Read in : English
வெற்றிமாறன் திரைப்படங்களில் அரசியல் உண்டு. அதிகாரத்தைப் பற்றி, அதன் வன்ம ஆட்டம் பற்றி, அதற்கெதிரான அரசியல் பற்றி அவரது திரைப்படங்கள் நிறைய நுண்மையாகவே பேசியிருக்கின்றன.
ஆடுகளத்தில் குருவிற்கும் சீடனுக்கும் இடையிலான ஓர் அதிகார அரசியல் பேசப்பட்டது. விசாரணை, சட்டம் மீறிய எதேச்சாதிகாரம் பற்றிய ஒரு விமர்சனம். வடசென்னை விளிம்புநிலை மக்களைச் சுரண்டியாளும் அரசியல் சக்திகளை வெளிப்படுத்தியது. ஆனால் இயக்குநர் வெற்றிமாறன், குறிப்பிட்ட அரசியல் சித்தாந்தங்களைப் பற்றியோ அல்லது காலத்திற்கேற்ற பிரச்சினைகள் பற்றியோ வெளிப்படையாகப் பேசியதில்லை.
ஆனால் பொன்னியின் செல்வனின் கொண்டாட்ட மனநிலை மாநிலமெங்கும் திருவிழா போல கொடிகட்டிப் பறக்கின்ற இந்த வேளையில் அவர் ஓர் எச்சரிக்கை மருந்தை அள்ளித் தெளித்திருக்கிறார். ஆச்சரியமக இருக்கிறது.
‘அவர்க’ளிடமிருந்து சினிமாவைத் திராவிட இயக்கம் கையில் எடுத்துக்கொண்டதன் விளைவால் தமிழ்நாடு மதச்சார்பற்ற மாநிலமாகவும் வெளியிலிருந்து வரும் பலவிதமான அழுத்தங்களைத் தாங்கிக்கொள்ளும் பக்குவத்துடனும் இருக்கிறது
வெற்றிமாறன் வார்த்தைகளுக்கு வேஷம் அணிவிப்பதில்லை. விசிக தலைவர் தொல்திருமாவளவின் 60-ஆவது பிறந்தநாள் மணிவிழாவில் அவர் இப்படிப் பேசியிருக்கிறார்: “கலை என்பதே அரசியல். இலக்கியம் சினிமா எல்லாம் ‘அவர்கள்’ கையில் இருந்தது. ‘அவர்க’ளிடமிருந்து சினிமாவைத் திராவிட இயக்கம் கையில் எடுத்துக்கொண்டதன் விளைவால் தமிழ்நாடு மதச்சார்பற்ற மாநிலமாகவும் வெளியிலிருந்து வரும் பலவிதமான அழுத்தங்களைத் தாங்கிக்கொள்ளும் பக்குவத்துடனும் இருக்கிறது. சினிமா வெகுமக்களை எளிதில் சென்றடையக்கூடிய ஒரு கலை வடிவம்.
சினிமாவை அரசியல்மயமாக்குவது மிக முக்கியம். திராவிட இயக்கம் சினிமாவைக் கையில் எடுத்த வேளையில் இலக்கியத்தில் கலை கலைக்காகத்தான் என்ற பேச்சு இருந்தது. கலை கலைக்காக என்பது முக்கியம்தான். ஆனாலும், மக்களிடமிருந்து விலகினால் எந்தக் கலையும் முழுமையடையாது.
ஏனெனில், மக்களுக்காகத்தான் கலை; மக்களைப் பிரதிபலிப்பதுதான் கலை. இந்தக் கலையைச் சரியாக இன்று நாம் கையாள வேண்டும். கையாளத் தவறினால் நமது அடையாளங்கள் பறிபோய்விடும். உதாரணமாக வள்ளுவருக்குக் காவி உடையுடுத்துவதாக இருக்கட்டும்; இராஜராஜ சோழன் ஒரு இந்து மன்னன் என்பதாக இருக்கட்டும் இது சினிமாவிலும் நடக்கும். நமது அடையாளங்களை நாம் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். நாம் அரசியல் தெளிவுடன் இருக்க வேண்டும். நாம் எல்லோரும் ஒன்றுசேர்ந்து செயல்பட வேண்டும். அப்படியான முயற்சிக்கு எனது ஆதரவு உண்டு.”
மேலும் படிக்க: பொன்னியின் செல்வன் பாகம் 1 வியப்பு!
இது நிச்சயமாய் ஒரு செயலுக்கான அழைப்பு. தமிழர்கள் அல்லது திராவிடர்களுக்கான அழைப்பு. இந்து அடையாளத்திற்கெதிராக, தமிழ் அடையாளத்தைக் காப்பதற்கு ஒன்றுபடுவதற்கான அழைப்பு. திரைப்படங்கள் உட்பட அனைத்து விசயங்களிலும் பிராமணர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்று சொன்னார் வெற்றிமாறன். பிராமண ஆதிக்கத்தை எதிர்க்கும் சமூக நீதி இலட்சியம் கொண்ட திராவிட அரசியல் சித்தாந்தத்தின் திறவுகோலாகத் திரைப்படங்கள் இருந்தன என்று அவர் கூறினார். திராவிடக் கோட்பாடு திரைப்பட உலகத்தை ஆள்கிறது; இல்லாவிட்டால் தமிழகச் சிந்தனைப் போக்கு வேறுமாதிரியாக மடைமாறிப் போயிருக்கும். இந்துத்வாவின் பிடிக்குள் தமிழ்த் திரைப்படக்கலை சிக்கியிருக்கும்; தமிழர்கள் தங்கள் அடையாளத்தை இழந்திருப்பார்கள் என்று அவர் ஆணித்தரமாகவே பேசியிருக்கிறார்.
அதே தமிழ் அடையாளப் பிரச்சினையைக் கையில் எடுத்திருக்கிறார் தெலங்கானா ஆளுநரும் (பாண்டிச்சேரி துணைநிலை ஆளுநர்), பாஜக தலைவர்களில் ஒருவருமான தமிழிசை செளந்தரராஜன். தமிழர்கள் தங்கள் அடையாளத்தை இழந்துவிடக் கூடாது என்று அவரும் சொல்லியிருக்கிறார். ஆனால் அவர் சொல்லும் தமிழ் அடையாளம் இந்து என்பதுதான். பாஜகவின் மற்றொரு தலைவரான எச். ராஜவும் எதிர்பார்த்தது போலவே இந்தப் பிரச்சினையில் தன்பாணியில் எதிர்வினையாற்றியிருக்கிறார். ராஜராஜ சோழன் இந்து இல்லை என்றால் அவர் என்னவாம்? நிச்சயமாக அந்தச் சோழச் சக்ரவர்த்தி கிறித்துவ தேவாலயத்தையோ, மசூதியையோ கட்டவில்லை என்று ராஜா கருத்து சொல்லியிருக்கிறார்.
நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் தன்பங்குக்கு ஒரு கருத்தைச் சொல்லியிருக்கிறார். சற்றுக் குழப்பமாகவே முடியும் அவரது வழமையான பாணியில் இல்லாமல், இந்தத் தடவை மிகத்தெளிவாகவே சொல்லிவிட்டார், ராஜராஜ சோழன் இந்துவா என்ற கேள்வியே பொருத்தமற்றது என்று. சோழர் காலத்தில் இந்து என்ற வார்த்தையே இல்லை என்று சொன்னார் கமல். ஆறுவிதமான வழிபாட்டு மரபுகளை அல்லது நம்பிக்கைகளை ஒன்றிணைத்து அவற்றை ஒரே குடையின் கீழ்கொண்டுவந்து ‘ஷண்மதம்’ என்று பெயரிட்டவர் ஆதிசங்கராச்சாரியர் என்பதைக் கமல் சுட்டிகாட்டியுள்ளார். இதன் மூலம் இந்து என்பது இப்போது ஒரு குடையின் திரட்ட உதவும் பதம் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.ஆனால் வேதங்களின் அதிகாரத்தைக் கேள்விகேட்ட பெளத்தமோ சமணமோ அந்த ஷண்மதத்தில் இடம்பெறவில்லை.
தமிழிசை செளந்தரராஜனும் தமிழர்கள் தங்கள் அடையாளத்தை இழந்துவிடக்கூடாது என்று சொல்லியிருக்கிறார். ஆனால் அவர் சொல்லும் தமிழ் அடையாளம் இந்து என்பதுதான்
இம்மாதிரியான விவாதத்தைப் பொன்னியின் செல்வன் கொளுத்திப் போட்டது தவிர்க்க முடியாதது. திரைப்படம் மாபெரும் வெற்றியை ஈட்டிவிட்டதால், அதன் பல்வேறு அம்சங்கள் தற்போது வியாக்கியானங்கள் பலவற்றைச் சந்திக்கின்றன. இன்மதியில் வெளிவந்த ஒரு விமர்சனம் ராஜராஜ சோழன் காலத்தில் வேதங்களும், பிராம்மணர்களும் ஆதிக்கம் செலுத்தியதைச் சுட்டிக் காட்டியது
சோழ சாம்ராஜ்யத்தில் வேதமந்திரங்களின் உச்சாடனம் சர்வசாதாரணம் என்பதைத் திரைப்படம் காட்டுகிறது. ஒருகாட்சியில் மதுராந்தகச் சோழர் பிராமணர்களையும் அவர்களின் வேதமந்திர கோஷங்களையும் முறைத்துப் பார்க்கிறார். விதித்திரமான பார்வையோடு அவர் நிற்கிறார். இயக்குநர் மணிரத்னமும், திரைக்கதை வசனகர்த்தா ஜெயமோகனும் சோழராஜ்ய சூழலை மீளுருவாக்கம் செயவதில் நேர்மையாகவே இருந்திருக்கிறார்கள். ஆனால் சோழப் பெருமிதத்தின், கீர்த்தியின் ஓர் அம்சமாக வேதங்களும் பிராமணர்களும் உண்டு என்ற சூட்சகமான உட்கருத்தாக்கம் வெளிப்படுகிறது.
தமிழர்களின் மதம் என்பது பிரமாண்டமான இந்துக் கருத்தியலின் ஓரங்கம் என்றே சங்க் பரிவார் அடிக்கடிச் சொல்லிவருகிறது. இராஜேந்திர சோழன் முடிசூட்டு நிகழ்வின் ஆயிரமாவது ஆண்டுவிழாவைக் குறிக்கும் முகமாக ஆர்எஸ்எஸ் 2016-ல் ஏற்பாடு செய்த ஓர் ஊர்வலம் பிரச்சினையில் முடிந்தது.
மேலும் படிக்க: பொன்னியின் செல்வன் ஒரு கதைப்படம்
இராஜராஜ சோழன் ஒரு சைவர். ஆனால் பெரும்பாலான அரசர்களைப் போல, அவர் மற்ற மதங்களையும் ஆதரித்தார். சிவன் கோயில்கள் மட்டுமல்ல, பெருமாள் கோயில்களையும், புத்தவிகாரையும் அவர் கட்டினார். அவரது மகள் குந்தவைக்கு சமணமதத் தொடர்பு இருந்தது என்று சொல்லும் ஆவணங்கள் உண்டு. திரைப்படம் சொல்வது போல, இராஜராஜன் வேத மரபுகளையும் ஆதரித்தார்.
கமல் சொன்னது போல, ஒருவேளை இராஜராஜனுக்குத் தான்ஒரு இந்து என்ற பிரக்ஞை இல்லாமல் போயிருக்கலாம். ஏனென்றால் அவர் காலத்தில் இந்து என்ற வார்த்தையே இல்லை. ஆனால் இராஜராஜனை ஒரு இந்து அரசன் என்று பாஜக சொந்தம் கொண்டாடுகிறது. திராவிடர்கள் அவரை ஒரு தமிழ்ப் பேரரசன் என்று சொந்தம் கொண்டாடுகிறார்கள்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் இராஜராஜன். அவரும் அவருடைய மகனும் சில சாதனைகள் படைத்திருக்கிறார்கள். இந்திய வியாபாரக் கப்பற்படைப் பயிற்சிக் கப்பல் பல ஆண்டுகளாக டி. எச். ராஜேந்திரன் என்றே அழைக்கப்பட்டது. ராஜேந்திரச் சோழருக்கான கெளரவம் அது.
இராஜராஜ சோழன் இந்துவா என்ற கேள்வி பொருத்தமற்றது. சோழர் காலத்தில் இந்து என்ற வார்த்தையே இல்லை என்று சொன்னார் கமல்
இன்றைய பாஜகவிற்கு இராஜராஜ சோழனின் சாதனைகள் ஓர் இந்து அரசனின் சாதனைகள்தான். ஆனால் திராவிடர்களுக்கு அவர் ஓர் அற்புதமான தமிழ்ப்பேரரசன்.
தமிழர்கள் வேதத்திற்கு அப்பாலானவர்கள்; பிராமணரல்லாதோர், அதனால் அவர்கள் தனியோர் இனம் என்று திராவிடச் சித்தாந்தவாதிகள் வாதிக்கின்றனர். திராவிடவியல் சித்தாந்தம் பாஜகவின் இந்துத்வாயையும், சமஸ்கிருத பிராமணமயமாதலையும் எதிர்க்கிறது.
இந்த மண்ணிலும் கால்பதித்து வேர்களை ஆழமாக ஊன்றப் பார்க்கிறது பாஜக. திராவிடக் கொள்கையாளர்கள் அதை பலமாக எதிர்க்கிறார்கள். வெற்றிமாறன் அதை உணர்ந்துகொண்டு காட்டமாகவே பொதுவெளியில் பேசியிருக்கிறார்.
Read in : English