Site icon இன்மதி

சல்மான் ருஷ்டி: மாயமும் யதார்த்தமும்

Read in : English

மாய யதார்த்தவாதப் புதினத்தில் மாயமே அடிக்கடி கணிசமான அளவில் நிஜமாக இருக்கிறது. அந்த வகைப் படைப்புகளில் உலவும் பாத்திரங்கள் பல கேலிச்சித்திரங்களாகவும் சில வழமையாகவும் இருக்கும். ஆனால் உண்டு உயிர்த்து உரையாடி உலவும் மனித யதார்த்தத்தின் பிரதிநிதிகள்தான் அவர்கள்.

மாயம் என்பது புத்தகங்களில் மட்டுமே நிகழ்ந்தது; மாய யதார்த்தவாதம் என்னும் புதியதோர் இலக்கிய வகையை 1960-களிலும், 1970-களிலும் அகிலம் முழுவதும் அலையாகக் கிளப்பிவிட்ட இலத்தீன் அமெரிக்கா எழுத்தாளர்களின் வாழ்க்கையில் அந்த மாயமந்திரம் நிகழவில்லை. ’ஒரு நூற்றாண்டுத் தனிமை’யின் பிரம்மாவான கொலம்பிய எழுத்தாளர் கார்சியா காப்ரியேல் மார்க்வெஸ் கடுமையான ஒரு இடதுசாரிக் கொள்கையாளர்; கொஞ்சம் ஃபிடல் காஸ்ட்ரோ ரசிகரும் கூட.

ஆனால் இது இந்தியா. சுதந்திர இந்தியாவின் கதையை இந்தியாவின் சொந்த மாயமந்திர பாரம்பரிய மரபின் மூலமாகவே விதந்தோதிய ஒரு விற்பன்னர் ஓர் அபத்தமிக்க வெறியனால் அவலமாகத் தாக்கப்பட்டிருக்கிறார், இந்தியா தனது 75-ஆவது சுதந்திர ஆண்டைக் கொண்டாடிய காலகட்டத்தில்.

இந்தியா என்றாலே வறுமை; கொள்ளைநோய்கள்; மற்றும் காந்தி என்று கருதப்பட்ட காலகட்டத்தில் இந்தியாவை உலக இலக்கிய அரங்கிற்குக் கொண்டு சேர்த்தவர் சர் அகமத் சல்மான் ருஷ்டி. நம்பமுடியாத கதைகள், தொன்மங்கள், பயங்கரங்கள் ஆகியவற்றோடு, அழுக்கு, பேரோசைகள், பலவண்ணங்கள், சொல்லவொண்ணாச் சோதனைகள் இவற்றின் மத்தியில் இயல்பாக இருக்கும் ஓர் பேரழகையும் சுமந்துகொண்டு ஒரு ‘கிச்சடி’ கலவையாக இருந்த இந்தியாவை தனது புதினத்தில் படம்பிடித்துக் காட்டியவர் சல்மான் ருஷ்டி.

அவரது கலையுச்சப் படைப்பான ‘நள்ளிரவின் குழந்தைகள்’, இந்தியர்கள் அதிகமாகப் பயணம் செய்யாத காலத்தில், அதனால் இந்தியாவின் பிறபகுதிகளை ஒரு மாயமந்திரப் பிரதேசமாகவே அவர்கள் அவதானித்திருந்த காலத்தில், இந்தியாவை ஓர் அணுவுக்குள் அடைத்து அதை இந்தியர்களுக்குத் திறந்து காட்டியது. மாயமந்திரத்தால் மட்டுமே சாத்தியப்படக்கூடிய பிரமிப்பான சூழல்களை, சம்பவக்கோர்வைகளை தன்புதினத்தில் ருஷ்டி அடுக்கிவைத்திருந்தார். அவை இந்திய நிஜத்தைப் பற்றிய ஒற்றைப் பரிமாண கண்ணோட்டங்களை கேள்விக்குள்ளாக்கின.

இந்தியா என்றாலே வறுமை; கொள்ளைநோய்கள்; மற்றும் காந்தி என்று கருதப்பட்ட காலகட்டத்தில் இந்தியாவை உலக இலக்கிய அரங்கிற்குக் கொண்டு சேர்த்தவர் சர் அகமத் சல்மான் ருஷ்டி

இந்தியாவில் கிசுகிசுக்கப்பட்ட புரளிகள்தான் ‘நள்ளிரவுக் குழந்தைகளை’ முன்னெடுத்துச் சென்றன. இந்தியா சுதந்திரம் அடைந்த கணத்தில் பிறந்த சலீம் சினை ஒரு முஸ்லீம்; ஆனால் நிஜத்தில் இந்து. இல்லை; இல்லை. ஓர் ஆங்கிலேய தகப்பனுக்கும், ஊர்ஊராய்ச் சுற்றிய ஒரு தாய்க்கும் பிறந்த ஒரு கலவைக் குழந்தை. அதனால் ருஷ்டியின் புதினக் கதாநாயகன் எல்லோருக்குமான பிரதிநிதி; அதே சமயம் அவன் யாராகவும் இல்லை. இந்தியாவின் நிஜமான பிரதிநிதி சாத்தியமே இல்லாத ஒரு பாத்திரமாகத்தான் இருக்க முடியும்.

கவனம், கவனம்! இங்கே கொஞ்சம் உள்குத்தைக் கவனியுங்கள்! ஷேக் அப்துல்லாவின் அப்பா நிஜத்தில் அரேபியா லாரன்ஸ் என்றவொரு பேச்சு காஷ்மீரில் இருந்தது. அரேபியர்களின் மத்தியில் ஆங்கிலேய சாம்ராஜ்யத்தை அவர் கட்டமைத்துக் கொண்டிருந்த போது சற்று ஓய்வு தேவைப்பட்டது அவருக்கு. அதனால் அவர் காஷ்மீரில் கொஞ்சகாலத்தைக் கழித்தார். ஷேக் அப்துல்லா மகனின் தந்தை ஜவஹர்லால் நேரு என்னும் ஒரு இந்துதான். இப்படியான பொறுப்பற்ற கிசுகிசுப்புகளை அடிப்படையாகக் கொண்டது ‘நள்ளிரவின் குழந்தைகள்.’

மேலும் படிக்க:

அரசியல் தலைவர்களின் நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள்

பெண் எழுத்து: தேவதாசி எழுதி, தேவதாசி வெளியிட்ட, தடை செய்யப்பட்ட புத்தகம்!

ஒரே கணத்தில் பிறந்த சலீமும், சிவாவும் இடம் மாற்றப்பட்டனர். ஆனால் நிஜத்தில் சலீம், வில்லியம் மெத்வோல்ட்டின் மகன். மெத்வோல்ட் யார்? இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைக்கப்போகிறது என்பதைத் தெரிந்துகொண்டு தங்கள் மும்பைச் சொத்துக்களை விற்றுவிட்டு வெளியேறிய ஆங்கிலேயர்களில் ஒருவராக மெத்வோட் புதினத்தில் காண்பிக்கப் படுகிறார்.

ஆனால் சலீமின் மகன் நிஜத்தில் சிவாவின் மகன். சிவா சலீமின் இந்து ‘ஆல்டர் ஈகோ’. ருஷ்டியின் புதினத்தில், மகன்கள் அவர்கள் தந்தைகளின் மகன்களாக வருங்காலங்களிலும் இருக்கப்போவதில்லை என்பதுபோலக் காட்டப்படுகிறது. திரும்பத் திரும்ப வரும் கர்மா அது!

இன்றைய மின்னணு யுகத்தில் கூக்குள் தீநோக்கப் புரளிகளுக்கு ஆவண நம்பகத்தன்மையைக் கொடுத்துவிட்டது. நேரு ஒரு முஸ்லீம் என்று வாட்ஸ்அப் பல்கலைக்கழகங்கள் உறுதியாகச் சொல்லிவிட்டன. மாயமந்திரங்கள் கொழிக்கும் இந்த மண்ணைத் தவிர வேறெங்கு இந்த போலிச் செய்திகளால் இறக்கைக் கட்டிப் பறக்க முடியும்? இந்தியர்களாகிய நாம் வதந்திகளுக்காகவும், அரைகுறை உண்மைகளுக்காகவும், பொய்மைகளுக்காகவும் பிறந்தவர்கள்தானே!

மகாபாரதத்தில் இளவரசிகள் கணவரல்லாத ஆண்களுடன் உறவு வைத்துக் கொள்கின்றனர்.  ஒரு மகனின் தந்தை பெயரை பொதுவெளியில் சொல்ல முடியாது. ஆனால் இதிகாசம் இந்த ரகசியத்தை நாணமின்றிப் போட்டுடைத்து விடுகிறது

ஆண்வழிச் சமூகத்தன்மை, குலம், கோத்திரம், இனம் என்று எல்லாமும் இந்தியாவில் கறாராக வரையறுக்கப்பட்டிருப்பது போலத் தோன்றினாலும், ஆதிகாலத்திலிருந்தே அவை எப்போதும் நிரந்தரமாக இல்லாமல் மாற்றங்களோடுதான் நிலவி வருகின்றன. இதுதான் ருஷ்டி புதினத்தின் கச்சாப்பொருளும்; கருப்பொருளும் கூட.

உதாரணமாக மகாபாரதத்தில் இளவரசிகள் கணவரல்லாத ஆண்களுடன் உறவு வைத்துக் கொள்கின்றனர். ஒரு மகனின் தந்தை பெயரை பொதுவெளியில் சொல்ல முடியாது. ஆனால் இதிகாசம் இந்த ரகசியத்தை நாணமின்றிப் போட்டுடைத்து விடுகிறது.

‘பட்’டுகளும், ‘பண்டிட்’களும், பிராமணப் பெயர்கள் கொண்ட மற்றவர்களும் நிஜத்தில் இஸ்லாமிய ஜிகாதிகளாக இருக்கும் ஒரு பகுதியைத் தனது பூர்வீகமாக இனங்காணும் ஓர் எழுத்தாளருக்கு, நேரு மூலமாகவும், ஷேக் அப்துல்லா மூலமாகவும் பேசப்படும் காஷ்மீரின் மத அடையாளம் மாறிக்கொண்டே இருக்கும் தன்மைதான் ‘நள்ளிரவுக் குழந்தைகள்’ புதினத்தின் முக்கியமான வசீகர மாயமந்திரம். ருஷ்டி இந்தியாவிற்காக உணர்ச்சிகரமாகப் பேசிய இறுதி காஷ்மீர் முஸ்லீமா?

‘நள்ளிரவுக் குழந்தைகள்’ இந்தியாவைக் கிச்சடியாக விருந்தாக்கித் தந்தது. அதில் ஜாலியன்வாலாபாக் படுகொலை மக்கள்மீது தெளிக்கப்பட்ட ஒரு கிருமிநாசினிதான். ஆங்கிலேயே அராஜகத்தை ருஷ்டி மறுக்கிறாரா? இல்லை. வன்முறைப் பயங்கரத்தை முழுமையாகக் காட்டுவதற்கு கனவுமய பாணிதான் ‘நள்ளிரவுக் குழந்தைகள்’ புதினத்தின் ஒரே வழி.

தெற்கு ‘காலு’ என்று நிராகரிக்கப்படுகிறது; அதாவது, கறுப்பர்களாக. சலீம் சினையின் அம்மா கறுப்புத்தோல் பெண்ணாகத்தான் காண்பிக்கப்பட வேண்டியிருந்தது. ஏனென்றால் கதாநாயகன் வடக்கு-தெற்கு கலந்த உறவில் பிறக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. ‘நள்ளிரவுக் குழந்தைகள்’ ஒரு நாட்காட்டி வர்ணச்சித்திரம்.

பல காதல் களியாட்டங்களும் காம விருப்பங்களும் தோற்றுப் போனபின்பு, சலீம் சினை இறுதியாக இந்தியாவின் வழமையான மற்றுமொரு நபருடன் திருமணப் பந்தமின்றி வாழ்கிறான். முடிஅடர்ந்த முழங்கைகள் கொண்ட ஒரு கறுந்தோல் தென்னிந்திய காரிகை அவள். அவள்தான் அவனது வாழ்க்கையை ஆளும் பெண்; சாணத்தின் அதிபதியான பெண்கடவுள் பத்மா.

அடடா! மீண்டுமொரு மந்திர தீர்க்கதரிசனம்! புதின நாயகனைப் போலவே சல்மான் ருஷ்டியும் பிற்காலத்தில் கறுந்தோல் தென்னிந்தியப் பெண் பத்மாவை மணம் புரிந்து கொண்டார்.

இன்றைய இந்தியா நள்ளிரவுக் குழந்தைகளின் இந்தியா அல்ல. காந்தியோடும், நேருவோடும் அவர்கள் காலாவதியாகிவிட்டனர்

இந்தியா என்பது ஒரு கனவு; நாம் அனைவரும் கனவுகாண சம்மதித்த ஒரு கனவு என்று ருஷ்டி தன் புத்தகத்தில் எழுதினார். ஒரு தேசத்துக்குரிய குணாம்சங்கள் எதுவுமே இல்லாமல் பன்மைத்துவம் கொண்ட ஒரு துணைக்கண்டம் எப்படி ஒரு தேசமாக இருக்க முடியும்? நாம் அனைவரும் ஒன்று என்று கனவுகாண இந்தியர்களாகிய நாம் விருப்பத்துடனே சம்மதித்திருக்கிறோம் என்று எழுதினார் ருஷ்டி. ஆனால் இன்று நாம் ஒன்று என்று நமக்குச் சொல்லப்படுகிறது. பன்மைத்துவம் என்பது மாயை அல்லது அந்நியத்தன்மை. .

ஒரு இஸ்லாமிய பையனை வழமையான ஓர் இந்தியனாகக் கற்பனை செய்து பார்க்கும் புத்தகத்தை அந்தக் காலத்தில் ஓர் இந்திய முஸ்லீமால் எழுத முடிந்தது. இந்துஸ்தானில் முஸ்லீமுக்கும் சமபங்குண்டு என்ற கருத்தைப் பிரிவினை பாதிக்கவில்லை என்று நினைத்து இந்திய முஸ்லீம் தன்னைத் தானே முட்டாளாக்கிக் கொண்ட காலகட்டம் அது.

இன்றைய இந்தியாவில் தெற்கு உயர்ந்து நிற்கிறது. கிழக்கு சற்றும் பொருத்தமில்லாத வகையில் இந்து தேசியவாதத்தை உரக்கக் கூவிக் மைய வெளிச்சத்திற்கு வந்துகொண்டிருக்கிறது. வடக்கு தன் ஆதிக்கத்தை பறைசாற்ற பின்னோக்கிச் சென்றுவிட்டது.

இன்றைய இந்தியா நள்ளிரவுக் குழந்தைகளின் இந்தியா அல்ல. காந்தியோடும், நேருவோடும் அவர்கள் காலாவதியாகிவிட்டனர்.

இன்றைய சூழல் அமானுஷ்யமானது; கவித்துவமானது; மோசமான மந்திரத்தன்மையைக் கொண்டது. அதனால்தான் இந்தியா தனது 75-ஆவது சுதந்திர ஆண்டைக் கொண்டாடிய காலகட்டத்தில், ருஷ்டி கிட்டத்தட்ட மரணத்தைத் தரிசித்துவிட்டார்.

அந்த மாயமந்திரம் நமக்கு நிஜத்தை ஞாபகப்படுத்திவிட்டது!

(இந்தக் கட்டுரை முதலில் தி வயர் இதழில் வெளியானது)

Share the Article

Read in : English

Exit mobile version