Read in : English
தற்போது போர்க்களமாகி மாறியிருக்கும் இலங்கை நிலைமையைத் தமிழர்கள் கூர்மையாகக் கவனித்து வருகின்றனர். இலங்கையின் வடக்கு- கிழக்கு மாகாணத்தில் வரதராஜப் பெருமாள் முதல்வராக இருந்த போது, வவுனியா மாவட்ட பிரதிநிதியாக அரசில் அங்கம் வகித்தவர் வழக்கறிஞர் யசோதரன். இலங்கையில் நடந்து வரும் மாற்றங்கள் குறித்து, கருத்துக்களை இன்மதி.காம் இதழுடன் பகிர்ந்து கொண்டார்.
அவருடன் நடத்திய உரையாடல்.
கேள்வி: தற்போது இலங்கையின் நிலைமை என்ன?
யசோதரன்: இலங்கையில் மக்கள் எழுச்சி மலர்ந்துள்ளது. இதில் அரசியல், சமூக, பொருளாதார மாற்றத்துக்கான கொள்கை திட்டங்கள் உள்ளதா என்று தெரியவில்லை. அதற்குரிய விஷன் எதையும் காண முடியவில்லை. ஆட்சியில் உள்ள கோத்தபய குடும்பத்தை அதிகாரத்தில் இருந்து அகற்றுவதை முன் வைத்தே இந்தப் போராட்டம் நிகழ்கிறது.
கேள்வி: மக்கள் குழு ஜனாதிபதி மாளியை கைப்பற்றியுள்ளது. பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தை எரித்துள்ளது. அதே நேரம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அதிகாரத்தில் இருந்தும் இதை எல்லாம் தடுக்கவில்லை. அப்படியானால், அரசு பிரதிநிதிகளும் இதை ஆதரித்ததாகத்தானே கருத வேண்டியுள்ளது…
யசோதரன்: அப்படி கணிக்க முடியது. இந்த எழுச்சியை இரண்டு விதமாக பார்க்க வேண்டும். வட பகுதியில் தமிழ் மக்கள் உரிமைகள் கோரி போராடிய போது, அரசு இயந்திரம் அமைதி காக்கவில்லை. முழுமையாக ஆயுதப் பிரயோகம் செய்தது. வன்முறையில் ஈடுபட்டது. ஆனால், தென் இலங்கையில் சிங்கள மக்களிடையே ஏற்பட்டுள்ள எழுச்சியை, அரசு இயந்திரமும், அதிகார வர்க்கமும் மிக அமைதியாகவே எதிர்கொண்டு வருகின்றன. மக்கள் எதிர்ப்பை, அரசு இயந்திரம் வன்முறையால் தடுக்கவில்லை. மிக குழப்பமான நிலையிலும் அமைதியாகவே நடந்து கொள்கிறது.
இலங்கையில் மக்கள் எழுச்சி மலர்ந்துள்ளது. இதில் அரசியல், சமூக, பொருளாதார மாற்றத்துக்கான கொள்கை திட்டங்கள் உள்ளதா என்று தெரியவில்லை. அதற்குரிய விஷன் எதையும் காண முடியவில்லை. ஆட்சியில் உள்ள கோத்தபய குடும்பத்தை அதிகாரத்தில் இருந்து அகற்றுவதை முன் வைத்தே இந்தப் போராட்டம் நிகழ்கிறது
கேள்வி: இலங்கையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இன்னும் பொறுப்பில் இருக்கிறது. ராணுவம், போலீஸ் போன்ற பாதுகாப்பு அமைப்புகள் செயல்படாமல் உள்ளன. இந்த நிலையில் அதிகாரத்தை செயல்படுத்துவது யார்?
யசோதரன்: அரசு இருக்கிறது. ஆனால் செயல்படும் அமைப்பாக இல்லை. ராணுவம், போலீஸ் எதுவும் அதற்கு கட்டுப்படவில்லை என்றும் கொள்ளலாம். அவை தன்னிச்சையாக வன்முறையுடன் நடந்து கொள்வதாகக் கொள்ளலாம். கொள்கையோ, வழிகாட்டியோ இல்லாமல் அரசு இயங்குவதாகத்தான் கொள்ள வேண்டும்.
கேள்வி: தற்போதைய நிலைமையில் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே இன்னும் பொறுப்பில் இருப்பதாகத்தானே கொள்ள வேண்டும்?
யசோதரன்: உண்மைதான். சட்டப்படி அரசியல் அதிகாரம் அவரிடம் தான் உள்ளது. தற்போது அது செயல்படுத்தப்படாததாக உள்ளது. அவ்வளவுதான்.
கேள்வி: அப்படியானால் அவர் மீண்டும் அதிகாரத்தை செலுத்தும் வாய்ப்பு உள்ளதுதானே…
யசோதரன்: அப்படி ஒரு நிலைமை ஏற்படலாம். அரசிடம் அதிகாரம் இருந்தும், பிரதமர் இல்லம் எரிக்கப்பட்டுள்ளது. தேசிய இடர்கள் ஏற்பட்டால், ஜனாதிபதி நேரடியாக அதிகாரத்தை செலுத்த வாய்ப்புண்டு. முப்படையும் அவருக்கு சாதகமாக இருந்தால் அவர் மீண்டும் அதிகாரத்தை செலுத்தும் வாய்ப்பு உண்டு.
மேலும் படிக்க: ”இலங்கைத் தமிழர்கள் சிங்களர்களோடு இணைந்து போராடுவது நல்லது” பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்க இலங்கை அரசுக்கு ஐஎம்எஃப் கடன் உதவி கிடைக்குமா?
கேள்வி: உலக நாடுகளில் இது போன்ற புரட்சிகள் ஏற்பட்டுள்ளதே?
யசோதரன்: ஆம். ஆப்கான், லிபியா போன்ற நாடுகளில் இது போன்ற எழுச்சி ஏற்பட்டது. ஆனால் அது மக்களுக்குப் பயன்படவில்லை. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன் ஃபிலிப்பைன்சில் இது போன்ற ஓர் எழுச்சி ஏற்பட்டது. அதன் விளைவுகள் எதுவும் மக்களுக்கு பயனுள்ளதாக அமையவில்லை. துனீசியாவில் நடந்த எழுச்சியும் அப்படியே ஆனது.
கேள்வி: இலங்கையில் ஏற்பட்டுள்ள எழுச்சி எதை நோக்கி செல்லும்?
யசோதரன்: எழுச்சியில் பங்கேற்போர் பெரும்பாலும் சிங்கள இன மக்களே. அவர்களே இந்த கிளர்ச்சியை ஆரம்பித்தவவர்கள். மற்ற மக்களிடம் இது தொடர்பான தாக்கம் மிகக் குறைந்த அளவில்தான் உள்ளது. தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கிலும், கிழக்கிலும் மிக குறைந்த ஆதரவு தான் உள்ளது. இதில் இருந்தே இந்த நாட்டில் இருபிரிவுகள் இருப்பது தெளிவாகத் தெரியும். இதேபோன்ற ஒரு எழுச்சி தமிழ் மக்களால் ஏற்பட்டிருந்தால், அரசு இயந்திரம் என்ன செய்திருக்கும் என்பதை சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.
கேள்வி: இந்த போராட்டம் மக்களுக்கு சாதகமான நிலையை தருமா?
யசோதரன்: சாதகமான விளைவுகளைத் தர வேண்டும் என்று தான் விரும்புகிறோம். ஆனாலும், இதன் ஊடாக சர்வதேச கரங்கள் உள்ளன. வல்லரசுகளின் கையில் இலங்கை மக்களின் வாழ்க்கை உள்ளது. ஏதாவது ஒரு வல்லரசுக்கு இலங்கை பணிந்து போக வேண்டிய நிலைமை கூட ஏற்படலாம்.
கேள்வி: ஜனாதிபதி பதவி விலகப் போவதாக அறிவித்துள்ள, 13 ம் தேதிக்கு பின் என்ன நடக்கும்?
யசோதரன்: கோத்தபய ராஜபக்சே குறைந்தது மூன்று மாதங்கள் மருத்துவ விடுமுறை பெறும் வாய்ப்பு உள்ளது. எனவே, 13ம் தேதி பதவி விலகல் கடிதத்துக்குப் பதிலாகத் தனது மருத்துவ விடுமுறை பற்றிய கடிதத்தை சபாநாயகர் மகிந்த யாப்பா அபயவர்த்தனாவுக்குச் சமர்ப்பித்தாலும் வியப்பில்லை.
அவ்வாறு மருத்துவ விடுமுறை அறிவித்தால், பிரதமராக இருக்கும் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்க நேரிடும்.
பதில் ஜனாதிபதிக்கு சத்தியப்பிரமாணத்தை உச்ச நீதிமன்ற நீதிபதி செய்துவைக்கலாம். அதற்கு நாடாளுமன்றம் கூட வேண்டிய அவசியம் இல்லை.போராட்டக்குழு ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை, ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றைக் கைப்பற்றியுள்ளதால், கோத்தபயாவும், ரணிலும் பதவி இழந்துள்ளதாக சஜித் தரப்பினர் நீதிமன்றத்தில் முன் வைக்கக்கூடும்.
இந்த சட்டச் சிக்கலை எதிர்கொண்டு போராட்டத்தை நியாயப்படுத்தக்கூடிய அளவுக்குப் போராட்டக் குழுவிடம் நிர்வாகத்திறன் இருப்பதாகத் தெரியவில்லை. போராட்டம் வெற்றி என்பது உண்மையே. ஆனால் அடுத்த கட்ட அரசியல் நகர்வு என்ன என்பதைத் தீர்மானிக்க வேண்டிய போராட்டக்குழு, பிரதான அரசியல் கட்சிகளிடம் அந்தப் பொறுப்பைக் கொடுத்துவிட்டு ஜனாதிபதி மாளிகையில் தங்கியிருக்கிறது. வெற்றிபெற்ற அடுத்த கணமே.
நாடாளுமன்றத்தைக் கூட்டு என்று போராட்டக்குழு அழுத்தியிருந்தால் அல்லது போராட்டக் குழு சார்பாக இலங்கை வழக்கறிஞர்கள் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தால், நிச்சயம் சபாநாயகர் நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டிய கட்டாயச் சூழல் உருவாகியிருக்கும்.
ஆனால் அதற்கான சந்தர்ப்பம் தவறவிடப்பட்டுள்ளது. படுகொலை செய்யப்பட்ட முன்னாள் ஜப்பான் பிரதமருக்காக தேசிய துக்க தினத்தை ரணில் அறிவித்திருப்பதால் செவ்வாயன்று நாடாளுமன்றத்தைக் கூட்ட முடியாது.அப்படிக் கூடினாலும், பதில் ஜனாதிபதி, புதிய பிரதமர் யார் என்ற விவகாரங்களைப் பேசுவது துக்க தினத்தை அவமதிப்பதாக அமையும். அதனாலேயே மிக நுட்பமாகச் சிந்தித்து ரணில் விக்கிரமசிங்க தேசிய துக்க தினத்தை அறிவித்திருக்கிறார்.
மறுநாள் 13ம் தேதி போயா (பெளர்ணமி) விடுமுறை. ஆகவே அந்த நாளில் கோத்தபய தனது மருத்துவ விடுமுறையை அறிவித்தால், போயா விடுமுறையில் நாடாளுமன்றத்தைக் கூட்ட முடியாது.
ஆனால் நீதிபதி முன்னிலையில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்ய முடியும். ரணில் ஜனாதிபதியாக வருவதைத் தடுக்க சஜித், அனுரகுமார திஸாநாயக்கா ஆகியோர் கடும் முயற்சி எடுத்து வருகின்றனர். அதற்கு எதிராக முடிந்தவரை நுட்பமான ராஜதந்திர அணுகுமுறையை ரணில் கையாளுகின்றார்.
இந்த வழிமுறைகள் மூலம் ஜனாதிபதியாக ரணில் வருவாரானால், பல சிங்கள அரசியல்வாதிகள் ஒதுங்க நேரிடும். ராஜபக்சே குடும்பமும் காப்பாற்றப்படும்.
வட பகுதியில் தமிழ் மக்கள் உரிமைகள் கோரி போராடிய போது, அரசு முழுமையாக ஆயுதப் பிரயோகம் செய்தது. ஆனால், தென் இலங்கையில் சிங்கள மக்களிடையே ஏற்பட்டுள்ள எழுச்சியை, அரசு இயந்திரமும், அதிகார வர்க்கமும் மிக அமைதியாகவே எதிர்கொண்டு வருகின்றன
கேள்வி: தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரங்கள் செயலிழந்துள்ள சூழலில், வேறுவகையான அதிகார மட்டங்கள் இலங்கையை கைப்பற்ற வாய்ப்பு உள்ளதா?
யசோதரன்: அது நேரடியாக நடக்காவிட்டாலும், வேறுவகையான நெருக்கடிகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அப்படித்தான் நடக்கும் என்றும் கணிக்க முடியாது. ஆனால், இன்றைய நிலையில் இலங்கை ஒரு சக்தியற்ற நாடு. வாங்கும் சக்தி அதற்கு முழுமையாக இல்லை. அதே நேரம், அரசியல் ஸ்திரதன்மையற்ற நிலையும் உள்ளது. எனவே அதுபோல் நிலைமை ஏற்படுவதற்கும் வாய்ப்பு உண்டு.
கேள்வி: மக்கள் கைப்பற்றியுள்ள இலங்கை ஜனாதிபதி மாளிகையில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளையும் பார்க்க முடிகிறதே, எப்படி?
யசோதரன்: ஜனாதிபதி மாளிகையில் விருந்தினர்களுக்கே சில இடங்களில் மட்டும் தான் அனுமதி என்ற நிலை இருந்தது. இப்போது எந்த தடையும் இன்றி வெளிநாட்டவரும் நுழைந்துள்ளனர். இலங்கை இறையாண்மைக்கு விடுக்கப்பட்ட சவாலாகவே இதைக் கொள்ள வேண்டும்.
தமிழர்களில் சில கட்சிகளும் சில நபர்களுமே இந்த பிரச்னைக்குள் உள்ளனர். அது காத்திரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று சொல்ல முடியாது
கேள்வி: குழப்பமான இலங்கை நிலைமையில், தமிழ் மக்கள் சார்ந்த அரசியல்வாதிகள் என்ன முடிவு எடுப்பார்கள்?
யசோதரன்: தமிழர்களில் சில கட்சிகளும் சில நபர்களுமே இந்த பிரச்னைக்குள் உள்ளனர். அது காத்திரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று சொல்ல முடியாது. இலங்கையில் தேசிய இனப்பிரச்னை உட்பட பல முரண்பாடுகள் உள்ளன. தற்போதை போராட்டமே, ராஜபக்சே குடும்பத்தை அதிகாரத்தை விட்டு அகற்றுவதற்காகத்தான் ஏற்பட்டது. அதையே பேராட்டக்குழு நிலை நிறுத்த முயற்சி எடுக்கும். அந்த நிலையில் ஜனாதிபதியின் செயல்பாடுகள் எடுபடாமல் போகும்.
கேள்வி: மக்களுக்கு சாதகமான நிலையை இந்த போராட்டம் தருமா?
யசோதரன்: ஊழலுக்கு எதிராகவோ, மாற்றத்தை முன்னிறுத்தியோ இந்த போராட்டம் நடக்கவில்லை. இலங்கை பன்மைத்துவம் நிறைந்த நாடு. முக்கியமாக இரு இனங்கள் உள்ளன. நான்கு முக்கிய மதங்களை சேர்ந்தோர் உள்ளனர். போராட்டக் குழுவினர் இந்த நிலைகளை உள்வாங்கியிருந்தால் மட்டுமே, மாற்றத்துக்கான வழிமுறையாக அமையும். அதற்கான அறிகுறியோ, அனுசரணையோ இந்த குழுவிடம் காண முடியவில்லை. ஏராளமான முரண்பாடுகள் உள்ளன. அது போகப்போகத்தான் வெளிப்படும்.
Read in : English