Site icon இன்மதி

”ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மின்சார ஆலையாக மாற்றமுடியும்”

ஆலையை மூடித்தான் ஆகவேண்டும்; இப்போது இருப்பது போல ஓர் உருக்காலையாக இனிமேல் அது செயற்பட முடியாது என்பது திமுக அரசின் நிலைப்பாடு. (Photo credit: sterlitecopper.com)

Read in : English

வேதாந்தா நிறுவனம் தன்னால் தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலையை இனியும் தொடர்ந்து நடத்த முடியாது என்ற முடிவுக்கு வந்துவிட்டது என்பதைத்தான் அது வெளியிட்ட விற்பனை விளம்பரமும் செய்திக்குறிப்பும் காண்பிக்கின்றன என்று திமுகவின் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி தந்தி டிவிக்குக் கொடுத்த நேர்காணலில் சொல்லியிருக்கிறார். ஆதலால் ஆலையை மூடிவிட்டு விற்றுவிடுவதுதான் ஒரேவழி.

ஆலையை மூடித்தான் ஆகவேண்டும்; இப்போது இருப்பது போல ஓர் உருக்காலையாக இனிமேல் அது செயற்பட முடியாது என்பது திமுக அரசின் நிலைப்பாடு. நிச்சயமாக அதுவோர் உருக்காலையாக இருக்க முடியாது என்று சொன்ன கனிமொழி, வேறுயாராவது இயக்குவதை மக்கள் ஒத்துக்கொண்டால், அரசுக்கும் ஏற்புடையதுதான், என்றார் அவர்.

இருக்கும் தானியியங்கி மின்னாலை உட்பட அனைத்து உட்கட்டமைப்பையும் விற்பனைக்கு வைத்திருக்கிறது வேதாந்தா. தாமிரத்தை உருக்குவதால் உருவாகும் பக்க விளைபொருட்களை பயனுள்ள பொருட்களாய் மாற்றக்கூடிய கட்டமைப்புகளையும் நிறுவனம் விற்பனைக்குத் தரவிருக்கின்றன.

தேசிய சுற்றுப்புறச்சூழல் பொறியியல் ஆராய்ச்சிக் கழகத்தில் (நீரி) விஞ்ஞானியாகவும், ஐ ஐடி-மெட்ராஸில் வேதிப்பொறியியல் பேராசியராகவும் பணிபுரிந்து ஓய்வு பெற்ற டி. சுவாமிநாதன், ஸ்டெர்லைட் ஆலையில் போட்ட முதலீட்டை வேதாந்தா நிறுவனம் மீட்டிருக்கக்கூடும் என்றார். “அவர்கள் காயலான் கடைச் சாமானாக ஆலையை விற்றால்கூட அவர்களுக்கு இலாபம் மிஞ்சியிருக்கும்,” என்று குறிப்பிட்டார். உருக்காலையில் பயன்படும் தாமிரத்தாதில் இருக்கும் பாஷாண அளவை (ஆர்செனிக்) பற்றியும் அதனால் ஏற்படக்கூடிய மாசினைப் பற்றியும் சாமிநாதன் தனது துறைசார்ந்த நிபுணத்துவக் கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார்.

“அவர்கள் காயலான் கடைச் சாமானாக ஆலையை விற்றால்கூட அவர்களுக்கு இலாபம் மிஞ்சியிருக்கும்” என்கிறார்  தேசிய சுற்றுப்புறச்சூழல் பொறியியல் ஆராய்ச்சிக் கழகத்தில் (நீரி) விஞ்ஞானியாகவும், ஐ ஐடி-மெட்ராஸில் வேதிப்பொறியியல் பேராசியராகவும் பணிபுரிந்து ஓய்வு பெற்ற டி. சுவாமிநாதன்

மேலும் படிக்க:

விற்பனைக்கு வருகிறது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை!: பெயர் மாறினாலும், பிரச்சினை தீருமா? 

தேசிய, தமிழ்நாட்டு நலனுக்காக ஸ்டெர்லைட் ஆலை விற்பனை: நிர்வாகம் விளக்கம்  

முத்துநகர்ப் படுகொலை பற்றி முத்திரை பதித்த ஆவணப்படம்

எந்தத் தொழில்முறை என்றாலும், குறிப்பாக வேதியியல் தொழில்முறை மாசினை ஏற்படுத்தத்தான் செய்யும் என்றார் அவர். நல்லதொரு சுற்றுபுறச்சூழல் மேலாண்மைத் திட்டமும் தொடர் கண்காணிப்பும் இருந்தால், சட்டங்கள் சொல்லும் விதிகள்படி மாசு அளவைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து தொழில் கட்டமைப்புகளைச் சரியாகக் கொண்டுசெல்ல முடியும். “ஸ்டெர்லைட் ஆலை விசயத்தில் அவர்கள் ஆலையைச் சரியாக நடத்தாமல் சுற்றுப்புறச்சூழலைக் கெடுத்துவிட்டார்கள். ஆலையின் எல்லாக் கட்டமைப்புகளையும் சீர்படுத்தி, சிம்னி உயரத்தைக் கூட்டி, மாசு அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கான தரமான இயங்கு விதிகள் உருவாக்கப்படால், அந்தத் தாமிர ஆலையை மேற்கொண்டு நடத்த முடியும்,” என்றார் அவர்.

தேசத்தின் நன்மைக்காகத்தான் ஆலையை விற்கப்போவதாக வேதாந்தா நிறுவனம் சொல்வதைப் பாத்தால், வேறொரு உரிமையாளரை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பது போலத் தெரிகிறது. உள்ளூர் பொருளாதாரத்திற்கும் தூத்துக்குடித் துறைமுகத்திற்கும் ஆலை எவ்வளவு நன்மைகள் செய்திருக்கின்றன என்பது பற்றி நிறுவனம் நிறைய பேசியிருக்கிறது. ஆனால் நிஜத்தில், தேசத்தின் நலன் காக்கப்பட வேண்டும் என்றால் ஆலையைத் தொடர்ந்து நடத்த வேண்டும். ஏனெனில் செம்மைப்படுத்தப்பட்ட தாமிரத்திற்கான நாட்டின் தேவைகளில் 40 சதவீதத்தை இந்த ஆலையால பூர்த்தி செய்யமுடியும்.

ஸ்டெர்லைட் தாமிர ஆலையை வேறொரு ஆலையாக மாற்றமுடியும் என்பதை சுவாமிநாதன் விளக்கினார். அடிப்படையில் ஆலைக் கட்டமைப்புகள் உயர்வெப்பநிலைகளைக் கையாள்கின்றன. தாமிரத் தாதுவை உருக்கப் பயன்படும் சூளையை மின்சார ஆலைக்கான கொதிகலனாக மாற்ற முடியும்.

ஆனால் மின்சார ஆலையாக மாற்றினாலும் கூட, பலமானதொரு சுற்றுபுறச்சூழல் மேலாண்மைத் திட்டம் உருவாக்கினால்தான் மாசினைக் கட்டுப்படுத்த முடியும். ஆலைக்குள் ஏற்கனவே டீசல்ஃபரைசேஷன் (கந்த நீக்கம்) மற்றும் துகள்மப்பொருள் கட்டமைப்புகள் இருக்கக்கூடும். அவை ஒரு மின்சார உற்பத்தி ஆலையை இயக்கக்கூடிய வசதிகளை உருவாக்கலாம் என்றார் சுவாமிநாதன்.

Share the Article

Read in : English

Exit mobile version