Read in : English
ஜூன் 28 அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை மோட்டார் வாகன ஓட்டிகளுக்குத் தேவையில்லாமல் ஹாரன் அடித்துச் சத்தம் எழுப்புவதை நிறுத்துங்கள் என்று ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இது சம்பந்தமாக மின்னணு உறுதிமொழியில் கையெழுத்திட்டு அதைப் பரப்புமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
ஆனால் பெரும்பாலான ஓட்டுநர்கள் அவர்கள் பாட்டுக்கு ஹாரன் சத்தத்தை அசுரத்தனமாக எழுப்பிக்கொண்டு மற்ற சாலைப் பயனர்களைப் பயமுறுத்திவாறே போய்க்கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த சத்தக்காட்டில் முதல்வரின் வேண்டுகோள் காணாமல் போய்விட்டது.
சென்னையில் பல இடங்களில் மாநகரப் போக்குவரத்துக் காவலர்கள் ஹாரனுக்கு எதிரான ஒரு பரப்புரையை மேற்கொண்டார்கள். ஹாரன் அடிக்க மாட்டோம் என்று உறுதிமொழியை எடுத்துக் கொள்பவர்களை சூப்பர்மேனாகவும், சூப்பர்வுமனாகவும் சித்தரித்த அந்தப் பரப்புரை பள்ளிக் குழந்தைகளையும் கவர்ந்தது.
இடைவிடாத ஹாரன் சத்தம் குழந்தைகளைப் பெரிதும் பாதிக்கிறது. அசோக் நகரில் அசோக் பில்லர் ஏரியா போன்ற சில இடங்களில் வர்ணமயமான கார்ட்டூன் பாத்திரங்களைக் கொண்ட செல்ஃபி மையங்கள் உருவாக்கப்பட்டன. இவையெல்லாம் தாறுமாறான ஹாரன் பயன்பாட்டுக்கு எதிரான முயற்சிகள்.
ஜப்பானில் ஹாரன் கருவியின் ஆயுள் ஒரு இலட்சம் ஹாரன் சத்தங்கள். அந்த ஒரு இலட்சம் ஹாரன் சத்தங்களையும் ஒரேமாதத்திலே அடித்துத் தீர்த்துவிட்டார்கள் இந்தியர்கள்
ஆனால் ஒருவாரப் பிரச்சாரம் முடிந்தபின்பு எதுவும் மாறவில்லை, தவறான இடங்களில் சத்தம் எழுப்பிய சில ஹாரன்களை காவலர்கள் கேமராவின் கண்ணுக்கு முன்பே நீக்கினார்கள் என்பதைத் தவிர. மற்றவர்கள் கவலையே படவில்லை. ”மெளனமாக இருந்து ஹாரன் அடிக்கும் வேலையைத் தொடர்ந்து செய்யும்” அவர்களின் கலாச்சாரம் பங்கப்படவில்லை.
உதிரிச் சந்தையில் வாங்கப்பட்டு மோட்டார் வாகனங்களில் பொருத்தப்படும் சில ஹாரன்கள் வண்டிக்கு வழிவிடச்சொல்லி சாலைப் பயனர்களை அதிரடியான சத்தம் எழுப்பி அதட்டும் தன்மை கொண்டவை. சென்னையைப் பொறுத்தவரை மோட்டார் வாகன ஹாரன்கள் நாள் செல்ல செல்ல அதிக சத்தம் கொண்டவையாக மாறிப்போயின. ஹாரன் வேண்டாம் என்ற காவல்துறையின் பிரச்சாரத்திற்கு தனது ஆதரவைத் தெரிவித்த சரித்திர நிபுணர் வி. ஸ்ரீராம், 1980 மற்றும் 1990-களில் முதன்முதலாக ஜப்பானிலிருந்து கார்கள் இறக்குமதி செய்யப்பட்ட போது எல்லாம் நன்றாக இயங்கின, ஹாரன்கள் தவிர என்றார். ஹாரன்கள் சீக்கிரமே தேய்ந்துபோயின.
காரணம், ஜப்பானில் அந்த ஹாரன் கருவியின் ஆயுள் ஒரு இலட்சம் ஹாரன் சத்தங்கள். அந்த ஒரு இலட்சம் ஹாரன் சத்தங்களையும் ஒரேமாதத்திலே அடித்துத் தீர்த்துவிட்டார்கள் இந்தியர்கள். அதனால்தான் இந்தியர்கள் பெரும் சத்தம் எழுப்பும் ஹாரன் கருவிகளை உதிரிச்சந்தையில் வாங்க தலைப்பட்டார்கள்.
ஏன் பெரிய ஹாரன் சத்தம்?
இந்த வினாவுக்கு விடை இந்திய சாலைகளின் திருவிழாப் பாணியிலானப் போக்குவரத்துக் கட்டமைப்பில் இருக்கிறது. பெரிய படைகள் மோதுவது போன்ற காட்சி சாலைகளின் அன்றாடக் காட்சி. கூட்டங்கூட்டமாக கார்கள் பறந்தோடும் அதிரடித் திரட்சி; இருசக்கர வாகனங்களின் தாறுமாறான அணிவகுப்பு; பதற்றத்தோடு விரைந்து செல்லும் பாதசாரிகள்; அங்குமிங்கும் சிதறிக் கிடக்கும் கால்நடைகள்; சாலைகளில் இவை தங்களுக்கான இடத்தைப் பிடிப்பதில் நடக்கிறது ஒரு போராட்டம். தவறு செய்யும் ஓட்டுநர்களை போக்குவரத்துக் காவலர் கண்டுகொள்ளாமல் இருப்பதும் சாலை ஒழுங்கைப் பேணிக்காப்பதற்கு உதவவில்லை.
சென்னையில் வாகனங்களின் ஹாரன் சத்தத்தை அளந்து ஆராய்ச்சி செய்த ஏ. கலைச்செல்வி, மற்றும் ஏ. ராமச்சந்திரையா என்ற இரண்டு ஆராய்ச்சியாளர்கள், பல்வேறு தரப்பான சாலை பயனர்களின் கலவை என்று சென்னை மாநகரத்தை அழைக்கிறார்கள். இந்தப் பெருநகரத்தில் ஆறு இடங்கள் ”ஹாரன் சத்தம் எழுப்புபவர்களின் சொர்க்கமாக” ஏன் மாறிவிட்டது என்பதை ஆராய்ச்சி செய்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ’அப்ளைய்டு அக்கவுஸ்டிக்ஸ்” என்ற இதழில் ஒரு கட்டுரையை அவர்கள் வெளியிட்டார்கள்.
போக்குவரத்துச் சந்திப்புப் பகுதிகளில் சிகப்பு விளக்கு எரியும் நேரத்தில் வாகன ஓட்டிகளிடம் தொற்றிக் கொள்ளும் பொறுமையின்மை ஹாரன் சத்தமாக வெளிப்படுகிறது
அந்த ஆராய்ச்சிகளில் தரப்பட்ட தரவுகள் சராசரி சென்னை சாலைப் பயனர்களுக்குப் பரிச்சயமானவைதான். சென்னையில் பெரிய சாலைகள் அருகே வசிப்பவர்களுக்கும் பணி செய்பவர்களுக்கும் அந்த ஆராய்ச்சி சொல்லும் செய்தி புதிதல்ல. ஆராய்ச்சி செய்யப்பட்ட சாலைகளில் 2 மீட்டர் தூரம் ஹாரன் சத்தத்தின் சராசரி ஒலிஅளவு 116 டிபி(ஏ) என்று அந்தக் கட்டுரை சொல்கிறது; அதிசபட்ச ஹாரன் சத்தங்களின் ஒலியளவுகள் பின்வருமாறு: கோட்டூர்புரம் – 83.2 டிபி(ஏ); அந்த ஏரியாவில் 15 நிமிடங்களில் 798 வாகனங்கள் 125 ஹாரன் சத்தங்கள் எழுப்புகின்றன.
மேலும் படிக்க:
எரிபொருள் சிக்கனத்துக்கா, சென்னை ஆட்டோக்களில் இவ்வளவு சத்தம்?
ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் பயணிகளுக்கும் ஒன்றுபோல நன்மைதரும் ஓர் அமைப்பு உருவாகுமா?
ஐ-டி நெடுஞ்சாலை: 84.5 டிபி (ஏ); 951 வாகனங்களிலிருந்து 143 ஹாரன் சத்தங்கள்; கிண்டி: 91.9 டிபி (ஏ); 1,760 வண்டிகளிலிருந்து 263 ஹாரன் சத்தங்கள். இந்திரா நகர் ஜங்சன்: 91.1 டிபி (ஏ); 912 வண்டிகளிலிருந்து 142 ஹாரன் சத்தங்கள்.
அவர்கள் ஆராய்ச்சி செய்த ஆறு இடங்களில் நான்கு இடங்களில் பதிவான ஹாரன் சத்தங்கள் மட்டுமே மேலே கொடுக்கப்பட்டவை.
ஹாரனடிக்கும் உபகலாச்சாரம்
பொதுவாக ஹாரன் சத்தம் ஆபத்தைச் சுட்டிக்காட்டும் ஓர் எச்சரிக்கையாகவோ அல்லது ஏதோவோர் எதிர்ப்புணர்வைக் காட்டவோ பயன்படுத்தப்படுகிறது. ஆனால் சென்னையில் ஹாரன் அடிக்கும் செயலுக்குப் பின்னால் ஓர் உபகலாச்சாரம் இருக்கிறது
· ஒரு பெரிய வாகனம் முன்னே சென்று கொண்டிருக்கும்போது, பின்னால் வரும் இருசக்கர வாகனத்திற்கு அது வழிவிட வேண்டும். இல்லையென்றால் தொடர்ந்து சத்தம் எழுப்பும் ஹாரன் அந்த ஓட்டுநரை இம்சிக்கும்.
· உள்ளார்ந்த சாலைகளில் சும்மா வேடிக்கைக்காக ஹாரன் எழுப்பும் இருசக்கர வாகனங்களால் ஆபத்து இல்லை; தொல்லையுமில்லை
· பேருந்து நிறுத்தங்கள் பெரும்பாலும் கார்களுக்கும், இருசக்கர வாகனங்களுக்கும் தடையாக உள்ளன. நிறுத்தங்களில் அசையாமல் நிற்கும் பேருந்துகளை வழிவிடச் சொல்லி கார்களிலிருந்தும் இருசக்கர வாகனங்களிலிருந்தும் ஹாரன் சத்தம் தொடர்ந்து வந்து இம்சிக்கும்
· நடைபாதை இல்லாததால் சாலை ஒரங்களில் தள்ளப்படும் பாதசாரிகளை வழிவிடச்சொல்லி பின்னாலிருந்து ஹாரன் சத்தம் வருகிறது; நடப்பதற்குப் பதில் பாதசாரிகள் ஏன் இருக்கர வாகனத்தில் வரக்கூடாது என்றவொரு தர்க்கரீதியிலான கேள்வி எழுகிறது
· உதிரிச்சந்தையில் வாங்கிய அதிரடி ஹாரன்கள் பொருத்தப்பட்ட கவுன்சிலர் முதல் மந்திரி வரையிலான பெரிய மனிதர்களின் கார்கள் எழுப்பும் அணுகுண்டுச் சத்தம் போன்ற ஹாரன் சத்தம் பயமுறுத்துகிறது. பத்தாதற்கு அவர்களது ஸ்கார்ட் வாகனங்களின் சைரன் சத்தம் வேறு
· ஆட்டோக்களில் அதிரடியான ஹாரன்கள் வழக்கமாக இருப்பதில்லை. ஆனால் கிடைக்கும் இடைவெளிகளில் புகுந்து புகுந்து வளைந்து நெளிந்து செல்லும் ஆட்டோக்களைப் பயமுறுத்த தொடர் ஹாரன் சத்தம் எழுப்பப்படுகிறது. மேலும் ஆட்டோக்களின் சரியில்லாத சைலன்சர்களின் தடதட சத்தம் ஹாரனை விட கொடுமையானது
· தனியார் ஆம்னி பஸ்களிலும் லாரிகளிலும் காற்றழுத்த ஹாரன்கள் இருக்கின்றன. பல தொனிகளில் ஒலிக்கும் அந்த ஹாரன்கள் பேருந்து நிலையங்களிலும், புறநகர்ப் பகுதிகளிலும் தாராளமாகப் பயன்படுத்தப் படுகின்றன.
· போக்குவரத்துச் சந்திப்புப் பகுதிகளில் சிகப்பு விளக்கு எரியும் நேரத்தில் வாகன ஓட்டிகளிடம் தொற்றிக் கொள்ளும் பொறுமையின்மை ஹாரன் சத்தமாக வெளிப்படுகிறது
மோட்டார் வாகனங்கள் உருவாக்கும் இந்த ஓசை மாசினால் பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் அதைக் கண்டுகொள்ளாதவர்கள்தான் என்பது ஒரு நகைமுரண். தொடர்ந்து சாலைகளில் ஒலிக்கும் ஹாரன் சத்தத்தில் மாட்டிக் கொள்ளும் காவல்துறை ஊழியர்கள் அவர்களில் ஒரு பிரிவினர்.
100 டெசிபலுக்கு மேலான ஒலியளவு கொண்ட கார் ஹாரன்கள் செவித்திறன் இழப்பை 15 நிமிடத்திற்குள்ளே ஏற்படுத்திவிடும் என்று அமெரிக்காவில் இருக்கும் நோய்க் கட்டுப்பாட்டு மையங்கள் சொல்கின்றன
ஆட்டோக்களில் சைலன்சர்களை நோண்டி வைத்திருக்கும் ஓட்டுநர்களில் பெரும்பாலோனருக்கு ஏற்கனவே காது பாதி செவிடாகியிருக்கும். பெங்களூரில் 40 சதவீத ஆட்டோ ஓட்டுநர்கள் செவித்திறன் இழந்திருக்கிறார்கள் என்று அந்த மாநகரில் உள்ள கெம்பேகவுடா மருத்துவ விஞ்ஞானக் கழகத்தில் பணிபுரியும் எச்.டி.அனிலும் அவரது சகப்பணியாளர் ஒருவரும் இணைந்து நடத்திய ஆய்வில் சொல்லப்பட்டிருக்கிறது.
என்ன செய்யலாம்?
சென்னை மாநகரப் போக்குவரத்துக் காவல்துறை எடுத்திருக்கும் முனைப்பு பாராட்டுக்குரியது. ஹாரன் பிரச்சினை மாநகரத்தின் கவனத்திற்கும், கண்காணிப்பிற்கும் கொண்டுவரப் பட்டிருக்கிறது. இந்த விசயத்தில் தொடர் கண்காணிப்பும் முனைப்பும் தேவை.
சாலைச் சந்திப்புகள்தான் ஆரம்பிப்பதற்கு உகந்த நல்ல இடங்கள். சிக்னல்களில் யாராவது ஹார்ன் அடித்து மற்றவர்களை விலகச் சொன்னால் பொறுமையில்லாத அந்த வாகன ஓட்டியை காவலர் எச்சரிக்கலாம்; தேவைப்பட்டால் அபராதம் கூட விதிக்கலாம்.
போக்குவரத்துக் கட்டுப்பாட்டிலும் கண்காணிப்பிலும் ஒரு கடுமையான அணுகுமுறையைக் கடைப்பிடித்தால் மோட்டார் வாகன ஓட்டிகளுக்குப் பொறுமையுணர்வு ஏற்படும். விதிமீறல் பயம் உண்டாகும்; பொறுமையிழந்து ஹாரன் அடிக்கும் பழக்கமும் குறைந்துவிடும். மும்பையில், போக்குவரத்து சிக்னல்களில் ஆடியோ சென்சார்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன.
ஹாரன் சத்தத்தின் ஒலியளவு 85 டிபி (ஏ)-யைத் தாண்டினால் சிகப்பு விளக்கு மேலும் 90 வினாடிகளுக்கு எரிந்து எல்லோரையும் காக்கவைக்குமாறு சிக்னல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஹாரன் அடிப்பதற்கான உடனடி அபராதம் அதுதான்.
Read in : English