Read in : English
பஞ்சாங்கத்தின்படி மங்கள்யான் விண்கலம் செலுத்தப்பட்டது என்று திரைப்பட நடிகர் மாதவன் கூறியதை அடுத்து சர்ச்சை எழுந்துள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பான இஸ்ரோவின் முன்னாள் தலைவர் நம்பி நாராயணன் மீதான பொய் வழக்கை மையமாக வைத்து, மாதவன் நடித்து இயக்கி உள்ள ராக்கெட்ரி படம் ஜூலை 1ஆம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், பழைய பஞ்சாங்கத்துக்கும் இப்போதைய ராக்கெட்ரி படத்துக்கும் தொடர்பு உள்ளதா என்று கேள்வி எழுப்பப்பட்டது.
“பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நம் ஞானிகள், வானவியல் சாஸ்திரத்தை அடிப்படையாக வைத்து பஞ்சாங்கத்தைக் கணித்துள்ளனர். அந்த பஞ்சாங்கத்தின்படி மங்கள்யான் விண்கலம் செலுத்தப்பட்டது. இதன் ஆயுள் ஆறு மாதங்கள் என விஞ்ஞானிகள் கணித்த நிலையில் ஏழு ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. இதற்கு பஞ்சாங்கப்படி விண்கலத்தை அனுப்பி ஒவ்வொரு இயக்கத்தையும் உரிய நேரத்தில் செயல்படுத்தியதுதான் காரணம்” என்று மாதவன் பதில் அளித்தார்.
Almanac என்பதைத் தமிழில் பஞ்சாங்கம் என்று அழைத்த நான் என் அறியாமையை உணர்கிறேன் என்று சமூக வலை தளங்களில் மாதவன் விளக்கம் அளித்துள்ளார்.
மாதவனின் இந்தக் கருத்தை அடுத்து சர்ச்சை எழுந்துள்ளது. பஞ்சாங்கத்தை வைத்துக்கொண்டு செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் அனுப்புவது என்பது முடியாத காரியம் என்று சொல்லி சமூக வலை தளங்களில் மாதவனை விமர்சித்து பதிவுகள் வெளியாயின. இதையடுத்து, “பழைய பஞ்சாங்கம் என்று கேலி செய்வதற்கு நான் தகுதியானவன்தான். Almanac என்பதைத் தமிழில் பஞ்சாங்கம் என்று அழைத்த நான் என் அறியாமையை உணர்கிறேன்” என்று சமூக வலை தளங்களில் மாதவன் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் படிக்க:
மனித குழுக்களின் மரபணுவியல்: தமிழர்களைப் பற்றி என்ன சொல்கிறது?
நலவாழ்வு பராமரிப்பில் முதல் இடத்தில் இருந்தாலும், தமிழ்நாட்டில் தடுப்பூசி போடுவதற்கு தயக்கம் ஏன்?
“2013ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி செவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தை அனுப்பி வைக்க இஸ்ரோ திட்டமிட்டிருந்தது. ஆனால், பசிபிக் பெருங்கடலில் வானிலை சரியில்லாமல் இருந்ததால் அந்த விண்கலத்தை நிலை நிறுத்துவதைக் கணிப்பதில் தாமதம் ஏற்பட்டு, விண்கலம் செலுத்துவது நவம்பர் 5ஆம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டது. இதற்கு பஞ்சாங்கக் கணிப்பு காரணம் அல்ல. செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் செல்லும்போது, அது செவ்வாய் கிரக சுற்றுப்பாதையை அடையும் வரை சரி செய்யப்படுவது உண்டு. இதற்கு நமது பழைய பஞ்சாங்கம் உதவாது” என்று அரசு அமைப்பில் தனது பெயக் குறிப்பிட விரும்பாத மூத்த விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.
“பஞ்சாங்கம் என்றால் அதில் ஐந்து உறுப்புகள். அதில் நட்சத்திரம், திதி, வாரம் கர்ணம், யோகம் ஆகியவை அடங்கியுள்ளன. இதில் கர்ணம், யோகம் ஆகியவற்றும் வானியலுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. உயரத்தையும் வயதையும் சேர்த்தால் அதற்கு எந்த அர்த்தமும் கிடையாது என்பதுபோல இது ஒரு கணக்கு எண் அவ்வளவுதான். போலிக் கணக்கு என்றுதான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு நாள் இரவும் சந்திரன் அருகே இருக்கும் விண்மீன்தான் அன்றைய நட்சத்திரம். 27.3 நாட்களில் வானத்தை முழுமையாக சுற்றி வரும். 27 நாட்களுக்கு 27 நட்சத்திரங்கள். இதைத் துல்லியம் என்று கருதக்கூடாது. திதி என்பது நிலாவின் பிறை. அதாவது ஒரு மணி நேரத்தில் ஒவ்வொரு 30 செகண்டுகளுக்கும் பிறை மாறக்கூடியது. இதுவும் உத்தேசமான கணக்குதான். வாரம் என்பது ஏழு நாட்கள். இதுதான் பஞ்சாங்கம். இங்கிருந்து செலுத்தக்கூடிய ராக்கெட் செவ்வாய் கிரக சுற்றுப்பாதையைச் சந்திக்கக்கூடிய புள்ளியைத் துல்லியமாகக் மூன்று முறை கணக்கிட்டு அந்த இடத்துக்கு செல்லும்படி ராக்கெட்டை அனுப்பவேண்டும். இதற்கு அபாரக் கணக்கு தேவைப்படுகிறது. இது பஞ்சாங்கத்தைப் பார்த்துச் செய்தது என்று கூறுவது மயில்சாமி அண்ணாதுரை போன்ற விஞ்ஞானிகளின் உழைப்பையும் அறிவையும் அவமானப்படுத்துவதுபோல” என்கிறார் அவர்.
இங்கிருந்து செலுத்தக்கூடிய ராக்கெட் செவ்வாய் கிரக சுற்றுப்பாதையைச் சந்திக்கக்கூடிய புள்ளியைத் துல்லியமாகக் மூன்று முறை கணக்கிட்டு அந்த இடத்துக்கு செல்லும்படி ராக்கெட்டை அனுப்பவேண்டும். இதற்கு அபாரக் கணக்கு தேவைப்படுகிறது.
“எவ்வளவோ ஆயிரம் வருடங்களுக்கு முன்பு கணக்கு செய்து வைத்துள்ள பஞ்சாங்கம் என்று மாதவன் குறிப்பிட்ட வார்த்தை தவறு. பொதுவாக விண்வெளி பயணங்களுக்கு almanac என்ற பஞ்சாங்கம் உலகளாவில் பயன்படுத்துவதுதான். நாங்கள் பயன்படுத்துவது ஆண்டாண்டு காலமாக இருக்கக் கூடிய பஞ்சாங்கம் இல்லை” என்று மங்கள்யான் திட்ட இயக்குநராக இருந்த விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
விஞ்ஞானி நம்பி நாராயணன், 1994ஆம் ஆண்டில் உளவு பார்த்ததாக மத்தியப் புலனாய்வுத் துறையினால் தவறுதலாகக் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். 1998இல் அவர் குறறமற்றவர் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தை அடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டார். தவறாகக் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் வைக்கப்பட்டதற்காக, ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டது. நம்பி நாராயணனுக்குக் கூடுதலாக ரூ.1.30 கோடி இழப்பீடு வங்க கேரள அரசு 2019ஆம் ஆண்டு முடிவு செய்தது. நம்பி நாராயணன் மீது தொடரபபட்ட பொய் வழக்கு தொடர்பாக ராக்கெட்ரி என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
Read in : English