Site icon இன்மதி

ஹோம் ஒர்க் கிடையாது, ரேங்க் கிடையாது: வித்தியாசமான தமிழ் வழிப் பள்ளி!

இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேஷன் அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் வித்தியாயமான தமிழ் வழிப் பள்ளியில் உற்சாகமாகப் படிக்கும் மாணவர்கள்.

Read in : English

பட்டுக்கோட்டையிலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள  குறிச்சி கிராமத்தில் இந்தியன் வங்கி ஊழியர்கள் அசோசியேஷன் அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் தமிழ் தமிழ் பள்ளி யில் படிக்கும் மாணவர்களுக்கு ஹோம் ஒர்க்  கொடுக்கப்படுவது கிடையாது. ரேங்க்  கார்டும் கிடையாது. பிரம்புகளைக்  கொண்டு மாணவர்களுக்கு தண்டனை கொடுக்கும் வழக்கம் இல்லை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என். சங்கரய்யா, பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ச. முத்துக்குமரன் ஆகியோர் 2002ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் தேதி தொடங்கி வைத்த இந்த நடுநிலைப் பள்ளி தற்போது 20 ஆண்டுகளைக்  கடந்து உயர்நிலைப் பள்ளியாக வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது.

பேங்க்  எம்ப்ளாயீஸ் பெடரேஷன் ஆஃப் இந்தியா (BEFI) அமைப்பின் அங்கமாக உள்ள இந்தியன் வங்கி ஊழியர்கள் அசோசியேஷன் சார்பில் குறிச்சி கிராமத்தில் ஐந்தரை ஏக்கர் நிலத்தில் இந்தப் பள்ளி தொடங்கப்பட்டபோது எல்கேஜி முதல் 6ஆம் வகுப்பு வரை 160 மாணவர்கள் இருந்தார்கள். இதற்காக இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேஷனைச் சேர்ந்தவர்கள் தங்களது நான்கு நாட்கள் சம்பளத்தை வழங்கினார். இதேபோல பள்ளிக்கூடம் செயல்பட பலர் உதவி அளித்து வருகிறார்கள்.

2002ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த நடுநிலைப் பள்ளி தற்போது 20 ஆண்டுகளைக்  கடந்து உயர்நிலைப் பள்ளியாக வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது.

இதன் நிறுவன அறங்காவலர் (ஃபவுண்டர் டிரஸ்டி) கே. கிருஷ்ணன், நிர்வாக அறங்காவலர் ஆர். சோமசுந்தரம், அறங்காவலர்களான முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மதிப்புறு தலைவர் ச. தமிழ்ச்செல்வன், ஓய்வு பெற்ற வங்கி ஊழியரும் எழுத்தாளருமான எஸ்.வி. வேணுகோபாலன், பள்ளிக் குழுத் தலைவி லட்சுமி கோவிந்தராஜன், பள்ளிக் குழுவைச் சேர்ந்த பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்க செயலாளர் ஜே. கிருஷ்ணமூர்த்தி, என். மாதவன், ஏ.அமல்ராஜ் உள்ளிட்ட விளிம்புநிலை மாணவர்களின் படிப்பில் அக்கறை கொண்ட உள்பட பல சமூக ஆர்வலர்கள் இந்தப் பள்ளிகளின் செயல்பாடுகளுக்கு வலுச்சேர்த்து வருகிறார்கள்.

மேலும் படிக்க:

தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கையை உருவாக்க முன்னாள் நீதிபதி முருகேசன் தலைமையில் நிபுணர் குழு!

நீட் தேர்வுக்கு எதிராக ஸ்டாலின் பேச்சு நியாயமான வாதம்; எதிர்தரப்பு வாதங்களைக் கண்டுகொள்ளவில்லை!

மாணவர்களிடம் அன்பு பாராட்டி கனிவுடன் மாணவர்களுக்கு நல்ல கல்வியை வழங்குகிறார்கள் தலைமை ஆசிரியை சி.வாசுகியும் ஆசிரியர்களும்.

இடமிருந்து வலம்:பள்ளி தலைமை ஆசிரியை சி. வாசுகி, நிறுவன அறங்காவலர் கே. கிருஷ்ணன், நிர்வாக அறங்காவலர் ஆர். சோமசுந்தரம் மற்றும் பள்ளி தாளாளர் ஜி. பாலச்சந்திரன்

ஸ்டேட் போர்டு பள்ளி இது. 2006ஆம் ஆண்டிலிருந்து இந்தப் பள்ளி உயர்நிலைப் பள்ளியாகச் செயல்பட்டு வருகிறது. குறிச்சியைச் சுற்றியுள்ள 33 கிராமங்களிலிருந்து மாணவர்கள் இந்தப் பள்ளியில் படித்து வருகிறார்கள். பெரும்பாலான மாணவர்கள் விவசாயக்  கூலித் தொழிலாளர்கள். கிராமப்புற  மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வருவதற்கு வாகன வசதி செய்யப்பட்டிருக்கிறது. கிராமப்புற மாணவர்களுக்காக நடத்தப்படும் பள்ளி என்பதால் தமிழ் வழியில்தான் பாடங்கள் நடத்தப்படுகின்றன. தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கிலப் பாடத்தையும் நன்றாகக்  கற்றுத்தருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். பள்ளியில் யூனிபார்ம் உண்டு. ஆனால், மாணவர்கள் ஷூ, டை போடுவது கிடையாது. எல்கேஜி, யுகேஜி, முதல் வகுப்பு ஆகியவை இணைந்து ஒரே வகுப்பாக நடத்தப்படுகிறது. பள்ளி மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிப்பதைத் தவிர அவர்களின் பன்முக ஆற்றலை வளர்க்கும் வகையில் பல்வேறு விஷயங்கள் கற்றுத்தரப்படுகின்றன. இங்குள்ள ஆசிரியர்கள், மாணவர்களை அன்புடன் நடத்துகிறார்கள். அதனால் மாணவர்கள் பள்ளிக்கு ஆர்வத்துடன் வருகிறார்கள் என்கிறார் பள்ளித்தாளாளர் ஜி. பாலச்சந்திரன்.

“இங்குள்ள நூலகத்தில் 4 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன. முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்கொடையாக வந்த புத்தகங்களில் 200 புத்தகங்கள் இப்பள்ளிக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. மாணவர்களின் புத்தக வாசிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மாணவர்கள் எழுதுவதற்கான காகிதங்களைக்  கொடுத்து அவர்கள் விரும்புகிற தலைப்புகளில் எழுதச் சொல்கிறோம். மாணவர்களுக்கு நாடகப் பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், மாணவர்களுக்கு அறிவியல்  குறித்த விஷயங்கள் குறித்துக்  கற்றுத்தருகிறார்கள். சுற்றுச்சூழல் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்ச்சி அளிக்கப்படுகிறது. பள்ளி வளாகத்தில் மாணவர்கள் மரம் வளர்க்கிறார்கள். கஜா புயலின் போது பள்ளி வளாகத்தில் இருந்த பல மரங்கள் விழுந்துவிட்டன. மீண்டும் பள்ளி வளாகத்தில் மரங்களை வளர்க்கத் தொடங்கி இருக்கிறோம்” என்கிறார்.

  பள்ளி மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிப்பதைத் தவிர அவர்களின் பன்முக ஆற்றலை வளர்க்கும் வகையில் பல்வேறு விஷயங்கள் கற்றுத்தரப்படுகின்றன.

”பள்ளிக்கு நாடக ஆசிரியர் சே.ராமானுஜம் வந்திருக்கிறார். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் வந்திருக்கிறார். இப்படி முக்கியப் பிரபலங்கள் எங்களது பள்ளி மாணவர்களிடம் நேரடியாக உரையாடி இருக்கிறார்கள். இந்தப் பள்ளி மாணவர்கள் இளம் விஞ்ஞானி விருதைப் பெற்று இருக்கிறார்கள். 2006ஆம் ஆண்டில் குழந்தைகள் தேசிய அறிவியல் மாநாட்டில் இந்தப் பள்ளி மாணவர் ரங்கராஜன், குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கையால் இளம் விஞ்ஞானி விருது பெற்றார். அடுத்த  ஆண்டுகளில் ரகுவரன், இனியவன் போன்ற மாணவர்களும் இளம் விஞ்ஞானி  விருது பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர். இளம் விஞ்ஞானி விருது பெற்ற இந்தப் பள்ளி மாணவர் ரகுவரன், பண்ணை வயலில் உள்ள ஏரியைத் தூர்வாரி பராமரிப்பதன் மூலம் அதிகத் தண்ணீரைத் தேக்கி வைக்க முடியும் என்று தனது ஆய்வுக்  கட்டுரையில் எழுதினார். இளம் விஞ்ஞானி விருதுபெற்ற அந்த மாணவரின் கட்டுரையைப் பார்த்த மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த ராதாகிஷ்ணன், பொதுப்பணித்துறை மூலம் அந்த ஏரியைத் தூர்வாருவதற்கான நடவடிக்கையை எடுத்தார் என்பது பள்ளிக்குப் பெருமை சேர்க்கும் விஷயம். கிராமப்புற மாணவர்கள் என்பதால் எங்களது பள்ளியில் கட்டணம் குறைவுதான். அதனால், ஆண்டுக்கு 18 லட்ச ரூபாய் வரை நாங்கள் பணம் திரட்ட வேண்டியுள்ளது. எங்களது இந்த முயற்சிக்கு சமூக அக்கறை கொண்ட பலர் உதவி வருகிறார்கள். அதனால் பள்ளியைத் தொடர்ந்து சிறப்பாக நடத்த முடிகிறது” என்கிறார் அவர்.

“கொரோனா காலத்தில் பள்ளிகள் செயல்பட முடியாத சூழ்நிலையில் மாணவர்களுக்குக் கல்வி அளிக்கும் வகையில் கடந்த ஜூலை மாதத்திலிருந்து ஆசிரியர்களே அந்தந்த கிராமங்களுக்கு நேரில் சென்று காலை பத்து மணியிலிருந்து 1 மணி வரை மாணவர்களுக்கு வகுப்புகள் எடுப்பார்கள். அந்தந்தப் பகுதிகளில் உள்ள வீட்டுத் திண்ணைகளிலோ, மாடிகளிலோ அல்லது பொது இடங்களிலோ இந்த வகுப்புகளை நடத்தினோம். இதற்கு மாணவர்களிடமிருந்தும் பெற்றோர்களிடமிருந்தும் நல்ல வரவேற்பு இருந்தது. இதனால், இந்த ஆண்டில் எங்களது பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது இதற்கெல்லாம் காரணம் பள்ளி ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு உணர்வுதான்” என்கிறார் பாலச்சந்திரன்.

Share the Article

Read in : English

Exit mobile version