Read in : English
திரையரங்குகளில் ரசிகர்கள் ஒரு திரைப்படத்தைக் கொண்டாடும்போது, படத்தின் அம்சங்களை விமர்சகர்கள் ஆராய்வதுண்டு. சாதிகளைச் சிதைக்கும் சமத்துவத்தையோ மத நல்லிணக்கத்தையோ அப்பழுக்கற்ற மனிதநேயத்தையோ பெண்களைச் சகியாகப் பாவிப்பதையோ ரசிகர்கள் கூக்குரலிட்டு வரவேற்கும்போது மனம் ஆனந்தக் கூத்தாடும். இந்தப் பூமியில் உள்ள, பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிர்களும் சமம் என்று சில படங்கள் சொல்லியிருக்கின்றன. மிகச்சில படங்கள் மனநலக் குறைபாடுள்ளவர்களையும் முதிர்ச்சியற்றவர்களையும் சக மனிதர்களாக ஏற்பதில் இருக்கும் தடைகளை உடைத்திருக்கின்றன. அந்த வகையில், விக்ரம் மனநலக் குறைபாடு கொண்ட வேடமேற்று நடித்திருக்கும் ‘கோப்ரா’வும் திரையரங்குகளைத் திருவிழாக் கோலம் பூணச் செய்திருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சியான விஷயம்.
திரைக்கதையில் குழப்பம்!
ஏழைக் குழந்தைகளை, ஆதரவற்ற மாணவர்களைத் தேடிச் சென்று பாடம் நடத்துபவர் மதியழகன் (விக்ரம்). கல்லூரி ஆசிரியை பாவனா (ஸ்ரீநிதி), இவரை உருகி உருகிக் காதலிக்கிறார். ஆனால், மதியோ விருப்பமிருந்தும் அவரது காதலை ஏற்க மறுக்கிறார்.
ஒருபக்கம் கணித ஆசிரியராக மாணவர்களை ஈர்க்கும் மதி, இன்னொரு பக்கம் மிகத்திறன் வாய்ந்த கணிதக் கணிப்புகளின் அடிப்படையில் கொலை செய்யும் ஒரு குற்றவாளி எனத் திகழ்கிறார் விக்ரம். கொல்கத்தாவில் இருக்கும் நெல்லையப்பன் (கே.எஸ்.ரவிக்குமார்) என்பவர் தரும் வேலைகளை மிக ரகசியமாக உலகம் முழுக்கப் பறந்து பறந்து செய்துவருகிறார்.
ஒடிசா முதலமைச்சர், ஸ்காட்லாந்து நாட்டு இளவரசர் என்று சில பிரபலங்கள் மதியால் கொல்லப்பட, இண்டர்போல் பார்வை இவ்வழக்குகளின் மீது விழுகிறது. பாவனாவின் கீழ் ஆய்வு மேற்கொள்ளும் மாணவி ஜுடித் (மீனாட்சி), அந்தக் கொலையாளி கண்டிப்பாகக் கணிதத்தில் நிபுணத்துவம் கொண்டிருக்க வேண்டும் என்று இண்டர்போலுக்குக் கடிதம் எழுதுகிறார். அதன் அடிப்படையில், இண்டர்போல் அதிகாரி அஸ்லம் (இர்பான் பதான்) குழுவிலும் இணைகிறார்.
படத் தலைப்பின் வடிவமைப்பில் கோப்ரா எனும் எழுத்தைச் சுற்றி இருக்கும் பாம்புக்கு இரண்டு தலைகள் இருக்குமே தவிர வால் இருக்காது. இப்படத்தின் முக்கிய முடிச்சும் அதுவே.
இந்த நிலையில், ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் கொல்லப்படப் போவதாக ஒரு தகவல் கிடைக்கிறது. அதனை அனுப்பியவர் ஒரு ஹேக்கர். நெல்லையப்பனை மட்டுமல்லாமல், அந்தக் கொலைகளுக்கு காரணமான கார்ப்பரேட் நிறுவன அதிபர் ரிஷியையும் (ரோஷன் மேத்யூ) அவர் அம்பலப்படுத்துகிறார். இதனால் ஆத்திரத்தின் உச்சத்திற்குச் செல்லும் ரிஷி, தன்னைக் குறித்த உண்மைகளை அறிந்த அனைவரையும் கொல்ல முடிவெடுக்கிறார்.
இதற்குள் ரஷ்யப் பாதுகாப்புப் படைத் தளத்தை ‘ஹேக்’ செய்து, மதியழகன் ரஷ்யாவுக்கு வந்திருக்கும் தகவலை அந்த ஹேக்கர் மீண்டும் உறுதிப்படுத்துகிறார். இதையடுத்து, மதியழகன் சதியை முறியடிக்கும் முயற்சிகளில் இறங்குகிறார் அஸ்லம். அதில் அவர் வெற்றிபெற்றாரா? அந்த ஹேக்கர் மதியழகனை மாட்டிவிட ஏன் முயல்கிறார்? மதியழகனின் மனதில் உறைந்து கிடக்கும் உண்மை என்ன? ரிஷியின் கோர முகத்தை இந்த உலகம் அறிந்துகொண்டதா என்பவற்றை அறிந்துகொள்ள நீங்கள் கட்டாயம் ‘கோப்ரா’வைப் பார்த்தாக வேண்டும்.
இக்கதையில் மதியழகனுக்கு ஜூடித் வைத்த பெயர்தான் ‘கோப்ரா’. அதாகப்பட்டது, கணிதத்தைத் துல்லியமாகச் செயல்படுத்தும் ஒரு மேதைக்கு அவர் சூட்டிய புகழாரமே அது. படத் தலைப்பின் வடிவமைப்பில் கோப்ரா எனும் எழுத்தைச் சுற்றி இருக்கும் பாம்புக்கு இரண்டு தலைகள் இருக்குமே தவிர வால் இருக்காது. இப்படத்தின் முக்கிய முடிச்சும் அதுவே. சரியாகச் சொன்னால், அந்த இடத்தில்தான் இடைவேளை வருகிறது. ஆனால், அதன்பிறகான மீதிப்பாதிதான் நம்மைக் குழப்பத்தில் தள்ளுகிறது. அதற்கான முதல் காரணம், நீளம் கருதிச் சில காட்சிகள் வெட்டப்பட்டதுதான்.
திரைக்கதையின் எந்தெந்த இடங்களை, நாயக பாத்திரத்தின் எந்தெந்த அம்சங்களைத் தாங்கிப் பிடிக்க வேண்டுமென்பதில் இயக்குநர் அஜய் ஞானமுத்து தடுமாறியிருப்பது இன்னொரு காரணம். இதனால், அட்டகாசமான ஆக்ஷன் த்ரில்லராக வந்திருக்க வேண்டிய ‘கோப்ரா’ பாதிக்கிணறு தாண்டும்போதே சரிந்திருக்கிறது.
நாயகனின் மனநலக் கோளாறு!
’
கோப்ரா’வில் விக்ரம் தவிர்த்து ஸ்ரீநிதி, மீனாட்சி கோவிந்தராஜன், ரேணுகா, ரோபோ சங்கர், கே.எஸ்.ரவிக்குமார், ஆனந்தராஜ், மியா ஜார்ஜ் உட்பட இரண்டு டஜன் நடிகர்கள் திரையில் தோன்றுகின்றனர். இவர்களில் மிருணாளினி – சர்ஜூனா காலித் ஜோடியின் காதல் காட்சிகள் நம்மைக் கவர்கின்றன. இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதானுக்குப் பெரிய வேடமில்லை என்றாலும், அவர் வரும் காட்சிகள் அபத்தமாக இல்லாதது ஆறுதல்.
மனநிலைப் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறோம் என்பதை உணர்ந்து அதனை அனுமதிக்கும் நபராக வருகிறார் விக்ரம். இந்த அம்சம்தான், கோப்ராவை வித்தியாசப்படுத்துகிறது.
ரோஷன் மேத்யூ மலையாளத்தில் சில படங்களில் நடித்திருக்கிறார் என்றாலும், தமிழில் முதன்முறையாக அறிமுகமாகியிருக்கிறார். அவரது சைக்கோத்தனம் கலந்த வில்லத்தனம் தமிழ் சினிமாவுக்கு நிச்சயம் புதிதன்று.
அதேநேரத்தில், இதில் நாயகனாக நடித்திருக்கும் விக்ரமின் தைரியத்தையும் பாராட்ட வேண்டும். ஏனென்றால், ஷங்கரின் ‘அந்நியன்’ படத்திலும் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களாகத் தன்னை கற்பனை செய்துகொள்ளும் ‘மல்டி பெர்சனாலிட்டி டிசார்ட’ருக்கு ஆளானவராக நடித்திருப்பார். பாலாவின் ‘பிதாமகன்’ படத்தில் சமூகத்திலிருந்து விலக்கப்பட்டவராகவும், ‘தெய்வத் திருமகள்’ படத்தில் மூளை வளர்ச்சி குன்றியவராகவும் நடித்திருப்பார். இதில் ‘சீஸோப்ரெனியா’ வந்தவராகத் தோன்றியிருக்கிறார். கிட்டத்தட்ட கமல் நடித்த ‘ஆளவந்தான்’ படத்திலும், தனுஷ் நடித்த ‘3’ படத்திலும் இது போன்ற காட்சிகள் உண்டு. ஆனால், அவை போலல்லாமல் இப்படத்தில் விக்ரம் ஏற்ற பாத்திரம் அதனை ப்ளஸ் பாயிண்டாக கருதுவது போல் காட்டியிருக்கிறார் இயக்குநர் அஜய் ஞானமுத்து (இக்காட்சியும் கூட ஏதோ ஓர் உலகப் படத்தின் காப்பி என்று பேச்சு கிளம்பியிருக்கிறது).
அதாவது, மனநிலைப் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறோம் என்பதை உணர்ந்து அதனை அனுமதிக்கும் நபராக வருகிறார் விக்ரம். இந்த அம்சம்தான், கோப்ராவை வித்தியாசப்படுத்துகிறது. ஆதலால், மதியழகன் எனும் நாயக பாத்திரத்தோடு அதன் மனதில் தோன்றும் மாய பாத்திரங்களும் சேர்ந்தே திரையில் தோன்றுகின்றன. அதாவது, அப்பாத்திரங்கள் என்ன சொல்கின்றனவோ செய்கின்றனவோ அதையே விக்ரமும் பிரதிபலிப்பார். ‘காஞ்சனா’வில் இதையே ‘பேய் பார்முலா’வுக்குள் அடக்கியிருப்பார் ராகவா லாரன்ஸ். இதில், அக்காட்சி மனநலம் குன்றிய ஒருவரின் மனக்கற்பனையாகக் காட்டப்பட்டிருக்கிறது.
இவற்றில் விக்ரமோடு சேர்ந்து நம் கைத்தட்டலை அள்ளும் இன்னொருவர் ஆனந்தராஜ். ’உலகத்துலயே ஒரு வில்லனை காப்பாத்துற கதாநாயகன் நீதாம்பா’ என்று அவர் பேசும் வசனம் அதற்கோர் உதாரணம். ஆனால், விக்ரமின் மனதில் இப்பாத்திரங்கள் ஏன் இப்படியொரு தாக்கத்தைக் கொண்டிருக்கின்றன என்பதற்கான காரண காரியங்களை விளக்கும் காட்சிகளைத் தவறவிட்டிருக்கிறது திரைக்கதை. இதுவே படத்தின் பெரிய பலவீனம்.
பலவீனமான எழுத்தாக்கம்!
தொழில்நுட்ப அம்சங்களைப் பொறுத்தவரை புதுமுக ஒளிப்பதிவாளர் ஹரீஷ் கண்ணன், படத்தொகுப்பாளர்கள் புவன் ஸ்ரீனிவாசன் – ஜான் ஆபிரகாம், தயாரிப்பு வடிவமைப்பாளர்கள் அமரன் மற்றும் ரவி பாண்டியனின் உழைப்பு பிரமிக்க வைக்கிறது. ஒரு பிரம்மாண்ட படத்தைப் பார்க்கும் உணர்வைத் தர முயன்றிருக்கிறது படக்குழு. ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை அதற்கு வலுச்சேர்த்திருக்கிறது. ஆனால், பாடல்கள் அந்தத் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
அஜய் ஞானமுத்து எழுத்தாக்கத்தில் பலரது கூட்டுழைப்பை பயன்படுத்தியிருக்கிறார். ஆனாலும், மதியழகன் எனும் பாத்திரத்தின் முழு வடிவம் கிடைக்கப் பெறாமல் பார்வையாளர்கள் தடுமாறியிருக்கின்றனர். அதனால் மொத்தப்படமும் பலவீனமாகத் தோன்றுகிறது. போலவே, வில்லன் ரிஷி தனது ஆலையை விரிவுபடுத்த நினைப்பதையும் திரைக்கதை முழுதாகச் சொல்லவில்லை. மதியழகனின் தாய் பாசத்தைக் கூட விலாவாரியாகக் காட்டவில்லை. இவையனைத்தும் சேர்ந்து விஸ்வரூபமெடுக்கும்போது உண்டாகும் அயர்ச்சியைத் தணிப்பது விக்ரமின் அபார நடிப்புத்திறன் மட்டுமே.
இறுதியாக, படம் முடிந்து வெளியே வருகையில் ‘விக்ரம் நல்லா நடிச்சிருக்காருப்பா’ என்று மட்டுமே சொல்ல முடிகிறது. அப்படிப்பட்டவர்களும் மீண்டும் ஒருமுறை இப்படத்தைப் பார்க்கத் தயாராக இருக்க மாட்டார்கள். வெறுமனே படத்தின் நீளம் மட்டுமே அதற்குக் காரணம் என்று சொல்ல முடியாது. சமீபத்தில் வந்த ‘கேஜிஎஃப்2’, ’விக்ரம்’ ஆகியவை கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஓடிய படங்கள்தாம். அவை திரும்பத் திரும்ப ரசிகர்களால் கண்டு களிக்கப்பட்டு வசூலை அள்ளின.
இனிவரும் படங்களிலாவது தான் திரையில் தோன்றும் விதம், நடிப்பைக் கொட்டுவதற்கான வாய்ப்பு, ஹீரோயிசம் காட்டும் இடங்கள் போன்றவற்றை மட்டும் பாராமல் ஒட்டுமொத்தத் திரைக்கதையும் சீராக இருக்கிறதா என்பதை விக்ரம் கவனிக்க வேண்டும். அதோடு, வயதாவதைக் காட்டிக் கொடுக்கும் முகச்சுருக்கங்களுக்கு ஏற்ற கதையையும் தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லாவிட்டால், கோப்ரா போன்று சுமாரான வெற்றிகளே அவரைத் தேடி வரும்!
Read in : English