Site icon இன்மதி

கமல் ஹாசன் கட்சித் தலைவரா, ஆக்‌ஷன் ஹீரோவா?: விக்ரம் எழுப்பும் கேள்வி!

Read in : English

உலக நாயகன் திரையில் ஆக்‌ஷன் அவதாரம் எடுத்து எவ்ளோ நாளாச்சு என்று ஏங்குபவர்களுக்குத் தீனி தந்தது விக்ரம் டீசர். நாளோரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக ‘அப்டேட்கள்’ தொடர பரபரப்புத் தீ பற்றிக்கொண்டது. ஜூன் 3, 2022 அன்று விக்ரம் வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகும் முன்னரே தொலைக்காட்சி மற்றும் ஓடிடி உரிமை, டிஜிட்டல் உரிமைகள், திரையரங்கு வெளியீடு என 200 கோடி ரூபாய்க்கு மொத்தமாக விற்பனையானதாகத் தகவலும் வந்தது. திரையில் தோன்றும் முன்னரே வெற்றிப்படமாகவும் மாறியது.

2000களுக்கு பிறகு விருமாண்டி, வேட்டையாடு விளையாடு, தசாவதாரம், பாபநாசம் உட்பட பெரியளவில் வெற்றி பெற்ற கமலின் திரைப்படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் என்ற நிலையிலேயே இப்படியொரு சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. காரணம், கமலின் சத்யாவையும் விருமாண்டியையும் பார்த்து வளர்ந்தவன் நான் என்று சொன்ன இயக்குநர். லோகேஷ் கனகராஜுடன் அவர் கைகோர்த்திருப்பதுதான். இந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்திருக்கிறதா ‘விக்ரம் 2022’?

வில்லன் கும்பலிடம் இருந்து கைப்பற்றிய போதைப்பொருட்களை காவல் துறை அதிகாரி பிஜோய்யிடம் (நரேன்) நாயகன் டில்லி (கார்த்தி) ஒப்படைப்பதாக ‘கைதி’ படம் முடியும். இயக்குநர். லோகேஷின் கனகராஜ், தனது இரண்டாவது படத்தின் கதை முடிந்த இடத்தில் இருந்து இந்த ‘விக்ரம் 2022’ கதையை உருவாக்கியிருக்கிறார். கூடவே, டைட்டில் வசீகரமாக இருக்க வேண்டுமென்பதற்காக 1986இல் கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜசேகர் இயக்கத்தில் வெளியான ’விக்ரம்’ எனும் பெயரையும் டைட்டில் பாடலையும் இதில் பயன்படுத்தியிருக்கிறார். படம் பார்க்கும் ரசிகர்களுக்கு இந்த இடைச்செருகல் நியாயமாகத் தெரிய வேண்டுமென்பதற்காக, அப்பாத்திரத்தை பெயர்த்தெடுத்து இதில் பயன்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது.

’விக்ரம் 2022’ படத்தின் கதை இதுதான். இரண்டு கண்டெய்னர்களில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை சந்தானம் (விஜய் சேதுபதி) கும்பல் கடத்த, அதை அவர்களுக்கே தெரியாமல் ஒளித்து வைக்கிறார் போலீஸ் அதிகாரி பிரபஞ்சன் (காளிதாஸ் ஜெயராம்). இந்த உண்மை தெரிந்ததும் பிரபஞ்சனை சந்தானம் போட்டுத் தள்ளுகிறார். இதனால், பிரபஞ்சனின் குடும்பமே நிலை குலைகிறது.

ஒரு காப்பகத்தில் இருந்து பிரபஞ்சன் தத்தெடுத்து வளர்ப்புத்தந்தையாகப் பராமரிக்கும் கர்ணன் (கமல்ஹாசன்) மது, போதைப்பொருள், பெண் பித்து நிறைந்தவராக மாறுகிறார். அவரை முகமூடி அணிந்த கும்பலொன்று கொல்கிறது. இதையடுத்து, அந்த முகமூடிக் கும்பல் யார் எவர் என்று அறிய அமர் (பகத் பாசில்) தலைமையிலான ‘பிளாக் ஸ்குவாட்’டிடம் பொறுப்பை ஒப்படைக்கிறார் போலீஸ் அதிகாரி ஜோஸ் (செம்பன் வினோத் ஜோஸ்). அமர் குழுவினரின் விசாரணையில் சந்தானம் மீதும் அவர் ஆட்கள் மீதும் சந்தேகம் விழுகிறது. அதைப் பின்தொடர்ந்து செல்கையில், கர்ணன் உயிரோடிருப்பது தெரிகிறது.

முகமூடிக்குப் பின்னால் இருக்கும் மனிதர் யார்? கர்ணன் உயிரோடிருந்தால், ஏன் இறந்ததாக நாடகமாட வேண்டும்? அத்தனைக்கும் மேலாக, காணாமல் போன கண்டெய்னரில் இருந்த போதைப்பொருட்கள் எங்கு பதுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன? இந்த கேள்விகளுக்குப் பதில் சொல்லும்விதமாக கிட்டத்தட்ட மூன்று மணி நேர படைப்பைத் தந்திருக்கிறார் இயக்குநர். லோகேஷ் கனகராஜ்.

‘விக்ரம்’ தொடங்கப்படுவதற்கு முன்பாக, பரப்பப்பட்ட தலைவாழை இலைகள் மீது பிரியாணியைப் பரிமாறிவிட்டு கமல் ஆக்‌ஷன் அவதாரமெடுப்பதாக ‘டீசர்’ வெளியானது. படத்தில் அக்காட்சி இடம்பெறவில்லை என்றாலும், ஒட்டுமொத்த திரைக்கதையும் எப்படியிருக்கும் என்பது அதில் வெளிப்பட்டிருந்தது. உண்மையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது ரசிகர்களுக்கு கமல் பரிமாறியிருக்கும் ‘புல்லட் பிரியாணி’யே இந்த ‘விக்ரம் 2022’.

செம்பன் வினோத் ஜோஸின் போலீஸ் டீம், பகத் பாசிலின் சகாக்கள், வில்லன் விஜய் சேதுபதியின் ஆட்கள், இது போதாதென்று கமலின் பழைய நட்புறவுகள் என்று ஒவ்வொரு தரப்பும் ஆக்‌ஷனில் உழன்று புரண்டிருக்கிறது. அதனால், திரைக்கதையின் முக்கால்வாசிப் பகுதியைக் கையிலெடுத்திருக்கின்றனர் ஆக்‌ஷன் கொரியோகிராபர்களான அன்பறிவ் சகோதரர்கள்.

விக்ரம்

ராக்கெட் கடத்தல், சலாமியா தேசத்திற்குப் பயணம், ஆடற்குழுவுடன் உற்சாகம், ராஜாவின் மகளுடன் சல்லாபம் என்றிருந்தது 1986இல் வெளிவந்த ‘விக்ரம்’. ரோபாடிக் குரலில் கமல் அதிர்வூட்டிய ‘விக்ரம் விக்ரம்’ பாடல், அப்போதைய இளைஞர்களின் இதயங்களில் துடிப்பாக ஒலித்த காலம் அது. அப்படம் வியாபார ரீதியாக மாபெரும் வெற்றியைப் பெறவில்லை என்றே சொல்லப்பட்டது. அதே காலகட்டத்தில் வெளிவந்த ‘காக்கிச்சட்டை’ ஒரு மாபெரும் வெற்றிப் படம்.

உண்மையைச் சொன்னால், இது போல எண்பதுகளில் வெளியான கமலின் அத்தனை ஆக்‌ஷன் அவதாரங்களையும் மொத்தமாகச் சேர்த்தெடுத்து கமலுக்குச் சமர்ப்பணம் செய்தால் எப்படியிருக்கும் என்று இயக்குநர். லோகேஷ் கனகராஜுக்கு தோன்றியிருக்க வேண்டும். அப்படியொரு எண்ணத்தின் திரையுருவே இந்த ‘விக்ரம் 2022’. மற்றபடி பழைய ‘விக்ர’முக்கும் இந்த ‘விக்ர’முக்கும் பெயரைத் தவிர வேறெந்த சம்பந்தமுமில்லை. வேண்டுமானால், பகத் ஏற்றிருக்கும் அமர் பாத்திரத்தை பழைய விக்ரமின் பிரதிபலிப்பு என்று சொல்லலாம். ஏனென்றால், அதில் வரும் அம்பிகா – கமல் காதல் போன்றே இதிலும் பகத் – காயத்ரி சம்பந்தப்பட்ட காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

கமலின் ‘அசகாய’ நடிப்பை ‘நாயகன்’ காலத்திலேயே பார்த்தவர்களுக்கு, ‘விக்ரம் 2022’ அதில் பாதி திருப்தியைக் கூட தராது. ஆனாலும், திரையில் கமல் வீறுநடை போட்டுவருவதைப் பார்த்து எத்தனை நாட்களாகிவிட்டது என்ற ஏக்கம், அவர்களை தன்னை மறந்து இரு கைகளையும் மோத வைக்கும்

என்னதான் கமலைக் கொண்டாடினாலும், மொத்தப் படத்திலும் அவர் வந்தால் தித்திப்பு தட்டுமே? அதற்காகவே, முதல் பாதியில் பகத் பாசிலுக்கும் இரண்டாம் பாதியில் விஜய் சேதுபதிக்கும் தனித்தனியாகப் பங்கு பிரித்து காட்சிகள் அமைத்திருக்கிறார் இயக்குநர்.. அதற்கான பலன் அவர்கள் திரையில் தோன்றும்போதே தெரிந்துவிடுகிறது. இரு வேறு ட்ராக் என்றாலும், அக்காட்சிகளின் மையம் கமல்ஹாசன் ஏற்று நடித்த ‘கர்ணன்’ எனும் பாத்திரத்தைச் சுற்றியே அமையுமாறு பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்த புத்திசாலித்தனம் தான் வழக்கமான ஒரு கதையை மிக மிக ஸ்டைலிஷானதாக மாற்றியிருக்கிறது. சூர்யாவின் இருப்பு இப்படத்தில் ஆறாவது விரல் போலதான்.

கமலின் ‘அசகாய’ நடிப்பை ‘நாயகன்’ காலத்திலேயே பார்த்தவர்களுக்கு, ‘விக்ரம் 2022’ அதில் பாதி திருப்தியைக் கூட தராது. ஆனாலும், திரையில் கமல் வீறுநடை போட்டுவருவதைப் பார்த்து எத்தனை நாட்களாகிவிட்டது என்ற ஏக்கம், அவர்களை தன்னை மறந்து இரு கைகளையும் மோத வைக்கும். அதற்கேற்ப ஆக்‌ஷன் காட்சிகளையும் மிகச்சன்னமான ‘ஒன்லைனர்’களையும் புகுத்தியிருக்கிறார் லோகேஷ்.

தனது இரண்டாவது படமான ‘கைதி’யின் கதாபாத்திரங்களை அப்படியே இதில் எடுத்தாண்டிருக்கிறார் லோகேஷ். இது, சமீபகாலத்தில் வேறெந்த முன்னணி இயக்குனரும் இதுவரை செய்யாதது (பதினாறு வயதினிலே பாத்திரங்களை கிழக்கே போகும் ரயிலில் பாரதிராஜா இடம்பெறச் செய்ததாக சொல்லப்படுவதுண்டு).

ஒரே படத்தின் அடுத்தடுத்த பாகங்களில் குறிப்பிட்ட பாத்திரங்களையும், கதையின் போக்கையும் ஒன்றாகத் தந்திருந்தாலும், முற்றிலும் தொடர்பேயில்லாத இரு வேறு கதைகளை ஒரு முடிச்சில் இணைப்பது அபூர்வம். அந்த வகையில் நரேன் ஏற்று நடித்த பிஜோய் பாத்திரம், அர்ஜுன் தாஸ், ஹரீஷ் உத்தமன், ஹரீஷ் பேரடி, தீனா மற்றும் கார்த்தி நடித்த டில்லி பாத்திரத்தைக் கூட மறைமுகமாகப் பயன்படுத்தியிருக்கிறார். ’கைதி 2’ஆம் பாகம் எடுத்தாலோ அல்லது இந்த விக்ரமின் அடுத்த பாகம் வெளியானாலோ, அதற்கு உதவிகரமாக இருக்கும் வகையிலேயே அக்காட்சிகளை அமைத்திருக்கிறார்.

1986இல் வெளியான ‘விக்ரம்’ படத்தில் இளையராஜா தந்த டைட்டில் பாடலையும் கூட பொருத்தமாகப் பயன்படுத்தியிருக்கிறார். இன்றைய தலைமுறையைக் கவரும் அனிருத்தின் ‘டெக்னோ’ இசையையும் மீறி, அது புதுமையாகத் தோன்றுவது ஆச்சர்யமூட்டும் விஷயம்.

அதேபோல, ஆதித்யன் இசையமைத்த ‘அசுரன்’ படத்தின் ‘பத்திகிச்சு பத்திகிச்சு’ பாடலும் கூட இப்படத்தில் கிட்டத்தட்ட மூன்று முறை ஒலிக்கிறது. ’கிளாசிக்’ வகையறா இல்லையென்றாலும், அப்பாடல் கிட்டத்தட்ட ‘கேப்டன் பிரபாகரனி’ல் இடம்பெற்ற ‘பாசமுள்ள பாண்டியரு’ பாடலின் பிரதிபலிப்பாகவே தோன்றும் என்பதை இங்கு நினைவுகூர வேண்டியிருக்கிறது.

பின்பாதி திரைக்கதையின் ஓரிடத்தில், ‘சரஸ்வதி சபதம்’ படத்தில் இடம்பெற்ற ‘கல்வியா செல்வமா வீரமா’ பாடல் பின்னணியில் ஒலிக்கும். காட்சியின் தன்மைக்கும் அப்பாடலுக்குமான முரண் கண்டிப்பாக பார்வையாளர்களைச் சிரிக்க வைக்கும். ‘மாஸ்டர்’ படத்தில் இது போன்ற அம்சங்களைத் தவறவிட்டிருந்தார் லோகேஷ். இதில் அதைச் சரிக்கட்டியிருக்கிறார்.

குமரவேல், சந்தானபாரதி, காளிதாஸ் வீட்டில் வேலையாளாக இருக்கும் டீனா எனும் பாத்திரத்தில் நடித்தவர் உட்பட ஒவ்வொருவரையும் கமலின் சகாக்களாக காட்டியிருக்கிறார் இயக்குநர்.. முக்கியமாக, டீனா ஆக்‌ஷனில் இறங்கும் காட்சி தியேட்டரில் ‘ஹோ’வென்ற பேரிரைச்சலை உருவாக்குகிறது. அதேநேரத்தில், கமலுக்கு குடும்பம், குழந்தை என்றிருப்பதைப் போல இவர்களுக்கென்று தனிப்பட்ட வாழ்க்கை கிடையாதா என்ற கேள்வியும் நம்முள் எழுகிறது. படம் பார்க்கும்போதே இந்த கேள்வி பிறந்தால் நீங்கள் கமல் ரசிகராகவோ, லோகேஷின் ரசிகராகவோ இல்லையென்று அர்த்தம். அவ்வாறு யோசிக்கவிடாமல் திரைக்கதை அமைந்திருப்பதே ‘விக்ரம் 2022’வின் சிறப்பு.

’எல்லோருக்கும் இடமுண்டு’ என்ற எண்ணத்துடன் இத்திரைக்கதை எழுதப்பட்டிருப்பதும், அதற்காக படத்தொகுப்பு அமைந்திருப்பதும் திரையுலகில் மிக அரிதான விஷயம். பகத் பாசில், விஜய் சேதுபதி, செம்பன் வினோத் ஜோஸ், காயத்ரி, ஸ்வாதிஷ்டா கிருஷ்ணன், நரேன் உட்பட சுமார் இரண்டு டஜன் பாத்திரங்கள் திரையில் முகம் காட்டுகின்றன. விக்னேஷ் சிவனின் பாவக்கதைகளில் வந்த ஜாபர் சித்திக்கும், வில்லேஜ் குக்கிங் சேனலில் அதகளப்படுத்தும் பெரியதம்பி குரூப்புக்கும் கூட இதில் இடமுண்டு. ஒவ்வொருவரையும் குளோசப்பில் காட்டுகிறது கேமிரா. இதுவே, படம் மூன்று மணி நேரம் வரை ஓடக் காரணம்.

மையக்கதைக்கு ஏற்ப இருண்மையும் குறைந்த ஒளியும் கொண்ட கிரிஷ் கங்காதரனின் காட்சியாக்கமும், திரைக்கதைக்கு உறுதுணை புரியும் அனிருத்தின் பின்னணி இசையும், காட்சிகளின் தன்மைக்கேற்ப ஷாட்களை கோர்த்திருக்கும் பிலோமின் ராஜின் படத்தொகுப்பும், செயற்கையா உண்மையா என்று யோசிக்கவிடாத வண்ணம் அமைந்திருக்கும் சதீஷ்குமாரின் கலை இயக்கமும் லோகேஷுக்கு பக்கபலமாக அமைந்திருக்கின்றன.

லாஜிக் பார்த்து கதையில் குறைகள் சொல்ல ஏராளம் உண்டு என்றாலும், லோகேஷின் முந்தைய படங்களைப் பார்த்தவர்களுக்கு ‘விக்ரம்’ கண்டிப்பாக அயர்வைத் தராது. அதையும் மீறி படத்தில் நிறைந்திருக்கும் வன்முறை எரிச்சலை ஊட்ட வாய்ப்புகள் அதிகம்.

’விருமாண்டி’யில் கமல் நடித்தபோது என்.லிங்குசாமி, தரணி, பாலா, ஹரி உட்பட குறிப்பிட்ட இயக்குநர்.களோடு கைகோர்த்து கமர்ஷியல் ஹிட்களை கமல் தரமாட்டாரா என்று அவரது ரசிகர்கள் ஏங்கியதுண்டு. கவுதம் மேனனுடன் ’வேட்டையாடு விளையாடு’வில் இணைந்தாலும் மிஷ்கின், செல்வராகவன், பரத்பாலா என்று சில இயக்குநர்.களுடன் அவர் கூட்டணி சேரவிருந்த படங்கள் நின்று போயின. அப்போது நிகழ்த்த வேண்டிய சாதனையை, இப்போது ‘விக்ரம்’மில் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து தந்திருக்கிறார் கமல். ஆனால், இது சரிதானா..?

சமூகத்தில் வன்முறை அறவே இருக்கக்கூடாது என்று முழங்கும் ஒரு கட்சித்தலைவர், தனது படத்தில் துப்பாக்கியை முகத்தோடு அணைத்துக்கொண்டு வீணை போல மீட்டுவது எந்தவகையில் நியாயம்?

என்னதான் போதைப்பொருட்கள் பயன்பாட்டை எதிர்ப்பதாகச் சொன்னாலும், படம் முழுக்க அது மட்டுமே மையப்படுத்தப்படுகிறது. கோடிகோடியாகப் பணம் புழங்கும் அந்த உலகம் பூதாகரப்படுத்தப்படுகிறது. விதவிதமான துப்பாக்கிகள் உறுமலுடன் ரத்தத்தைக் கக்கச் செய்கின்றன. வெறுமனே ஒரு கமர்ஷியல் திரைப்படம் தரும் நாயகனாக இருந்தால் பரவாயில்லை. கமல் இப்போது ஒரு கட்சியின் தலைவராக வேறு இருக்கிறார்.

சமூகத்தில் வன்முறை அறவே இருக்கக்கூடாது என்று முழங்கும் ஒரு கட்சித்தலைவர், தனது படத்தில் துப்பாக்கியை முகத்தோடு அணைத்துக்கொண்டு வீணை போல மீட்டுவது எந்தவகையில் நியாயம்? இந்த முரணுக்குப் பதில் கிடைக்கும் முன் பாக்ஸ் ஆபீஸில் ‘விக்ரம்’ கோடிகோடியாக அள்ளியிருக்கும். இந்த கேள்வி தோன்றவில்லை என்றால் கமலை ஒரு கட்சித்தலைவராக நாம் கருதவில்லை என்று அர்த்தம். அப்படிப் பார்த்தால், கமல் கட்சித்தலைவரா கமர்ஷியல் ஹீரோவா என்ற கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாகவும் அமையக்கூடும் ‘விக்ரம் 2022’வின் வெற்றி!

Share the Article

Read in : English

Exit mobile version