Site icon இன்மதி

மேகதாது அணைக்கட்டு உபரிநீரைச் சேமிக்குமா?

காவிரி நீர் முதலில் தங்களுக்கே உரிமையானது என கர்நாடகா நினைக்கிறது என்று கருதும் தமிழக விவசாயிகளிடையே மேகதாது அணைத் திட்டம் பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read in : English

காவிரியில் இந்த ஆண்டு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது; ஆறு நிரம்பி உபரிநீர் கடலுக்குச் செல்கிறது. ஆகவே, மேகதாது அணைக்கட்டு முலம் உபரி நீரைச் சேமிக்க இயலும் என்று பெங்களூரு, மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களில் பேசப்படுகிறது. இதற்குச் சான்றாகச் சில புள்ளிவிவரங்களும் சுட்டிக்காட்டப்படுகிறது.

காவிரி நடுவர் மன்றம் 2013 ஆம் ஆண்டு வழங்கிய நீர்ப் பங்கீடு தொடர்பான தீர்ப்பு, அதாவது 740 டிஎம்சி நீரை நான்கு மாநிலங்களிடையே பகிர்தல் குறித்த தீர்ப்பு, ஆண்டுதோறும், மழைப் பொழிவுக்கேற்ப, மாறக்கூடியது. 38 ஆண்டுகாலமாக ஒவ்வோர் ஆண்டிலும் காவிரி நீர் எவ்வளவு கிடைத்தது என்பதைக் கணக்கில் கொண்டு இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. மேலும், இது 15 ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகக் கூடியது.

ஆண்டுக்கு ஆண்டு நீரின் அளவு மாறுபடும்போது, நீர்ப் பங்கீடு தொடர்பாக ஏதாவது தகராறு ஏற்பட்டால் நீதிமன்றத்தில் முறையிட்டுத் தகராறைத் தீர்த்துக்கொள்ளலாம் என்று தீர்ப்பு குறிப்பிட்டது.

2018 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட இறுதித் தீர்ப்பின்படி, நீர்ப் படுகையிலிருந்து கிடைக்கும் 740 டிஎம்சி தண்ணீரில், தமிழகத்துக்கு 404.25 டிஎம்சி, கர்நாடகாவுக்கு 284.75, கேரளாவுக்கு 30 டிஎம்சி, புதுச்சேரிக்கு 7 டிஎம்சி எனப் பிரித்தளிக்கப்பட்டது.

தற்போது காவிரியிலிருந்து வெள்ளநீர் உபரியாக வங்கக் கடலில் கலப்பதைக் காரணம் காட்டி, மேகதாதுவில் 9,000 கோடி மதிப்பில்  67 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட அணை கட்ட  முன்மொழியப்பட்டுள்ளது

தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கூட்டுப் பங்கான 177.25 டிஎம்சியை கர்நாடகா ஒவ்வோர் ஆண்டும் மாதத் தவணையாக திறந்துவிட வேண்டும்.

தற்போது காவிரியிலிருந்து வெள்ளநீர் உபரியாக வங்கக் கடலில் கலப்பதைக் காரணம் காட்டி, மேகதாதுவில் 9,000 கோடி மதிப்பில் 67 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட அணைக்கட்டு ஒன்றைக் கட்டியெழுப்ப முடிவுசெய்யப்பட்டுள்ளது.

செழிப்பான பருவமழை
தென்மேற்குப் பருவக்காற்று மேற்குக் கடற்கரையைப் பகுதியில் வீசும்போது, கிடைக்கும் மழையால், மேற்குத் தொடர்ச்சி மலையின் கீழைப் பகுதிகளில் உள்ள அணைகள் நிரம்பி வழிகின்றன.

தமிழகத்தில், குறிப்பாக காவிரி டெல்டா பகுதிகள் மழை மறைவுப் பிரதேசமென்பதால் கோடைக்காலத்தில் நீராதாரங்கள் வறண்டுபோய் நீருக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்படுவது இயல்பு.

உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் படி, மாதவாரியாக திறக்கப்பட வேண்டிய நீர்க் கொள்ளளவில், மூன்றில் இரண்டு பங்கு, அதாவது 123 டி.எம்.சி. நீர் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதத்திற்குள், மடையிலிருந்து திறக்கப்பட வேண்டும். கோடையின் முதல் பயிரான குறுவை அதைத் தொடர்ந்து தாளடி, ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து வடகிழக்குப் பருவ மழைக்காலப் பயிரான சம்பா நடவு செய்யப்படுகிறது.

புதிய அணைக்கட்டு எழுப்பப்படும் பட்சத்தில், கர்நாடகா அரசு அதிகமான நீரைச் சேமித்துவைக்கக்கூடும். தற்போதைய நீரைவிடக் குறைவாகவே நீரைத் திறந்துவிடும் எனக் காவிரி டெல்டா விவசாயிகள் நலச் சங்கத்தின் தொழில்நுட்ப ஆலோசகர் எம்.நடராஜன் கருதுகிறார்.

அவர் கூறியதாவது, “மேகதாது அணைக்கட்டு, ஸ்டான்லியின் கொள்ளளவில் முக்கால் பங்கு (67 டி.எம்.சி) கொண்டது. சரிவர நீர் வரத்தை உறுதி செய்யாத நிலையில், இதுவே நமது டெல்டா விவசாயத்துக்கும் அதை நம்பியிருக்கும் பொருளாதாரத்துக்கும் பெரும்பாதிப்பை ஏற்படுத்தும். ”

தமிழகத்தில், குறிப்பாகக் காவிரி டெல்டா பகுதிகள்  மழை மறைவுப் பிரதேசமென்பதால் கோடைக்காலத்தில் நீராதாரங்கள் வறண்டுபோய் நீருக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்படுவது இயல்பு

நடுவர்மன்றத் தீர்ப்பை அமல்படுத்துவதில் கர்நாடகாவின் மெத்தனப்போக்கைக் குறிப்பிட்ட நடராஜன், “2018ஆம் ஆண்டு முதல், பருவமழை பொய்க்காததால், இரு மாநிலங்களுக்கு இடையே நீர்ப் பங்கீட்டில் பெரிய பிரச்சினைகள் ஏற்படவில்லை. இல்லையேல் அவர்கள் தங்கள் கொள்ளளவிற்குச் சேமித்து, அதன் பின்னரே தண்ணீரை மேட்டூருக்கு வழங்குவார்கள்.

கடந்த காலத்தில், அரை டி.எம்.சி.டி.க்கு, நாங்கள் முதல்வரைச் சந்தித்து, பின்னர் பிரதமரைச் சந்தித்து, அவர்களுக்கு ஒன்றியத்திலிருந்து அழுத்தம் கொடுக்க வேண்டியிருந்தது. இதில் மற்றொரு அணையை எழுப்ப நினைப்பதால், இந்தச் செய்தி தமிழக விவசாயிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நீர் ஆண்டிற்கான நீர்த்தேக்கங்களின் நீர்வரத்து அளவு குறித்த சமீபத்திய மத்திய நீர் ஆணையத்தின் அறிக்கையின்படி, நடப்பு ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் இரண்டாவது வாரம் வரை, தமிழகத்திற்கு ஏற்கெனவே 248.05 டிஎம்சி – அதாவது 56.7 டிஎம்சி என நிர்ணயிக்கப்பட்டதைவிட 191.3 டிஎம்சி என்றளவில் – அதிகமாக நீர் கிடைத்துள்ளது.

“காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளின் இரு முனைகளிலும் மழை பெய்ததால், 500 டிஎம்சியை உபரியாக எதிர்பார்க்கலாம். மற்றபடி எந்த ஒரு ஆண்டிலும் , உபரி நீர் இருந்ததில்லை. கடந்த 15 முதல் 20 ஆண்டுகளில் உள்ள நீரளவை நோக்கினால் உபரி நீர் வரத்து இல்லை என்பதே நிதர்சனம். சில சமயங்களில், உபரி நீர் மேட்டூரை மட்டுமே அடையும், அதுபின்னர் டெல்டாவின் கடைமடைப் பகுதியை அடைந்து பின்னர் கடலுக்குச் செல்ல வேண்டும் ”என்று தமிழக காவிரி விவசாய சங்கத்தின் பொதுச்செயலாளர் P.R.பாண்டியன் கூறினார்.

மேலும் படிக்க:

மேகதாது அணை: கர்நாடகத்தின் பார்வை என்ன?

மேட்டூர் அணை நீரைப் பாதுகாக்க வேண்டாமா?

கடந்த பத்தாண்டுகளில் 2013, 2014, 2018 மற்றும் 2019 ஆகிய நான்கு ஆண்டுகளில் தமிழ்நாடு அதன் பங்கை விட அதிகமாகப் பெற்றுள்ளது.

கனமழை பெய்யும் காலங்களில் உபரி என்பது மிகவும் இயல்பானது எனக் கருதும் எம்.நடராஜன் கூறுவதாவது, “இதுவரை, 1991 முதல் 2005 வரை, அதிக மழை பெய்து, கிட்டத்தட்ட 1,500 டிஎம்சி நீர் கடலுக்குச் சென்றிருக்கும். மொத்த நீரின் கொள்ளளவு நிலையானது அல்ல, அது ஆண்டுதோறும் மாறும், மேலும் 40லிருந்து 50 ஆண்டுகள் வரை ஒரு நிலையில் இருக்கலாம். மழையின் அளவைப் பொறுத்து ஓட்டத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும்.”

உச்சநீதிமன்றம் பெங்களூரு நகர் பகுதியை முழுவதுமாகக் கணக்கில் கொண்டு, 4.75 டிஎம்சி அடியை வழங்கியது (முன்பு, காவிரி தீர்ப்பாயம் நகரத்தின் 1/3 பகுதியை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டது) மற்றும் கீழ் காவிரி நிலப்பரப்பில், அதாவது தமிழகத்தில், நிலத்தடி நீர்ப் பாசனத்தை மாற்றாகக் கருதி, தமிழகத்திடம் இருந்து 10 டிஎம்சி நீரளவைக் குறைத்துக்கொண்டது.

ஆனால், நிலத்தடி நீர் காவிரிப் படுகையைச் சார்ந்துள்ளது. ஏனெனில், நிலத்தடி நீரோட்டங்கள் மூலம் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்ப நதி நீரே காரணமாக அமைகிறது.

உபரியின் முக்கியப் பங்கு என்ன?
உபரி எனும் கருத்தாக்கத்தின் மீதான பிழையை சுட்டி, சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனப் பேராசிரியர் ஜனகராஜன் இன்மதியிடம் கூறியதாவது, “ஒரு நதியின் ஓட்டத்தை உபரியென்று அடையாளப்படுத்துவது தவறாகும். ஒரு நதியில் உபரி நீர் என்பதே கிடையாது. நதி நீர் கடலை அடைய வேண்டும், அதுவே அதன் சிறப்பும் தனித்தன்மையுமாகும். இது இயற்கையானது, ஏனெனில் கடலின் அமிலத்தன்மையைக் குறைக்க நதிநீரே வழிவகுக்கும்.”

“இது யாருக்கு உபரி, தமிழ்நாட்டுக்கா, கர்நாடகத்திற்கா , அல்லது காவிரி நதிக்கா என்பதுதான் கேள்வி. நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட ஓட்டம் அதிகமாக இருப்பதால், அது உபரியாகுமா?”- இவ்வாறு அவர் கூறினார்.

நீர்த்தேக்கம், அணைக்கட்டு, தடுப்பணை மற்றும் பிற கட்டமைப்புகளின் கட்டுமானங்கள் ஆற்றின் வேகத்தைக் குறைக்கின்றன. தொழில்மயமாக்கல் காரணமாக ஏற்படும் மாசுபாடு காரணமாகவும் ஆறு என்பது வெறும் நீர் சேமிப்புக் கிடங்காகத் தோற்றம் கொள்கின்றன. மேலும், உப்புகளும் கனிமங்களும் நீரில் அதிகரித்துவருகின்றன.

ஆற்றுப் படுகைகளைக் கவனித்துவரும் நீரியல் வல்லுநர்கள், பருவநிலை மாற்றம் போன்ற சூழலில், பெரிய அணைகள் தீர்வைத் தராது என்று கருதுகின்றனர். அதிகப்படியான மழை, திடீர் வறட்சி, அதிகரித்து வரும் வெப்பநிலை ஆகியவற்றின் பின்னணியில், அணைகளின் ஆயுளையும் அவற்றைக் கட்ட ஆகும் செலவுகளையும் கருத்தில் கொண்டு, பெரிய நீர்த்தேக்கங்கள் உதவாது என்று அவர்கள் கருதுகின்றனர்.

பாசன நீரின் தேவை அதிகரித்து வருவதை நாம் இன்னும் கண்டுகொள்ளவில்லை என்று எச்சரிக்கிறார், பின்லாந்தின் ஊலு பல்கலைக்கழகத்தின் நீரியல் நிபுணர்- முதுகலைப் பட்டதாரி ஆனந்தரூபன் பஞ்சநாதன், “அதிக மழை முன்கூட்டியே கணித்துவிட முடியும், ஆனால் வறட்சியை நம்மால் கணிக்க இயலாது, அது நம்மை அறியாமல் நேர்ந்துவிடும். முதலில் வளிமண்டல வறட்சியும் அதைத் தொடர்ந்து நீர் சேமிப்பு வறட்சியும் இருக்கும், பிறகு அது விவசாய வறட்சியாக இருக்கும். இம்மாதிரி நேரத்தில் பெரிய அணைகள் தண்ணீர் பிரச்சினையிலிருந்து நம்மைக் காப்பாற்றாது.”

காவிரி ஆற்றுப் படுகையின் குறுக்கே கட்டப்பட்ட நீர்த்தேக்கங்களின் மொத்தக் கொள்ளளவு 310 டிஎம்சி ஆகும், இது 740 டிஎம்சி எனும் ஆண்டுக் கொள்ளளவில் சுமார் 42% ஆகும்.

நீர் ஆண்டில் எந்த நேரத்திலும் (நீர் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி மே மாதம் முடிவடைகிறது), நீர்த்தேக்கங்கள் அதிகபட்சமாக 300 டிஎம்சியை வைத்திருக்க முடியும். வெறும் 67 டிஎம்சி சேர்த்தால் பாசனத் தேவைக்குத் தீர்வாக இருக்காது, அது எதிர்காலத்தில் போதாது.

பெரிய கட்டுமானங்களைச் சார்ந்திருப்பதற்குப் பதிலாக, உள்ளூர் அளவிலான நீர் நிலை மாற்றங்களை ஆனந்தரூபன் முன்வைக்கிறார். “பெரிய அணைகள் இருந்தாலும் கூட, பெருகிவரும் மக்கள்தொகை மற்றும் நீர்ப்பாசன வசதி ஆகியவற்றின் ஒட்டுமொத்த தேவைகளை அனுசரிக்கக் கூடிய ஆற்றல் அவற்றுக்கு இல்லை.

பெரும் அணைகளின் சேமிப்புத் திறனுக்கு ஒரு உச்ச வரம்பு உள்ளது. கிராம அளவில் சிறிய அளவிலான நீர்நிலைகள், ஏரிகள், குளங்கள், நீர்த்தேக்கங்கள் போன்றவற்றைக் கட்டுவதை ஊக்குவிக்க வேண்டும்.”

வடிகால் அமைப்பைப் பலப்படுத்துவதன் மூலம், சிறிய நீர்நிலைகளை இணைப்பதன் மூலம், டெல்டா முழுவதும் மேற்பரப்புக் கொள்ளளவை 1000 டிஎம்சி அதிகரிக்க முடியும் எனக் கூறப்படுகிறது.

Share the Article

Read in : English

Exit mobile version