Read in : English
காலையில் இருந்து இரவு வரை பயன்படுத்தி வரும் செய்தி ஊடகங்களை நம்ப முடியுமா என்ற கேள்விக்கு விளக்கமாகப் பதில் அளித்துள்ளார் அறப்போர் இயக்கம் சார்பில் அதன் நிறுவனர் ஜெயராம் வெங்கடேசன். இந்த நியூஸ் மீடியா சொல்வது உண்மையா? இதில் ஏதாவது பின்னணி இருக்கிறதா? உள்நோக்கம் இருக்கிறதா என்ற சந்தேகம் பரவலாக இருக்கிறது.
செய்தி ஊடகங்களின் மீது இருக்கும் நம்பிக்கை குறைந்து வருகிறது. செய்தி ஊடகத்தை நம்பலாமா என்ற இன்மதி தொடர் பகுதியில், லஞ்ச ஒழிப்புக்காக கொள்ளையனே வெளியேறு போன்ற பிரச்சாரங்களை முன்னெடுத்த `அறப்போர் இயக்கம்’ ஜெயராம் வெங்கடேசன் நேர்காணல்:
கேள்வி: மீடியா தன்னுடைய வேலையைச் செய்தால் அறப்போர் இயக்கம் ஜெயராமுக்கு வேலை இருக்குமா?
ஜெயராம் வெங்கடேசன் (அறப்போர் இயக்கம்): அறப்போர் என்பது ஒரு பிரச்சினையை ஆழமாக ஆராய்ந்து அதற்குத் தீர்வு கிடைக்கும் வரைப் போராடுவது. அன்றாட வாழ்வில் உள்ள ஆழமான மக்கள் பிரச்சினைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் மீடியாவுக்கு முக்கியப் பங்கு உண்டு. ஊழல்களை வெளிக் கொண்டு வருவதில் புலனாய்வு இதழியல் பெரும் பங்கு வகிக்கிறது. தற்போது புலனாய்வு இதழியல் குறைந்துவிட்டது. தினமும் நடக்கக்கூடிய விஷயங்களுக்கு ஓடவே எங்களுக்கு நேரம் சரியாக உள்ளது என்று மீடியா நண்பர்கள் கூறுகிறார்கள். மெயின் ஸ்ட்ரீம் மீடியா, பிசினஸ் ஹவுஸாக மாறியதால், புலனாய்வு செய்திகளுக்கு ஆதரவு கொடுப்பதில்லை. சமீபகாலத்தில் இன்டிபென்டன்ட் ஜர்னலிஸத்தைப் பார்க்க முடிகிறது.
வெளியே வராத பல செய்திகள் ஆன்லைன் மீடியாவில் வருகிறது. மக்களும் அதை விரும்பிப் பார்க்கிறார்கள். ஆனால் கோடிக்கணக்கான மக்கள் மெயின் ஸ்டீரீம் மீடியாவைத்தான் பார்க்கிறார்கள். அதில் இந்தச் செய்திகளை எப்படிக் கொண்டு வரப் போகிறோம் என்பதுதான் முக்கியக் கேள்வியாக உள்ளது.
கேள்வி: நீங்க ஒரு ஸ்டோரி கவர் பண்ணி அதை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கும்போது, மீடியாவோட அணுகுமுறை எப்படி இருக்கிறது? நியாயமாக இருக்கிறார்களா? இல்லை, இருட்டிப்பு செய்கிறார்களா?
ஜெயராம் வெங்கடேசன்: எங்களுடைய கடந்த 5, 6 வருட அனுபவத்துல பெரும்பாலும் இருட்டடிப்பு தான் நடக்கிறது. பிரிண்ட் மீடியா என்று சொல்லும்போது, ஆங்கிலப் பத்திரிகைகள் பெரும்பாலும் ஆதாரத்துடன் செய்திகளை வெளியிடுகிறார்கள். ஆனால், தமிழ் பத்திரிகைகள் மொத்தமாக இருட்டிப்பு செய்கிறார்கள். நேர்மையான பத்திரிகையாளர்கள், நல்ல செய்திகளைக் கொண்டுவர முடியவில்லை என்று வருத்தப்படுவாங்க.
கேள்வி: ஆங்கில மீடியா வேறு மாதிரியாகவும் தமிழ் மீடியா வேறு மாதிரியாகவும் அணுகுகிறார்கள். அதற்கு என்ன காரணம்?
ஜெயராம் வெங்கடேசன்: ஆங்கிலப் பத்திரிகைகளில் செய்திகளை வெளியிடுவதற்கான சுதந்திரம் அதிகம் இருக்கிறது. தமிழில் அந்த சுதந்திரம் இல்லை. தமிழ் பத்திரிகைகளை அரசியல் எளிதாகக் கட்டுப்படுத்த முடிகிறது. அரசியல் காரணங்களுக்காகவே தொலைகாட்சிகள் இயங்கி வருகின்றன. ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சிகளும் நடத்தும் மறைமுக விமர்சனங்களை மட்டுமே மெயின் ஸ்ட்ரீம் தொலைக்காட்சிகள் ஒளிபரப்புகின்றன.
செய்திகளை இருட்டடிப்பு செய்வதற்கு அரசு கேபிள் டிவியை நடுநிலை சேனல்கள் காரணம் காட்டுகிறார்கள். அரசு கேபிள் விநியோகம் செய்யக்கூடாது என்ற சட்டம் இருந்தும்கூட, அரசு கேபிள் ஒரு விநியோகஸ்தராக செயல்படுகிறார்கள். இதைப் பயன்படுத்தி மற்ற தொலைக்காட்சிச் சேனல்களைக் கட்டுப்படுத்துகிறார்கள்.
மேலும் படிக்க:
ஊழலுக்கு எதிராக திமுக அரசின் நடவடிக்கைகள்: அறப்போர் இயக்கம் என்ன சொல்கிறது?
செய்தி ஊடகங்களை நம்ப முடியுமா?: சவுக்கு சங்கர் நேர்காணல்
கேள்வி: செய்திக்காகத் தகவல்களை சேகரிக்கும் முறை கஷ்டமானதா?
ஜெயராம் வெங்கடேசன்: கஷ்டம்தான், ஆனால் இன்வேஸ்ட்டிக்கேட்டிவ் ஜெர்னலிஸத்துக்கு தேவையானது, போதுமான நேரமும் நிலையான முயற்சியும், இருந்தால் தகவல் சேகரிப்பது மிகவும் கடினம் என்று சொல்ல முடியாது. இதை வெளியிட ஆறு மாதமோ ஒரு வருடமோ ஆகும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். 2016இல் வைத்திலிங்கம் அமைச்சராக இருந்தபோது அவருடைய மகன் நிறுவனத்துக்காக ரூ.28 கோடிக்கு சொத்து எப்படி வாங்கினார் என்பதை நாங்கள் வெளிக்கொண்டு வந்தோம். இவ்வளவு வருடம் கழித்து, இதை வெளிக்கொண்டு வந்திருக்கிறோம். செய்திப் புலனாய்வுக்காக மீடியா ஒரு தனிக் குழுவை விட வேண்டும். ஊழலும் லஞ்சமும் நேரடியாக பாதிப்பதை மக்கள் உணருகிறார்கள்.
அதை எக்ஸ்போஸ் செய்வதற்கு மெயின் ஸ்டீரீம் மீடியா, புலனாய்வு இதழியலுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். புதிதாக வரும் பத்திரிகையாளர்கள் ஆர்டிஐ எப்படி பண்ண வேண்டும் என்று கேட்பார்கள். ஆனால், சில நாட்கள் கழித்து நீங்க சொன்ன மாதிரி டெய்லி நியூஸ் சேகரிப்புக்குப் போய்விடுகிறார்கள்.
சமூக மாற்றத்துக்காக பாடுபடக்கூடிய நேர்மையான பத்திரிகையாளர்கள் இருக்கிறார்கள். பத்திரிகையாளர்கள் மீது சட்ட ரீதியாக வழக்குத் தொடரப்பட்டாலும் அவர்கள் சேகரித்த உண்மையான தகவல்களையும் ஆர்டிஏ டேட்டாவையும் வைத்து தங்களை நியாயப்படுத்திக் கொள்ள முடியும். நேர்மையான பத்திரிகையாளர்களுக்கு மெயின் ஸ்ட்ரீம் பத்திரிகைகளில் இடம் கொடுப்பது மிகவும் முக்கியம் என்று நான் நினைக்கிறேன்.
கேள்வி: சோசியல் மீடியா பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
ஜெயராம் வெங்கடேசன்: சோசியல் மீடியா சமநிலையாகச செயல்படுகிறது. ஒரு பிரச்சினையை பொது வெளியில் கவனத்துக்குக் கொண்டு செல்ல ஒரு சக்தி வாய்ந்த இடமாக உள்ளது. சோசியல் மீடியாவில் இதழியல் செய்வது ரொம்பவும் பயனுள்ளதாக இருக்கும். சோசியல் மீடியாவில் நிறைய பொய்கள் கலந்து வரும். ஆனால், மெயின் ஸ்ட்ரீம் மீடியாவில் இன்னமும் நம்பகத்தன்மை இருக்கிறது. இதுதான் மெயின் ஸ்ட்ரீம் மீடியாவின் பலமும்.
அதுதான் பலவீனமும்கூட. தகவல்களை விசாரித்துப் பண்ண வேண்டும் என்ற காரணத்தால் பல நியூஸ்கள் வெளியே வராமல் உள்ளன. சோசியல் மீடியாவில் அஞ்சு விஷயங்கள் இருந்தால் அதில் ஒரு விஷயத்துக்குத்தான் ஆதாரம் இருக்கும்.
உணர்ச்சிகரமான செய்திகளை ஏன் பூதாகரப்படுத்திச் சொல்ல மாட்டேன் என்கிறீர்கள் என்று சிலர் கேட்கிறார்கள். அதை அப்படி பண்ணக்கூடாது என்றுதான் நாங்கள் பார்க்கிறோம். ஆதாரத்தை வைத்துதான் பேச வேண்டும். எட்டு ஆதாரத்தை வைத்துக் கொண்டு அதிலே இரண்டு பொய் கலந்து எழுதினால் அது யாருக்கும் தெரியாது. ஆனால் யாருக்கு எதிராக எழுதப்படுகிறதோ அவர்களுக்கு இது பொய் என்று தெரியும். தங்களது விளம்பரத்துக்காக இவ்வாறு எழுதுகிறார்கள் என்று இதைக் கடந்து சென்றுவிடுவார்கள்.
இந்த மாதிரி இதழியலால் மாற்றம் ஏற்படும் வாய்ப்புக் குறைந்து விடுகிறது. காந்தி சொன்ன மாதிரி, சுதந்திரத்தோட தேவையை நாம் மட்டும் உணர்ந்தால் போதாது. காந்தி சொன்னமாதிரி, நாம் சுதந்திரத்துக்காக உண்மையாகப் போராடுகிறோம் என்பதை பிரிட்டிஷாரும் உணர வேண்டும். இதைத்தான் நாங்கள் முக்கியமான விஷயமாகப் பார்க்கிறோம். ஸ்பீக்கிங் ட்ரூத் டூ தி பவர், என்ன வேண்டுமானாலும் இருக்கலாம். எவ்வளவு பெரிய விஷயமாகவும் இருக்கலாம். ஆனால், உண்மையுடன் அதைச் செய்யும்போது மாற்றம் ஏற்படும்.
கேள்வி: சமீபத்துல பொதுவான மக்கள் கருத்து, ஊழல் என்பது இல்லை என்பது போல இருக்கு, அது உண்மையா? மக்களுக்கு அதைப் பற்றி கவலை இல்லையா?
ஜெயராம் வெங்கடேசன்: ஊழல் என்பது இன்னமும் மக்களுக்கு முக்கியமான பிரச்சினையாக இருப்பது உண்மைதான். அவர்களது கண்ணோட்டத்தில் இரு தரப்பினரும் ஊழல்வாதிகளே என்ற கருத்தும் இருக்கிறது. அரசியல்வாதிகள் நேர்மையாக இருக்க வேண்டும் என்று மக்கள் இன்னமும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். மக்கள் பார்த்து உணரும்போதுதான் மாற்றம் ஏற்படும். மக்கள் ஊழல் என்பதை ஒரு பிரச்சினையாக பார்ப்பதால்தான், அரசியல்வாதிகள் அதை ஒரு குற்றச்சாட்டாக வைக்கிறார்கள். Cynicism அப்படி என்கிற சோர்வு மனப்பான்மை பத்திரிகையாளருக்கு இருக்கும். மக்கள் இன்னமும் விழிப்புணர்வுடன்தான் இருக்கிறார்கள். அதனால் பத்திரிகையாளர்களுக்கு நிறைய வேலை இருக்கிறது. சோர்வு ஆனால் நம்மால் எந்த வேலையும் செய்ய முடியாது. ரோடு ஊழல் குறித்து நாம் பேசிய பிறகுதான் பிரிண்ட் மீடியா எழுத ஆரம்பித்தார்கள். அதன்விளைவாக, தமிழ்நாடு முழுவதும் அனைத்து சாலைகளுக்கும் மில்லிங் போடணும் என்று தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த மாற்றத்துக்குக் காரணம் இந்த ஊழலை வெளிக் கொண்டு வந்த பத்திரிகையாளர்கள். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஜனநாயகக் கடமையாக செய்திகளை வெளியிடுகிற மாதிரியான நேர்மையான பத்திரிகையாளர்கள் இருக்க வேண்டி அவசியம் உள்ளது.
Read in : English