Read in : English
நாளை (ஜூன் 23) அதிமுக பொதுக் குழு கூடும் சூழ்நிலையில், கட்சியில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக அதிமுக மீண்டும் இரண்டு அணிகளாக உடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
அதிமுகவில் பெரும்பாலான மாவட்டச் செயலாளர்களும் முன்னாள் அமைச்சர்களும் குறிப்பாக மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்த கவுண்டர் சாதியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ளனர். அதேசமயம், தென் மாவட்டங்களைச் சேர்ந்த பெரும்பாலும் தேவர் சாதியைச்சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் ஓ. பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக இருக்கின்றனர்.
ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவும், அவரது நெருங்கிய உறவினரான அமமுக கட்சியைத் தொடங்கிய டிடிவி தினகரனும் மீண்டும் அதிமுகவில் சேருவதற்கு எடப்பாடி அணியைச் சேர்ந்தவர்கள் தடையாக இருப்பதால், ஓபிஎஸ் அணி, அவர்களுடன் கைகோப்பதற்கான சாத்தியங்கள் உள்ளதாக யூகங்கள் உள்ளன.
ஓ. பன்னீர்செல்வத்துடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் இருக்கும் இரட்டைத் தலைமையை மாற்றிவிட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி விரும்புகிறார். அதிமுகவில் இணை ஒருங்கிணப்பாளராக இருக்கும் அவருக்கு கட்சியில் இரண்டாது இடம்தான். முதல் இடம் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் ஓ. பன்னீர்செல்வத்துக்கு. எனினும், கட்சிப் பதவிகளுக்கும் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதிலும் இருவருடைய சம்மதமும் தேவைப்படும் நிலை உள்ளது.
பொதுக் குழுக் கூட்டத்தில் பொதுச் செயலாளராகவோ அல்லது அதற்கு இணையான ஒரு பதவியிலோ எடப்பாடியை அமர்த்துவதற்காக, அதாவது ஓ.பன்னீர்செல்வத்தைவிட அதிக அதிகாரங்களுடன், கட்சியை அவரே நடத்தும் வகையில் அவரது அணியைச் சேர்ந்தவர்கள் தீர்மானம் கொண்டுவர இருக்கிறார்கள்.
2017ஆம் ஆண்டில், பாஜக, குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடியே செய்த சமரத்தின்படி அமர்த்தப்பட்ட கட்சிப் பதவியிலிருந்து ஓபிஎஸ்ஸை நீக்கி, ஓபிஎஸ்ஸை ஓரங்கட்டுவதற்கான முயற்சியாகத்தான் இதை ஓபிஎஸ் அணி பார்க்கிறது.
பாஜகவின் முக்கியத் தலைவர்களுடன் இருந்த நெருக்கம் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை கட்சியில் முக்கியத்துவத்தை ஓபிஎஸ் அனுபவித்து வந்தார். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகலாக ஓ.பன்னீர்செல்வத்திற்கு பாஜக அந்த அளவுக்கு ஆதரவாக இருக்கவில்லை. எடப்பாடியுடனும் பாஜக சகஜமாகவே இருந்துள்ளது.
அதிமுக பொதுக்குழுக் கூட்டம் கட்சி பிளவுபடுவதை நோக்கிச் செல்கிறது. கட்சியின் ஒற்றைத் தலைமைக்கு உரியவராக எடிப்பாடி பழனிசாமியை நியமிக்க கட்சி தீர்மானம் கொண்டு வருவதற்குத் திட்டமிட்டுள்ளது. தூதுவர்கள் மூலம் சொல்லப்பட்ட சமரசத் தீர்வுகளை ஓபிஎஸ் அணியைச் சேர்ந்தவர்கள் நிராகரித்துவிட்டனர். கட்சியில் தற்போதுள்ள இரட்டைத் தலைமை தொடர வேண்டும் என்றும் தனது அனுமதியில்லாமல் தற்போதுள்ள நிலைமையை மாற்றக்கூடாது என்றும் கூறி, எடப்பாடி அணியின் யோசனைகளை ஓபிஎஸ் முழுவதுமாக நிராகரித்துவிட்டார்.
மேலும் படிக்க :
தமிழ்நாட்டில் தலைதூக்கும் பாஜக: மெல்லமெல்ல காவிமயமாகிறதா அதிமுக?
சட்டம், ஒழுங்குப் பிரச்சினையைக் காரணம்காட்டி, பொதுக் குழுக் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று எடப்பாடிக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியிருக்கிறார். அதை எடப்பாடி நிராகரிப்பார் என்றே தெரிகிறது. எனினும், அதிமுகவின் பொதுக் குழுக் கூட்டத்தை நடத்துவதற்குஎதிராக சிலர் நீதிமன்றத்துக்கு சென்றிருப்பதால், திடீர் திருப்பங்கள் ஏற்படலாம் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், கட்சியில் ஓ. பன்னீர்செல்வத்துக்கான ஆதரவு 15 சதவீதம் கூட இருப்பது கடினம். அவரது ஆதரவாளர்களில் ஒரு சிலர் தங்களது ஆதரவை இடமாற்றிக் கொள்ளக்கூடும்.
இந்த நிலையில், கட்சியில் தற்போதுள்ள இரட்டைத் தலைமையை தனது அனுமதியில்லாமல் மாற்றுவதற்கான தீர்மானத்தைக் கொண்டு வராமல் இருப்பதற்கு ஓபிஎஸ் அணியினர் நீதிமன்றத்தை எதிர்நோக்கியுள்ளனர். பொதுக்குழுக் கூட்டத்தை நடத்துவதற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதிக்காத நிலையில், கட்சி பிளவுபடும் சூழ்நிலை உருவாகும்.
தற்போதுள்ள சூழ்நிலையில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு மூன்று வாய்ப்புகளே உள்ளன.
1. பொதுக்குழுக் கூட்ட முடிவுகளின்படி எடிப்பாடிக்குக் கட்சியில் முதல் இடம் கொடுப்பதை ஏற்றுக் கொண்டு, அதற்கு அடுத்த இடத்தை ஏற்றுக் கொள்ளுதல். அல்லது கூட்டத்தைப் புறக்கணித்தல். பொதுக் குழுவில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து கேள்வி எழுப்புதல். தற்போதைய நிலைமையே தொடர வேண்டும் என்று கோரி, நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை ஆணை பெறுதல்.
2. அல்லது இதற்குப் போட்டியாக தனியே பொதுக் குழுவைக் கூட்டி தனக்கு கட்சியில் முதலிடம் என்பது உள்பட தனக்கு ஆதரவாகத் தீர்மானங்களை நிறைவேற்றுதல். இது கட்சி உடைகிறது என்பதன் அர்த்தம்தான்.
3.பொதுக் குழுத் தீர்மானத்தை ஏற்காமல் இருப்பதால், பொதுக்குழுக் கூட்டமே செல்லாது என்று அறிவித்தல். கட்சிக்குள் இருந்தே எடிப்பாடி அணியை எதிர்த்துப் போராடுதல்.
1987-88 ஆண்டிலும் 2017ஆம் ஆண்டிலும் அதிமுகவில் இரண்டு எதிர்எதிர் அணிகள் தங்களது மேலாண்மையைக் காட்டுவதற்கு போராடியதும், கட்சியின் இரட்டை இலை சின்னம் சிறிது காலம் முடக்கி வைக்கப்பட்டதும் போன்ற நிகழ்வுகள் மீண்டும் அரங்கேறும்.
இரண்டாவது, மூன்று சாத்தியங்கள்படி நிகழ்ந்தால், கட்சி இரண்டு அணிகளாகச் செயல்படும் சூழ்நிலை உருவாகும். கட்சிக்கு மாநிலத்திலும் மற்ற மாநிலங்களிலும் உள்ள கட்சி சொத்துகள், கட்சித் தலைமையகம் உள்ளிட்டவை தங்களது கட்டுப்பாட்டில் உள்ளதாக ஒவ்வொரு குழுவும் உரிமை கொள்ளலாம். சட்டப்பேரவையிலும் நாடாளுமன்றத்திலும் தங்களது அணிக்குத்தான அதிக ஆதரவு என்று நிலைநாட்ட முயலலாம்.
அதாவது 1987-88 ஆண்டிலும் 2017ஆம் ஆண்டிலும் அதிமுகவில் இரண்டு எதிர்எதிர் அணிகள் தங்களது மேலாண்மையைக் காட்டுவதற்கு போராடியதும், கட்சியின் இரட்டை இலை சின்னம் சிறிது காலம் முடக்கி வைக்கப்பட்டதும் போன்ற நிகழ்வுகள் மீண்டும் அரங்கேறும்.
1987-88 இல் எம்ஜிஆர் மரணத்துக்குப் பிறகு, அதிமுக பிரிந்தது. எம்ஜிஆரின் மனைவி ஜானகி தலைமையில் அதிமுக (ஜானகி அணி) என்றும் ஜெயலலிதா தலைமையில் அதிமுக (ஜெயலலிதா அணி) என்றும் தனித்தனியே செயல்பட்டது. 1989இல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்தனி அணிகளாகப் போட்டியிட்டு அதிமுக தோல்வி அடைந்தது. திமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. ஜெயலலிதா இறந்த பிறகு, 2017ஆம் ஆண்டிலும் எடிப்பாடி பழனிசாமி தலைமையிலும் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலும் அதிமுக தனித்தனி அணிகளாகப் பிரிந்தன. பிரதமர் மோடி உள்பட பாஜக தலைவர்கள் செய்த சமரச ஏற்பாட்டின்படி எடப்பாடி பழனிசாமி முதல்வராகவும் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கவும் துணை முதல்வராகவும் கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் தான் இருக்கவும் ஓ.பன்னீர்செல்வம் சம்மதித்தார்.
2017இல் பன்னீர்செல்வத்தின் முக்கிய எதிரி, கட்சியின் பொதுச் செயலாளராகவும் முதல்வராவதற்கு சட்டப்பேரவைக் கட்சியின் தலைவராகவும் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலாவுக்கு எதிரானது (அவர் கைது செய்யப்படுவதற்கு முன்னதாக). சில அதிமுக அமைச்சர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு, மத்திய புலனாய்வு அமைப்புகள் மூலம் சோதனைகளை நடத்தியது. சசிகலாவின் தேர்வுப்படி முதல்வரான எடப்பாடி பழனிசாமி, சசிகலாவையும் டிடிவி தினகரனையும் கட்சியிலிருந்து நீக்க சம்மதித்தார் எடப்பாடி பழனிசாமி. அத்துடன் ஓபிஎஸ் அணியுடன் இணைந்து செயல்படவும் சம்மதித்தார். தற்போது சசிகலாவையும் தினகரனையும் எடப்பாடி அணி கடுமையாக எதிர்க்கிறது. ஓ. பன்னீர்செல்வம் தனது நிலைமையை மாற்றிக்கு கொண்டு அவர்கள் மீது மென்மையான போக்கைக் கடைப்பிடிக்கிறார்.
ஒன்றுபட்ட அதிமுகவின் தீர்மானங்கள் ஈபிஎஸ், ஓபிஎஸ் சார்பில் தேர்தல் ஆணையத்தின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டன. தற்போதைய நிலையில் மாற்றம் குறித்து ஓபிஎஸ் கேள்வி எழுப்பினால், பிரச்சினை மீண்டும் தேர்தல் ஆணையத்துக்கும் நீதிமன்றத்துக்கும் சென்றுவிடும். அத்துடன், குறிப்பாக கட்சியின் அடிமட்டத் தொண்டர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துவதுடன் கட்சியும் பலவீனமாகும். குறிப்பாக, கட்சியின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டால், தேர்தல்களில் இரண்டு அணிகளும் பெரும் பாதிப்பைச் சந்திக்க வேண்டியதிருக்கும். இந்த நிலைமை திமுகவுக்குச் சாதகமாக இருக்கும்.
3 சதவீத வாக்குகளைப் பெற்ற தினகரனின் அமமுக, கடந்த காலத்தில் அதிமுகவின் வெற்றியை எப்படி பாதித்ததோ, அதுபோல ஓ.பன்னீர்செல்வத்துடன் சசிகலாவும் தினகரனும் கைகோர்த்தால் அது எடப்பாடி அணியைப் பாதிக்கும். அமமுகவில் ஓ.பன்னீர்செல்வம் சேர விரும்புவரா அல்லது தனக்கு என தனிக் கட்சியை அமைத்து அமமுகவுடன் கூட்டணி சேருவாரா என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஏதேனும் ஓர் அற்புதம் நிகழ்ந்தால் ஒழிய, ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோருக்கிடையேயான யுத்தத்தைத் தவிர்க்க முடியாது.
Read in : English