Site icon இன்மதி

கர்மா தீர்ப்பில் இடம்பெறலாமா?

Read in : English

கர்மா கொள்கைப்படி, ஒரு போலீஸ்காரர் தனது மோசமான செயல்கள் எல்லாவற்றுக்குமான தண்டனைகளையும் அனுபவிக்கத் தேவையில்லை; ஒருசில நடத்தைகளுக்கான தண்டனைகளை அவர் அனுபவித்தால் போதும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை கூறியிருக்கிறது. இதன் மூலம் போலீஸ்காரர் ஒருவர் மீது பாய்ந்த காவல்துறை சார்ந்த பல்வேறு ஒழுங்கு நடவடிக்கைகள் பற்றிய கருணை கலந்த கண்ணோட்டத்தை உயர் நீதிமன்றம் வெளிப்படுத்தி இருக்கிறது.

இந்தத் தீர்ப்பை வழங்கிய நீதிபதி எஸ். ஸ்ரீமதி தனது கருத்திற்கு ஆதரவாகக் கர்மாக் கொள்கையை மேற்கோள் காட்டியுள்ளார். மனிதர்களின் எல்லாக் கெட்ட கர்மாக்களுக்கும் அவர்கள் கஷ்டப்பட வேண்டியதில்லை என்று சொல்கிறது கர்மாக் கொள்கை.

இந்தத் தீர்ப்புதான் தற்போது விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது. தனது தீர்ப்பில் ஒரு நீதிபதி தனது சொந்த நம்பிக்கைகளைக் கொண்டுவரக் கூடாது என்று சொல்லும் சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் கே.சந்துரு, கடுமையான ஒழுங்கமைப்பில் செயல்படும் காவல்துறையின் பணியிடமாறுதல் விதிகளுக்கு எதிராக அப்படியெல்லாம் தீர்ப்பளிக்கக் கூடாது என்று இன்மதியிடம் தனது கருத்தைப் பகிர்ந்துகொண்டார்.

ஒரு போலீஸ்காரர் தனது மோசமான செயல்கள்  எல்லாவற்றுக்குமான தண்டனைகளையும் அனுபவிக்கத் தேவையில்லை; ஒருசில நடத்தைகளுக்கான தண்டனைகளை அவர் அனுபவித்தால் போதும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை கூறியிருக்கிறது.

ஆர். ஸ்ரீமுருகன் 2003இல் ஒரு கான்ஸ்டபிளாகப் பணியில் சேர்ந்தார்; 2011இல் அவருக்குத் தலையில் அடிபட்டுக் காயம் ஏற்பட்டது. அதனால் மருத்துவப் பிரச்சினைகளோடு அவர் போராடினார். ஆனால், 2008இலிருந்தே பணி ஒழுங்கீனங்களுக்காக அவர் தண்டிக்கப்பட்டார். அடிக்கடி பணிக்கு வராமல் இருந்தார்; முன்னனுமதி இல்லாமல் பணியைத் தவிர்த்தார்; குறிப்பிட்ட பந்தோபஸ்து நிலையத்திற்குச் செல்லாமல் இருந்தார்; நீண்ட விடுமுறையில் சென்றார்; பின்பு மருத்துவக் குழுவின் முன் ஆஜராவதைத் தவிர்க்கும் பொருட்டு குறைந்தகால மருத்துவ விடுப்பைப் பெற்றுக்கொண்டார். 15 முறை இப்படி அவர் நடந்துகொண்டார். அதனால் அவர் 13 முறை தண்டிக்கப்பட்டார். ஒவ்வொரு முறையும் அவருக்கான ஊதிய உயர்வு பல ஆண்டுகளாகத் தள்ளிவைக்கப்பட்டது.

அதனால் ஸ்ரீமுருகன் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினார். இப்படி துறைசார் தண்டனைகள் தொடர்ந்து கொடுக்கப்பட்டால் தனது பணிஓய்வுக்காலத்தைத் தாண்டியும் அவை தொடரும் என்று வாதிட்டார் அவர். தண்டனைகள் ஏககாலத்தில் வழங்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. ஆனால், நீதிமன்ற உத்தரவைக் காவல்துறை நடைமுறைப்படுத்தவில்லை.

மேலும் படிக்க: தூத்துக்குடி: காவல்துறை அதிகாரியின் அனுபவங்கள்

இதற்கிடையில் துறைசார்ந்த தண்டனையாக ஸ்ரீமுருகன் 18 மாதங்களில் நான்கு தடவை பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இறுதியாக இந்த ஆண்டு ஆகஸ்டில் மதுரையிலிருந்து அவர் தூத்துக்குடிக்கு மாற்றப்பட்டார். அதனால் அவர் நீதிமன்றம் சென்றார். துறைசார்ந்த தண்டனைகளால் தனது மாதச் சம்பளம் ரூ.10,000-க்கும் கீழாகக் குறைந்துபோனது என்றும், அதே நேரம் தனது சகபணியாளர்களின் சம்பளம் ரூ.50,000-க்கும் மேலாக இருக்கிறது என்றும், அதனால் தன்னால் தூத்துக்குடிக்குச் செல்ல முடியாது என்றும் அவர் வாதிட்டார். மதுரைப் போக்குவரத்துத் துறைக்குத் தன்னை மீண்டும் பணிமாற்றம் செய்யும்படி அவர் கேட்டுக்கொண்டார்.

ஸ்ரீமுருகன் மூத்த அதிகாரிகளுக்கு எதிராகச் செயல்படுகிறார்; அவர்களது ஆணைகளை அவர் மதிப்பதில்லை; உதாரணமாக, புகார்களைப் பதிவு செய்யும் எழுத்தராகப் பணிபுரியும்போது அவர் மூத்த அதிகாரிகளின் சொல்படி நடந்ததில்லை; மேலும் துறையில் பணிபுரியும் இளைய ஊழியர்களிடம் தனது ஒழுங்கீனத்தையும், கீழ்ப்படியாமைக் குணத்தையும் பற்றிப் பெருமையாகப் பேசித் துறையில் குழப்பத்தை உண்டுபண்ணுகிறார் என்று காவல்துறை வாதிட்டது. தான் பணிபுரியும் நிலையத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவரை அவர் அலட்சியம் செய்தார்; அவர் பணியில் இருந்த நிலையங்களில் ஆய்வாளர்களைப் பற்றி அவதூறாகப் பேசினார். தகவல் அறியும் சட்டத்தின் மூலம் தகவல்கள் பெற்று அவற்றை வைத்துக் கொண்டு மூத்த அதிகாரிகளை அவர் எதிர்த்தார். சில பணியிட மாறுதல் ஆணைகளை அவர் போலியாகத் தயாரித்தார் என்ற குற்றச்சாட்டும் உண்டு. இப்படியாகக் காவல்துறை அவர்மீது கண்டனக் கணைகள் தொடுத்தது.

முன்னாள் நீதியரசர் கே.சந்துரு, “மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் நீதிபதி, பணியிட மாறுதல் விசயத்தில் ஒரு மோசமான காவல் ஊழியருக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்து பிராரப்த கர்மாவைப் பற்றிப் பேசியிருப்பது துரதிர்ஷ்டவசமானது” என்று கூறியிருக்கிறார்.

ஸ்ரீமுருகனின் கடந்தகால வரலாற்றை அவதானித்த உயர்நீதிமன்றம் அவருக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை பணிமாறுதல்களை விமர்சித்தது. அவர் மூத்த அதிகாரிகளுக்குக் கீழ்ப்படியவில்லை என்ற குற்றச்சாட்டு ‘தட்டையாகவும்’ ‘தெளிவில்லாமலும்’ இருக்கிறது என்று சொன்ன நீதிமன்றம், ‘குறிப்பிட்டுச் சொல்லப்பட்ட’ குற்றச்சாட்டுகள் எதுவுமில்லை என்று கூறியது. ஸ்ரீமுருகனின் வழக்கறிஞர் சமர்ப்பித்த சாட்சியத்தின்படி அவர்மீது வைக்கப்பட்ட மோசடிக் குற்றச்சாட்டு பொய் என்று சொன்னது நீதிமன்றம். ஸ்ரீமுருகனின் நிதிநிலை மோசமாக இருப்பதைக் குறிப்பிட்ட நீதிபதி எஸ்.ஸ்ரீமதி மீண்டும் அவரைப் பணிமாறுதல் செய்து மதுரைப் போக்குவரத்துக் கான்ஸ்டபிளாக நியமிக்கும்படி ஆணையிட்டார்.

தனது தீர்ப்புக்கு ஆதரவாக இந்துமதத் தத்துவம் சொல்லும் கர்மா சித்தாந்தத்தை நீதிபதி மேற்கோளாகக் காட்டினார். பலவித கர்மாக்களைப் பற்றிப் பேசும் அந்தச் சித்தாந்தம், முன்ஜென்மங்களிலிருந்து தொடர்ந்துவரும் நல்ல அல்லது தீய கர்மாக்களின் ஒட்டுமொத்தத் தொகை சஞ்சிதகர்மா என்கிறது. அதன் விளைவுகளை ஒருவர் ஏதோவொரு காலகட்டத்தில் அனுபவித்துத்தான் ஆக வேண்டும். இந்த ஜென்மத்தில் நாம் அனுபவிக்கும் கர்மா தவிர்க்கவியலாதது.

அது பிராரப்த கர்மா என்றழைக்கப்படுகிறது. இப்பிறப்பில் நாம் செய்யும் செயல்களால் சஞ்சித கர்மவினையின் மிச்சங்கள் சரிசெய்யப்படலாம். வேறுமாதிரியாகச் சொன்னால், பிராரப்த கர்மாவின் விளைவுகளை நாம் எதிர்கொள்ள வேண்டும். அவைதான் சஞ்சித கர்மாவின் ஓரங்கம். ஆனால், முழு சஞ்சிதக் கர்மாவின் விளைவுகளையும் அனுபவிக்க வேண்டிய அவசியமில்லை என்கிறது இந்துமதத் தத்துவம்.

மேலும் படிக்க: நேர்மை சாத்தியமா காவல் துறை பணியில்?

ஸ்ரீமுருகனின் நிதிநிலை மோசமாகிவிட்டது. அந்தத் தண்டனைதான் அவரின் பிராரப்தா கர்மா. அதுவே போதுமானது. ஆனால், அவருக்குப் பணிமாறுதல்கள் கொடுக்காமலிருப்பதுதான் நீதி. மதுரைப் போக்குவரத்துத் துறையிலே அவரைப் பணிசெய்ய அனுமதிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்த நீதிமதி ஸ்ரீமதி இனித் தகவலறியும் சட்ட மனுக்களைச் சமர்ப்பிக்கக் கூடாது என்றும் அவருக்கு ஆணையிட்டார்.

நீதியரசர் சந்துரு

இந்திய நீதிக்கட்டமைப்பு எந்தவொரு மதத்தின் புனிதநூலையும் உள்ளடக்கியதன்று; மேலும் அது கர்மா அல்லது ஆதிகால நியமத்தோடும் தொடர்புகொண்டதன்று. ஒரு நீதிபதி தன் சொந்த நம்பிக்கைகளிலிருந்தும் அனுபவங்களிலிருந்தும் மேற்கோள் காட்டக்கூடாது. இதை மீரட் வளர்ச்சி ஆணைய வழக்கில் உச்சநீதிமன்றம் தெளிவாகவே சொல்லியிருக்கிறது என்று முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு கூறினார். “மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் நீதிபதி, பணியிட மாறுதல் விசயத்தில் ஒரு மோசமான காவல் ஊழியருக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்து பிராரப்த கர்மாவைப் பற்றிப் பேசியிருப்பது துரதிர்ஷ்டவசமானது” என்று அவர் குறிப்பிட்டார்.

காவல்துறை என்பது ஒழுங்கும், நியதியும் கொண்டு உருவான பலமானதொரு கட்டமைப்பு. அதில் செயல்படுத்தப்படும் பணியிட மாறுதல் கொள்கை விசயத்தில் யாரும் தலையிடக் கூடாது என்று கருத்துத் தெரிவித்தார் சந்துரு. இந்த வழக்கில் தொடர்புள்ள போலீஸ்காரர் பலதடவை ஒழுங்கீனங்களில் ஈடுபட்டிருக்கிறார். அதனால்தான் அவரை மதுரையிலிருந்து தூத்துக்குடிக்கு மாற்றியிருக்கிறார்கள்.

அந்தப் பணிமாறுதல் ஆணையை ஒதுக்கிவிட்டு அவரை மதுரை போக்குவரத்துத் துறையிலே பணியமர்த்தும்படி நீதிமன்றம் ஆணையிட்டிருப்பது சட்ட வட்டாரங்களில் இதுவரை கேள்விப்படாத ஒரு விசயமாகும். மேலும், அந்தத் தீர்ப்புக்குக் கர்மாக் கொள்கையை நீதிபதி துணைக்கழைத்திருப்பது வழிதவறும் செயலாகும் என்று சந்துரு கூறினார்.

“ஆழமான விதிகளும் சட்டதிட்டங்களும் கொண்ட ஒரு துறையின் பணி விசயங்களில் தலையிடும் நீதிபதிகளின் செயல்பாடுகள் அதிகாரிகளுக்கு மனச்சோர்வை உண்டாக்கிவிடும். உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகக் காவல்துறை மேல்முறையீட்டு வழக்குத் தொடுத்திருக்க வேண்டும். அதுதான் உயர்நீதிமன்றக் கிளையின் பிராரப்தக் கர்மாவாகும்” என்று முடித்தார் முன்னாள் நீதிபதி சந்துரு.

Share the Article

Read in : English

Exit mobile version