Site icon இன்மதி

இலங்கை, எரிசக்தி, அதானி, மோடி: வெடிக்கும் ஓர் அரசியல் பிழைச் சர்ச்சை

டெண்டர் இல்லாமலே இலங்கை அதிகாரிகள் அனுமதி அளிக்க முயன்ற திட்டங்களில் அதானித் திட்டமும் ஒன்று.

Read in : English

இலங்கை அரசியலிலும் வெளியுறவிலும் அனுபவமில்லாத ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச செய்த பிழை ஒன்று இந்தியா-இலங்கை உறவைக் கெடுக்கக்கூடிய அபாயத்தைக் கொண்டிருக்கிறது. இதனால் அரசியல் ரீதியாகவும் இருநாட்டுத் தூதர்மட்ட உறவிலும் ஒரு நெருக்கடியை அவர் ஏற்படுத்திவிட்டார். இந்தக் கூத்து ஜுன் 10 வெள்ளியன்று நடந்தது. இலங்கையின் வடக்கு மன்னார் மாவட்டத்தின் 500-மெகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டத்தை இந்தியாவின் அதானி குழுமத்திற்கு வழங்கும்படி ராஜபக்ச தன்னைக் கேட்டுக்கொண்டதாக சிலோன் மின்சார வாரியத் தலைவர் எம்எம்சி ஃபெர்டினாண்டோ பொதுநிறுவனங்களின் பாராளுமன்றக் குழுவிடம் சொன்னார்.

2021 நவம்பர் 24 அன்று ராஜபக்ச தன்னை அழைத்துப் பேசினார் என்று ஃபெர்டினாண்டோ சொன்னார். இந்திய பிரதமர் மோடி அந்தத் திட்டத்தை அதானிக் குழுமத்திடம் கொடுக்கும்படி தனக்கு அழுத்தம் தருவதாக ராஜபக்ச சொன்னார். இப்படிக் கூறியிருக்கிறார் ஃபெர்டினாண்டோ.

“ஆனால் இந்த விசயம் என்னையோ அல்லது சிலோன் மின்சார வாரியத்தையோ சார்ந்ததல்ல என்று நான் கூறினேன். முதலீடுகள் வாரியத்தைச் சார்ந்த விசயம் என்றேன். ஆனாலும் ஜனாதிபதி இந்த விசயத்தைக் கவனிக்கும்படி என்னிடம் வலியுறுத்தினார். பின்பு நான் நிதிச் செயலருக்குக் கடிதம் ஒன்று எழுதினேன். ஜனாதிபதி என்னிடம் சொன்ன விசயத்தைக் கடிதத்தில் தெரிவித்து ஆவன செய்யுமாறு நிதிச் செயலரைக் கேட்டுக்கொண்டேன். மேலும் இது இரண்டு அரசுகளுக்கு இடையிலான ஒரு சமாச்சாரம் என்பதையும் சுட்டிக்காட்டினேன்,” என்று ஃபெர்டினாண்டோ பாராளுமன்றக் குழுவிடம் வீடியோவில் சிங்களத்தில் பேசினார்.

இலங்கையின் வடக்கு மன்னார் மாவட்டத்தின் 500-மெகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டத்தை இந்தியாவின் அதானி குழுமத்திற்கு வழங்கும்படி ராஜபக்ச தன்னைக் கேட்டுக்கொண்டதாக சிலோன் மின்சார வாரியத் தலைவர் எம்எம்சி ஃபெர்டினாண்டோ பொதுநிறுவனங்களின் பாராளுமன்றக் குழுவிடம் ஜூன் 10 அன்று சொன்னார்

என்றாலும், நவம்பர் 25, 2021 அன்று, அதாவது ஜனாதிபதி ராஜபக்சவைச் சந்தித்த நாளுக்கு அடுத்தநாளில் ஃபெர்டினாண்டோ கருவூலச் செயலர் எஸ்.ஆர்.ஆட்டிகலேவுக்கு எழுதிய கடிதத்தில், இந்திய பிரதமர் மோடியின் ’அழுத்தம்’ பற்றிக் குறிப்பிடவில்லை. அதானி குழுமம் இலங்கையில் “கணிசமான” வெளிநாட்டு முதலீடுகளை செய்வதற்கு இணங்கியிருப்பதால், எரிபொருள் திட்டங்கள் அந்தக் குழுமத்திற்கே ’செல்லும்படி’ வசதி செய்யுமாறு ஜனாதிபதி தன்னிடம் கேட்டுக் கொண்டதாக அந்தக் கடிதத்தில் ஃபெர்டினாண்டோ குறிப்பிட்டிருந்தார்.

அதானி பசுமை எரிசக்தி நிறுவனத்தின் முன்மொழிவு இந்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திடம் முன்வைத்த முன்மொழிவாக அங்கீகரிக்கும்படி மேனாள் பிரதமர் ராஜபக்ச ஏற்கனவே ஆணையிட்டதைக் கடிதம் குறிப்பிட்டது. இலங்கையின் தற்காலத்து வெளிநாட்டு நேரடி முதலீடு நெருக்கடியைச் சமாளிக்க, இரு நாட்டுத் தலைவர்களும் இந்த எரிசக்தி முதலீட்டை நிஜமாக்க வேண்டும் என்று ஒத்துக் கொண்டிருக்கின்றனர் என்பதையும் கடிதம் சுட்டிக்காட்டியது.

மேலும் படிக்க:

கலகம் மீண்டும் வெடிக்கலாம் இலங்கையில் 

ரணில் விக்கிரமசிங்கே: திட்டப்பட்டவர் பிரச்சினை தீர்க்க வருகிறார் பிரதமராக

“அதானி பசுமை எரிசக்தி நிறுவனம் 500 மெகாவாட் காற்று, சூரியவொளி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களை மன்னாரிலும், பூநெரினிலும் செயல்படுத்துவதற்கு வசதி செய்துதருமாறு 2021 நவம்பர் 16 அன்று புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மீதான ஆய்வுக்கூட்டம் முடிந்தவுடன் ஜனாதிபதி எனக்கு ஆணையிட்டார். ஏனென்றால் அதானி ஏற்கனவே இலங்கையில் கணிசமான அளவுக்கு முதலீடு செய்ய ஒத்துக்கொண்டிருந்தார்,” என்று கடிதம் சொல்கிறது.

”இருநாட்டுத் தலைவர்களுக்கு இடையிலான இருமுனைப் பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில், இந்திய அரசு ஆதரிக்கும் ஒரு முதலீட்டாளரின் முன்மொழிவுதான் இது என்று ஜனாதிபதி எனக்கிட்ட கட்டளையிலிருந்து நான் ஊகித்துக் கொண்டேன். ஆதலால், இதுவோர் நல்ல முதலீடு என்றும், அமைச்சரவை நியமித்த முதலீட்டு செயற்பாடு மேலாண்மை குழுவின் விதிப்படி இலங்கை முதலீடுகள் வாரியம் மூலம் இந்த முதலீட்டைக் கொண்டு செல்லலாம் என்றும் ஊகிப்பது தர்க்கரீதியானது…” என்று போகிறது கடிதம்.

மன்னாரில் ஒன்றும், பூநெரினில் ஒன்றும் ஆக இரண்டு காற்று மின்சக்தித் திட்டங்களுக்கான 500 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஒப்பந்தங்களை அதானிக் குழுமம் 2021 டிசம்பரில் பெற்றது.

ஜூன் 11 அன்று ஃபெர்டினாண்டோ தான் முன்பு சொன்ன கருத்துக்களை வாபஸ் வாங்கிக் கொண்டார். அதற்கு அவர் சொன்ன காரணம் மிகவும் அற்பமானது. பாராளுமன்றக் குழு கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொன்னபோது அகோரப்பசிக் களைப்பில் தான் துவண்டு விட்டதாக அவர் சொன்னார்

ஜூன் 11 சனிக்கிழமை அன்று ஃபெர்டினாண்டோ தான் முன்பு சொன்ன கருத்துக்களை வாபஸ் வாங்கிக் கொண்டார். அதற்கு அவர் சொன்ன காரணம் மிகவும் அற்பமானது. பொதுநிறுவனங்களின் பாராளுமன்றக் குழு தன்மீது குற்றம் கண்டுபிடித்தது போன்று ஒலித்த அதன் கேள்விகளுக்குப் பதில் சொன்னபோது அகோரப்பசி தூண்டிய களைப்பில் தான் துவண்டு விட்டதாக அவர் சொன்னார். பாராளுமன்றக் குழுவின் விசாரணையில் ஃபெர்டினாண்டோ பேசியது எல்லாம் காணொளிக்காட்சியாக சமூக வலைத்தளங்களில் இப்போது வலம்வருகிறது.

முதல்நாள் பாராளுமன்றக் குழுவிடம் சொன்னதை பின்பு அவர் வாபஸ் வாங்கிவிட்டார் என்றாலும் அவரது வாக்குமூலம் அரசியல் சர்ச்சையை உருவாக்கிவிட்டது. மோடியின் ’நண்பர்களுக்கு’ இலங்கைக்குள் நுழைய பின்கதவைத் திறந்துவிட்டு அவர்களுக்குச் ’சலுகை கொடுக்கிறது’ ராஜபக்ச அரசு என்று எதிர்க்கட்சி குற்றஞ்சாட்டுகிறது.

எரிசக்தித் திட்டங்களுக்குப் போட்டிப்போட்டு ஏலம் கேட்கும் முறையை ஒழிக்கும் வண்ணம் இலங்கை தன் சட்டங்களைத் திருத்தி சில நாட்கள் ஆனபின்பு இந்தச் சர்ச்சை வெடித்திருக்கிறது. டெண்டர் முறையை ஒழிப்பதற்குக் கடந்த வாரம் அரசு நடத்தும் சிலோன் மின்சார வாரியத்தின் முக்கிய சட்டம் திருத்தப்பட்டிருக்கிறது. போட்டி உருவாக்கும் டெண்டர் இல்லாமலே இலங்கை அதிகாரிகள் அனுமதி அளிக்க முயன்ற திட்டங்களில் அதானித் திட்டமும் ஒன்று.

ஆனால் ஜூன் 12 ஞாயிறு அன்று ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச ஃபெர்டினாண்டோவின் குற்றச்சாட்டை மறுத்து டிவிட்டரில் இப்படி எழுதினார். ”சிஈபி (சிலோன் எலெக்ட்ரிசிட்டி போர்டு) சேர்மன் ’கோப்’ கமிட்டி விசாரணையில் மன்னார் காற்று எரிசக்தித் திட்டத்தைப் பற்றி பேசிய பேச்சு சம்பந்தமாக நான் சொல்கிறேன். எந்தவொரு குறிப்பிட்ட மனிதருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ இந்தத் திட்டத்தை வழங்குமாறு நான் அனுமதி கொடுத்தேன் என்பதை நான் தெளிவாக மறுக்கிறேன்.”

ஜனாதிபதியின் மறுதலிப்பை பலர் நம்பவில்லை என்றாலும், ஃபெர்டினாண்டோ பதவியை ராஜினாமா செய்துவிட்டார் என்று இலங்கை மின்சார, எரிசக்தி மந்திரி காஞ்சனா விஜேசேகரா ஜூன் 13 (திங்கள்) அன்று டிவீட் செய்தார். “என்னிடம் சிஈபி சேர்மன் மிஸ்டர் எம்எம்சி ஃபெர்டினாண்டோ கொடுத்த ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டேன். வைஸ்-சேர்மன் நலிந்தாலன்கோகூன் இனி புதிய சேர்மனாக பொறுப்பெடுத்துக் கொள்வார்.”

இதற்கிடையில் இந்தச் சர்ச்சைக்கு அதானிக் குழுமம் எதிர்வினை ஆற்றியிருக்கிறது: “மதிப்புக்குரிய ஓர் அண்டைநாட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கோடுதான் நாங்கள் இலங்கையில் முதலீடு செய்ய விரும்புகிறோம். இது இருநாடுகளுக்கு இடையிலான கூட்டுறவில் ஓர் அங்கம் என்றுதான் பொறுப்பான நிறுவனமான நாங்கள் பார்க்கிறோம். ஆனால் இப்போது ஏற்பட்டிருக்கும் இழுக்கு எங்களை மிகவும் ஏமாற்றத்துக்குள்ளாக்கி விட்டது. உண்மை என்னவென்றால் இந்தப் பிரச்சினை இலங்கை அரசுக்குள்ளும், இலங்கை அரசாலும் ஏற்கனவே தீர்க்கப்பட்டு விட்டது,” என்று சொல்லியிருக்கிறார் அதானிக் குழுமப் பிரதிநிதி ஒருவர்.

இந்தியாவின் முன்னாள் நிதி மந்திரியும், முன்னாள் வெளியுறவுக் கொள்கை மந்திரியுமான யஷ்வந்த் சின்ஹா ஜூன் 13 அன்று செய்த ட்வீட் இது: ”மோடி-அதானி-இலங்கை சமாச்சாரம் ஒரு கடுமையான பிரச்சினை. இதை மூடிமறைக்க அனுமதிக்கக் கூடாது. தொடர்பு இப்போது தெளிவாகவே நிறுவப்பட்டு விட்டது. இதற்கு மேலும் சான்று தேவையில்லை (அவர் சொன்னது).”

வெளிநாட்டுக் கடனைக் கட்டமுடியாத அளவுக்குக் கடுமையாகிவிட்ட அந்நிய செலாவணி நெருக்கடியில் இலங்கைத் திணறிக்கொண்டிருக்கும் வேளையில் இப்படிப்பட்ட இலங்கை-இந்திய உறவுச் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இந்தாண்டு ஏப்ரலில் கட்ட வேண்டிய அமெரிக்க டாலர் 7 பில்லியன் வெளிநாட்டுக் கடனைக் கட்டமுடியாத நிலைக்கு இலங்கை அரசு தள்ளப்பட்டிருக்கிறது. 2.2 கோடி மக்கள்தொகை கொண்ட இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் மாட்டிக் கொண்டிருக்கிறது. வெளிநாட்டுக் கடன் மட்டுமே அமெரிக்க டாலர் 50 பில்லியன்.

இந்த இலங்கை-அதானி சர்ச்சை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்று நாடெங்கும் ஒலிக்கும் கோரிக்கைக்கு வலு சேர்த்திருக்கிறது.

இந்தப் பொருளாதார, அரசியல் சிக்கல் மேலும் மேலும் அதிகமாகி மனிதாபின உதவியை நாட வேண்டிய ஓர் அவசரகால நிலையாகி விட்டது. இலட்சக்கணக்கான மக்கள் ஏறிக்கொண்டெ போகும் விலைவாசிகளால், உணவு, எரிசக்தி, மருந்து, சமையல் எரிவாயு பற்றாக்குறைகளால் தினம்தினம் செத்துக் கொண்டிருக்கிறார்கள். உணவு, மருந்து, எரிபொருள் வாங்க அமெரிக்க டாலர் 3.5 பில்லியன் நிதியுதவி செய்தது உட்பட பல வழி்களில் இலங்கைக்கு இந்தியா கடந்த சில மாதங்களாக உதவிக்கரம் நீட்டிக்கொண்டுதான் இருக்கிறது.

”தோற்றுப்போன ஒரு ஜனாதிபதியாக” தான் இடையிலே ஓடிப்போக விரும்பவில்லை என்று கூறுகிறார் அவர். ஆனால் பயங்கரமானதொரு பொருளாதாரச் சிக்கலில் போராடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு அவரது சொந்த விருப்பம் பற்றிக் கொஞ்சங்கூட அக்கறையில்லை.

Share the Article

Read in : English

Exit mobile version