Read in : English
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் அமைந்திருக்கும் ஃபோர் பாயிண்ட்ஸ் ரிசார்ட்டில் 44ஆவது சர்வதேச சதுரங்கப் போட்டி நடைபெற்றுவருகிறது. நான்காம் நாள் போட்டிகள் ஆகஸ்ட் 1 அன்று, அதாவது நேற்று நடைபெற்றன.
நேற்று நடந்த செஸ் ஒலிம்பியாட், நான்காவது சுற்றில், இந்திய அணிகள் ஐரோப்பாவின் சிறந்த அணிகளுடன் மோதின. போட்டிகளில் வலுவைக் காட்டியதைத் தொடர்ந்து, வரும் நாள்களில் ஆட்டங்கள், வெற்றி, தோல்வி, இழுபறி என விறுவிறுப்புடன் நகரும் என எதிர்பார்க்கலாம்.
சர்வதேச அளவிலான ரேட்டிங்- கூடும் வாய்ப்பு உள்ளதால், இது ஒருவகையில் நமது கிராண்ட் மாஸ்டர்களின் திறமையைச் சோதிப்பதுடன், மேம்படுத்தவும் செய்யும். ஓபன் பிரிவில், இந்தியாவின் C அணி, 2700 சராசரி ரேட்டிங் கொண்ட ஸ்பெயினுடனும், பெண்கள் பிரிவில் C அணி 2400 சராசரி ரேட்டிங் கொண்ட ஜார்ஜியாவுடனும் ஆடி தோல்வியைத் தழுவின.
இது ஒருபுறமிருக்க, தலை சிறந்த கிராண்ட் மாஸ்டர்களைக் கொண்ட இத்தாலியை வீழ்த்தி, இந்தியாவின் இளசுகள் அணி ஆடுகளத்தில் தனி நடைபோடுகிறது. இதே இத்தாலி அணி மூன்றாவது சுற்றில், மேக்னஸ் கார்ல்செனின் நார்வேயைத் தோற்கடித்தது என்பதை நினைவுகொள்ள வேண்டும்.
இளசுகள் அணியின் குகேஷ் இத்தாலியின் டேனியல் வோகட்டுரேவை எதிர்கொண்டார். ஆட்டத்தில், காய்களை இழக்க மனமில்லாமல் அவற்றை நகர்த்தினார் டேனியல். அதே நேரத்தில் குகேஷ் காய்களை விட்டுக்கொடுத்து, நுணுக்கத்துடன் ஆடி வென்றுள்ளார்.
நான்காவது சுற்றில், இந்திய அணிகள் ஐரோப்பாவின் சிறந்த அணிகளுடன் மோதின. போட்டிகளில் வலுவைக் காட்டியதைத் தொடர்ந்து, வரும் நாள்களில் ஆட்டங்கள், வெற்றி, தோல்வி, இழுபறி என விறுவிறுப்புடன் நகரும் என எதிர்பார்க்கலாம்
குதிரையைக் காக்க சிப்பாய், சிப்பாயோ தனியாள். பிறகு யானையைக் காக்க ஒரு குதிரை, ஒரு மந்திரி, இப்படித் தனது காய்களைப் பாதுகாத்து விளையாடிய டேனியலிடம், சடாரென்று யானைக்கு யானை என்று காய்களின் இழப்பைப் பொருட்படுத்தாது, கோட்டைக்குள் ராணியைச் செலுத்தி, டேனியலைத் திண்டாட வைத்துவிட்டார் இளம்புயல் குகேஷ். இந்தா பிடி யானையை என யானையை இழந்து, ஆனால், ராஜா எனக்கு என்று அதிரடியாக ஆடி வெற்றி பெற்றார்.
மேலும் படிக்க:
வியூகம் வகுத்துக் கோட்டையைத் தகர்த்த பெண்டாலா
நாள் 2: எதிராளியின் பிழையால் வென்ற வைஷாலி
ஓபன் பிரிவில், A அணி பிரான்சுக்கு எதிராக 2 – 2 என்ற கணக்கில் டிரா செய்தது. 2,800 ரேட்டிங் பெற்று உலக அளவில் சிறிய வயது கிராண்ட்மாஸ்டர் அலிரேசா ஃபிரோஸ்ஜா மற்றும் 2,819 ரேட்டிங்குடன் நடப்பு உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியனான மாக்ஸிம் லா க்ராவ் ஆகியோர் இந்த செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டிகளில் பிரான்சுக்காகக் கலந்துகொள்ளவில்லை.
இருந்தபோதிலும், பிரான்ஸ் அணியின் சராசரி ரேட்டிங் 2,600 வரம்பில் இருந்ததால், கடும்போட்டியாக இருந்தது. ஆனாலும் பென்டலா ஹரிகிருஷ்ணா, விதித் சந்தோஷ் குஜராத்தி, அர்ஜுன் எரிகைசி, எஸ்எல் நாராயணன் ஆகியோர் பிரான்ஸ் ஆட்டக்காரர்களிடம் டிரா செய்தனர்.
இளம் இந்திய அணியான B, இத்தாலிக்கு எதிராக 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. ப்ராக் மற்றும் சத்வானி முறையே லோரென்சோ லோடிசி, பிரான்செஸ்கோ சோனிஸ் ஆகியோருக்கு எதிராக டிரா செய்தனர். நிகில் மொரோனி லூகா ஜேர்டிக்கு எதிராக வென்றார்; குகேஷ் டேனியல் வோகட்டுரேவைத் தோற்கடித்தார்.
செஸ் ஒலிம்பியாட் 2022 இல் தனது முதல் தோல்வியைக் கண்டது இந்தியாவின் C அணி. இந்த அணி ஸ்பெயினிடம் 1 ½ -2 ½ என்ற கணக்கில் தோற்றது. சுமார் 2,700 சராசரி ரேட்டிங் கொண்ட ஸ்பானிய அணி, 2702 ரேட்டிங் கொண்ட ஐந்து முறை ஸ்பானிய சாம்பியனான பிரான்சிஸ்கோ போன்ஸ் வல்லேஜோ தலைமையில் போட்டிகளை எதிர்கொண்டது. சூர்யா சேகர் கங்குலி, எஸ்.பி. சேதுராமன் மற்றும் முரளி கார்த்திகேயன் ஆகியோர் பிரான்சிஸ்கோவின் அலெக்ஸி ஷிரோவுக்கு எதிராக இழுபறியில் சமாளித்தனர் மற்றும் ஜெய்ம் சாண்டோஸ் லடாசா, அபிஜீத் குப்தா, டேவிட் அன்டன் குய்ஜாரோவிடம் தோற்றனர்.
பெண்களில், ஹங்கேரிக்கு எதிராக A அணி 2 ½ – 1 ½ என்ற கணக்கில் வெற்றிபெற்றது. ஹரிகா துரோணவல்லி, ஆர் வைஷாலி, கோனேரு ஹம்பி முறையே தன் ட்ராங் ஹோங், டிசியா காரா, சிடோனியா லாசர்னா வஜ்தா ஆகியோருக்கு எதிராக டிரா செய்தார்கள்; டானியா சச்தேவ் ஸோகா காலுக்கு எதிராக வென்றார்.
மூன்று போட்டிகள் ட்ராவை எட்டிய நிலையில், எஸ்டோனியாவுக்கு எதிராக B அணி கடும் போராட்டத்தை நடத்தியது. மை நர்வாவைத் தோற்கடித்து, வந்திகா அகர்வால் 2 ½ – 1 ½ என்ற கணக்கில் அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டுசென்றார்.
பத்மினி ரௌட், சௌமியா சுவாமிநாதன், திவ்யா தேஸ்முக் ஆகியோர் முறையே மார்கரெட் ஓல்டே, அனஸ்டாசியா சினிட்சினா, சோபியா ப்ளோகின் ஆகியோருக்கு எதிராக ஆடி போட்டியை டிரா செய்தனர்.
பெண்கள் பிரிவில் தனது முதல் தோல்வியைக் கண்ட C அணி, ஜார்ஜியாவிடம் 1-3 என்ற கணக்கில் தோற்றது. குறிப்பிடத்தக்க வகையில், ஜார்ஜியா அணி சராசரியாக 2460 ரேட்டிங்கைக் கொண்டுள்ளது, இது C அணியை விட அதிகமாகும்.
ஈஷா கரவாடே, சாஹிதி வர்ஷினி மற்றும் பிரத்யுஷா போடா ஆகியோர் முறையே நானா ஜாக்னிட்ஸே, லீலா ஜவகிஸ்விலி மற்றும் சலோமி மெலியாவிடம் தோற்றனர்.
2300 ரேட்டிங் கொண்ட பி வி நந்திதா 2466 ரேட்டிங் கொண்ட நினோ பாட்ஷியாவிலியைத் தோற்கடித்ததார். ஆகவே, வலுவான ஆட்டங்களை வரும் நாள்களில் காண முடியும் என்ற எதிர்பார்ப்பு செஸ் ஆர்வலர்களிடையே காணப்படுகிறது.
Read in : English