Site icon இன்மதி

பார்த்திபன் இயக்கிய இரவின் நிழலில்: இருளைக் கிழிக்கும் வெளிச்சக் கீற்று!

(Photo credit: Iravin Nizhal Twitter page)

Read in : English

இயக்குநர் பார்த்திபன் எழுதி, இயக்கி, நடித்து தயாரித்திருக்கும் ‘இரவின் நிழல்’ படம் வித்தியாசமானது. வித்தியாசம், அரிது, சாதனை, சாத்தியமில்லாதது, ஆச்சர்யத்தின் உச்சம் என்று பல்வேறு வார்த்தைகள் சர்வசாதாரணமாகப் புழங்குமிடம் திரையுலகம். ஆனால், அவ்வார்த்தைகளுக்கு அர்த்தம் தரும் வகையில் எப்போதாவது தான் சில படைப்புகள் காணக் கிடைக்கும்.

இயக்குநர் பார்த்திபனின் இரவின் நிழலில் அவற்றிலொன்று. கேமிராவை இயக்கி நிறுத்தும் கால இடைவெளி ரொம்பவும் குறுகிக் கொண்டிருக்கிற காலகட்டத்தில், ஒரேமூச்சாக ஒரே ஷாட்டில் ஒரு திரைப்படத்தை ஆக்கியிருக்கிறார்.

’சிங்கிள் ஷாட்’ படம் என்றவுடன் ஒரு நபரையோ அல்லது ஒரு இடத்தையோ அல்லது ஒரு நிகழ்வையோ சுற்றி வருவது போலல்லாமல், ஒரு மனிதனின் வாழ்க்கையில் வெவ்வேறு காலகட்டத்தில் நிகழ்ந்த சம்பவங்களை முன்பின்னாக ‘நான் – லீனியர்’ முறையில் கதை சொல்லியிருக்கிறார். ‘நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறோம் பார்த்தீர்களா’ என்பதை முன்பாதியில் இடம்பெற்ற ‘மேக்கிங்’ வழியாக முதலிலேயே சொல்லிவிடுகிறார். ஏதேனும் ஒரு இடத்தில் தவறு நடந்தால்கூட பூஜ்யத்திலிருந்து தொடங்க வேண்டுமென்ற விபரீத விளையாட்டைக் கைக்கொள்வது எவ்வளவு கடினம் என்று அதில் விளக்குகிறார்.

விளைவு, அறிவியல், கணிதம், கற்பனைத்திறன் என்று பலவற்றை உள்ளடக்கிய காட்சியாக்கம் பற்றிய அடிப்படை அறிவில்லாதவர் கூட ’இது ஒரு பிரமிக்கத்தக்க முயற்சி’ என்று பாராட்ட முடிகிறது. இடைவிடாத கைத்தட்டல்களுடனே ‘இரவின் நிழல்’ படம் தொடங்குகிறது.

ஒரு மனிதனின் வாழ்க்கையில் வெவ்வேறு காலகட்டத்தில் நிகழ்ந்த சம்பவங்களை முன்பின்னாக ‘நான் – லீனியர்’ முறையில் கதை சொல்லியிருக்கிறார்

குப்பைத்தொட்டியில் அனாதாரவாக வீசப்பட்ட ஒரு குழந்தை வளர்ந்து பெரியவனாகி சமூகத்தைச் சீரழிக்கும் பல குற்றங்களைப் புரிந்து, இறுதியில் ஒரு பெண்ணின் மீதான காதலால் நல்ல வழிக்குத் திரும்புவதைச் சொன்னது பார்த்திபனின் முதல் படமான ‘புதிய பாதை’. தனி ஒருவனாக அக்குழந்தையால் இந்த உலகை எளிதாக எதிர்கொள்ள முடியுமா என்பது உட்பட தன்னை நோக்கிக் குவிந்த பல்வேறு ‘லாஜிக்’ கேள்விகளை வரிசைப்படுத்தி ‘இரவின் நிழல்’ கதையை எழுதியிருக்கிறார் பார்த்திபன். இதைச் சொன்னவுடனே, படத்தின் உள்ளடக்கம் என்னவென்று புரிந்திருக்கும்.

வீட்டை விட்டு ஓடிவந்து தெருக்களில் திரியும் ஒரு சிறுவன் பாலியல் அத்துமீறலுக்கு ஆளாகி, அதன் தொடர்ச்சியாக போதைப்பொருள் விற்பவனாக மாறி, பருவ வயதில் காதலியினால் ஏமாற்றப்பட்டு கொடுஞ்செயல்கள் புரியத் தயாராகும்போது, அம்மனிதனின் வாழ்வில் தென்றல் போல ஒரு பெண் வருகிறார். அவரது வரவும் நிலையற்றதாகும்போது, நிம்மதிக்கான தேடலைத் தொடங்குகிறார் அந்த நபர். ஒரு போலிச்சாமியாரின் நிழலில் இளைப்பாறுகிறார். அது, அவரது வறுமை நிறைந்த வாழ்வை புரட்டிப் போடுகிறது.

கூடவே, தாங்க முடியாத குற்றவுணர்ச்சியை நிரந்தரமாகப் போர்த்துகிறது. அதிலிருந்து அவரால் விடுபட முடிந்ததா, குறைந்தபட்சமாக ஆசுவாசப்பட முடிந்ததா என்பதே ‘இரவின் நிழல்’ படத்தின் கதை.

புதிய பாதையின் இன்னொரு பதிப்பாக இக்கதையைக் கருதலாம். அதிலிருந்த ‘சீதா’வின் சீதா பாத்திரம் இதில் லட்சுமி, சிலக்கம்மா, பார்வதி என்று மூன்று பாத்திரங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. முன்னதில் இருந்த கதை நிகழ்வுகளும் கூட இதில் வெவ்வேறு அளவில் பிரதியெடுக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், அதில் நிரம்பியிருந்த அறம், கதை முடிவில் சொல்லப்பட்ட நீதி, திரைக்கதையில் பரவியிருந்த சுவாரஸ்யங்கள், அப்படம் ஏற்படுத்திய அழுத்தம் இதில் இருக்கிறதா என்றால் இல்லை என்றே சொல்லவேண்டும். அதே நேரத்தில், இப்படியொரு திரைக்கதையை ஒரேமூச்சில் சொல்லிவிடுவது எளிதா என்றால், அதற்கும் ‘இல்லை’ என்றே சொல்ல வேண்டும்.

ஒரேயொரு நபரை முன்னிறுத்தி ‘ஒத்த செருப்பு’ தந்தவர், ஒரேயொரு ஷாட்டில் முழுப்படத்தையும் எடுக்க முனைந்ததில் ஆச்சர்யமில்லை. அதற்காக வெறுமனே ‘ஹேண்டி’யாக கேமிரா நகர்வுகளை அமைக்காமல் ஒவ்வொரு காட்சியையும் வெவ்வேறு முறையில் அடுத்த காட்சியை நோக்கி நகர்த்தியிருப்பதும், அதற்கேற்ப நடிப்புக் கலைஞர்களையும் செட்டையும் ஒளியமைப்பையும் ஒரு பரப்புக்குள் சுழல விட்டிருப்பதும் அசாத்தியமான விஷயம்.

மேலும் படிக்க:

விஜய் சேதுபதி நடித்த மாமனிதன்: கொண்டாடச் செய்யும் இளையராஜா இசை! 

குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல்கள்: முகமூடிகளைக் கழற்றும் சுழல்!

அதனாலேயே இரண்டாண்டுகளுக்கு முன் ஹாலிவுட்டில் வெளியான சாம் மெண்டஸின் ‘1917’ எப்படி இடைவிடாத கேமிரா நகர்வுகளால் நம்மை பிரமிப்பில் ஆழ்த்தியதோ, அதற்கு இணையான உணர்வை நம்முள் தோற்றுவிக்கிறது ‘இரவின் நிழல்’.

ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன், கலை இயக்குனர் விஜய் முருகன், ஒப்பனை மற்றும் ஆடை வடிவமைப்பைக் கையாண்ட கலைஞர்கள் மட்டுமல்லாமல் அவர்கள் ஒவ்வொருவரின் தனிக்குழுவும் கூட இம்முயற்சிக்காகப் பம்பரமாகச் சுழன்றிருக்கிறது.

ஒரு காட்சியில் வெளிப்படுத்திய உணர்வின் எச்சம் முழுதாக முகத்தைவிட்டு அகலாமல் இருக்கும் கால இடைவெளியில் உடையையும் ஒப்பனையையும் சட்டென்று மாற்றிவிட்டு அடுத்த காட்சியின் தன்மையோடு ஒட்டுவதற்கு அளப்பரிய ஆர்வம் வேண்டும். கதையின் நாயகன் நந்துவாக நடித்துள்ள சிறுவன், அனந்தகிருஷ்ணன், சந்துரு, பார்த்திபன் தொடங்கி சினேகா, ‘மின்னலே’ டேனி, பிரிகிடா சாகா, வரலட்சுமி, ரோபோ சங்கர், சாய் பிரியங்கா ரூத் என்று பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஒவ்வொருவரும் இப்பாராட்டுக்குத் தகுதியானவர்கள்.

பார்த்திபனின் குழந்தையாக நடித்த சிறுமியும் கூட இதில் விதிவிலக்கல்ல என்பதுதான் நம் ஆச்சர்யத்தை அதிகப்படுத்துகிறது. ஆதலால், இப்படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவரின் உழைப்பும் சிகரம் தொட்டிருக்கிறது.

ஒட்டுமொத்தமாகப் படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவரையும் பாராட்டினாலும், அவர்களையெல்லாம் மொத்தமாக ஒரு பரப்புக்குள் அடக்கிய இயக்குநர் பார்த்திபனின் கற்பனையையும் திட்டமிடலையும் ஆச்சர்யமூட்டும் உழைப்பையும் தனியாகத்தான் பாராட்ட வேண்டும்

வெறுமனே ஒரு திரைப்படமாகப் பார்த்தால், இக்கதையின் ஜீவநாடியாக இருப்பது பிரிகிடாவின் பாத்திரம் மட்டுமே. அதற்கேற்றவாறு, அவரிடம் இருந்து அழுத்தமான நடிப்பு வெளிப்பட்டுள்ளது. போலவே, அவரது அறிமுகத்தின்போது ஒலிக்கும் ‘மாயவா.. தூயவா..’ பாடல் படம் பார்த்து முடித்தபின்னும் நம் மனதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில், அருவருப்புகளை அள்ளிவீசும் ஒரு கதையில் ரசிகர்களின் மனம் சிதைந்துவிடாதபடி காப்பது ஏ.ஆர்.ரஹ்மானின் இசைதான்.

ஆரம்ப டைட்டிலில் ஒலிக்கும் ‘காயம்’ தொடங்கி இறுதியாக நம்முள் நிறையும் ‘பாபஞ் செய்யாதிரு மனமே’ வரை ஆறு பாடல்களையும், காட்சிகளோடு ஒட்டிய பின்னணி இசையையும் தந்து நம்மை ஆசுவாசப்படுத்துகிறார். இரண்டாவது முறை பார்த்திபன் கொட்டியிருக்கும் உழைப்பை அணு அணுவாக ரசிப்பதற்கு இவர்கள் இருவர் மட்டுமே துணை நிற்கின்றனர்.

விளிம்புநிலையில் வாழும் ஒரு மனிதனைப் பற்றிய கதை என்றால், ‘டெம்ப்ளேட்’டாக நம் மனதில் என்னவெல்லாம் தோன்றுமோ அதெல்லாமே ‘இரவின் நிழலில்’ படத்தில் நிறைந்திருக்கிறது. அரை நிர்வாண காட்சிகளும் அருவெருப்பூட்டும் பாலியல் வக்கிரங்களும் கூட கதையில் இடம்பெறுகின்றன. ’வித்தியாசமான படம்’ என்று தியேட்டருக்கு வருபவர்களைத் தடுக்கும் ஒரேயொரு விஷயமும் கூட அதுதான்.

போலவே, சுருங்கச் சொல்லி விளக்குதல் எனும் அம்சத்தையும் இத்திரைக்கதையில் நிரப்பியிருக்கிறார் பார்த்திபன். தொண்ணூறுகளில் வெளியான ‘மாப்பிள்ளை’ படப்பிடிப்பில் ரஜினிகாந்தை காட்டுவது உட்பட பல விஷயங்கள் இக்கதையில் இடம்பெற்றாலும், அவையெல்லாமே சட்டென்று நம் பார்வையில் படுவதற்குள் மறைந்துவிடுகின்றன. இது நம்முள் அரைகுறையான புரிதலையே ஏற்படுத்துகிறது.

வரலட்சுமி மற்றும் ரோபோ சங்கர் ஏற்று நடித்த பாத்திரங்கள் மிகச்சில நிமிடங்கள் இடம்பெறுவது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பொய்யாக்குகிறது. கிளைமேக்ஸில் ரோபோ சங்கர் பாத்திரத்தைக் கொஞ்சம்கூட காட்டாமல் விட்டிருப்பது சட்டென்று படம் முடிந்த உணர்வை உருவாக்குகிறது.

இதையெல்லாம் தாண்டி ‘பேஜாரா உய் உய்..’ என்ற குத்துப்பாடலும் ‘மாயவா.. தூயவா..’ எனும் செம்மைப்பாடலும் அற்புதமாக ‘கொரியோகிராபி’ செய்யப்பட்டிருக்கின்றன. ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட ஒரு படத்தில் அவற்றை முன்னெடுத்ததற்காக பாபா பாஸ்கர், சாந்திக்கு தனியாக பாராட்டுகளைச் சொல்லியாக வேண்டும்.

ஒட்டுமொத்தமாகப் படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவரையும் பாராட்டினாலும், அவர்களையெல்லாம் மொத்தமாக ஒரு பரப்புக்குள் அடக்கிய இயக்குநர் பார்த்திபனின் கற்பனையையும் திட்டமிடலையும் ஆச்சர்யமூட்டும் உழைப்பையும் தனியாகத்தான் பாராட்ட வேண்டும்.

அதற்குப் பதிலாக, இதே போன்றதொரு முயற்சியை அவர் வேறொரு கதைக்களத்தில் மிகப்பிரமாண்டமான பட்ஜெட்டில் மேற்கொண்டு, உலகம் முழுக்கவிருக்கும் ரசிகர்களை மீண்டும் மீண்டும் திரையரங்குகளுக்கு வரச் செய்ய வேண்டுமென்பதே நம் ஆசை.

அதுவே, அவரது உழைப்புக்கேற்ற சரியான மரியாதையாக இருக்கும். கொஞ்சமும் சாத்தியமில்லாத அந்த இருளைக் கிழிக்கும் வெளிச்சக்கீற்றாக நம்முள் பாய்கிறது ‘இரவின் நிழல்’.

Share the Article

Read in : English

Exit mobile version