Site icon இன்மதி

டெக்மதி: பிளிப்கார்ட்டின் ஓவர் ஸ்மார்ட்டான மொபைல் அப்கிரேட் திட்டம்!

Read in : English

இந்தியாவில் பிளிப்கார்ட் ஷாப்பிங் தளத்தை ஏராளமானோர் பயன்படுத்துகிறார்கள். பிளிப்கார்ட் ஷாப்பிங் தளத்தில் புதிதாக அறிமுகமான ஒரு திட்டம் அந்தத் தளத்துக்குப் பிரச்சினையை ஏற்படுத்தியிருக்கிறது. அந்தத் திட்டம் பிளிப்கார்ட் நிறுவனத்தின் ஸ்மார்ட் அப்கிரேட் திட்டம். இத்திட்டமானது, கூறியபடி வாடிக்கையாளர்களுக்குச் சலுகைகளை வழங்கவில்லை எனப் பயனர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

சலுகைகள், தள்ளுபடிகள், விற்பனை நாள்கள் என பிளிப்கார்ட், தனது தளத்தில் பதிவுசெய்திருக்கும் விற்பனையாளர்களின் தயாரிப்புகளைப் போட்டி போட்டு விற்கிறது. ஆனால், இந்தத் திட்டமானது சில நேரங்களில் வாடிக்கையாளர்களுக்குச் சாதகமாக அமைவதில்லை.

பிளிப்கார்ட் ஸ்மார்ட் அப்கிரேட் திட்டம்
இந்த அருமையான திட்டத்தை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்து, நிறுவனம் தன்னைப் பிரபலப்படுத்திக் கொண்டது. சலுகை நாள்களில் இந்தத் திட்டத்தில் பயனர்களுக்குக் கூடுதல் சலுகைகள் வழங்கப்படும். அதாவது பயனர்களின் எதிர்பார்க்காத தள்ளுபடிகள் எல்லாம் கிடைக்கும்.

சரியாகச் சொல்ல வேண்டும் என்றால், ரூ.32,000 மதிப்பிலான ஸ்மார்ட்போனைப் பல சலுகைகளுடன் பயனர்கள் ரூ.20,000க்கு வாங்க முடியும். இதில் ரூ.14,000 மட்டுமே செலுத்தி போனைப் பெறலாம். மீதமுள்ள ரூ.6,000 தொகையை ஒரு வருடம் கழித்துச் செலுத்த வேண்டும்.

பிளிப்கார்ட் நிறுவனத்தின் ஸ்மார்ட் அப்கிரேட் திட்டம். இத்திட்டமானது, கூறியபடி வாடிக்கையாளர்களுக்குச் சலுகைகளை வழங்கவில்லை எனப் பயனர்கள் புகார் தெரிவித்துள்ளனர்

ஒருவேளை வாங்கியவருக்கு போன் பிடிக்கவில்லையென்றால், போனை வாங்கும்போது செலுத்திய 14,000 ரூபாய்க்கே போனைத் திருப்பிக் கொடுத்துவிடலாம். திருப்பிக் கொடுத்துவிட்டு, ஒரு வருடத்திற்குள், கூடுதலாகப் பணம் செலுத்தியோ அதே விலைக்கோ புதிய போனை வாங்கிக் கொள்ளலாம். பார்க்க நல்ல திட்டம் மாதிரி தானே தெரிகிறது!

குவியும் புகார்கள்
ஆனால், இந்தத் திட்டத்தில் நான் மொபைல் வாங்கிய பின், 11 மாதங்கள் கழித்து போனை அப்கிரேட் செய்ய முற்பட்டபோதுதான் சமீபத்தில் பிரச்சினை எழுந்தது. ஆம், போனைத் திருப்பிச் செலுத்த தளத்தில் உள்ள “Smart Upgrade Plan” பகுதிக்குச் சென்றால், ஏதோ தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இதைத் தற்போது செய்ய முடியாது என்று திரையில் தோன்றியது.

ஒரு சில நாள்கள் கழித்து, மீண்டும் முயன்றால், இதே நிலை தான் தொடர்ந்தது. இதே போல மீதி பணத்தைச் செலுத்தலாம் என்று எண்ணினால் கூட அது முடியாமல் போகிறது. இப்படி இருக்கும் நிலையில், எந்த முன்னறிவிப்பும் இன்றி, போன் லாக் செய்யப்பட்டது.

இது குறித்து நான் மின்னஞ்சல் வழியாகப் புகார் அளித்தபோது, தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இது நிகழ்ந்துள்ளதாக பிளிப்கார்ட் பதிலளித்துள்ளது. கிட்டத்தட்ட ஒரு மாதங்கள் கழித்து போன் அன்லாக் செய்யப்பட்டது. இந்த நேரத்தில் நான் சந்தித்த உளவியல் ரீதியிலான பிரச்சினைகள் ஏராளம்.

மேலும் படிக்க: எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: தனிநபர் தரவுகளுக்குப் பாதுகாப்பில்லையா?

ஏன் இப்படி நடக்கிறது
எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால், நான் போனுக்குச் செலுத்திய தொகை ரூ.14,000 என்று வைத்துக் கொள்வோம். அதன் மதிப்பு ஒரு வருடத்திற்குப் பின், வாங்கிய விலையைவிடக் குறைந்திருந்தது. இதனை நாம் Cashify போன்ற தளங்களின் வாயிலாகத் தெரிந்துகொள்ளலாம். சந்தை மதிப்பைவிட போனின் விலை அதிகமாக இருப்பதால் பிளிப்கார்ட்டில் பதிவு செய்திருக்கும் விற்பனையாளருக்குப் போனைத் திரும்பப் பெற்றுக் கொள்வதால் எந்தப் பலனும் கிடைக்காது.

பேமெண்ட் செய்ய அனுமதிக்காமலும், புதிய போனுக்கு மாற விடாமலும் பார்த்துக்கொண்டது பிளிப்கார்ட்.  உளவியல் ரீதியில் பாதிப்பைத் தருவதாக இருந்தது பிளிப்காட்டின் அணுகுமுறை

இதன் காரணமாக, பேமெண்ட் செய்ய அனுமதிக்காமலும், புதிய போனுக்கு மாற விடாமலும் பார்த்துக்கொண்டது பிளிப்கார்ட். உளவியல் ரீதியில் பாதிப்பைத்தருவதாக இருந்தது பிளிப்காட்டின் அணுகுமுறை. தற்போது அனைத்துமே ஸ்மார்ட்போன் என்று உலகம் சுழன்று வரும் வேளையில், போன் லாக் செய்யப்பட்டதும், பயனர்கள் தங்களின் தரவுகளை நினைத்து அச்சப்படுகின்றனர். இதை நிறுவனம் பயன்படுத்திக்கொள்வதாகவே நான் எண்ணுகிறேன்.

இதனால் நானே அந்த போனைப் பயன்படுத்துவது என்ற தீர்க்கமான முடிவுக்கு வந்துவிட்டேன். இது குறித்த பல புகார்கள் consumercomplaint.com பக்கத்திலும் consumercomplaintscourt.com பக்கத்திலும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

பிளிப்கார்ட் நிறுவனம்
உள்நாட்டில் 2007ஆம் ஆண்டு சச்சின் பன்சால், பின்னி பன்சால் ஆகியோரால் தொடங்கப்பட்ட பிளிப்கார்ட் ஷாப்பிங் நிறுவனத்தின் தலைமையிடம் தற்போது சிங்கப்பூரில் செயல்பட்டு வருகிறது. 2018ஆம் ஆண்டில், நிறுவனத்தின் 77 விழுக்காடு பங்குகளை ரூ.1,07,650 கோடிக்கு அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம் வாங்கியது.

மேலும் படிக்க: மீண்டும் பள்ளிக்கூடம்: குழந்தைகளின் மன அழுத்தத்தைக் குறைக்குமா விளையாட்டுகள்?

இந்நிலையில் நிறுவனத்தின் 0.72 விழுக்காடு பங்குகளை சீனாவின் “டென்சென்ட்” நிறுவனம் வாங்கியது. நேரடியாகப் பங்குகளை வாங்காமல் தனது ஐரோப்பியப் பிரிவான டென்சென்ட் கிளவுட் யூரோப் (Tencent Cloud Europe BV) வாயிலாக வாங்கியுள்ளது.

இந்திய அரசு விதிகளின்படி இந்தியாவின் அண்டை நாடுகளில் இருந்து வரும் முதலீடுகள் அரசு ஆய்வுக்குட்பட்டவை. இதற்காக தனது ஐரோப்பியப் பிரிவு வாயிலாக டென்சென்ட் நிறுவனம் ஃப்ளிப்கார்ட் பங்குகளை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share the Article

Read in : English

Exit mobile version