Site icon இன்மதி

ஈபிஎஸ் அடுத்த மூவ்: ஓபிஎஸ் வசம் உள்ள எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி விரைவில் பறிப்பு?

அதிமுக கட்சி நிர்வாகிகளிலும், அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களிலும் பெரும்பான்மையானவர்களை ஈபிஎஸ் கையில் வைத்திருக்கும் சூழ்நிலையில், அண்மையில் நடந்த உள்ளாட்சி அமைப்புகளில் காலி இடங்களுக்கான இடைத்தேர்தலில் கட்சியின் இரட்டை இலைச் சின்னத்தை பயன்படுத்த முடியாமல் போய்விட்ட சூழ்நிலை தொடருமானால் என்ன ஆகும் என்ற கவலையும் ஈபிஎஸ் தரப்புக்கு நிச்சயம் இருக்கும் (Photo credit: AIADMK Twitter page)

Read in : English

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பதவியை பொதுக் குழுத் தீர்மானத்தின் மூலம் பறித்த ஈபிஎஸ், ஓபிஎஸ் வசம் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் விரைவில் பறித்துவிடுவார். இதுதான் ஈபிஎஸ் எடுக்கும் அடுத்தகட்ட நகர்வாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கு முன்னோட்டமாக, எதிர்க்கட்சித் துணைத் தலைவராக உள்ள ஒபிஎஸ், அவரது ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியயோர் அதிமுகவிலிருந்து விலக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவைத் தலைவருக்கு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் அதிமுகவுக்கு 65 உறுப்பினர்கள் உள்ளனர். பெருவாரியானவர்கள் எடப்பாடி ஆதரவாளர்களாக உள்ள நிலையில், விரைவில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தைக் கூட்டி, ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, வேறு ஒருவர் புதிய எதிர்க்கட்சித் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், ஓபிஎஸ் தலைமையிலான அணியை தனி அணியாக அங்கீகரிப்பது குறித்த முடிவு சட்டப்பேரவைத் தலைவர் கையில் உள்ளது.

ஓபிஎஸ் அணிக்கு ஆதரவாக மக்களைவையிலும் மாநிலங்களவையில் தலா ஓர் இடம்தான் உள்ளது. மாநிலங்களவையில் உள்ள மூன்று உறுப்பினர்கள் எடப்பாடி ஆதரவாளர்கள்.

தேர்தல் ஆணையத்தையும் நீதிமன்றத்தையும் நாடி இரட்டை இலை சின்னத்தையாவது முடக்கி விடுவது என்பதுதான் தற்போது ஓபிஎஸ் கையில் உள்ள முக்கிய ஆயுதம்

ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழகம் அருகே நிகழ்ந்த கலவரம் காரணமாக, தலைமை அலுவலகத்துக்குச் சீல் வைக்கப்பட்டு, Êஇடைக்காலப் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி உடனடியாக அங்கு வர முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. இது ஓ. பன்னீர்செல்வத்துக்குக் கிடைத்த சின்ன ஆறுதல் அவ்வளவுதான்.

அ.தி.மு.க தலைமை அலுவலகம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவை அடுத்துதான், கோட்டாட்சியரை அணுகி அவரது அனுமதியுடன்தான் எந்த அணியும் அதிமுக தலைமைக் கழகத்தில் நுழைய முடியும். அதிமுக தலைமைக்கழக அலுவலகம் யாருக்கு என்பது முடிவாகும் வரை அதிமுக தலைமைக் கழகம் பூட்டிக் கிடப்பது தவிர்க்க முடியாதது.

மேலும் படிக்க:

அதிமுக ஒற்றைத் தலைமை: நம்பர் ஒன் வாய்ப்பைப் பிடிக்க முடியாத இன்னொரு நெடுஞ்செழியனா, ஓ. பன்னீர்செல்வம்? 

அதிமுக கட்சி ஈபிஎஸ் கையில்; சட்டத்தின்பிடி ஓபிஎஸ் கையில்: வெற்றி யாருக்கு?

எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ஜானகி ஒரு அணியாகவும் ஜெயலலிதா மற்றொரு அணியாகவும் இருந்தபோது, 1988இல் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் முதன் முறையாக மூடப்பட்டது. அதையடுத்து, 1990இல்அதிமுகவிலிருந்து திருநாவுக்கரசு வெளியேறும் சூழ்நிலையில் அதிமுக தலைமை அலுவலகம் சிறிது காலம் மூடப்பட்டு, நீதிமன்ற உத்தரவை அடுத்து, அதிமுக தலைமை அலுவலகம் ஜெயலலிதா கையில் வந்தது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தற்போது ஈபிஎஸ், ஓபிஎஸ் மோதலால் மூன்றாவது முறையாக மீண்டும் அதிமுக தலைமை அலுவலகம் மூடப்பட்டு கிடக்கிறது. பொதுக் குழுவைக் கூட்டி ஓபிஸை பதவி நீக்கம் செய்தது சரியா, ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஒபிஎஸ், ஈபிஎஸை பதவி நீக்கம் செய்தது சரியா என்பதையெல்லாம் தேர்தல் ஆணையமும் நீதிமன்றமும்தான் தீர்மானிக்க வேண்டும்.

எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு 1989ஆம் ஆண்டில் ஜானகி அணியும் ஜெயலலிதா அணியும் பிரிந்த சூழ்நிலையில் கட்சியின் சின்னமாக இருந்த இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டது. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஏற்பட்ட பதவி போட்டியில் அதிமுகவின் தேர்தல் சின்னத்தை முடக்க உச்சநீதிமன்றம் வரை சென்று போராடி பார்த்தார் டி.டி.வி. தினகரன். ஆனாலும் எதுவும் அவருக்குச் சாதகமாக நிகழவில்லை. முடிவில் தினகரன், அமமுக என்ற தனிக்கட்சியைத் தொடங்க வேண்டியதாயிற்று.

அதிமுக கட்சி நிர்வாகிகளிலும், அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களிலும் பெரும்பான்மையானவர்களை ஈபிஎஸ் கையில் வைத்திருக்கும் சூழ்நிலையில், அண்மையில் நடந்த உள்ளாட்சி அமைப்புகளில் காலி இடங்களுக்கான இடைத்தேர்தலில் கட்சியின் இரட்டை இலைச் சின்னத்தை பயன்படுத்த முடியாமல் போய்விட்ட சூழ்நிலை தொடருமானால் என்ன ஆகும் என்ற கவலையும் ஈபிஎஸ் தரப்புக்கு நிச்சயம் இருக்கும்.

தேர்தல் ஆணையத்தையும் நீதிமன்றத்தையும் நாடி இரட்டை இலை சின்னத்தையாவது முடக்கி விடுவது என்பதுதான் தற்போது ஓபிஎஸ் கையில் உள்ள முக்கிய ஆயுதம். உட்கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் எந்த அளவுக்குத் தலையிடும், தேர்தல் ஆணையத்தின் நகர்வு எந்த திசையில் இருக்கும் என்பது தெரியவில்லை.

ஆனால், பொதுக்குழுவில் இழந்து போன அதிமுக கட்சி ஒருங்கிணைப்பாளர் பதவியை ஒபிஎஸ் மீண்டும் பெற்று தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்பது சந்தேகமே!

1972இல் “நான்தான் தி.மு.க. – தி.மு.க தான் நான் என லாயிட்ஸ் சாலைப் பொது கூட்டத்தில் முழக்கமிட்ட எம்.ஜி.ஆர். அடுத்த சில தினங்களில் அ.தி.மு.க வைத் தொடங்கினார்.

புதிய கட்சி சார்பில் இரட்டை இலைச் சின்னத்தின் போட்டியிட்டு அவரால் ஆட்சியைப் பிடிக்க முடிந்தது. எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு, அவரது மனைவி ஜானகி அணி வசம் அதிமுகவின் பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு இருந்தும் அவரால் முதலமைச்சராகத் தொடர முடியவில்லை.

அவரது ஆட்சி கவிழ்ந்தது. அடுத்து நடைபெற்ற 1989ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் புறா சின்னத்தில் போட்டியிட்ட ஜானகி தேர்தலில் வெற்றி பெற முடியாமல் போனார். அதனால் 23 நாள் முதல்வர் என்பதுடன் ஜானகியின் அரசியல் கனவு முடிந்து போனது.

சேவல் சின்னத்தில் போட்டியிட்ட ஜெயலலிதா அணி 32 இடங்களைப் பெற்று ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவரும் ஆனார். கட்சித் தலைமையையும் அவர் கைப்பற்றினார். பிறகு, அடுத்து வந்த தேர்தலில் பெரும்பான்மை இடங்களைப் பெற்று முதல்வரும் ஆனார். தற்போதைய நிலையில், அதிக நிர்வாகிகளை வைத்திருந்தும் தேர்தலில் ஜெயிக்க முடியாமல் அரசியலைக் கைவிட்ட ஜானகி போல ஈபிஎஸ் ஆவாரா?

அதிக நிர்வாகிகளை வைத்திருந்தும் தேர்தலில் ஜெயிக்க முடியாமல் அரசியலைக் கைவிட்ட ஜானகி போல ஈபிஎஸ் ஆவாரா? ஜெயலலிதாவைப் போல எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ஈபிஎஸ், மீண்டும் முதல்வராக முடியுமா? என்பதை எதிர்காலத் தேர்தல் வெற்றிதான் நிர்ணயம் செய்யும்

ஜெயலலிதாவைப் போல எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ஈபிஎஸ், மீண்டும் மக்களின் பேராதரவைப் பெற்று முதல்வராக முடியுமா? என்பதை எதிர்காலத் தேர்தல் வெற்றிதான் நிர்ணயம் செய்யும். அதன் மூலம்தான் அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை தான் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.

எடப்பாடி பழனிசாமி அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும், பாமக தலைவர் ராமதாஸும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். முன்பு திரைமறைவில் ஓபிஎஸ்ஸை ஆதரித்த பாஜக, தற்போது ஈபிஎஸ் பக்கம் தனது ஆதரவைத் திருப்பியுள்ளதா என்பது போகப் போகத்தான் தெரியும்.

ஓபிஎஸ், சசிகலா பக்கம் போவாரா, தனி அணியாகச் செயல்படுவாரா என்பது ஒருபுறம் இருந்தாலும் கட்சியினரின் பேராதரவைப் பெற்று தேர்தல்களில் பெரிய வெற்றியைப் பெற்று தனது இருப்பை உறுதி செய்யாத வரை, ஓ.பன்னீர்செல்வத்தால் இதுவரை இருந்த இரண்டாம் இடத்தைக்கூட மீண்டும் தக்க வைத்துக் கொள்ள முடியுமா? என்பதும் கேள்விக்குறியே.

ஜெயலலிதா தனக்குப் பிடித்தது அப்பர் பெருமானின் பொன்மொழி என்று சொல்லுவார்: அஞ்சுவது யாதொன்றுமில்லை: அஞ்ச வருவதுமில்லை!

Share the Article

Read in : English

Exit mobile version