைப்பு தடைசெய்யப்பட்டிருக்கிறது. இதன் பின்னணியைச் சிறிது நுட்பமாக அலசுகிறார் பேராசிரியர் ராமு மணிவண்ணன். ஆட்சியிலிருப்பவர்களை விமர்சிக்கும் உரிமை அனைவருக்கும் உரியது. குடியுரிமை தொடர்பான சட்டங்களைப் பற்றி இஸ்லாமிய அமைப்புகள் விமர்சித்தபோது, அந்த அமைப்புகளுக்கு அவை சவாலாக மாறின. இத்தகைய விமர்சனங்கள் ஆளும் தரப்புக்கு ஒரு நெருடலை உருவாக்கின என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் பேராசிரியர். ஆனால், இதற்காக அந்த அமைப்பைத் தடைசெய்வது என்பது ஜனநாயகரீதியில் சரியான விஷயமில்லை என்பதையும் அவர் விளக்குகிறார்.

ஐரோப்பிய நாடுகளிலிருந்து கட்சிகளுக்கு வரும் நிதியை முறையானதாகவும் அரேபிய நாடுகளிலிருந்து கட்சிகளுக்கும் வரும் நிதியை முறையற்றதாகவும் கருதுவது தவறு என்கிறார் பேராசிரியர் ராமு மணிவண்ணன்.

பிஎஃப்ஐ போன்ற அமைப்புகள் இறையாண்மைக்கு எதிராகச் செயல்பட்டால் அது தொடர்பாக விசாரணை நடத்தலாம், அது சரியான அணுகுமுறை அதே நேரத்தில் அவற்றின் அரசியல் உரிமையை மறுப்பது சரியாக இருக்காது என்பதை அவர் வலியுறுத்திக் கருத்து தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் இஸ்லாமிய அரசியல் எப்படிப் பரிணாமம் அடைந்திருக்கிறது, அதன் அரசியல் சிந்தனைக்கு இங்கே என்ன இடம் இருக்கிறது என்பது பற்றிக் கேட்டோம்.

தங்களுக்கு வலிமையான அரசியல் இயக்கம் தேவை என்பதை இஸ்லாமியருக்கு உணர்த்தியது பாபர் மசூதி இடிப்பு சம்பவம். ஆகவே தங்களுக்கான பிடிமானத்தை நோக்கி இஸ்லாமியர்கள் நகர வேண்டியதிருந்தது என்பதை மறுக்க முடியாது என்பதற்கான காரணங்களைப் பட்டியலிட்டு விளக்குகிறார் பேரா. ராமு மணிவண்ணன். பாஜக போன்ற கட்சிகள் பல இந்து மதக் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொள்ளும்போது, இஸ்லாமிய அமைப்புகள் திமுக போன்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொள்வதைத் தவறென்று கொள்ள முடியாதே என்றுரைக்கிறார் பேராசிரியர்.

மேலும், இந்திய இறையாண்மைக்கு எதிரான விஷயங்கள் எவை என்பதில் ஒரு பொதுவான நிலைப்பாடு வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்துகிறார்.

மேலும் படிக்க: அர்ச்சகர் விவகாரம்: உயர் நீதிமன்றத் தீர்ப்பு தீண்டாமையை ஊக்குவிக்கிறதா?

பிஎஃப்ஐ அமைப்பின் கணக்குவழக்கில் சிக்கல், அவற்றின் அடிப்படைவாத போக்கு ஆகியவை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று பேராசியரிடம் வினவினோம்.

நிதிநிலவரம் பற்றிய சிக்கலும் சரி, அடிப்படைவாதப் போக்கும் சரி எந்தக் கட்சியில் இருந்தாலும் அவை கணக்கில்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், அதைக் காரணமாக வைத்து சிறுபான்மை இயக்கம் ஒன்றைத் தடை செய்வது என்பது உளவியல்ரீதியாக அவற்றை முடக்கும் செயலாகாதா என்று அவர் கேட்கிறார். பெரிய கட்சிகளுக்கு நிதி வருகிற விஷயம் நமக்கு நன்றாகத் தெரியும். ஐரோப்பிய நாடுகளிலிருந்து கட்சிகளுக்கு வரும் நிதியை முறையானதாகவும் அரேபிய நாடுகளிலிருந்து கட்சிகளுக்கும் வரும் நிதியை முறையற்றதாகவும் கருதுவது தவறு என்கிறார் பேராசிரியர். கணக்கு வழக்குகள் முறையாக இருக்கிறதா என்பதை மட்டுமே பார்க்க வேண்டுமே ஒழிய எங்கிருந்து வருகிறது என்பதை வைத்து முடிவுசெய்தல் சரியாகாது என்பதைத் தெளிவுபடுத்துகிறார் பேராசிரியர்.

வெளிநாடுகளிலிருந்து வரும் நிதி எதற்காக அளிக்கப்படுகிறது என்பதை உற்று நோக்க வேண்டியதுதான். அதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், எல்லா அமைப்புகளுக்கும் இது பொருந்தும் என்பதையும் மறந்துவிட முடியாது என்று சூசகமாகக் குறிப்பிடுகிறார் அவர்.

ஈரான் போன்ற நாடுகளில் ஹிஜாப் அணிய மறுப்பதை முற்போக்காகக் கருதும் நாம் இங்கே கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம் வரும்போது அது அவர்களின் உரிமை என்று முற்போக்கு சக்திகள் கூறுகின்றன. அப்படியெனில், இங்கே நாம் அடிப்படைவாதத்துக்குத் துணைபோவதாகிவிடாதா, இது சரிதானா என்று கேட்டபோது, கேள்வியின் நியாயத்தை அவர் சரி என்று எடுத்துக்கொண்டார்.

பெரும்பான்மை அடிப்படைவாதம் இருப்பதைப் போல் சிறுபான்மை அடிப்படைவாதம் இருக்கிறது; மறுப்பதற்கில்லை. அதை எவ்வாறு தடுக்க வேண்டும் என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் கேள்வி எழுப்பிய விவகாரத்தை நாம் அரசியல் அறிவியல்ரீதியில் அணுக வேண்டும். இஸ்லாமிய அமைப்புகளிடையே இத்தகைய விஷயத்தில் முற்போக்கு, பிற்போக்குத் தனங்கள் உள்ளன என்பதை மறந்துவிட முடியாது. எந்தச் சமூகமாக இருந்தாலும், அந்தச் சமூகத்தில் முற்போக்காகச் செயல்படுபவர்களை நாம் அங்கீகரிக்க வேண்டும். நுட்பமான விஷயங்களில் மிகவும் நுட்பமாகவே செயல்பட வேண்டும் என்பதைப் பேராசிரியர் தெளிவுபடுத்தினார்.

தமிழ்நாட்டில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினரை இஸ்லாமியர்களின் பிரதிநிதிகளாகக் கருதலாமா?

அப்படிச் சொல்ல முடியாது. பிரதிநிதிகள் மாறிக்கொண்டே இருப்பார்கள். ஒரு சமூகத்தின் பிரச்சினைகளைப் பிரதிபலிக்கக்கூடிய சமூக அரசியல் அமைப்புதான் பிரதிநிதிகளாக இருக்க முடியும். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தங்களைப் பிரதிநிதியாக நினைத்தாலும் இஸ்லாமிய மக்கள் பிரச்சினைகளை அவர்கள் பிரதிபலித்தால் மட்டுமே அவர்களால் பிரதிநிதிகளாக இருக்க முடியும்.

Share the Article
Exit mobile version