Site icon இன்மதி

மெட்ரோ ரயில் மாறுகிறது: மாற்றுத்திறனாளிகளுக்கு இணக்கமாக பஸ் போக்குவரத்து எப்போது மாறும்?

Read in : English

போக்குவரத்து விசயத்தில் மாற்றுத்திறனாளி உரிமை செயற்பாட்டாளர்களுக்கும், அரசு நிறுவனங்களுக்கும் இடையிலான ஒரு யுத்தம் இது. அதிகாரிகளைச் சட்டத்திற்குக் கீழ்ப்படிய வைப்பது சம்பந்தமான போர் இது. மாற்றுத்திறனாளின் உரிமைகள் மீதான புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டு ஆண்டு ஆறாகிறது. ஆனாலும் பொதுவெளிக் கட்டிடங்களில், போக்குவரத்தில், சாலைகளில் இருக்கும் களநிலவரம் அப்படி ஒன்றும் பெரிதாக முன்னேறியதாகத் தெரியவில்லை.

சென்னை மெட்ரோ ரயில் லிமிடட் இன்னும் ஆறு வாரங்களில் ரெட்ரோஃபிட்டிங் மூலம் 32 ரயில் நிலையங்களை மாற்றுத்திறனாளிகளுக்கு இணக்கமானதாக மாற்றப்போகிறது. இப்படி மெட்ரோ ரயில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜூன் 15 அன்று தெரிவித்த போதே மாற்றுத்திறனாளிகளுக்கு வெற்றி கிட்டியிருக்கிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கு இணக்கமான போக்குவரத்து சம்பந்தமாக பல வருடங்களாகவே செயற்பாட்டாளர்கள் தொடுத்த வழக்குகளின் மையமாக சென்னை இருந்திருக்கிறது. செய்வோம் பார்ப்போம் என்றுதான் மாநில அரசுகள் இதுவரை சொல்லியிருக்கின்றன. ஆனால் செயலில் ஒன்றுமில்லை. ஜெயலலிதா தலைமையிலான அஇஅதிமுக அரசும் சரி, எடப்பாடி கே பழனிச்சாமி தலைமையிலான அரசும் சரி, மெட்ரோபாலிட்டன் ட்ரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷனுக்காக (எம்டிசி) மாற்றுத்திறனாளிக்கு இணக்கமான பேருந்துகளை வாங்குவதை இரண்டுமே தவிர்த்து வந்தன.  இது சம்பந்தமான நீதிமன்ற வழக்கைப் பற்றி அவை கவலைப்பட்டதில்லை. வைஷ்ணவி ஜெயகுமார் வெர்சஸ் தமிழக மாநில அரசு வழக்கில், இந்தாண்டு ஆரம்பத்தில், மாற்றுத்திறனாளிக்கு இணக்கமாக வடிவமைக்கப்பட்ட பேருந்துகளில் கொஞ்சம் மட்டுமே வாங்குவதற்குத் தங்களை அனுமதிக்கும்படி எம்டிசி சென்னை உயர்நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டது. சக்கர நாற்காலிப் பிரயாணிகளுக்காக எந்திரமய லிஃப்டை பேருந்தில் வைப்போம் என்று தாங்கள் முன்பு கொடுத்த வாக்குறுதியை மீறிய எம்டிசி அதை வடிவமைப்புத் தோல்வி என்று கூறியது.

  மாற்றுத்திறனாளிகளுக்கு இணக்கமான போக்குவரத்து சம்பந்தமாக பல வருடங்களாகவே செயற்பாட்டாளர்கள் தொடுத்த வழக்குகளின் மையமாக சென்னை இருந்திருக்கிறது

சரியான ரயில் நிலைய வடிவத்தை உருவாக்கும் வாய்ப்பு மெட்ரோ ரயிலுக்குக் கட்டுமானத்தின் போதே இருந்தது. ஆனால் அது அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஆனாலும் இப்போது மாற்றுத்திறனாளிக்கு இணக்கமான சட்டங்களைப் பின்பற்றும் முறையில் மெட்ரோ தனது நிலையங்களை ரெட்ரோஃபிட் ஆக்க ஒத்துக் கொண்டிருக்கிறது. இன்றைய வைஷ்ணவி ஜெயகுமார் வெர்சஸ் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் வழக்கில், மனுதாரர் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளைப் பேணும் இரண்டு முக்கிய சட்டங்களின் ஷரத்துகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று கோரியிருக்கிறார்.

மேலும் படிக்க:

இனி எம்டிசி பஸ் நேரத்தை உங்கள் போன் சொல்லும்

போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க மேம்பாலங்கள் அவசியத் தேவையா?

மாற்றுத்திறனாளிகள் சென்னை மெட்ரோவுக்கு வைத்த கோரிக்கைகளில்  முக்கியமானவை பின்வருமாறு:

·        ஒளிப்பிரதிபலிப்பைத் தடுக்கும் தரைகள்

·         காதுகேளாதவர்களுக்கான ஒலி வசதியுடனும், சக்கர நாற்காலி  செல்லக்கூடிய வசதியுடனும் இருக்கும் டிக்கெட் பூத்துகள்

·        கண்பார்வை அற்றவர்களுக்கும், சக்கர நாற்காலியில் வருபவர்களுக்கும் இணக்கமான கியோஸ்குகள்

·        கழிவறைகளில் சறுக்குக் கதவுகள்

·        எளிதில் அணுகக்கூடிய பார்க்கிங்

தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரியும், நீதிபதி என். மாலாவும் அடங்கிய அமர்வு மனுவை விசாரித்துக் கொண்டிருக்கிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான சட்டங்கள் பலவருடங்களாகவே இருக்கின்றன. சமீபத்துச் சட்டங்கள் 1990-களில் போடப்பட்ட சட்டங்களின் முன்னெடுப்புதான். ஆனால் அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

உதாரணமாக, பொதுவெளிகளில் இருக்கும் தரைகள் பற்றி ஹார்மோனைஸ்டு வழிகாட்டுதல்கள் சொல்வது இது: கண்பார்வை குறைவாக இருப்பவர்களுக்கும், பிரகாசமான நிறங்கள் கொண்ட டேப்களின் வரிசைகள் தரையில் பதிக்கப்பட வேண்டும். அப்போதுதான் வெளிச்சமில்லாத பகுதிகளில் மாற்றுத்திறனாளிகளால் எளிதாக நடமாட முடியும். ஆனால் விதிக்கு மாறாக, போக்குவரத்து நிலையங்கள் போன்ற பொதுவிடங்களில் அடிப்படை வெளிச்சமே போதாது; தரைகள் ஒன்றுகூட மென்மையாக இருப்பதில்லை. ஆனால் விதிகளைப் பின்பற்றுமாறு யாரும் அதிகாரிகளை வற்புறுத்துவதில்லை.

சக்கர நாற்காலிப் பிரயாணிகளுக்காக எந்திரமய லிஃப்டை பேருந்தில் வைப்போம் என்று தாங்கள் முன்பு கொடுத்த வாக்குறுதியை மீறிய எம்டிசி அதை வடிவமைப்புத் தோல்வி என்று கூறியது

பேருந்துகளுக்கான விதி
பேருந்துகள் விசயத்தில் ஹார்மோனைஸ்டு வழிகாட்டுதல்கள் சொல்வது இது: பஸ் கதவுகள் 1,200 மிமீ அகலமாக இருக்க வேண்டும்; தரை தாழ்ந்திருக்க வேண்டும்; கைப்பிடிகளும் பாத வெளிச்சமும் இருக்க வேண்டும்;

மாற்றுத்திறனாளிகள் பஸ்ஸில் ஏறுவதற்கான வீல் சேர் லிப்ட் டிசைன், தோல்வியடைந்த மாதிரி.

ஹைட்ராலிக் லிஃப்ட், மடிக்கக்கூடிய சறுக்குப்பாதை மற்றும் சக்கர நாற்காலிகள் என்று நிறைய விதிமுறைகள் உள்ளன. ஜவகர்லால் நேரு திட்டத்தின் கீழ், எம்டிசிக்கு வாங்கப்பட்ட வால்வோ பேருந்துகளில் இந்த  விதிமுறைகள் ஓரளவு பின்பற்றப்பட்டன. வேண்டிய கருவிகள் பொருத்தப்பட்டன; ஆனால் அவையெல்லாம் கொஞ்ச காலத்திற்குத்தான்.  பின்பு எம்டிசியின் காலாவதியான விதிமுறைகளைக் காட்டி அவை பிடுங்கப்பட்டு குரோம்பேட்டை குப்பைக்கிடங்கில் வீசியெறிபட்டன. தொடர்ந்து அரசு பஸ்களை வாங்கியது; ஆனல் சட்டத்தை மீறியது. அதனால் வழக்குகள் ஏற்பட்டன. மாற்றுத்திறனாளி உரிமைச் சட்டங்களைப் பின்பற்றாதவரை புதிய பஸ்கள் வாங்கக்கூடாது என்று நீதிமன்றம் தடைவிதித்தது.

உள்ளாட்சி அமைப்புகளின் விதிமீறல்
மாற்றுத்திறனாளிக்கு இணக்கமான சாலைகள் என்ற விதியை சென்னை மாநகராட்சி உட்பட எல்லா உள்ளாட்சி அமைப்புகளும், அரசும் தொடர்ந்து மீறிக்கொண்டுதான் இருக்கின்றன. ஆர்பிடபிள்யூடி சட்டம் பிரிவு 41-ன்படி, அரசு ”மாற்றுத்திறனாளிக்கு இணக்கமான சாலைகளை” உருவாக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிக்கு இணக்கமான சாலைகள் என்ற விதியை சென்னை மாநகராட்சி உட்பட எல்லா உள்ளாட்சி அமைப்புகளும், அரசும் தொடர்ந்து மீறிக்கொண்டுதான் இருக்கின்றன.

சென்னை நகர்ப்புற உட்கட்டமைப்பு விரிவாக்கம் வேகமாக நடைபெறுகிறது. மெட்ரோ ரயில் மாநகரத்தின் தொலைதூரங்கள் வரை விரிவாக்கம் செய்யப்படவிருக்கிறது. மாதவரம், பூந்தமல்லி, சோளிங்கநல்லூர் போன்ற பகுதிகளுக்கும் மெட்ரோ ரயில் வரவிருக்கிறது. மேலும் ஜெர்மானிய வளர்ச்சி நிதியைக் கொண்டு நூற்றுக்கணக்கான புதிய பஸ்கள் வாங்கப்படவிருக்கின்றன. அதனால் மாற்றுத்திறனாளிகள் உட்பட எல்லோருக்கும் இணக்கமான, வசதியான பேருந்து வடிவமைப்பு உருவாகும் வாய்ப்பு அதிகம். அதை நிஜமாகவே அக்கறையோடு பயன்படுத்த வேண்டும்.

சென்னை மெட்ரோ வழக்கை உயர்நீதிமன்றம் ஜூலை 27-க்கு ஒத்தி வைத்திருக்கிறது.

Share the Article

Read in : English

Exit mobile version