Read in : English
கள்ளக்குறிச்சி அருகே கனியாமூரில் உள்ள சக்தி இன்டர்நேஷனல் பள்ளியில் கடந்த ஞாயிற்றுகிழமை நடந்த போராட்டத்தில் திடீரென்று வன்முறை வெடித்து பெருங் கலவரமாக மாறியதற்கு பின்னணி என்ன என்பது இன்னமும் தெளிவாகமாமல் உள்ளது. இந்த வன்முறைக்குப் பின்னணியில் இருந்தது யார் என்பதும் இதுவரை தெரியாமல் உள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை சக்தி இன்டர்நேஷனல் பள்ளி முன்பாக போராட்டம் நடத்துவதற்காகக் கூடிய கூட்டத்தினருக்குக்கூட இப்படி ஒரு வன்முறை நடக்கப் போகிறது என்பது தெரிந்திருக்காது. இறந்த மாணவி ஸ்ரீமதியின் மரணத்துக்கு நீதி கேட்டு அவரது பெற்றோரும், உறவினர்களும், நண்பர்களும் மட்டுமே பள்ளி முன்பாக போராட்டம் நடத்தப் போகிறார்கள் என்ற எண்ணத்தில், மிகக் குறைவான எண்ணிக்கையிலான காவலர்களை பள்ளி வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
திடீரென்று, எங்கிருந்துதான் அவ்வளவு மக்கள் சாரை சாரையாக வந்தார்களோ, தெரியவில்லை. இரண்டு சக்கர வாகனங்களிலும், மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களிலுமாக மக்கள் பள்ளியின் முன்பாக கூடத் துவங்கினர். விபரீதம் நடக்கப் போகிறது என்று காவல் துறையினர் எண்ணி நடவடிக்கை எடுப்பதற்குள் பள்ளி வளாகம் முழுவதும் வன்முறை வெறியாட்டங்கள் நடந்து முடிந்து விட்டன.”சற்றேறக்குறைய மூன்று கோடி ரூபாய்க்கும் அதிகமான பள்ளியின் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன” என்கிறார் பள்ளி வளாகத்தில் பாதுகாப்புக்கு வந்திருந்த காவல் துறை அதிகாரி ஒருவர்.
ஜூலை 13ஆம் தேதி காலை, ஸ்ரீமதி விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டது. மாணவியின் இறப்பில் சந்தேகம் இருக்கிறது என்று பெற்றோர் தரப்பில் கூறப்பட்டதை அடுத்து, மாணவியின் இறப்பை சந்தேக மரணம் எனக் குறிப்பிட்டு கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். குற்றம் செய்வதர்களைக் கைது செய்யக் கோரி அமைதியாகத்தான் முதலில் போராட்டம் நடந்து வந்தது.
“சற்றேறக்குறைய மூன்று கோடி ரூபாய்க்கும் அதிகமான பள்ளியின் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன” என்கிறார் பள்ளி வளாகத்தில் பாதுகாப்புக்கு வந்திருந்த காவல் துறை அதிகாரி ஒருவர்
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமையன்று போராட்டக்காரர்கள் பள்ளிக்கு உள்ளேயும் வெளியிலும் பொருட்களைச் சூறையாடி, பஸ்களுக்குத் தீவைத்து நடத்திய வன்முறைகளைத் தொலைக்காட்சியில் பார்த்தவர்கள் அதிர்ந்துபோனார்கள். பக்கத்து மாவட்டங்களிலிருந்து போலீசார் கொண்டுவரப்பட்டு சுமார் நான்கு மணி நேரம் கழித்தே நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கள்ளக் குறிச்சி, சின்ன சேலம் பகுதியில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சக்தி இன்டர்நேஷனல் பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் செல்வகுமார் தெரிவித்தார். வன்முறையில் ஈடுபட்டதாக 300க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். தங்களுக்கும் இந்த வன்முறைக்கும் சம்பந்தமில்லை என்று இறந்து போன மாணவியின் பெற்றோர்கள் தெரிவித்துவிட்டனர்.
மேலும் படிக்க:
ஜேஈஈ, நீட் தேசிய நுழைவுத் தேர்வுகளில் தமிழகத்திற்கு ஆர்வம் பிறந்துவிட்டதா?
பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழப்பு சம்பவத்தில் அனைத்துக் கோணங்களிலும் விசாரணை நடத்தப்படும் என்று உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி தெரித்துள்ளார். இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. காவல் துறை தலைவர் சைலேந்திர பாபு உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் இரண்டாம் நாளாக திங்கட்கிழமையும் அந்தப் பகுதியில் மீண்டும் வன்முறை தலைதூக்காமல் இருப்பதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
“பள்ளி அருகே நடந்த வன்முறை சம்பவம் கோபத்தில் நடந்த வன்முறை சம்பவமாகத் தெரியவில்லை. திட்டமிட்ட வன்முறை சம்பவம் போல தெரிகிறது. காவல் துறை சட்டத்தை முறையாக அமல்படுத்தவில்லை என்று கருத்துத் தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், வன்முறையின் பின்னணியில் யார் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்” என்றும் உத்தரவிட்டுள்ளது.
அந்த மாணவியின் உடலை மறுபடியும் உடற்கூராய்வு செய்ய அனுமதி அளித்த சென்னை உயர்நீதிமன்றம், மாணவியின் தந்தை வழக்கறிஞருடன் இருக்கவும் அனுமதித்துள்ளது. அதன் பிறகு, மாணவியின் உடலை வாங்குவதற்கு பெற்றோர் எந்தப் பிரச்சினையும் செய்யக்கூடாது என்றும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
வன்முறையில் ஈடுபட்டதாக 300க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். தங்களுக்கும் இந்த வன்முறைக்கும் சம்பந்தமில்லை என்று இறந்து போன மாணவியின் பெற்றோர்கள் தெரிவித்துவிட்டனர்
“அந்தப் பள்ளியின் நிர்வாகத்தினர், எந்த ஒரு அரசியல் கட்சியையும் சார்ந்து போனது கிடையாது. “ஆளுங்கட்சியினராக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியினராக இருந்தாலும் சரி, சிபாரிசு என எதற்குமே பள்ளியினுள் நுழைய முடியாது”” என்று கூறும் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் எஸ்.பாஸ்கர், “சமீபத்தில், இப்பள்ளி வளாகத்தில் ஆர்எஸ்எஸ்அமைப்பின் பயிற்சி வகுப்பு நடந்தது” என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்.
நீதிமன்றம் கூறுவதுபோல, இது திட்டமிட்ட வன்முறையாக இருந்தால் அதைக் கண்டறிய வேண்டியது காவல் துறையினரின் கையில் உள்ளது. மாணவியின் மரணத்துக்குக் காரணமானவர்கள் என்று கண்டறியப்படுவர்கள் தண்டிக்கப்படுவதுடன், வன்முறை செயல்களுக்குப் பின்னணியில் யார் இருந்திருக்கிறார்கள் என்பதும் கண்டறியப்பட வேண்டியது முக்கியம்.
பள்ளிக்கு எதிராக ஒட்டு மொத்த மக்களின் கோபம் மற்றும் ஆத்திரம், வன்முறையாக மாறியதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்பது விசாரணையில்தான் தெரிய வரும்.
அமைச்சர்கள் எ.வ. வேலு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கணேசன் ஆகியோர் கலவரம் நடந்த பள்ளியை நேரில் பார்வையிட்டனர். ‘’சமூக வலைத் தளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளன. மாணவர்கள் என்ற போர்வையில் சில விஷமிகள் இந்த வன்முறையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
அரசுக்கு அவப் பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த கலவரம் நடத்தப்பட்டுள்ளது. இந்தக் கலவரத்தைத் தூண்டியவர்களையும் கலவரத்துக்குக் காரணமானவர்களையும் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று அமைச்சர் எ.வ. வேலு நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, தனியார் பள்ளிகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் செய்ய வேண்டும் என்று தனியார் பள்ளி நிர்வாகத்தினர் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளனர்.
Read in : English