Read in : English
சொத்து முடக்கம் என்னும் சொல்லை அடிக்கடி கேள்விப் படுகிறோம். பொதுவாக, நிதி மோசடி போன்ற குற்றத்தில் ஈடுபடுபவரது வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த குற்றத்தில் ஈடுபடுபவர்களிடமிருந்து இப்படிச் சொத்துகள் முடக்கப்படுகின்றன. அடிப்படையில், சொத்து முடக்கம் என்றால் என்ன?
சட்டத்தின்படி நிகழ்த்தப்படும் சொத்து முடக்கம் என்பதன் பொருள் சொத்தைப் பறிமுதல் செய்வதே ஆகும். வழக்கு தொடுத்தவருக்குச் சாதகமான தீர்ப்பு வருவதற்கு வாய்ப்பு இருக்குமானால் மட்டுமே சொத்தானது பறிமுதல் செய்யப்படும். வாதி என்று கூறப்படும் வழக்கு தொடுத்தவர், பிரதிவாதி என்று கூறப்படும் வழக்கு தொடுக்கப்பட்டவரிடமிருந்து தனக்குப் பணம் வர வேண்டும் என்று கூறுபவராக இருப்பார்.
முடக்கப்பட்ட சொத்து என்ன ஆகும்?
முடக்கப்பட்ட சொத்தை விற்கவோ, குத்தகைக்கு விடவோ, அடகு வைக்கவோ முடியாது. அந்தச் சொத்தைப் பணமாக மாற்றிக்கொள்ள இயலாது. ஆனால், வழக்கு தொடுத்தவர் அங்கே வாழலாம், வாடகைக்கு விடலாம், வாடகையை வாங்கிக் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, ஒரு வீடு முடக்கப்பட்டால். அந்த வீட்டில் வாதி வாழலாம், வீட்டை வாடகைக்கு விடலாம். ஆனால், விற்கவோ குத்தகைக்குவிடவோ முடியாது. அதாவது, சொத்தை அனுபவிக்கலாம்; சொத்துக்கு உரிமை கொண்டாட முடியாது.
எப்பொழுது முடக்கப்படும்?
பொதுவாக வழக்கு தொடுத்தவர், அதாவது வாதி, தன்னுடைய வாதத்தில் வெற்றி பெறும் பொழுது அல்லது அவரே தனக்கு வரவேண்டிய பணத்திற்கு ஈடாக அந்தச் சொத்தை முடக்குமாறு நீதி மன்றத்திடம் கோரும் பொழுது சொத்து முடக்கப்படும். ஆனால், பிரதிவாதி அவருக்கு உரிமையான சொத்தை விற்றுவிடுவார், தனக்குத் தர வேண்டியதை தராமல் விட்டுவிடுவார் என்று வாதி அச்சப்பட்டால், இறுதி தீர்ப்புக்கு முன்பாகவே நீதிமன்றம் எதிர் தரப்பாரது அதாவது பிரதிவாதியுடைய சொத்தை முடக்கிவிட முடியும்.
அதே நேரத்தில் எதிர்தரப்பைச் சேர்ந்தவர், அதாவது பிரதிவாதி வெற்றிபெறுவதற்கு அதிக வாய்ப்பு இருந்தால் நீதிமன்றம் சொத்தை முடக்க உத்தரவிடாமல் இருப்பது வழக்கம். இதுதான் சிவில் வழக்குகளில் இருக்கும் நிலைமை, ஆனால் குற்றவியல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர் முறையாக நீதி மன்றத்திற்கு வருவதை உறுதிப்படுத்துவதற்கு அவருடைய சொத்தை முட்க்குமாறு நீதிமன்றம் உத்தரவிடலாம்.
முடக்கப்பட்ட சொத்தை விற்கவோ, குத்தகைக்கு விடவோ, அடகு வைக்கவோ முடியாது. அந்தச் சொத்தைப் பணமாக மாற்றிக்கொள்ள இயலாது. ஆனால், வழக்கு தொடுத்தவர் அங்கே வாழலாம், வாடகைக்கு விடலாம், வாடகையை வாங்கிக் கொள்ளலாம்
எவையெல்லாம் பறிமுதல் செய்யப்படலாம்?
கட்டடங்கள், நிலம், வண்டி, இவை தவிர வங்கிக் கணக்குகள்கூட முடக்கப்படலாம்.எதிர்த் தரப்பாளர் நீதி மன்றத்தின் உத்தரவை மீறி நாட்டைவிட்டு ஓடி விட வாய்ப்பு உண்டு என்று நினைத்தாலும் சொத்து முடக்கப்படலாம்.
சொத்து முடக்கம் எப்படிச் செயல்படுகிறது?
சிவில் தீர்ப்பு மன்றம் வழக்கு தொடுத்தவருக்கு, ஆதரவாக தீர்ப்பு வழங்கியும் எதிர் தரப்பான பிரதிவாதி அதை ஏற்க மறுத்தால் அப்பொழுது வழக்கு தொடுத்தவர் சொத்தை முடக்கலாம், எதிர் தரப்பைக் கைது செய்யலாம், சொத்தைப் பெற்றுக் கொள்ளலாம், விற்கலாம். இதற்குச் சட்டம் உதவுகிறது.
சொத்தை முடக்குவதற்கு யாருக்கு அதிகாரம் உள்ளது?
நீதிமன்றம் மட்டும்தான் சொத்தை முடக்க உத்தரவிட முடியும். சில நாள்களுக்கு முன்பு உச்ச நீதி மன்றம் அமலாக்கத்துறைக்கு அவ்வாறு சொத்தை முடக்க உரிமை இருக்கிறது என்ற அதிகாரத்தை வழங்கி, உத்தரவிட்டது. ஆனால், பிறகு நீதி மன்றம் அந்த உத்தரவை ரத்து செய்யலாம். காவல்துறையைப் போல கைது செய்யும் அதிகாரத்தையும் உச்ச நீதி மன்றம் அமலாக்கத்துறைக்கு வழங்கியிருக்கிறது.
மேலும் படிக்க:
ஜி ஸ்கொயர், அண்ணாமலை: மனை அனுமதி சம்பந்தமான களப் பரிசோதனை
ஜி ஸ்கொயர்- ஜூனியர் விகடன்-கெவின் வழக்கு: எதிரெதிர் திசைகளில் அரசும், ஊடகமும்
சொத்தை முடக்கும் நடவடிக்கையைக் குற்றவியல் வழக்குகளிலும் மேற்கொள்ள முடியுமா?
திருட்டு, அபகரிப்பு, ஏமாற்று போன்ற பெரும்பாலான வழக்குகளில் அசையும் சொத்துகளை முடக்குவார்கள், வழக்கு முடிந்த பிறகு அதன் உரிமையாளரிடம் அதை ஒப்படைத்து விடுவார்கள். குற்றவியல் நீதி மன்றங்களும் அதை நடத்தும் அமைப்புகளும் பொதுவாக அசையாத சொத்துகளை முடக்குவதற்கோ, அந்தச் சொத்துகளைத் தடுப்பு முயற்சியாகப் பயன்படுத்தவோ பரிகாரமாகப் பயன்படுத்தவோ அதிகாரம் பெற்றிருக்கவில்லை. ஆனால், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அந்தச் சொத்தை பறிமுதல் செய்ய உத்தரவிட முடியும்.
நீதிமன்றம் மட்டும்தான் சொத்தை முடக்க உத்தரவிட முடியும். சில நாள்களுக்கு முன்பு உச்ச நீதி மன்றம் அமலாக்கத்துறைக்கு அவ்வாறு சொத்தை முடக்க உரிமை இருக்கிறது என்ற அதிகாரத்தை வழங்கி, உத்தரவிட்டது
எனவே இப்பொழுது சொத்தை முடக்குவது பற்றி ஏன் பேசுகிறோம்?
வி.கே.சசிகலாவின் 14 ‘பினாமி’ சொத்துகளை வருமானவரித்துறை முடக்கியது முதல் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு தென் சென்னை ஆர்டிஓ கொண்டு வந்த நடைமுறைகளை நீதிபதி என்.சதீஷ்குமார் தடை செய்தது வரை, சொத்து முடக்குவது பற்றிய விவாதம் தொடர்ந்து நடக்கும் ஒன்று. எனவே, சொத்தை முடக்குவது குறித்து விவாதிக்கிறோம்.
ஜூலை 26 அன்று இந்தியாவின் உச்ச நீதிமன்றம் பண மோசடி தடுப்பு சட்டம் 2002க்கு (PMLA – Prevention of Money Laundering Act) புது விளக்கம் கொடுத்தது. இந்த வழக்குகளை நடத்தும் அமலாக்கத்துறை தேவைப்பட்டால் கைது செய்வதற்கும், சொத்துகளை முடக்குவதற்கும், தேடுவதற்கும், பறிமுதல் செய்வதற்கும் அதிகாரம் உண்டு என்று உச்ச நீதி மன்றம் கூறியது.
பண மோசடி நாட்டைப் பாதிக்கிறது என்றும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டால்கூட குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணம் பெறுவதில்லை என்றும் நீதி மன்றம் தீர்ப்பு கூறியது. பல நேரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சொத்துக்களை விற்றுவிடுகிறார்கள் எனவே, குற்றம் நிரூபிக்கப்படுவது என்பது பணத்தைத் திரும்பிக் கொண்டு வர உதவுவதில்லை. இந்தக் காரணத்துக்காகவே நீதி மன்றம் அமலாக்கத்துறைக்குச் சொத்தை முடக்கும் அதிகாரத்தை வழங்கி இருக்கிறது.
Read in : English