Site icon இன்மதி

ஜி ஸ்கொயர், அண்ணாமலை: மனை அனுமதி சம்பந்தமான களப் பரிசோதனை

(Picture for representational purposes only)

Read in : English

மனை சம்பந்தமான குற்றச்சாட்டு இப்போது தமிழக அரசுக்குத் தலைவலியாக வந்திருக்கிறது. தமிழகத்தில் திமுக மீண்டும் ஆட்சி அமைத்து ஓராண்டுக்கும் மேலாகிவிட்ட சூழ்நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத்தலைவர் அண்ணாமலை 5.06.2022 அன்று இரண்டு குற்றச்சாட்டுகளை திமுக அரசுமீது வைத்துள்ளார்.

அம்மா கர்ப்பிணிப் பெண்களுக்கான கிட் வழங்கும் திட்டத்தில் ஊழல் என்பது முதல் குற்றச்சாட்டு.

ஒரு தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்குச் சாதகமாக அந்த நிறுவனம் சம்பந்தப்பட்ட நிலப்பத்திரங்களைப் பதிவுசெய்வதற்கு சிஎம்டிஏ உடனடியாக நடவடிக்கை எடுக்கிறது என்பது இரண்டாவது குற்றச்சாட்டு. ஜி ஸ்கொயர் என்ற அந்தக் கட்டுமான நிறுவனம் கோவை மாவட்டத்தில் பல ஏக்கர் அளவில் நிலம் வாங்கி அதை எட்டு நாட்களுக்குள் பத்திரப்பதிவு செய்திருப்பது மிகவும் வியப்புக்குரிய செயல்.

ஒரு சராசரி மனிதன் நிலம் வாங்க வேண்டும் என்றால் அதற்கு சென்னையில் உள்ள சிஎம்டிஏ அலுவலகத்தில் முறையாக விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். அந்தந்த மாவட்டங்களில் இருக்கக்கூடிய உள்ளூர் திட்டக் குழுமம் என்ற அரசுத்துறையில் அனுமதி பெற வேண்டும். இவையெல்லாம் குறுகிய காலத்திற்குள் வெற்றிகரமாக முடியக்கூடிய சமாச்சாரம் அல்ல. காலதாமதம் தவிர்க்க முடியாதது.

ஜி ஸ்கொயர் என்ற அந்தக் கட்டுமான நிறுவனம் கோவை மாவட்டத்தில் பல ஏக்கர் அளவில் நிலம் வாங்கி அதை எட்டு நாட்களுக்குள் பத்திரப்பதிவு செய்திருப்பது மிகவும் வியப்புக்குரிய செயல்.  

சரி…சிஎம்டிஏ (சென்னை மெட்ரோபாலிட்டன் டிவலப்மெண்ட் அத்தாரிடி) அங்கீகாரம் என்றால் என்ன ?

முதலில் அங்கீகரிக்கப்பட்ட வீட்டுமனைகள் சிஎம்டிஏ-வால் சரிபார்க்கப்படுகின்றன. ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகளுக்கு வீட்டுமனைகளை பயன்படுத்தலாம்; மேலும் உரிமையாளர்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப வீட்டு மனைகளை மாற்றிக்கொள்ளலாம் என்பதே இதன் அடிப்படைப் பொருள். இதற்கு அனுமதி வழங்குவது சிஎம்டிஏ-வின் முக்கிய பங்கு.

நகரத்திற்கு வெளியே இருக்கும் பகுதிகள் கிராமப்பஞ்சாயத்து போன்ற உள்ளாட்சி அமைப்பின்கீழ் வருவன. கிராமப்புற முன்னேற்றத்திற்காக அந்தப் பகுதிகளில் வீடுகள் கட்ட அனுமதி கொடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கும் டிடிசிபி (டைரக்டரேட் ஆஃப் டவுண் அண்ட் கண்ட்ரி பிளானிங்) அனுமதி பெற வேண்டும் என்பதுதான் விதி.

முன்பு பட்டா இருந்தாலே பஞ்சாயத்து அனுமதி பெற்று வீடு கட்டலாம் என்ற ஒரு நிலை இருந்தது, புதிய கட்டுமானங்கள் மூலம் கிராமப் பஞ்சாயத்து வருவாய் கிடைக்கும் என்பதால் நிறைய கட்டிடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் அனுமதி பெற்று இரண்டு வருடங்களுக்குள் வீடு கட்டாமல் போனால் மீண்டும் அனுமதி பெற வேண்டியது அவசியம்.

தற்போது முறையாக சிஎம்டிஏ அல்லது டிடிசிபி அமைப்பிடம் அனுமதி  வாங்காத மனைகள் மற்றும் விவசாய நிலங்களை விற்கவோ வாங்கவோ கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

ஒரு வீட்டு மனைக்கு அனுமதி வழங்கும்போது அந்தப் பகுதியில் அரசு நிர்ணயித்த விலையையும் சந்தையில் நிர்ணயிக்கப்படுகின்ற விலையையும் ஒப்பீட்டு மதிப்பீடு செய்து அனுமதிக்கு உண்டான பணத்தைப் பெற வேண்டும் என்றும், ஒவ்வொரு வீட்டு மனைக்கும் இடையே 40 அடி சாலை வசதியை மேம்படுத்த வேண்டும் என்றும் பல்வேறு விதிமுறைகளை விதித்திருக்கிறது உள்ளூர் திட்டக் குழுமம்.

வீட்டு மனைக்கு உண்டான அனைத்து ஆவணங்களையும் சரியானபடி சமர்ப்பித்தால் மட்டுமே வீட்டு மனை பிரிப்பதற்கும் வீடு கட்டுவதற்கும் அனுமதி வழங்கப்படும். இல்லையென்றால் அனுமதி கேட்கும் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என்பது இயல்பானதொரு நடவடிக்கை.

நகர்புறம் மற்றும் கிராமத் திட்டமிடல் சட்டம் 1971 பிரிவு 2(b) இன் 49-ன் படி எந்த ஒரு நிலத்தையோ அல்லது கட்டிடத்தையோ அபிவிருத்தி செய்ய விரும்பும் எவரும் அபிவிருத்திப் பணிகளைத் தொடங்குவதற்கு முன் திட்டமிடல் (Project) அனுமதியைப் பெற வேண்டும்.  இந்தச் சட்டத்தின் கீழ் அனுமதி பெறாதபட்சத்தில், வேறு எந்த சட்டத்தின் கீழும் அனுமதி அல்லது உரிமம் எடுக்கப்பட்டாலும்கூட  அங்கீகரிக்கப்படாததாகவே கருதப்படும் என்று பிரிவு 3 சொல்கிறது.

குறைகள் நிவர்த்தி செய்யப்படும்வரை நேரடியாக ஆவணங்களைச் சமர்ப்பிக்கும் செயல்முறையை மீண்டும் கொண்டு வர அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப் பட்டிருக்கிறது  

கிராமப்புறங்களில் 10 ஏக்கருக்குள்ளும், நகரப்புறங்களில் 5 ஏக்கருக்குள்ளும் உள்ள நிலங்களுக்கு நகரம் மற்றும் ஊரமைப்பு இயக்குனரகம் வழங்கும் தொழில்நுட்ப அனுமதிக்குப் பிறகு, விரிவாக்கம் செய்யப்படுகின்ற மனைக்கு உள்ளூர் திட்டக் குழுமம் மூலமாக திட்டம் இல்லாத பகுதிகளில் மண்டல துணை இயக்குனரால் திட்ட அனுமதி வழங்கப்படுகிறது. வீட்டுமனைகளின் திறந்தவெளி இட ஒதுக்கீடு (ஓப்பன் ஸ்பேஸ் ரிசர்வேஷன் – ஓஎஸ்ஆர்), சாலைகள் போன்றவற்றிற்குக் கூட்டு உள்ளூர் திட்டக்குழுமத் துறையில் ஆவணங்கள் ஒப்படைத்த பிறகு, உள்ளாட்சி அமைப்பால் வழங்கப்படும்  ஒப்புதலே இறுதி.

கிராமப்புறங்களில் 10 ஏக்கர் வரையிலும் நகரப்புறங்களில் 5 ஏக்கருக்கு குறைவாகவும் உள்ள மனைகளுக்கு சம்பந்தப்பட்ட  துறையின் உறுப்பினர்-செயலர் உள்ளாட்சி அமைப்பு லே-அவுட் அனுமதியை வழங்குகிறார். வருவாய் துணை இயக்குனர் (RDO) தொழில்நுட்ப அனுமதியை வழங்குகிறார்.

வீட்டு மனை பிரிப்பதற்கும் அதில் கட்டிடம் கட்டவும் அரசு வலைத்தளம் மூலமாக செயல்படுவது சாத்தியமா என்று பல்வேறு வல்லுனர்களிடம் கேட்டபோது அவர்கள் சொன்ன கருத்துக்கள் பின்வருமாறு:

கோவையைச் சேர்ந்த உரிமம் பெற்ற கட்டிட சர்வேயர்களின் சங்கத்தின்  முன்னாள் தலைவர் இப்படிக் கூறினார்: ”ஆன்லைன் விண்ணப்பம் ஒவ்வொன்றும் பல வண்ணங்களைக் கொண்டுள்ளது, இது வாகன நிறுத்துமிடம் மற்றும் பின்னடைவுப் பகுதி உள்ளிட்ட பல்வேறு அளவுகோல்களைக் குறிக்கிறது. ஒவ்வொரு திட்டமிடலையும் (project) நாம் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும்போது  வேறு ஒரு குறியீடு தாமாகவே மாறி விடுகின்றது.”  ஆன்லைனில் ஆவணங்களைச் சமர்ப்பிக்கும்முன் தவறுகளை முன்கூட்டியே சரிபார்ப்பதற்கான வசதிகள் இல்லை என்றும் அவர் கூறினார்.

2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து டிடிசிபி அனுமதிகளை ஆன்லைனில் பெறுவதைத் தமிழக அரசு  கட்டாயமாக்கியது. சென்னை பெருநகரப் பகுதியைத் தவிர்த்து மாநிலம் முழுவதும் வரைபடத் திட்டங்களை நேரடியாக அரசுத்துறைகளில் சென்று கொடுக்கும் வழக்கம் முடிவுக்கு வந்தது

வரைபடத் திட்டம் ஆன்லைனில் செயலாக்கப்பட்ட பின்பு,    உடனடியாக  விண்ணப்பங்களின் நிலையைச் சரிபார்த்தல், வரைபடத் திட்டத்தைச் செயல்படுத்த இடைத்தரகர்கள் வேண்டாம் என்ற நிலை, திட்டங்களில் கட்டிட விதி மீறல்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் வசதி போன்ற பல நன்மைகள் ஏற்பட்டன.

ஆனால், ஆன்லைன் அதிக நேரம் எடுக்கிறது என்பது உண்மையான சவால் என்றும், இது நேரத்தை எடுத்துக்கொள்ளும் செயல்முறையாகும் என்றும்,  நேரடியாகச் சென்று ஆவணங்களை சமர்ப்பிக்க ஒருமணி நேரம் ஆகும்; ஆனால் ஆன்லைனில் பல மணிநேரம் ஆகும் என்றும் அவர் கூறினார். குறைகள் நிவர்த்தி செய்யப்படும்வரை நேரடியாக கொண்டு செல்லும் செயல்முறையை மீண்டும் கொண்டு வர அரசுக்கு உத்தரவிடக் கோரி சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

பிரபலமான அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் கட்டுமானரிடம் கேட்டபோது அவர் சொன்னது இது:

தற்போது ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யக்கூடிய ஆவணங்கள் எதுவும் தொலைந்து போவதில்லை என்கின்ற நம்பிக்கை இருந்தாலும், ஒரு முறை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய ஒரு மணி நேரத்திலிருந்து மூன்று மணி நேரம் வரை காலதாமதம் ஆகிறது; இதற்கு நேரடியாகவே துறை சார்ந்த அலுவலர்கள் இடத்தில் ஒப்படைப்பது எளிதான காரியம்.

  ஒரு சராசரி மனிதன் நிலம் வாங்க வேண்டும் என்றால் அதற்கு சென்னையில் உள்ள சிஎம்டிஏ அலுவலகத்தில் முறையாக விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். மேலும் பல சம்பிரதாய விதிகளும் கூட உண்டு.

உடனடியாக அனுமதி பெற வேண்டும் என்றால்  பல இடைத்தரகர்கள் மூலம் காரியம் சாதிக்கப்படுகிறது என்றும், பணம் மற்றும் அரசியல்பலம் உடையவர்கள், ஆன்லைன் ஆக இருந்தாலும் சரி, நேரடியான முறையாக இருந்தாலும் சரி, அனுமதியை எளிதாகப் பெற்றுக்கொள்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.

எது எவ்வாறாக இருந்தாலும், ஒரு கட்டிடத்திற்கான அனுமதியை ஆன்லைனில் பெறுவதற்கும், நேரடியாகப் பெறுவதற்கும் அதிக வேறுபாடுகள் இருக்கின்றன என்று துறைசார்ந்த ஒரு முன்னாள் அதிகாரி தெரிவிக்கின்றார்.

இதுகுறித்து தற்போது பணியில் இருக்கும் துறைசார்ந்த ஓர் அதிகாரியிடம் கேட்டபோது, ஆன்லைன் குளறுபடிகளைக் களைவதற்கு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம் என்றும், அதே சமயத்தில் நில அளவையர்களுக்குத்   தகுந்த பயிற்சி கொடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சொன்னார்.

சிறு, குறு வீட்டு மனைகள் விற்பவர்கள் மற்றும் புதிதாக வீட்டு மனை கள்  உருவாக்கும் உரிமையாளர்கள் தங்களுடைய அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்து ஆன்லைனில் முறையாக பதிவேற்றம் செய்துவிட்டு அதை  முறையாக அரசுத்துறை அலுவலர்களிடம் தெரிவித்தால் மட்டுமே உடனடியாக அனுமதி கிடைக்க வாய்ப்புள்ளது.

பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறியதுபோல, ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு மட்டும் எட்டு நாட்களில் வீட்டு மனை மற்றும் கட்டிடம் சம்பந்தமான அனுமதிகள் கிடைத்திருந்தால், அந்த மாதிரியான சிறப்புச் சலுகை தங்களுக்கும் கிடைக்காதா என்று சாமானிய மக்கள் ஏங்குவது தவிர்க்க முடியாதது.

இதையெல்லாம் கவனத்தில் எடுத்துக்கொண்டு அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்குமா என்று காத்திருக்கிறார்கள் தமிழக மக்கள்.

Share the Article

Read in : English

Exit mobile version