Site icon இன்மதி

சுதா கொங்கரா – தோல்விகளில் இருந்து உயிர்த்தெழுந்த ஃபீனிக்ஸ்!

தொடர்ந்து யதார்த்தத்துடனும் கற்பனைப் பிரவாகத்துடனும் தனது பாத்திரங்களையும் கதை நிகழ்வுகளையும் கோத்து வருகிறார் சுதா

Read in : English

முதல் முயற்சியிலேயே வெற்றிபெற்று உச்சாணிக்கொம்பை நோக்கி அடியடியாக முன்னேறுவது ஒரு வகை என்றால், மேட்டிலும் பள்ளத்திலும் மாறி மாறி விழுந்து எழுந்து சிகரம் நோக்கிப் பயணிப்பது இன்னொரு வகை. சாதனையாளர்களுக்கு மட்டுமல்ல; சாதாரண மனிதர்களுக்கும் இவ்விரண்டும் பொருந்தும். தோல்விகளில் இருந்து மீண்டு வெற்றிகளைத் தன்வசப்படுத்திய சாதனையாளர்களின் வெற்றிக்கதைகள் சாதாரணர்களிடம் கூடுதல் நம்பிக்கையை விதைக்கும். அதுதான் வித்தியாசம். தொடர் தோல்விகளின் கசப்பைக் கடந்து, தனக்கான வாய்ப்பைத் தக்கவகையில் பயன்படுத்தி வாகை சூடியவர் திரைப்பட இயக்குநர் சுதா கொங்கரா.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 68ஆவது தேசிய விருதுப் பட்டியலில் சுதா இயக்கிய ‘சூரரைப் போற்று’ திரைப்படம் 5 பிரிவுகளில் விருதுகளைக் குவித்துள்ளது. இதன் மூலமாகத் திரையில் இயக்குநர் எனும் அந்தஸ்தைப் பெற விரும்பும் பெண்களுக்கு மட்டுமல்லாமல், வழக்கமான கமர்ஷியல் மசாலா வகைப்பாட்டில் இருந்து வேறுபட்ட கதைகளுக்குத் திரையுருவம் தர விரும்புபவர்களுக்கும் முன்னோடியாக மாறியிருக்கிறார் சுதா கொங்கரா.

ஆரம்பகட்ட தோல்விகள்!
ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் பிறந்து, குழந்தைப் பருவத்தில் சென்னைக்கு இடம்பெயர்ந்தவர் சுதா கொங்கரா. அதன்பிறகு பள்ளி, கல்லூரிப் படிப்பு, திரைத்துறைச் செயல்பாடு என அனைத்தும் அவருக்குச் சென்னை சார்ந்தே அமைந்தது. ஆனால், ஒரு இயக்குநராகத் தெலுங்கில்தான் அவர் அறிமுகமானார். 2008இல் சுதா இயக்கிய ‘ஆந்திரா அந்தகாடு’ படம் பெரிய கவனத்தைப் பெறவில்லை.

இயக்குநர் மணிரத்னத்தின் உதவியாளர், நடிகை ரேவதி இயக்கிய ‘மித்ர மை ப்ரெண்ட்’ படத்தின் திரைக்கதையாசிரியர் என்ற சிறப்புகள் எவ்விதத்திலும் அவருக்கு அடுத்த பட வாய்ப்பைத் தரவில்லை.
இந்தச் சூழலில், தமிழில் தனது இரண்டாவது படத்தை இயக்கத் துணிந்தார் சுதா கொங்கரா. அன்றைய காலகட்டத்தில் மக்களிடம் அறிமுகமாயிருந்த ஸ்ரீகாந்த், விஷ்ணு விஷால், தியாகராஜன், பூனம் பாஜ்வா, பூஜா ஆகியோரைக் கொண்டு ‘துரோகி’ என்ற படத்தை உருவாக்கினார்.

ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலைச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் போலீஸ் அதிகாரி ஆவதாக விஷ்ணுவின் பாத்திரத்தையும், சமூகத்தில் உயர்சாதியாகக் கருதப்படும் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் சிறுவயதில் தான் எதிர்கொண்ட பாலியல் அத்துமீறல் காரணமாக கேங்க்ஸ்டர் வாழ்வைக் கையிலெடுப்பதாக ஸ்ரீகாந்த் பாத்திரத்தையும் உருவாக்கியிருந்தார். இருவருக்குமான பகையின் தொடக்கப்புள்ளியாகப் பால்யத்தில் இருவருக்கும் இருந்த நட்பு திரைக்கதையில் காட்டப்பட்டிருக்கும்.

இயக்குநர் எனும் அந்தஸ்தைப் பெற விரும்பும் பெண்களுக்கு மட்டுமல்லாமல், வழக்கமான கமர்ஷியல் மசாலா வகைப்பாட்டில் இருந்து வேறுபட்ட கதைகளுக்குத் திரையுருவம் தர விரும்புபவர்களுக்கும் முன்னோடியாக மாறியிருக்கிறார் சுதா கொங்கரா

அல்போன்ஸ் ராயின் ஒளிப்பதிவு, ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பு, செல்வகணேஷின் இசையமைப்பு எனத் தொழில்நுட்பரீதியில் இப்படம் சிலாகிக்கப்பட்டாலும் பெரிதாக வெற்றிபெறவில்லை. விளைவு, மீண்டும் முதல் பட இயக்குநர் போல வாய்ப்பு தேட நேர்ந்தது.இந்த வேளையில், பெண் இயக்குநர் என்ற அடையாளமும் அவர் மீது அழுத்தமாகப் பதிந்தது. குடும்பப் பொறுப்புகள், பெண் எனும் நோக்கிலான பார்வைகளைத் தாண்டி இன்னொரு வாய்ப்பைப் பெறுவதென்பது சுலபமானதல்ல.

முயல்கொம்பான வாய்ப்பு!
2010 காலகட்டத்தில், தமிழ்த் திரையுலகில் அதிகப் படங்களில் நடிக்காமல் ‘3 இடியட்ஸ்’, ‘தனு வெட்ஸ் மனு’ என்று இந்திப் படங்களில் மட்டும் தலைகாட்டி வந்தார் மாதவன். அவரிடம் கதை சொல்லி, ‘இறுதிச் சுற்று’ என்னும் படத்தைத் தமிழிலும் இந்தியிலும் ஒருசேர உருவாக்கினார். இதில் குத்துச்சண்டை வீராங்கனையாக ரித்திகா சிங்கின் பாத்திரத்தைச் செதுக்கியிருந்தார். அது மட்டுமல்லாமல் சென்னை பட்டினப்பாக்கம் வட்டாரத்தைப் படத்தில் சுதா காட்டிய விதம் ‘வாவ்’ என்று சொல்ல வைத்தது.

இந்தப் படத்தில் ராதாரவி மற்றும் மாதவன் பாத்திரங்களைக் கையாண்ட விதம் வழக்கமான தமிழ் சினிமா பார்முலாவில் இருந்து ரொம்பவே வேறுபட்டது. மகள் விவாகரத்து பெற்று வேறொரு வாழ்க்கையை அமைத்துக்கொண்ட பிறகும், மருமகன் மீது அக்கறையும் மதிப்பும் கொண்டவராக ராதாரவி பாத்திரம் அமைக்கப்பட்டிருந்தது. வசூல்ரீதியாகப் பெரிய வெற்றியைப் பெற்றதோடு, விமர்சகர்களின் பாராட்டுகளையும் அள்ளியது ‘இறுதிச்சுற்று’. அந்த வெற்றியே, சுதாவின் பத்தாண்டு கால வருத்தங்களுக்கு வடிகாலாக மாறியது.

மேலும் படிக்க:
சூரரைப் போற்று போன்ற பொழுதுபோக்கு படங்கள் ஏன் மலையாள இளைஞர்களைக் கவர்கின்றன?

நம்பிக்கைக்குரியவர்களா தமிழின் அடுத்த தலைமுறை இயக்குநர்கள்?

ஒரு ஃபீனிக்ஸ் பறவை போல..
ஏர் டெக்கான் நிறுவனத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டே ‘சூரரைப் போற்று’ திரைக்கதை எழுதப்பட்டது. ஆனாலும், அதில் கோபிநாத்தும் அவரது மனைவி பார்கவியும் எதிர்கொண்ட இன்னல்களை, தடைகளைத் தாண்டிவந்த பாதை, சாதித்த வெற்றிகள் மட்டுமே இடம்பெற்றிருந்தன. மற்றபடி அப்படம் முழுக்க வேறொரு வாழ்க்கையே நிரம்பியிருந்தது. சுருக்கமாகச் சொன்னால், கோபிநாத் வாழ்விலுள்ள முக்கியக் கட்டங்களை அடிக்கோடிட்டுக் குறித்துக்கொண்டு, தான் படைத்த கற்பனை பாத்திரங்களுக்குள் அவற்றின் சாரத்தைப் புகுத்தியிருந்தார் சுதா.

அதன் பலனாக, சூர்யா நடித்த நெடுமாறன் ராஜாங்கம் என்ற பாத்திரம் மதுரை வட்டாரத்தில் பிறந்து வளர்ந்ததாகக் காட்டப்பட்டபோதும் பார்வையாளர்களுக்கு அந்நியமாகத் தெரியவில்லை. ஒரு சாதாரண மனிதன் விமான நிறுவனமொன்றை உருவாக்குகிறார் என்பது மட்டுமே ‘சூரரைப் போற்று’வின் அடிப்படையாக இழையோடியது. அதனைச் சாத்தியப்படுத்த எத்தனை தோல்விகளையும் சிறு வெற்றிகளையும் கடந்து வர வேண்டியிருக்கிறது என்பது திரைக்கதையாக விரிந்திருந்தது.

சாதாரண மக்களின் ஏக்கங்கள், வருத்தங்கள், வலிகள், அவற்றின் ஊடாகப் பெறும் வெற்றிகளின் மகத்துவம் ஆகியவை திரையில் வெளிப்பட்டன. இதனாலேயே, கோபிநாத் எதிர்கொண்ட வாழ்வு அப்படியே திரையில் பிரதிபலிக்காதபோதும் ’சூரரைப் போற்று’ படைப்பு கொண்டாடப்பட்டது. கேப்டன் கோபிநாத்தும் கூட, ‘படம் நன்றாக இருக்கிறது’ என்றே தன் கருத்தை வெளிப்படுத்தினார்.பெருவாரியான மக்கள் பாராட்டு மழை பொழிந்தனர். அதன் பலனாக சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த பின்னணி இசை, சிறந்த படம், சிறந்த திரைக்கதை என ஐந்து பிரிவுகளில் இப்படம் இப்போது தேசிய விருதை வென்றுள்ளது.

உண்மையில், ‘இறுதிச் சுற்று’, ‘சூரரைப் போற்று’ இரண்டு படங்களுமே தோல்விகளால் நிலைகுலையாத மனம் கொண்டவர்களை நாயகர்களாக முன்னிலைப்படுத்தியவை. கிட்டத்தட்ட சாம்பலில் இருந்து மீண்டும் உயிர் பெறும் ஃபீனிக்ஸ் பறவை கற்பனைவாதத்தைப் பிரதிபலித்தவை. ஒவ்வொரு நாளும் தோல்விகளின் கசப்பை விழுங்கி மகிழ்ச்சியான தருணங்களை இனிப்பாக அவ்வப்போது சுவைக்கும் சாதாரணப் பார்வையாளர்களை ஈர்க்க இதைவிட வேறென்ன வேண்டும்?!
யதார்த்தமும் கனவுலகும்..!

இறுதிச்சுற்று படத்தைத் தெலுங்கில் ‘குரு’ ஆக்கிய சுதா, தற்போது ‘சூரரைப் போற்று’வை இந்தியில் ‘ஸ்டார்ட்-அப்’ ஆக உருவாக்கிக் கொண்டிருக்கிறார். இப்படத்தில் சூர்யா நடித்த பாத்திரத்தில் அக்‌ஷய் குமார் நடிக்கிறார்.

தேசிய விருது பெற்றவர்கள் சூர்யா, ஜி வி பிரகாஷ் மற்றும் சுதா கொங்கரா

பெரும்பாலான வட இந்திய மக்களின் வறுமை நிறைந்த யதார்த்த வாழ்வைத் திரையில் சுதா வெளிப்படுத்தும்போது, தங்களுக்கும் திரைக்குமான இடைவெளி தொலைந்துபோவதைக் கண்டு அவர்கள் அனைவரும் ஆனந்தத்தில் திளைக்கலாம். அதுவே நிகழும் என்று நம்புவோம். இறுதிச்சுற்று, சூரரைப் போற்று படங்களுக்கு நடுவே ஓடிடியிலும் தன் முத்திரையைப் பதித்தார் சுதா.

கோவிட் -19 காலகட்டத்தில் சந்தர்ப்பவசத்தால் ஒன்றிணைந்த இரண்டு வயோதிக ஆண், பெண் இடையே முளைக்கும் காதலை காட்டியது ‘புத்தம்புது காலை’யில் இடம்பெற்ற ‘இளமை இதோ இதோ’. காதல் அரும்பும்போது மனம் இளமையாகும் என்பதைக் காட்ட ஜெயராம், ஊர்வசியின் இளம் பிரதிபலிப்புகளாக காளிதாஸ், கல்யாணி ஜோடியைக் காட்டியிருந்தார்.

உண்மையில், ‘இறுதிச் சுற்று’, ‘சூரரைப் போற்று’ இரண்டு படங்களுமே தோல்விகளால் நிலைகுலையாத மனம் கொண்டவர்களை நாயகர்களாக முன்னிலைப்படுத்தியவை

‘பாவ கதைகள்’ ஆந்தலாஜியில் இடம்பெற்ற ‘தங்கம்’, தன் தோழன் மீது காதல் கொள்ளும் ஒரு மனிதனைப் பற்றிச் சொல்லியது. இதில் சாந்தனுவை ஒருதலையாகக் காதலிப்பவராக காளிதாஸின் பாத்திரம் வடிக்கப்பட்டிருந்தது. மூன்றாம் பாலினத்தவரை அருவருப்பாக நோக்கும் ஒரு சமூகத்தில், அது தொடர்பான கதையை அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் காட்சிப்படுத்தியிருந்தார் சுதா. இவ்விரண்டு படைப்புகளிலும் அவரது கதாபாத்திரங்கள் கனவுலகில் உலாவுபவை போன்றிருந்தன.

தொடர்ந்து யதார்த்தத்துடனும் கற்பனைப் பிரவாகத்துடனும் தனது பாத்திரங்களையும் கதை நிகழ்வுகளையும் கோத்து வருகிறார் சுதா. அவரது அடுத்த படம் கூட ஓர் உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டது என்று தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. மேலே சொன்ன அனைத்தையும் சேர்த்துப் பார்த்தால், உண்மையுடன் சரியான விகிதத்தில் புனைவைக் கலந்து பார்வையாளருக்கு விருந்து பரிமாறுபவராக, நம்பிக்கையை ஊட்டும் ஆசானாக, மனநிலையை மாற்றும் மருத்துவராகத் தென்படுகிறார்.

‘உன்னால் முடியாது என்று யாராவது சொன்னால் அதனை முயல்வது என் இயல்பு’ என்று சில ஆண்டுகளுக்கு முன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார் சுதா. சாதனை படைக்கத் துடிப்பவர்களுக்கே உரிய இயல்பு அது.

சுதா கொங்கரா தனது அடுத்த படைப்பிற்காக ’சிறந்த இயக்குநர்’ விருதை வெல்ல வேண்டும். ‘சூரரைப் போற்று’வுக்குக் கிடைத்த அங்கீகாரம் நிச்சயம் அதற்கான உத்வேகத்தை அவருக்குத் தரும்!

Share the Article

Read in : English

Exit mobile version