Read in : English
‘செஸ் விளையாட்டுல ரொம்ப சின்னவங்க கூட ரொம்ப பெரியவங்களா ஆயிடலாம்… அதனால தான் செஸ் எனக்கு ரொம்பப் பிடிக்கும்’ என்ற வாக்கியங்கள் ‘குயின் ஆஃப் காட்வே’ படத்தில் இடம்பெற்ற ஒரு வசனம். உலகம் முழுக்க செஸ்ஸை நேசிக்கும் எந்தவொரு நபரும் ஏற்றுக்கொள்ளும் உண்மை இது. எவ்வித அடையாளமும் அற்று வாழ்ந்தவந்த ஒரு பெண் ஒரு நாட்டின் சார்பில் சர்வதேச சதுரங்கப் போட்டிகளில் களமிறங்குவதெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத காரியம். அப்படியொரு சாதனையைப் படைத்த பியோனா முடேசி (PIONA MUTESI) எனும் பெண்ணின் வாழ்க்கையில் சதுரங்கம் நுழைந்தபின்னர் நிகழ்ந்த மாற்றங்களைச் சொல்கிறது மீரா நாயர் இயக்கிய ‘குயின் ஆஃப் காட்வே’.
ஏதுமற்றவர்களின் வலி!
உகாண்டா நாட்டிலுள்ள கம்பலா மாவட்டத்தின் குடிசைப் பகுதிகளில் ஒன்றாகத் திகழ்கிறது காட்வே. சமூகத்தில் மிக வறிய நிலையிலுள்ளவர்கள் அங்கு வாழ்ந்து வருகின்றனர். சுமார் 10 வயதே ஆன பியோனா தனது தாய், சகோதரன், 2 வயதே ஆன இன்னொரு சகோதரனுடன் ஆகியோருடன் அங்கு வாழ்ந்து வருகிறார். கிறிஸ்தவ மிஷனரியைச் சேர்ந்த ராபர்ட் காடண்டேவின் வழிகாட்டுதலில் அப்பகுதியிலுள்ள சிறுவர்கள் கால்பந்து விளையாடுகின்றனர். பியோனாவின் சகோதரன் உட்படச் சிலருக்காக, காட்வேயில் ஒரு செஸ் பயிற்சி கிளப்பை அவர் தொடங்குகிறார். சகோதரனைப் பின்தொடர்ந்து வரும் பியோனாவும் அதில் சேர்ந்து சதுரங்கம் விளையாடுகிறார்.
தந்தையை எய்ட்ஸுக்குப் பறி கொடுத்துவிட்டுத் தாயின் முகம் மட்டுமே பார்த்து வளரும் ஒரு பதின்வயதுச் சிறுமியைப் பற்றியும், ஏதுமற்றவராக அவர் வாழ்வில் எதிர்கொள்ளும் வலிகளைப் பற்றியும் இப்படம் பேசுகிறது.
ஒருகட்டத்தில் தன்னுடன் விளையாடும் சக சிறுவர், சிறுமிகள் மட்டுமல்லாது பிற வட்டாரங்களில் நடைபெறும் செஸ் போட்டிகளிலும் பங்கேற்று வாகை சூடுகிறார். 2010இல் ரஷ்யாவில் நடந்த செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்றுத் தோல்வியுற்ற பியோனா, மீண்டும் தன்னம்பிக்கை எழுச்சியுற்று உகாண்டாவின் செஸ் போட்டிகளில் வெற்றி காண்பதுடன் படம் நிறைவடைகிறது.
பியோனாவின் வாழ்வில் 2007 முதல் 2012 வரையிலான காலகட்டத்தைச் சொல்கிறது ‘குயின் ஆஃப் காட்வே’. தந்தையை எய்ட்ஸுக்குப் பறி கொடுத்துவிட்டுத் தாயின் முகம் மட்டுமே பார்த்து வளரும் ஒரு பதின்வயதுச் சிறுமியைப் பற்றியும், ஏதுமற்றவராக அவர் வாழ்வில் எதிர்கொள்ளும் வலிகளைப் பற்றியும் இப்படம் பேசுகிறது.
மீரா காட்டிய உலகம்!
1988இல் உகாண்டாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளியினரான மஹ்மூத் மம்தானியை மறுமணம் செய்துகொண்டவர் மீரா நாயர். உகாண்டாவில் அவர் மேற்கொண்ட ஆய்வுகளே பின்னர் ‘மிஸிசிப்பி மசாலா’ எனும் ஆங்கிலத் திரைப்படத்தை இயக்குவதற்கான அடிப்படையாகவும் அமைந்தது. உகாண்டாவைச் சேர்ந்த ஆப்பிரிக்க மக்களுக்கும் இந்திய வம்சாவளியினருக்குமான உறவுச் சிக்கல்களைப் பேசியது அப்படம்.
மேலும் படிக்க:
தமிழ் வெப் சீரிஸ்கள்: ஓடிடி தளங்களுக்கும் தமிழ் திரையுலகுக்கும் இடைவெளி ஏன்?
சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை நழுவவிட்ட ரஞ்சன் என்ற பன்முகக் கலைஞன்!
இடையில் சில காலம் ‘மான்சூன் வெட்டிங்’, ‘தி நேம்ஷேக்’, ’தி ரிலக்டண்ட் பண்டமெண்டலிஸ்ட்’ படங்களை இயக்கிய மீரா, மீண்டும் உகாண்டா வாழ்வியலைத் திரையில் சொன்ன படமாக அமைந்தது ‘குயின் ஆஃப் காட்வே’.
சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்ற பிறகும், எண்ணெய் கேனை தூக்கிக்கொண்டு சாலையில் பியோனா நடந்துவருவதாக ஒரு காட்சி படத்தில் உண்டு. மூன்றாம் உலக நாடுகளில் ஒன்றாக விளங்கும் உகாண்டாவில் சாதாரண மக்களின் வாழ்க்கை எவ்வாறிருக்கிறது என்பதைச் சொல்ல இந்த ஒரு காட்சி போதும். அந்நாட்டின் விளிம்பு நிலை மக்களைப் பற்றிப் பேசினாலும், வறுமையில் உழல்பவர்களின் செம்மை நோக்கிய கனவுகளையும் படம்பிடித்துக் காட்டி தன்னம்பிக்கையூட்டுவதாக அமைந்திருக்கும் இதன் திரைக்கதை.
பயிற்சியாளர் ராபர்ட் ஆக நடித்த டேவிட் ஒய்லோவோ, பியோனாவின் தாயாக நடித்த லூபிடா நியோங்கா தவிர்த்து, பியோனாவாக நடித்த மடினா நல்வாங்கா உட்படப் பலரும் உகாண்டாவில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் கண்டறியப்பட்ட கலைஞர்கள் தாம்.
2016இல் அமெரிக்காவில் வெளியான இத்திரைப்படம் பல்வேறு விழாக்களில் பங்கேற்று விருதுகளையும் வென்றது.
உயரத்தைத் தொடச் செய்யும் செஸ்!
செஸ் என்பது ராஜா ராணிகளின் விளையாட்டு. பியோனாவின் பயிற்சியாளர் ராபர்ட் பேசும் வசனங்களில் ஒன்று இது. சதுரங்கம் என்றழைக்கப்படும் செஸ் விளையாட்டின் ஆரம்பமும் கூட அதுதான். போர்க்களத்தில் வெற்றி பெற எவ்வாறு வியூகம் வகுக்க வேண்டுமென்பதற்கான மாதிரியே செஸ் பலகை. எந்தவொரு போரிலும் வெற்றிபெற உடல் பலத்தைவிட மனபலமே மிக முக்கியம். அதற்கான அச்சாரத்தை இடும் பயிற்சிகளுள் ஒன்று செஸ்.
செஸ் விளையாட்டின் மூலமாக உகாண்டாவின் அடையாளமாக மாறிய பியோனா, ஒரு வீட்டைச் சொந்தமாக வாங்கித் தன் தாயை அதில் குடியமர்த்துகிறார். இக்காட்சியுடன் படம் நிறைவடைகிறது.
செஸ் விளையாட்டின் மூலமாக உகாண்டாவின் அடையாளமாக மாறிய பியோனா, ஒரு வீட்டைச் சொந்தமாக வாங்கித் தன் தாயை அதில் குடியமர்த்துகிறார். இக்காட்சியுடன் படம் நிறைவடைகிறது
ரஷ்ய ஒலிம்பியாட்டில் பியோனா தோல்வியுற்றதைக் காணும் பத்திரிகையாளர் டிம் குரோதர்ஸ், அவரைப் பற்றி ஒரு புத்தகம் எழுதுகிறார். அதனை அடிப்படையாகக் கொண்டு வில்லியம் வீலர் எழுதிய திரைக்கதையே ‘குயின் ஆஃப் காட்வே’ திரைப்படம். ஆனால், வெறுமனே பியோனாவின் வெற்றித் தருணங்களை மட்டும் பதிவு செய்யாமல் அவர் சார்ந்த சுற்றுப்புறத்தின், மனிதர்களின் வாழ்வையும் சேர்த்தே சொல்கிறது இத்திரைக்கதை. இறுதியாக இடம்பெற்றுள்ள டைட்டில் காட்சியில் நடிப்புக் கலைஞர்களுடன் சம்பந்தப்பட்ட கதை மாந்தர்களும் திரையில் தோன்றுவது ஒட்டுமொத்தத் திரைப்படம் எந்த அளவுக்கு உண்மைக்கு நெருக்கமாக விளங்குகிறது என்பதைக் காட்டுகிறது.
தற்போது பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டுத் தனது சமூகத்தின் மேன்மைக்காக உழைத்து வருகிறார் பியோனா. இப்போது அவர் சதுரங்கம் விளையாடுவதில்லை. ஆனால், அவர் கற்றுக்கொண்ட சதுரங்க ஆட்டத்தின் தாக்கம் வாழ்க்கை முழுக்க அவருக்கு வழிகாட்டும். அந்த விளையாட்டின் அடிப்படைச் சிறப்புகளில் அதுவும் ஒன்று.
தற்போதைய யுகத்தில் ஒவ்வொரு நாளையும் போர்க்களம் போல எதிர்கொள்ள வேண்டும் என்று சொல்வது நிச்சயம் எதிர்மறையான சிந்தனைதான். ஆனால், அந்த எண்ணம் உருவாக்கும் அவநம்பிக்கையை அடியோடு களைய ஒரு உறுதுணை தேவை. கண்டிப்பாக, அப்படியொன்றாக செஸ் விளையாட்டு அமையும். அதனை பியோனா முடேசியின் வாழ்க்கைக் கதை வழியாகச் சொன்ன வகையில் ஒரு முன்னுதாரணமாகிறது ‘குயின் ஆஃப் காட்வே’.
Read in : English