Site icon இன்மதி

ஒரு கிராமத்தின் முதல் பட்டதாரி சௌமியா!

Read in : English

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக கே.நந்தகுமார் இருந்தபோது சிறப்பாகப் படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்காகத் தொடங்கப்பட்ட எலைட் பள்ளியில் (தற்போது அரசு மாதிரிப் பள்ளி) படித்த ஜி. சௌமியா (23) தனது விடா முயற்சியால் பொறியியல் பட்டதாரியான பிறகு, அரசு மாதிரிப் பள்ளி மாணவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டி வழிகாட்டும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.

உயர்கல்வி படிப்பதற்காக பெண் குழந்தைகளை வெளியூருக்கு அனுப்ப விரும்பாத ராமநாதபுரம் மாவட்டம் தாமரை ஊரணி கிராமத்திலேயே இவர்தான் முதல் பட்டதாரி.  அதுவும் பொறியியல் பட்டதாரி.

அவர் சென்னையில் குரோம்பேட்டை எம்ஐடியில் பி.இ. கம்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் படித்ததைப் பார்த்து இந்தக் கிராமத்திலிருந்து இரண்டு மூன்று பெண் குழந்தைகள் வெளியூர்களில் கல்லூரியில் சேர்ந்து படித்து வருகிறார்கள்.

ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் ஊராட்சியில் உள்ளது தாமரை ஊரணி சிறிய கிராமம். அங்கு 50 வீடுகளே உள்ளன. அந்த ஊரில் பள்ளி இல்லை; மருத்துவமனை வசதி இல்லை. ஒன்றிரண்டு பெட்டிக்கடைகள்தான் உள்ளன. மற்றபடி அனைத்தையும் வாங்குவதற்கு ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பனைக்குளத்துக்கு நடந்து சென்றுவர வேண்டும். அந்தக் கிராமத்தில் உள்ள விளிம்பு நிலைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஜி. சௌமியா.

ஒன்றாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை நான்தான் பள்ளியில் முதல் மாணவி. 2014ஆம் ஆண்டு பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் 500க்கு 476 மதிப்பெண்கள் பெற்று பள்ளியிலேயே முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றேன்

அவருடைய அப்பா கோவிந்தராஜ் கொத்தனார் வேலை செய்கிறார். அம்மா ராஜேஸ்வரி, பழம் காய்கறி விற்பார். அத்துடன் வீட்டைக் கவனித்துக்கொள்வார். இவர்கள் இருவரும் பள்ளிப் படிப்பைப் பார்த்திராதவர்கள். சௌமியாவின் அக்கா இருவருக்கும் குடும்ப சூழ்நிலையால் சிறிய வயதிலேயே திருமணமாகிவிட்டது. தங்கை காவ்யா பிசிஏ படிப்பைப் படித்துவிட்டுத் தற்போது சென்னையில் தங்கி வேலை தேடி வருகிறார்.

சௌமியா பள்ளியில் படிக்கும் போது தனது தாய் ராஜேஸ்வருடன்

சிறிய கிராமத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்த சௌமியா, அந்தக் கிராமத்தின் முதல் பட்டதாரியானது குறித்த தனது வாழ்க்கைக் கதையை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்:

எங்களது ஊரில் பள்ளிக்கூடம் கிடையாது. ஊருக்கு அருகில் உள்ள புதுவலசையில் உள்ள அரசுப் பள்ளியில்தான் ஒன்றாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்தேன். ஊரிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள அந்தப் பள்ளிக்கு நடந்துதான் போக வேண்டும்.

மேலும் படிக்க: மாநகராட்சிப் பள்ளி மாணவியின் மன உறுதி: அன்று பலசரக்குக் கடை தொழிலாளியின் மகள், இன்று சாப்ட்வேர் என்ஜினியர்!

அம்மாவுக்கு உடல் நலம் சரியில்லை. எனது அக்காக்களுக்குத் திருமணம் ஆகும்வரை அவர்கள் சமையல் வேலைகளையும் வீட்டு வேலைகளையும் பார்த்துக்கொண்டார்கள். பிறகு, ஏழாம் வகுப்பு படிக்கும்போதிலிருந்து வீட்டு வேலைகளையும் சமையல் வேலையும் நான்தான் பார்த்தேன். அதனால், பள்ளிக்கூடம் போய்விட்டு வந்தாலும், இரவில் படிக்க அவ்வளவாக நேரம் இருக்காது. காலையில் நான்கு மணிக்கு எழுந்து பாடங்களைப் படிப்பேன். பிறகு காலையில் வீட்டில் சமைத்துச் சாப்பிட்டுவிட்டு நானும் என் தங்கையும் பள்ளிக்குச் செல்வோம்.

நன்றாகப் படித்தால்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்று நம்பினேன். அதனால் பள்ளியில் படிக்கும்போதே நன்றாகப் படிப்பேன். விளையாட்டிலும் நல்ல ஆர்வம் உண்டு. குண்டு எறிதலில் மண்டல அளவில் விளையாடி இரண்டாவது பரிசு பெற்றிருக்கிறேன். பள்ளியில் படிக்கும்போது என்னுடைய ஆசிரியர்கள் குணரத்தினம், அழகேசன், திருமுருகன் ஆகியோர் எனது படிப்பில் அக்கறை காட்டினார்கள். அதனால், என்னால் நன்கு படிக்க முடிந்தது.

ஒன்றாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்புவரை நான்தான் பள்ளியில் முதல் மாணவி. 2014ஆம் ஆண்டு பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் 500க்கு 476 மதிப்பெண்கள் பெற்று பள்ளியிலேயே முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றேன்.

எங்களது ஊரில் பெண் குழந்தைகள் பத்தாவது படித்துவிட்டாலே திருமணம் செய்து கொடுத்துவிடுவார்கள். தான் படிக்காவிட்டாலும், என்னை எப்படியாவது படிக்க வைத்துவிட வேண்டும் என்பதில் எனது அம்மா தீவிர அக்கறை காட்டினார்.

பள்ளியில் முதலிடம் பிடித்ததால், சிறந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்காக ராமநாதபுரத்தில் நடத்தப்படும் அரசு மாதிரிப் பள்ளியில் பதினோறாம் வகுப்பில் சேர்ந்து படிக்க வாய்ப்புக் கிடைத்தது. அங்கு உயிரியல், கணிதம், வேதியியல், இயற்பியல் ஆகிய பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்தேன். பள்ளி விடுதியில் தங்கிப் படித்தேன்

கேம்பஸ் இன்டர்வியூ மூலம் இ2 இன்போசிஸ்டம் என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினியர் வேலை கிடைத்தது. அங்கு ஓராண்டு அந்த வேலையில் இருந்தேன். அதன் பிறகு, எனது வேலையை விட்டுவிட்டு பள்ளிக் கல்வித் துறையில் புராஜக்ட் மேனேஜ்மெண்ட் யூனிட்டில் சேர்ந்தேன்

மாதிரிப் பள்ளியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த நவநீதகிருஷ்ணன் சார்தான் எனக்குக் கணிதப் பாடங்களை நன்றாகச் சொல்லிக்கொடுத்து எனது சந்தேகங்களைத் தீர்த்துவைப்பார். விலங்கியல் ஆசிரியர் ஆறுமுகம் சார் எனக்கு நம்பிக்கையூட்டுவார். அந்தப் பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் தங்களது குழந்தைகளைப் போல எங்கள் மீது அக்கறை செலுத்திப் பாடங்களை நன்றாகச் சொல்லிக்கொடுப்பார்கள். பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று, எப்படியாவது கல்லூரியில் சேர்ந்து படித்துவிட வேண்டும் என்று உற்சாகமூட்டுவார்கள்.

2016ஆம் ஆண்டு பிளஸ் டூ தேர்வில் 1200க்கு 1141 மதிப்பெண்கள் பெற்றேன். இயற்பியல் 191 மதிப்பெண்களும் கணிதம், வேதியியல் ஆகிய பாடங்களில் 200க்கு 200 மதிப்பெண்களும் கிடைத்தன. பொறியியல் படிப்புக்கான எனது கட் ஆஃப் மதிப்பெண்கள் 198. மருத்துவப் படிப்பில் சேர விண்ணப்பிக்கவில்லை. திருச்சி வேளாண் கல்லூரியில் சேர இடம்கிடைத்தது. ஆனால், அதில் நான் சேரவில்லை. பொறியியல் கவுன்சலிங் மூலம், சென்னை குரோம்பேட்டை எம்ஐடியில் பிஇ கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் என்ஜினியரிங் படிப்பில் சேர இடம் கிடைத்தது.

மேலும் படிக்க: குரலற்றவர்களின் குரல்: முதுநிலைப் பட்டம் பெற்ற பெட்ட குறும்பர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த முதல் பெண்!

எங்கள் ஊரிலிருந்து பெண் குழந்தைகளை வெளியூருக்குக் கல்லூரியில் படிக்க அனுப்பிவைத்தது கிடையாது. அத்துடன், கல்லூரியில் படிக்க வைக்கச் செலவு என்பதால் குடும்பத்தினர் என்னைக் கல்லூரியில் சேர்த்துப் படிக்க வைக்கத் தயங்கினார்கள். இந்த வேளையில் படிப்புச் செலவை ஏற்றுக்கொள்வதாகத் தமிழக அரசின் அறிவிப்பு வந்தது. அதைத் தொடர்ந்து நான் சென்னையில் பொறியியல் பட்டப் படிப்பில் சேர்ந்தேன்.

இரண்டு ஆண்டுகள் அந்தக் கல்வி உதவி கிடைத்தது. ஆனால், அதன் பிறகு எனக்கு அந்தக் கல்வி உதவித் தொகை கிடைக்கவில்லை. முதல் தலைமுறைப் பட்டதாரி என்பதால் படிப்புக் கட்டணம் இல்லை. ஆனால், இதரக் கட்டணங்களும், விடுதிக் கட்டணமும் செலுத்த வேண்டியதிருந்தன. வங்கியில் கல்விக்கடன் பெறவும் முடியவில்லை. அதனால், அப்பா ஊரில் வட்டிக்குக் கடன் வாங்கிக் கொடுத்தார்.

முதுநிலைப் படிப்பைப் படிக்க வேண்டும் என்று ஆசை. அதுவும்  வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகத்தில் படிக்க வேண்டும். அதற்குக் கல்வி உதவித் தொகையோ, வாய்ப்பு வசதிகளோ கிடைக்குமா என்று பார்க்க வேண்டும்

அதை வைத்துக்கொண்டு கல்லூரியில் படிப்பைத் தொடர்ந்தேன். இதற்கிடையே, எனது அம்மாவின் இதய நோய் சிகிச்சைக்கு அதிகச் செலவு ஆனது. எனவே, மேலும் கடன் வாங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இறுதியாண்டு முடித்த நேரத்தில்தான் வர வேண்டிய உதவித் தொகை கிடைத்தது. அந்தப் பணத்தை எனது படிப்புச் செலவுக்கு வாங்கிய கடனை அடைக்கப் பயன்படுத்தினோம்.

நன்றாகப் படித்தால்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்று நம்பினேன். அதனால் பள்ளியில் படிக்கும்போதே நன்றாகப் படிப்பேன்.

தமிழ் வழியில் படித்த எனக்கு கல்லூரியில் சேர்ந்ததும், ஆங்கிலத்தில் வகுப்பு நடத்தியது புரியவில்லை. இங்கிலீஷ் மீடியத்தில் படித்த எனது அறை மாணவிகளும், சக மாணவிகளும் எனக்குப் பாடங்களைப் புரிய வைத்தார்கள். படிப்படியாக ஆங்கிலத்தில் நடத்தும் பாடங்களைப் புரிந்து கொள்ள ஆரம்பித்தேன். 2020இல் பிஇ படிப்பில் 80 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றேன். கேம்பஸ் இன்டர்வியூ மூலம் இ2 இன்போசிஸ்டம் என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினியர் வேலை கிடைத்தது. அங்கு ஓராண்டு அந்த வேலையில் இருந்தேன். அதன் பிறகு, எனது வேலையை விட்டுவிட்டு பள்ளிக் கல்வித் துறையில் புராஜக்ட் மேனேஜ்மெண்ட் யூனிட்டில் சேர்ந்தேன்.

பல்வேறு இடங்களில் உள்ள அரசு மாதிரி பள்ளி மாணவிகளிடம் பேசி அவர்களுக்குத் தன்னம்பிக்கையூட்டி வழிகாட்டும் பணிகளைச் செய்து வருகிறேன். அவர்களது படிப்புத் திறன் தகவல்களை கம்ப்யூட்டர் மூலம் தொகுத்து ஆய்வு செய்யும் பணிகளையும் செய்வேன். மாதிரி பள்ளிகளில் படித்த முன்னாள் மாணவர்கள் சங்கப் பணிகளையும் பார்த்துக் கொள்கிறேன்.

நான் கல்லூரியில் படித்து நல்ல வேலையில் சேர்ந்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று விரும்பிய எனது அம்மா ராஜேஸ்வரி இப்போது இல்லையே என்ற வருத்தம் உள்ளது.

முதுநிலைப் படிப்பைப் படிக்க வேண்டும் என்று ஆசை. அதுவும்  வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகத்தில் படிக்க வேண்டும். அதற்கு கல்வி உதவித் தொகையோ, வாய்ப்பு வசதிகளோ கிடைக்குமா என்று பார்க்க வேண்டும் என்று நம்பிக்கையோடு பேசுகிறார் விளிம்பு நிலை குடும்பத்தைச் சேர்ந்த முதல் தலைமுறை பட்டதாரி சௌமியா.

Share the Article

Read in : English

Exit mobile version