Site icon இன்மதி

சைவ உணவுப் பழக்கம் கொண்ட இஸ்லாமிய வேட்டைக்காரர்

வள்ளலாரின் திருவருட்பா பாடலொன்றால் ஈர்க்கப்பட்ட டாக்டர் ஹுசைன் தாவர உணவுக்கு மாறினார்; வெஜிடேரியன் காங்கிரஸ் அமைப்பிலும் இணைந்து செயல்படுகிறார்.

Read in : English

உணவுப் பழக்கம் குறித்த விவாதத்துக்குத் தமிழகத்தில் நீண்ட பாரம்பரியம் உண்டு. வாழும் சூழலும், பாரம்பரிய உற்பத்தி முறையுமே உணவுப் பழக்கத்துக்கு அடிப்படையாக உள்ளது. தாவர உணவுதான் சிறந்தது என விவாதம் புரிவோர் பலர் உண்டு. வெஜிட்டேரியன் காங்கிரஸ் போன்ற அமைப்புகள், தாவர உணவை முன்னிலைப்படுத்தி பிரசாரம் செய்து வருகின்றன.

உணவுப் பழக்கம் பல நேரத்தில், குறிப்பிட்டவகை உணவு உண்ணும் இனங்களை இழிவுபடுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. அது தீவிர வெறுப்புடன் வெளிப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் உடலுக்கு ஏற்ற வகை உணவு என்ற கருத்தாக்கமும் வலுத்துவருகிறது.

எவ்வளவு பிரசாரம் செய்தாலும், ஒருவரின் உணவுப் பழக்கத்தை மாற்றுவது அவ்வளவு எளிதானது அல்ல. குறிப்பாக அசைவ உணவு உண்பவரை, தாவர உணவுப் பழக்கத்துக்கு மாற்றுவது இயலாத செயல். உடல்ரீதியாகப் பாதிப்பு போன்ற காரணங்கள் இருந்தால் அன்றி, கருத்துரீதியாக உணவுப் பழக்கத்தை மாற்றுவோர் மிகவும் குறைவு.

அதிலும், உணர்வு ரீதியாக உணவுப் பழக்கத்தை மாற்றிப் பின்பற்றுவோரை காணவே முடியாது. கருத்து ரீதியாக, தாவர உணவுப் பழக்கத்தைத் தேர்வு செய்து கடைப்பிடித்து வருபவர் மூத்த டாக்டர் எம்.ஏ.ஹுசைன். அருட்பிரகாச வள்ளலார் கருத்துகளில் ஈடுபாடு கொண்டு இந்த மாற்றத்தை ஏற்றவர்.

கருத்து ரீதியாக, தாவர உணவுப் பழக்கத்தைத் தேர்வு செய்து கடைப்பிடித்து வருபவர் மூத்த டாக்டர் எம்.ஏ.ஹுசைன். அருட்பிரகாச வள்ளலார் கருத்துகளில் ஈடுபாடு கொண்டு இந்த மாற்றத்தை ஏற்றவர்

உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொண்டது குறித்து, அவருடனான உரையாடல்…

கேள்வி: உங்கள் குடும்பத்தில் என்ன வகையான உணவுப் பழக்கம் பின்பற்றப்பட்டது?

ஹுசைன்: சிறுவனாக இருந்தபோது எங்கள் குடும்பத்தில், அசைவ உணவுப் பழக்கம்தான் கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால், எல்லாவகை மாமிசங்களையும் உணவாகக் கொள்வதில்லை. பலவற்றை, ஹராம் என ஒதுக்குவார்கள்.

எனக்கு அப்படி எதுவும் இல்லை; எல்லா வகை மாமிசங்களையும் புசிக்கும் பழக்கம்தான் இருந்தது. 13 வயதிலே வேட்டையாடச் செல்வேன். உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்திருந்தேன். என்னைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். வேட்டையில் ஒன்றும் கிடைக்காவிட்டால் பூனையைகூட விட்டு வைக்க மாட்டோம். அப்படி வெறியுடன், வேட்டையாடி திரிந்தவன் நான்.

கேள்வி: முழுக்க தாவர உணவை மட்டும் இப்போது எடுக்கிறீர்கள். வெஜிட்டேரியன் காங்கிரஸ் போன்ற உலகளாவிய அமைப்புகளில் பொறுப்புடன் இயங்குகிறீர்கள். இந்த மாற்றம் எப்படி ஏற்பட்டது?

ஹுசைன்: வீட்டில் பெரிய நூலகம் உண்டு. என் தந்தை காலத்தில் இருந்தே உள்ளது. பல சமய நூல்களும் அதில் உள்ளன. அவற்றைப் படிக்கும் பழக்கம் சிறு வயதில் எனக்கு அறவே இல்லை. எப்போதும் வேட்டை, அடிதடி, வம்பு எனச் சுற்றித் திரிந்தேன். என் தந்தை முகமது மைதீன், இஸ்லாம் மார்க்கத்தில் மவுலவியாக இருந்தார். ஒருநாள் அப்பாவின் குருநாதர் வீட்டுக்கு வந்தார். மிகவும் முதிர்ந்த வயதுடைய அவர், மிகவும் திடகாத்திரமாக இருந்தார்.

அடாவடியாகச் சுற்றித்திரிந்த என்னை அழைத்து, ‘குளிக்க வேண்டும்… கிணற்றில் இருந்து நீர் எடுத்து ஊற்றுகிறாயா…’ என்று கேட்டார். ஒப்புக் கொண்டேன். கிணற்றடியில் அமர்ந்தார். வாளியில் தண்ணீரை எடுத்து ஊற்றிக்கொண்டே இருந்தேன். நீண்ட நேரமாகத் தண்ணீரை இறைத்து ஊற்றிக்கொண்டே இருந்ததால் என் கை, உடல் எல்லாம் வலித்தது. அவரும் நிறுத்தச் சொல்லவில்லை.

வாக்கு கொடுத்துவிட்டதால், வலியைப் பொறுத்துக்கொண்டு நீர் இறைத்து ஊற்றினேன். நீண்ட நேரத்துக்குப் பின் குளியலை முடித்தார். பின், கண்ணாடி அலமாரிக்குள் இருந்த ஒரு புத்தகத்தை கொம்பால் சுட்டிக்காட்டி எடுக்கச் சொன்னார். வெள்ளை அட்டையுடன் ஒரு புத்தகத்தை எடுத்துக் கொடுத்தேன்.

அத்துடன் என்னை விட்டுவிடுவார் என எண்ணி, தப்பிக்க நினைத்தேன். சிரித்தபடியே அருகில் அழைத்து, அந்தப் புத்தகத்தில் குறிப்பிட்ட பக்கத்தில் கொம்பை நுழைத்து விரித்துப் படிக்கச் சொன்னார். விதியே என எண்ணிப் படித்தேன். அதில் ஒரே பாடலைப் பலமுறை வாசிக்கச் சொன்னார். வாசித்தேன். என் அப்படிச் சொல்கிறார் என்று புரியவில்லை.

அப்போது, பொருள் புரிந்து படிக்கச் சொல்கிறாரோ என்ற எண்ணம் என் மனதில் ஓடியது. அதன்படி, அந்தப் பாடலின் பொருளை மனதில் வாங்கிப் படித்தேன். அது, கொல்லாமையை வலியுறுத்தும் திருவருட்பா பாடல். அதை மீண்டும் மீண்டும் படித்தபோது, என்னையே குற்றம் சாட்டுவதாக உணர்ந்தேன்.

‘துணிந்து உயிர்களைக் கொல்பவன் கொடியவன்’ என்று என்னைச் சுட்டிக்காட்டியது. இது குறித்து என் தந்தையிடம் கேட்டேன். அந்தப் பாடலில் குறிப்பிட்டுள்ள பொருள் சரியானதுதான் என்றார்.

மேலும் படிக்க:

ஆயுர்வேதத்தில் பக்திக்குப் பதில் பகுத்தறிவைக் கொண்டுவந்தவர் சரகர்

பிட்னெஸ் மேனியா: அபரிமிதமான உடற்பயிற்சி உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்துமா?

அப்படியானால்… குடும்பத்தில் அந்த உணவுப் பழக்கம் தானே நிலவுகிறது என்று கேட்டேன். அது வழிவழியாக வந்தது என்றார். அப்படி வந்தவர்களை, நம்மைப் போன்றவர்களைத்தானே இந்தப் பாடல் சுட்டிக்காட்டுகிறது என்றேன். ஒப்புக்கொண்டதுடன், ‘அது பற்றிக் கேள்வி கேட்கும் தகுதி எனக்கு இல்லை…’ எனச் சுட்டிக்காட்டினார்.

அது, எனக்குள் கடும் கேள்வியை எழுப்பியது. உயிரினங்களைக் கொன்று தின்பதால்தானே கேள்வி கேட்கும் உரிமை எனக்கு இல்லை என உணர்ந்து, அன்றே வேட்டைப் பழக்கத்தையும், அசைவ உணவுப் பழக்கத்தையும் விட்டேன். துப்பாக்கியையும், துாண்டிலையும் திரும்ப ஒப்படைத்துவிட்டேன்.

எல்லா வகை மாமிசங்களையும் புசிக்கும் பழக்கம்தான் இருந்தது. 13 வயதிலே வேட்டையாடச் செல்வேன். உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்திருந்தேன். அப்படி வெறியுடன், வேட்டையாடி திரிந்தவன் நான்

ஆனால், என் தந்தை என் மாற்றத்தை நம்பவில்லை. என் செயல்களைக் கண்காணித்தார். அதனால் வீம்பு கொண்டு, தாவர உணவுப் பழக்கத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டேன். கிட்டத்தட்ட, 53 ஆண்டுகளாக அதையே கடைப்பிடிப்பதுடன், அது தொடர்பாகப் பிரசாரமும் செய்து வருகிறேன்.

கேள்வி: குடும்பத்தில் இருந்த அசைவ உணவுப் பழக்கம் உங்களுக்கு இடையூறாக இல்லையா…

ஹுசைன்: நான் அசைவ உணவுப் பழக்கத்தை விட்டதை முழுமையாக நம்பியவுடன், தந்தையும் குடும்பத்தில் மாற்றம் கொண்டு வந்தார். அசைவ உணவு சமைக்கும் பாத்திரங்களைக் கடையில் போட்டு, புதிய பாத்திரம் வாங்கித் தாவர உணவு சமைக்கும் வழக்கத்தை அமல்படுத்தினார். அது தொடர்கிறது.

இவ்வாறு கூறிய டாக்டர் ஹுசைன், சித்த மருத்துவத்தை முறையாகக் கற்றுத் தேர்ந்தவர். மருத்துவம் தொடர்பாக ஆய்வுகள் செய்து வருகிறார். திருவிதாங்கூர் அரசின் மருத்துவப் பாரம்பரியக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், தமிழ் ஞான இலக்கியங்களான திருவருட்பா, திருமந்திரம், திருவாசகம், திருக்குறள் போன்றவற்றில் முழுமையான அறிவுபெற்றவர். அது சார்ந்த பல்லாயிரம் சொற்பொழிவுகளை, உலகில் 68 நாடுகளில் நிகழ்த்தியுள்ளார். வள்ளலார் கருத்தின் வழி வாழ்கிறார்.

Share the Article

Read in : English

Exit mobile version